2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4
அன்று மாலை.
வீட்டின் முன்னால் அமைந்திருந்த சிட்-அவுட்டில் கூடியிருந்தார்கள் அவர்கள். சிட்-அவுட் சற்றுப் பெரியது. வாயிற்கதவின் ஒருபுறம் சிறிய வட்ட மேஜையும் அதனைச் சுற்றி நாற்காலிகளும், மற்றொரு புறம் டீப்பாயோடு கூடிய சோபா செட்டும் காணப்பட்டது. இவைகளைத் தவிர இருபுறமும் கேரளா பாணி மரத் திண்ணைகள் வேறு.
ஷீலா, அஞ்சனா, ஜானவி மூவரும் சோபாக்களில் உட்கார்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, மறுபுறத்தில் சம்பத்தும் ஜெய்யும் திண்ணையில் சாய்ந்திருந்தார்கள். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
சிறிதுநேரத்தில் செல்வி ஒரு ட்ரேயில் டீ எடுத்துவந்து எல்லோருக்கும் வழங்கினாள். பின்னால் ஒரு வேலையாள் கொண்டுவந்த இரு பெரிய தட்டுகளில் விதவிதமான பிஸ்கட்கள் இருந்தன.
பெண்கள் பக்கத்திலிருந்து கலீர் கலீரென்று சிரிப்புச் சப்தம் அடிக்கடி கேட்டது. அஞ்சனா அவர்களுக்குத் திரைப்பட உலகிலிருந்து தான் கண்டதும் கேட்டதுமான வேடிக்கைக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.
சம்பத் முதன்முதலாக வாயைத் திறந்தான். “யூ ஆர் லக்கி, ஜெய். தங்கமான பொண்ணாயிருக்கா உன் வொய்ஃப்” என்றான்.
ஜெய் புன்னகைத்தான். “இதே மாதிரித் தங்கமான அண்ணியை எப்போ வீட்டுக்குக் கூட்டி வரப் போற?” என்று கேட்டான்.
“நான் மாட்டேன்னா சொல்றேன்? தங்கமான பொண்ணு கிடைக்க வேண்டாமா? வர வரன்கள் ஒண்ணா எனக்குப் பிடிக்கல, இல்ல அப்பாவுக்குப் பிடிக்கல. முதலில் வருவதே ரொம்பக் கம்மிதான். எனக்கும் 35 வயசு ஆகிடுத்தே!” என்றான் சம்பத்.
“அது காரணமில்லை, சம்பத். நீ அம்மா அப்பாவோட இருக்கறதுதான் காரணம். பற்றாக்குறைக்கு ஷீலாவும் அவ ஹஸ்பெண்டும் வேற நம்ம வீட்டிலேயே இருக்காங்க. இந்தக் காலத்துப் பொண்ணு யார் இந்த செட்டப்ல வந்து வாழத் தயாரா இருப்பா?” என்று கேட்டான் ஜெய்.
“அதுக்கு என்ன பண்ண முடியும்? நம்ம வீட்டோட செட்டப் இது. இதை நாம மாற்ற முடியுமா?” என்று சிரித்தான் சம்பத்.
“மடத்தனமா பேசாதே சம்பத். அம்மா-அப்பாவைப் பார்த்துக்கறேன்னு உன் வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிற்காதே. மாட்ரிமோனியல்ல உன் ப்ரொபைல மாத்து. கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனம் போகலாம்னு போடு.”
“என்ன சொல்ற? இத்தனை நாள் விட்டுட்டு அப்பாவுக்கு அட்டாக் வந்திருக்கும்போது இப்படிச் செய்யலாமா?”
“பெரிய சிரவணகுமார் நீ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாடா? அப்பாவோட சொத்துக்காகக் கூட இருக்கேன்னு வேணா சொல்லு.”
“அதுவும் முக்கியம்தானே ஜெய். அதோட தனிக்குடித்தனம்னா வீடு வேண்டாமா? எல்லா வீடும் அப்பா பேர்ல இருக்கு…”
“இதெல்லாம் ஒரு ஆர்கியூமெண்ட்டாடா? தைரியமா வெளில வா. முதலில் வாடகை வீடு பாரு. அப்பா ஆஃபீஸ்ல உன்னை வெளியே அனுப்ப முடியாது. நீ அங்கே ரொம்ப முக்கியமான பர்ஸன். அந்தச் சம்பளம் உனக்குப் போதுமே” என்று தைரியம் கொடுத்தான் ஜெய்.
“போதும், சம்பளம் கொடுத்தா” என்ற சம்பத்தின் பதிலைக் கேட்டதும் அதிர்ச்சிக்கு ஆளானான் ஜெய்.
“அப்போ, இந்த வீட்ல நீ சம்பளமில்லாத வேலைக்காரன்!” என்றான்.
“டோண்ட் பி ஸில்லி. எனக்கு யார்டா சம்பளம் கொடுக்கணும்? நான் இந்த வீட்டு மூத்த பையன். சகல அதிகாரங்களும் உள்ளவன். எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் எடுத்துச் செலவழிக்க முடியும். எப்போ வேணும்னாலும் எங்க வேணும்னாலும் சகல வசதிகளோட வெகேஷன் போக முடியும். இத்தனை சௌகரியம் எனக்கு அப்பாவைப் பகைச்சுக்கிட்டு வெளியே போனால் கிடைக்குமா? இல்லை வர பொண்ணுக்குத்தான் கிடைக்குமா? அதுங்க ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டுத் தனிக்குடித்தனம் போகணும்னு சொன்னா, அதுக்கு நாமும் ஒத்துக்கறதா?” என்று காரமாகக் கேட்டான் சம்பத்.
“எல்லாம் இருக்கு சம்பத், இல்லேங்கல. ஆனா இங்கே ஒண்ணு இல்ல.”
“என்னது?”
“சுதந்திரம்” என்றான் ஜெய்.
“நம் வாழ்க்கையை நாமதான் வாழணும் சம்பத். தவறுகள் செய்யணும், திருத்திக்கணும். முடிவெடுக்கணும், அதை மாத்தணும். இது என் வீடு, இங்கே என்ன ஃபர்னிச்சர் போடணும், அது நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்து வருமான்னு புருஷனும் மனைவியுமா உட்கார்ந்து யோசிக்கணும். இதெல்லாம் இங்கே கிடையாது. எல்லா டெசிஷனும் அப்பாவோடது. அம்மா உள்பட நீங்க எல்லோருமே அவரோட அடிமைகள்தான். ஒருவேளை உனக்குக் கல்யாணம் ஆனாலும் நீ இந்த வீட்டுக்கு இன்னொரு அடிமையைக் கூட்டிட்டு வர. அவ்வளவுதான்!” ஜெய்யின் வார்த்தைப் புயலில் சிக்கித் திணறினான் சம்பத்.
“என்னை என்னதாண்டா பண்ணனும்ங்கற” என்று கேட்டான்.
“அப்பாகிட்ட அடிச்சுப் பேசு. இப்போ அவர்தான் உன்னைச் சார்ந்து இருக்கார், நீ அவரைச் சார்ந்து இல்லை, அதைப் புரிஞ்சுக்கோ. உனக்குப் பிடிச்ச பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ. தனிக் குடித்தனம் போகணும்னா போ. இங்கே இருக்கறதுன்னா, உன் உரிமைகளை விட்டுக் கொடுக்காதே. அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு நீயே சொல்ற. இனி அதிகாரத்தை உன் கையில் எடு…”
“இப்போ இதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்ற, ஜெய்? அப்பா சொன்னமாதிரி என்னை அவருக்கெதிரா திருப்பறியா?” என்று இடைமறித்தான் சம்பத்.
ஜெய் புன்னகைத்தான்.
“சம்பத், உன்னைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். ஏன் நடிக்கற? உன்னால அப்பாவைப் பகைச்சுக்க முடியாததற்குக் காரணம் நான் சொல்லட்டுமா? போன ஜூலை மாதம் மகாபலிபுரம் கோல்டன் ஸாண்ட்ஸ் ஹோட்டலுக்கு நீ வந்திருந்த. அங்கே என்ன பண்ணினேன்னு நான் சொல்லட்டுமா?”
“வேண்டாம்” என்றான் சம்பத் அவசரமாக.
“இந்த வீட்டைவிட்டு நான் போயிட்டாலும், உங்க எல்லாரைப் பற்றியும் எனக்குத் தெரியும். உங்க எல்லோரையும் தள்ளிட்டு உங்க இடத்திற்கு நான் வரணும்னு நான் நினைச்சா அது ரொம்ப ஈஸி. ஆனா எனக்கு அதில் இஷ்டமில்லை. அப்பா சொத்திலும் எனக்கு இண்டரெஸ்ட் இல்லை. இப்பவும் உங்க நல்லதுக்காகத்தான் பேசிக்கிட்டிருக்கேன். புரியுதா?” என்றான் ஜெய்.
சம்பத் பதில் சொல்லாமல் அவனையே வெறித்து நோக்கினான்.
=========
“ஜெய், உன் வொய்ஃப் சூப்பர்டா. உன்னை நல்லா புரிஞ்சு வெச்சிருக்கா” என்றவாறே சம்பத் காலி செய்த இடத்தில் வந்து அமர்ந்தாள் ஷீலா.
“ம். அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல உன்னைப் பற்றிப் பேசுக்கா” என்றான் ஜெய்.
“என்னைப் பற்றிப் பேச என்ன இருக்கு? ஸ்கூல் ஃபர்ஸ்ட் க்ளாஸா நடக்குது.”
“இப்ப அதுதான் முக்கியம் எனக்கு! நீயும் மாமாவும் சந்தோஷமா இருக்கீங்களா?”
“ஏன், எங்க சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்?”
“மாமா ஆம்பிளைக்கா. என்னதான் சௌகரியமும் வசதியும் இருந்தாலும் இப்படி மாமனார் வீட்டிலே வந்து இருக்க அவர் மனசு ஒப்புமா?”
“நீ வேற. நானே தனிக்குடித்தனம் போகணும்னு சொன்னாலும் அவர் தயாரில்லை! இங்கே அவருக்கு என்னடா குறை? ஊரிலேயே பெரிய பள்ளிகளில் ஒண்ணோட பிரின்ஸிபல். ராஜா மாதிரி மதிப்பு. நம்ம வீட்டிலோ அரண்மனை மாதிரி வசதி. அவருக்கு இந்த வருஷம் நல்லாசிரியர் விருது கூடக் கிடைக்கலாம், தெரியுமா?”
“இப்பவே அவருக்கு ஒரு விருது கிடைச்சிருக்கே, அது உனக்குத் தெரியுமா?”
“என்ன அது?”
“வீட்டோட மாப்பிள்ளை!”
பளாரென்று அடி விழுந்தது போல் சிலிர்த்தாள் ஷீலா.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings