in

மகிழம்பூ (சிறுகதை) – ✍ ச.  ரமணி

மகிழம்பூ (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கைப்பேசி சிணுங்க, எடுத்தாள் ரேவதி. ஏதோ தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வர, அழைப்பை துண்டித்தாள்

சில நொடிகளில் அது மீண்டும் சிணுங்கியது.

“சே….” என்று சொல்லியபடியே எடுத்துக் காதில் வைத்தாள்

மறுமுனையில் ஒரு பெண் குரல், “ஞானசம்பந்தர் வீடு தானே… நான் தேவி பேசறேன்”

“ஆமாம்… நீங்க யாரு? என்ன வேணும்?”

“அங்கே ஒரு நர்ஸ் தேவைன்னு விளம்பரம் பாத்தேன். நான் ஒரு குவாலிஃபைட் நர்ஸ், தவிர ஒரு ஆஸ்பிடல்ல வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. எப்ப வரலாம்?”

“நீங்களாகவே முடிவு பண்ணிட்டா, நாங்க உங்களை டெஸ்ட் பண்ணி வேண்டாமா?”

“என்னையா… நீங்களா…. நாங்க தான் பேஷன்ட டெஸ்ட் பண்ணுவோம்” சிரித்தாள் தேவி.

“என்ன ஜோக்கா…. சகிக்கலே. உங்களை இன்டர்வியூ பண்ண வேண்டாமான்னு கேட்டேன்?”

“அது தான் எப்ப வரலாம்னு கேட்டேன்”

“நீங்க எங்க இருக்கீங்க?”

“திருச்சி… திருவானைக்காவல்”

“அங்கிருந்து சென்னைக்கு வந்து…. வேண்டாங்க. சென்னையிலேயே இருந்தாத் தான் வசதி, நீங்க வீணா அலைய வேண்டாம்”

“இல்லீங்க…. நான் அங்கேயே அவரு வீட்டுலயே தங்கி 24 மணி நேரமும் பேஷன்டைப் பாத்துக்கறேன்… ப்ளீஸ்”

“உங்களால் முடியுமா தெரியலே, எதற்கும் பெரியவரைக் கேட்டுச் சொல்றேன்”

ரேவதி, பெரியவர் ஞானசம்பந்தத்தின் பெர்சனல் செக்ரட்டரி. ஞானசம்பந்தர் சென்னையில் பெரிய தொழிலதிபர், அம்பத்தூரில் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் ஃபாக்டரியின் சீனியர் பங்குதாரர்.

ரேவதி அவரது அறைக்கதவை லேசாகத் தட்டிவிட்டு, கதவை லேசாகக் திறந்து எட்டிப் பார்த்து, “மே ஐ கமின் ஸார் ” எனவும்

படுக்கையில் கண்மூடி இருந்த ஞானசம்பந்தர் லேசாகக் கண் விழித்து “எஸ்…” என்றார்.

ரேவதி அவரருகில் போய், “சார்….. உங்களைப் பாத்துக்க ஒரு நர்ஸ் வேணும்னு கேட்டீங்க  இல்லே. ஒரு பொண்ணு திருச்சியிலிருந்து வரேன்கறாங்க, பரவாயில்லையா?”

“அதனாலென்ன… இங்கே தான் தங்கறதுக்கு எல்லா வசதியும் இருக்கே. வரச் சொல்லு”

“ஓ கே ஸார்”

மறுநாள் அதிகாலை ஆறு மணி.  வாட்ச்மேன் ராம் சேட் கேட்டின் பூட்டைத் திறக்கப் போன போது, வெளியே பையும் கையுமாக நின்றிருந்தாள் தேவி.

“யாரும்மா… என்ன வேணும்??”

“ஒரு நர்ஸ் வேணும்னு சொன்னாங்களே”

“ஏம்மா… பொழுது விடிய வேண்டாம்?”

“இல்லீங்க…. நான் திருச்சியிலேர்ந்து வரேன். பஸ்ஸுல இறங்கி நேரா வந்துட்டேன்”

“ஹால்ல ஒக்காருங்க, செக்ரட்டரி  9 மணிக்கு வருவாங்க.”

“பாத்ரூம் காட்டினீங்கன்னா அதுக்குள்ள குளிச்சு ரெடியாயிடறேன்”

“என்னம்மா… எங்கேயாவது ரூம் எடுத்துத் தங்கி குளிச்சிட்டு வரலாமில்லே?”

“இல்லீங்க… வேலை கிடைச்சா இங்கே தானே தங்கணும்? அதனால் தான் நேரா இங்கே வந்துட்டேன்”

“வாங்க…” கூட்டிப் போய் அவுட் ஹவுஸை காட்டினார், அங்கு தான் வாட்ச்மேன் தன் மனைவியுடன் வசிக்கிறார்

“யாருங்க இது?”

“இவங்க புதுசா வரப்போற நர்ஸ், நம்ம வீட்டுல குளிச்சு கிளிச்சு ரெடி பண்ணிக்கட்டும்னு கூட்டியாந்தேன்.  நீ பாத்ரூமக் காட்டு”

காட்டினாள்.  தேவி குளித்து ரெடியாகும் முன் ராம்சேட் மனைவியிடம் பேசியே மிக நெருங்கி விட்டாள். 

அப்படி இப்படி மணி 8 ஆக, ராம்சேட் மனைவி ஒரு தட்டில் இட்லி சட்னி வைத்து, இன்னொரு தட்டால் மூடி எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அதைப் பார்த்த தேவி, “யாருக்கு?” என்று கேட்டாள். 

“பெரியவருக்கு… கொடுத்திட்டு வரேன்”

“ஏன்? அவருக்கு சாப்பாடு கொடுக்க யாரும் இல்லையா?”

“இருந்தா நான் ஏன் கொண்டு போறேன்”

“அப்படின்னா?”

“அப்படித் தான்… இதோ வரேன்”

“அம்மா…. நீங்க ஏன் சிரமப்படறீங்க? நான் போய்க் கொடுத்துட்டு வரேன்”

“இதென்ன புதுக்கதை…. நீ யாரோ…. வேலை கெடைக்குதோ இல்லையோ. நான் போயிட்டு வரேன்”

‌அவ்வளவு பெரிய வீட்டில் ஞானசம்பந்தருக்கு சமைத்துப் போட யாருமில்லை, அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஞானசம்பந்தரின் அப்பாவிற்கு இவரும் சுந்தரமும் இரண்டு பிள்ளைகள். தவிர ஒரு பெண் சிவகாமி, இளவயதில் காதல் மயக்கத்தில் யாருடனோ ஓடிப் போய் விட்டாள். ‌

அப்பா தொடங்கிய தொழிற்சாலையை, அவருக்குப் பின் ஞானசம்பந்தரும், சுந்தரமும் கூட்டாக  பார்த்துக் கொள்கின்றனர்.

அப்பாவின் பூர்வீக வீட்டை விட மனமில்லாமல் ஞானசம்பந்தர் இங்கேயே இருக்கிறார். சுந்தரம் தனியாக வீடு வாங்கி, மனைவி மகனுடன் வாழ்கிறார்.

இளவயதில் ஞானசம்பந்தரின் பெற்றோர் அவருக்கு திருமணம் முடிக்க எண்ணிய போது, அவர் ‘இவள் தான் என் மனைவி’ என்று ஓர் ஏழைப் பெண்ணைக் கூட்டி வந்தார்.

அவள் கர்ப்பமாக வேறு இருந்தாள், பெற்றோருக்கு விருப்பமில்லை. பணபலத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை எப்படியோ அப்புறப்படுத்தி விட்டனர்.

காதலியைக் காணாது மனம் உடைந்த ஞானசம்பந்தர், இனி திருமணமே செய்து கொள்வதில்லை என உறுதியுடன் வாழ்ந்தார்.

பெற்றோரை இழந்த பிறகு வீட்டில் சமையலுக்கு ஒரு பெண்ணை நியமித்தார். அந்தப் பெண்ணுக்கு வாட்ச்மேன் ராம்சேட்டைத் திருமணம் செய்து கொடுத்து அவுட்ஹவுஸில் தங்க அனுமதித்தார்.

ஆனால் தனக்கு சாப்பாடு தர வேண்டும் என அன்புக்கட்டளை போட்டிருந்தார். அத்தனை பெரிய வீட்டில் அவர் மட்டுமே தனியாக வாழ்கிறார். வீட்டைப் பராமரிக்க வேலையாட்கள் இருந்தனர்.

காலை மணி 9 ஆக, ரேவதி வந்தாள். கூடவே இரண்டு ஆண் ‌பணியாளர்களும் வந்தனர். வரவேற்பறைப் பக்கத்திலேயே ஒரு அறை, அலுவலகமாக மாற்றப்பட்டிருந்தது

செக்ரட்டரியுடன் இரண்டு பணியாளர்கள் ஞானசம்பந்தரின் அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரேவதி உள்ளே நுழையும் போதே, தேவி அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டாள்.  அலுவலக அறையைத் திறந்து பணிகளைத் தொடங்கி விட்டு, தேவியை பெரியவரிடம் அழைத்துச் சென்றாள்.

தேவியை அறிமுகப்படுத்திவிட்டு வெளியே வந்து விட்டாள் ரேவதி. அவர் படுக்கையிலேயே எழுந்து உட்கார்ந்து கொள்ள முயன்றார்.

தேவி அருகில் சென்று தலையணையில் அவர் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள உதவினாள். அவரது பிரச்சினைகளைத் தெரிந்து கொண்டாள். அவரது சந்தேகங்களை தெளிவுபடுத்தினாள்.

சிறிது நேர பேட்டியிலேயே தேவியை ஞானசம்பந்தருக்கு மிகவும் பிடித்து விட, காலிங் பெல்லை அழுத்தி செக்ரட்டரியை அழைத்தார்

“தேவி தங்க ஏற்பாடு பண்ணு ரேவதி” என்று கூறி இருவரையும் அனுப்பினார்

அனுப்பிய சிறிது நேரத்தில் பணியாள் நாதன் வந்தான். அவர் சாப்பிட்ட தட்டுக்களை அப்புறப்படுத்தி, அவரைத் தூக்கி ஒரு நாற்காலியில் அமர வைத்து, படுக்கை விரிப்புகளை மாற்றினான்.

பின்னர் அவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி கொண்டு போய் குளிப்பாட்டி, ஆடை மாற்றி மீண்டும் படுக்கையில் அமரச் செய்தான்.

நாதன் காலை 6 மணிக்கு வந்து அவர் காலைக் கடன்களை முடிக்க உதவி செய்வான். பின்னர் பிரேக் பாஸ்ட் வரும், சாப்பிடுவார்.  இவரது பணிகளுடன் வீட்டைப் பராமரிப்பது, தோட்டத்தைப் பராமரிப்பது போன்ற பணிகளையும் நாதன் கவனித்துக் கொள்வான்.

தேவி பணியேற்றுக் கொண்டாள். அடுத்த நாள் நாதன் வரும் போது, அவன் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, ஞானசம்பந்தர் ரிலாக்ஸாக ஒரு சோஃபாவில் அமர்ந்திருந்தார்.

நெற்றியில் திருநீறு குங்குமத்துடன் பளிச்சென்று இருந்த ஞானசம்பந்தர், நாதனைப் பார்த்து சிரித்தார்.

“அந்தப் பொண்ணு ரொம்ப நல்லா கவனிச்சுக்கறா, அதனால நீ வீட்டு வேலைகளை மட்டும் பாத்துக்கோ. தேவைப்பட்டா கூப்பிடறேன்”

தேவி அவர் கூடவே இருந்து உணவு உண்ணவும் உதவினாள். வாரா வாரம் வரும் டாக்டரிடம் பேசி இவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொண்டாள்.

அவர் எதனால் இப்படி படுத்த படுக்கையாக இருக்கிறார் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டாள். ஒரு சிறிய கார் ஆக்சிடென்டில் அவரது இடுப்பு செயலிழந்ததாக தெரிய வந்தது.

24 மணி நேரமும் அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள் தேவி. அவர் நிறுத்தியிருந்த பூஜையைத் தொடரச் செய்தாள். பிஸியோதெரபி மருத்துவரை அழைத்து சிகிச்சை செய்ய வைத்தாள். 

திடீரென ஒரு நாள் தம்பி சுந்தரம் வந்தார். ஞானசம்பந்தரைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் அவரை அதிர்ச்சியடைய வைத்தன.

ஏனெனில், அவர் படுக்கையை விட்டு எழாமல் இருக்கும் வரை தான் இவருக்கு லாபம். அவர் எழுந்து விட்டால் தான் செல்லாக் காசாகி விடுவோம் என பயந்தார். உண்மையும் அதுதான்.

ஞானசம்பந்தர் நன்றாக இருந்தவரை சுந்தரத்தை ஃபாக்டரி நிர்வாகத்தில் தலையிட அனுமதித்ததில்லை. அவருக்கு விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையானதில் சுந்தரத்திற்கு மகிழ்ச்சி.

பெரியவர் ஃபேக்டரிக்கு வராததால், தனது செல்வாக்கை நிர்வாகத்தில் நுழைத்தார். ஆரோக்கியமாகச் சென்று கொண்டிருந்த கம்பெனி பொருளாதாரம் சரியத் தொடங்கியது

தேவி பங்களாவில் தங்காமல் அவுட் ஹவுஸிலேயே தங்கினாள். வாட்ச்மேன் மனைவியின் சமையலை ருசித்தாள்.

இரவில் பங்களாவில் தங்குவாள். காலை அவரது அத்தியாவசியப் பணிகளை முடித்து விட்டு அவுட்ஹவுஸ் போய் தன் வேலைகளை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பங்களாவிற்கு வருவாள்.

சுந்தரம் வந்த சமையத்தில் தேவி இல்லை. எனவே ஞானசம்பந்தரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ரேவதியிடம் விசாரித்தார். தேவி வந்த விவரத்தை விளக்கினாள் ரேவதி. 

அப்போது தேவி அங்கே வந்தாள். ரேவதி சுந்தரத்திடம் அறிமுகப்படுத்தினாள். “பரவாயில்லையே… இந்த வேகத்துல போனா எங்கண்ணன் சீக்கிரமே எழுந்து நடமாடுவார் போலத் தெரியுதே. வெரி குட்” என்றார். 

“அது என் கடமை சார், ஐயா எந்திருச்சு நடந்தார்னா நல்லது தானே”

சுந்தரத்திற்கு மிக ஏமாற்றமாக இருந்தது.

“ஓகே கீப் இட் அப்…” நுனி நாக்கால் பாராட்டி விட்டு, மனதிற்குள் ‘உன்னை அப்புறமா கவனிச்சுக்கறேன்’ என்று மனதிற்குள் கறுவிக் கொண்டே சென்றார் சுந்தரம்

தேவியின் பராமரிப்பும், டாக்டரின் ஆலோசனைகளை சரியாக செயற்படுத்தியதாலும், பிசியோதெரபி சிகிச்சையினாலும் இரண்டு மாதங்களில் ஞானசம்பந்தர் எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினார்.

இப்போது தேவியையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு சக்கர நாற்காலியிலும் காரிலுமாக ஃபாக்டரிக்கு செல்லத் தொடங்கினார்.  அவரது ஆரோக்கிய முன்னேற்றம், ஃபேக்டரி உற்பத்தியிலும் எதிரொலித்தது.

சரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினார். சுந்தரத்தின் கனவுகள் தகர்ந்து தவிடு பொடியானது.

நிற்க… நாம் இந்த இடத்தில் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டிய கட்டாயம். சில மாதங்கள் முன்பு…

FLASHBACK

திருவானைக்காவல்… சிவகாமியின் வீடு

என்ன கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதா? அதே ஊர், அதே ஞானசம்பந்தரின் தங்கை சிவகாமியே தான். தனியார் பள்ளி ஆசிரியையாக இருக்கிறாள். அவளது பெண்தான் தேவி…!

எப்படியோ சுந்தரத்திற்கு மட்டும் சிவகாமி இருக்குமிடம் தெரிந்து, சுந்தரம் சிவகாமியின் வீட்டிற்கு வந்தார். கணவனை இழந்த பின் தனது ஆசிரியை தொழிலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் சிவகாமி.

கஷ்டப்பட்டு மகள் தேவியை நர்சிங் படிக்க வைத்தாள். சிறிது காலம் திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தாள் தேவி.

சிவகாமியின் தற்போதைய பரிதாபகரமான நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தார் சுந்தரம்.

“சிவகாமி…. உங்கண்ணன் அங்கே ஓஹோன்னு கொடி கட்டிப் பறக்கறார், நீ அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிட்டிருக்கே”

“அது என் தலையெழுத்து”

“நீயா எழுதிக்கிட்டது தானே, நீயே  அழிச்சுடு”

“எப்படியண்ணா? அண்ணங்கிட்ட போய் கையேந்தச் சொல்றியா? அவர் ஏத்துப்பாரா?”

“ஏத்துப்பாராவா? நீ உயிரோடு இருக்கறது தெரிஞ்சுது, உன்னைக் கொன்னே விடுவார்”

“அப்புறம்?”

“சிவகாமி, அப்பா சொத்துல உனக்கும் பங்குண்டில்லே…. அதைக் கேட்போம்”

“என்னண்ணா குழப்புறீங்க?”

“சரி சரி… நேரா விஷயத்துக்கு வர்றேன். அண்ணன் இருக்கற வரை உனக்கு ஒன்னும் கெடைக்காது, அதனால….”

“அதனால?”

“அவரே இல்லாமப் பண்ணிட்டா…”

“என்னண்ணா சொல்றீங்க? ஒன்னுமே புரியலையே”

“பேரு தான் வாத்தியார் வேலை, இதெல்லாம் கூட தெரியமாட்டேங்குதே உனக்கு. ஒன்னுமில்லே…. நம்ம அண்ணன் ஒரு ஆக்சிடன்ட்ல அடிபட்டு படுத்த படுக்கையாயிட்டாரு. இனிமே எழுந்து நடக்க வாய்ப்பில்லேன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. ரொம்பக் கஷ்டப்படறாரு, எல்லாத்துக்கும் ஆள் வேண்டியிருக்கு… ஸோ…. “

“ஸோ?”

“இப்படி கஷ்டப்பட்டுண்டிருக்கறவருக்கு நிரந்தரமாக விடுதலை கொடுத்துடுவோம்”

“எப்படிண்ணா? அது பாவமில்லையா?”

“பாவமேயில்லே….. அப்புறம், கஷ்டப்பட மாட்டாரில்லே”

“வேண்டாண்ணா…. அது தப்பு. இப்ப, இங்க கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு மகளோடு நிம்மதியா இருக்கேன், இப்படியே இருக்கேண்ணா”

“சீ இப்படியா? ஒரு பொண்ணிருக்கா, அவளுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க வேண்டாமா? ஓகே நீ ஒன்னும் செய்ய வேண்டாம், ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு”

“என்ன?”

“உன் பொண்ணை மட்டும் சென்னைக்கு அனுப்பு, போதும்”

“அவளா, அவ என்ன செய்வா?”

“அதுவா, அது அவளுக்குத் தெரியும்”

இதுவரை இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தேவி இப்போது இடை நுழைந்தாள். 

“ஆமாம்மா, மாமா சொல்றபடி நான் சென்னை போறேன். என்ன மாமா ஓகேவா?”

சொன்னபடி சென்னை வந்தாள் தேவி. பெரிய மாமாவுக்கு நர்ஸாக இருந்து, அவரை பராமரித்து நடக்கவும் வைத்து விட்டாள். இப்போது சுந்தரம் வந்தார்.

தேவியை தனியாக அழைத்த சுந்தரம், “நீ சென்னைக்கு எதுக்கு வந்தியோ, அதை விட்டுட்டு அடக்க வேண்டியவரை நடக்க வச்சிட்டயே?” என பொறிந்தார்

“ஆமாம் மாமா… ஏதோ என்னால் முடிஞ்சது. ஒரு நர்ஸாக என் கடமையைச் செய்தேன். ஒரு நர்ஸோட வேலை உசிரை எடுக்கறதில்லே, கொடுக்கறது, அதைத்தான் செய்தேன்”

“அப்ப என்கிட்டயிருந்து விஷ ஊசியை வாங்கிட்டுப் போனியே?”

“போனேன் மாமா. நான் அப்ப வாங்கலேன்னா, நீங்க வேறே எதாவது பண்ணுவீங்கன்னு தான் வாங்கிக்கிட்டேன், அது பத்திரமாயிருக்கு”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஞானசம்பந்தர் வந்து விட்டார்.

“என்ன தம்பி…. தேவிக்கு அட்வைஸ் பண்ணறியா? பண்ணு பண்ணு. தம்பி தேவி யாரு தெரியுமா? நம்ம தங்கச்சி சிவகாமி பொண்ணுடா. உனக்குத் தெரியாதில்லே, நேத்துத் தான் எங்கிட்ட சொன்னா. உடனே சிவகாமியை வரச் சொன்னேன், நாளைக்கு வந்துடுவா. வந்த உடனே கல்யாணப்பேச்ச ஆரம்பிக்க வேண்டியது தான்” எனவும், அதிர்ச்சி அடைந்தார் சுந்தரம். யாரோ ஓங்கி சம்மட்டியால் மண்டையில் அடிப்பது போல் இருந்தது.

சுதாரித்துக் கொண்டு, “கல்யாணமா…. யாருக்கு…?” என சுந்தரம் கேட்க

“தேவிக்குத் தான், உன் மகன் ரகுவிற்கு கட்டி வைக்கலாம்னு யோசிச்சேன். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும், உன்னையும் கடைசி வரை நல்லா பாத்துக்குவா தேவி” என்றவர் கூற, வெட்கி தலை குனிந்தார் சுந்தரம்

பிப்ரவரி 2022 மாதத்தின் சிறந்த படைப்பு போட்டிக்கு தேர்வாகி பிரசுரிக்கப்பட்ட படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                                           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கங்கையா காவிரியா (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    கோபுரத்தின் கலசங்கள் (சிறுகதை) – ✍ வனஜா முத்துகிருஷ்ணன், சென்னை