in ,

மாத்திரை (சிறுகதை) – ராஜேஸ்வரி

எழுத்தாளர் ராஜேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஆமா…இன்னையிலிருந்து மாத்திரை போட ஆரம்பிக்கணும். என்ன செய்றது? இந்த மாதிரி தான். எப்பவும் ஆகுது. போன மாசத்துக்கு முந்தின மாசமும் இப்படித்தான் ஆச்சு. மாமனாரு திதி வந்துச்சு. நான் பாட்டுக்கு ஓரமா உட்கார முடியுமா? சொல்லு. என் மவ திட்டறா. மாத்திரை போடாத..ன்னு.. அவளுக்கு என்ன தெரியும். அவ கல்யாணமாகி புருஷன் வீட்டுக்குப் போனதும் தான் இதெல்லாம் புரியும்”. என்று விஜயா போனில் தன் சிநேகிதியுடன் அங்கலாய்த்து கொண்டிருந்தாள்.

விஜயாவின் பதினெட்டு வயது மகள் ஆதினி அவளின் பேச்சைக் கேட்டபடி அறைக்குள் வந்து நின்று முறைத்தாள். உடனே விஜயா, “சரி…கலா, அப்புறமா பேசறேன்”.என்று சொல்லிவிட்டு ஆதினியைப் பார்த்தவாறே அழைப்பை கட் செய்தாள்.

ஆதினி தன்னை நோக்கி வருவதை பார்த்த விஜயா, “என்ன? இப்பவும் நீ அதே கேள்வியைத்தான் கேட்கப் போற. நானும் அதே பதிலை தான் சொல்ல போறேன். உனக்கும் அப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது தான் என்னுடைய நிலைமை உனக்கு புரியும்”என்றாள்.

“அந்த மாதிரி நிலைமை எனக்கு வந்தால் நான் உன்னை மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்று கோபமாக இடுப்பில் கைகளை ஊன்றியபடி அம்மாவை பார்த்து முறைத்தபடி சொன்னாள் ஆதினி.

“இந்த காலத்து   பிள்ளைகளுக்கு எல்லாம் சாஸ்திர சம்பிரதாயத்து மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனா, நான் சின்ன வயசுலேருந்து நம்பிக்கையோட வளர்ந்ததுனால என்னால அதெல்லாம் மீற முடியாது” என்றாள் விஜயா.

“அம்மா, நான் சொல்றது உனக்கு புரிய மாட்டேங்குது. சம்பிரதாயத்தை மீற மாட்டேன்னு சொல்ற நீங்க, நம்மைப் படைச்ச இயற்கையை, இறைமையை மீறி நடக்குறீங்க. அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது?” என்று தன்  தாய்க்கு புரிய வைக்க பெரு முயற்சி செய்தாள் ஆதினி.

“நீ சொல்றதெல்லாம் புரியுது. ஆனா வேற வழி கிடையாது. நல்ல நாள் அதுவுமா இந்த மாதிரி நடக்குது. இந்த சனியன் மாச மாசம் வந்து தொல்லை பண்ணுது. போக மாட்டேங்குது” என்று வெறுப்புடன் பேசிக் கொண்டிருந்த விஜயாவை இடை மறித்த ஆதினி “அம்மா… அந்த சனியனால தானே இந்த சனியன் பொறந்தேன்” என்றாள்.

சட்டென்று பேச்சை நிறுத்திய விஜயா அவளை ஒருமுறை முறைத்து விட்டு “நீ ஒன்னும் சனியன் கிடையாது. நீ எங்க வீட்டு மகாலட்சுமி. நீ தான் என் செல்லம் அப்படி எல்லாம் இனிமே பேசாத” என்று சிறிது கம்மியக் குரலில்சொல்லி விட்டு, “எல்லாம் என் தலை எழுத்து. அனுபவச்சு தான் தீரணும். வேற வழி கிடையாது” என்று தலையில் அடித்துக் கொண்டு, “நான் போறேன். டிபன் பண்ணனும். உங்க பாட்டிக்கு பசி வந்துரும். நீ போய் உன் வேலையை பாரு போ” என்று எரிச்சலாக சொல்லிவிட்டு எழுந்து சமையலறை நோக்கி சென்றாள் விஜயா, ஆதினியை மேலும் பேச விடாமல்.

அம்மாவின் மனநிலையை புரிந்து கொண்ட ஆதினி மனம் வருந்தினாள். எவ்வளவுதான்  முன்னேற்றம் வந்தாலும் இன்னும் இந்த மாதிரி பெண்கள் அவதிப்படுகிறார்களே.

இதற்கெல்லாம், இன்னும் புரிந்து கொள்ளாத, அறிவில் தெளிவு இல்லாத நிலைமை தான் காரணம் என்று தனக்குத்தானே தன் கோபத்தை சமாதானம் செய்து கொண்டாள்.

“இந்தாடா… ஆதுக்குட்டி… பாட்டிக்கு போய் இந்த இட்லியை கொடுத்துட்டு வா” என்று தாயின் குரலை கேட்டு எழுந்து சென்றாள் ஆதினி.

பாட்டியை பார்த்ததும் மனதில் இருந்த கோபக்குதிரை மீண்டும் தன் பிடரியை சிலிர்த்து எழுந்தது. அம்மாவின் வேதனைக்கு இந்த பாட்டியும் தான் ஒரு காரணம். இவருடைய பழங்கால சம்பிரதாய சடங்குகள் தான் காரணம் என்று குமுறிய ஆதினியின் எண்ணங்களை பாட்டியின் அன்பு பொங்கும் பார்வையும் பொக்கை வாய்ச் சிரிப்பும் புகையாகக் கரையச் செய்தது. பாட்டியின் வாசனை தன் மனதைக் கட்டிப் போட்டது கண்டு திகைத்தாள். கேள்வியாக புறப்பட்ட வார்த்தைகளைத் காணாமல் தேடினாள்.

மறுவாரம் …வீடே சிரிப்பும் பேச்சுமாக நிரம்பியிருந்தது. விஜயாவின் மூத்த நாத்தனார் வீட்டுக்காரருக்கு அறுபது வயது பூர்த்தியாகிறது. விஜயாவின் மாமியார் தன் மகளின் குடும்பம் வசதி குறைவாக இருப்பதால் தன் மகனின் இந்த வசதி நிறைந்த பெரிய வீட்டில் தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டாள்.

தன் தாயின் பேச்சை தட்டாத விஜயாவின் கணவரும் தன் அக்காளின் அறுபதாம் கல்யாணத்தை இங்கே நடத்த முடிவெடுத்து விஜயாவிற்கு ஆணையிட்டு விட்டார். அதை எதிர்க்க தைரியமில்லாத விஜயா அன்றைய நாளில் வரும் தன் மாதவிலக்கை தள்ளிப்போட முடிவெடுத்து விட்டாள்.

முந்திய இரவு மாத்திரை சாப்பிட்டுவிட்டு, வீடு நிறைந்த  உறவினர்களை கவனித்து தாமதமாக உறங்கி அதிகாலையில் விரைவாக எழுந்ததால் பற்றாத  தூக்கத்தினாலும் அதனால் சரியாக உணவு உட்கொள்ளாமலும் வேலை நிறைய செய்ததாலும்  அன்று மாலை மயக்கம் போட்டு விழுந்தாள் விஜயா.

தன் அம்மாவை அழைத்துச் சென்ற சின்ன அத்தையின் கூடவே ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆதனி, பெண் மருத்துவரிடம் தன் தாய் போட்டுக் கொள்ளும் மாத்திரையின் விபரத்தை கூறினாள்.

ஒரு முழு நாள் சிகிச்சைக்குப் பிறகு குணமான விஜயாவிடம் சில விவரங்களைக் கேட்ட மருத்துவர்,” அடுத்த தடவை இந்த மாதிரி மாத்திரை போட்டீங்கன்னா என்ன ஆகும்னு சொல்ல முடியாது. பக்கவாதம், காக்கா வலிப்பு வரைக்கும் கொண்டு போய் விட்டுடும். இது எவ்வளவு பெரிய ஆபத்துன்னு உங்களுக்கெல்லாம் தெரிய மாட்டேங்குது. சொன்னாலும் உங்களுக்கெல்லாம் புரிய மாட்டேங்குது”என்று சிறிது  கடுமையாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்  மருத்துவர்.

இதைக்கேட்ட ஆதினிக்கு அதிர்ச்சியாகவும் மிகவும் கோபமாகவும் வந்தது. தன் தாய்க்கு மருத்துவர் சொன்னது போல ஏதாவது ஆகியிருந்தால்…நினைத்து  பயந்து போனாள். வீட்டிற்கு  வந்ததும்   நேரே தன் பாட்டியின் அறைக்கு சென்றாள். அங்கே பாட்டியும் பெரிய அத்தையும் மாமாவும் இன்னும் சில உறவினர்களும்  அமர்ந்து கொண்டு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

“பாட்டி ..எல்லாம்  உன்னால தான் வந்தது. அம்மாவுக்கு என்ன ஆகி இருக்கும் தெரியுமா? டாக்டர் என்ன சொன்னாங்க தெரியுமா?” என்று கோபம் அழுகையுமாக வார்த்தைகள் தடுமாற பேசினாள் ஆதினி.

 “என்னடா கண்ணு, அழாத… டாக்டர் என்ன சொன்னாரு அம்மாக்கு என்ன? அம்மா எப்படி இருக்காங்க? வந்துட்டாங்களா? “என்று கேள்விகளை அடுக்கினாள் பாட்டி.

டாக்டர் சொன்னதை ஆதினி சொன்னதும், “அதெல்லாம் அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க. அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. பயப்படாதே, நாங்க எல்லாம் இல்லையா நாங்களும் தான் மாத்திரை போட்டு இருக்கோம். ஏதாவது ஆகியிருக்கா? உங்க அம்மாக்கு நேத்து கொஞ்சம் வேலை ஜாஸ்தி. அந்த அசதியில லைட்டா மயக்கம் வந்து இருக்கு. டாக்டருங்க இப்படித்தான் பயமுறுத்துவாங்க. அதெல்லாம்  ஒன்னும் நடக்காது. நீ பயப்படாதே” என்றாள் பெரிய அத்தை. தனக்கு சிறப்பாக சீர் கிடைத்த சந்தோஷத்தில்.

 ஆதினியின் பேச்சில் சிறிது முகம் கருத்த மாமா ஆதினியின் தந்தையிடம் “ஏன் மச்சான்,  தங்கச்சிக்கு விலக்கு நாள்னு சொல்லி இருந்தா நான் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கிட்டு இருக்கவே மாட்டேன்”என்றார்.

சிறிய அத்தை விறுவிறுவென்று வந்து ஆதினி கையை பிடித்து “இங்க வா” என்று இழுத்துக் கொண்டு மாடியில் இருந்த அறைக்குள் சென்றாள்.

பாட்டி “அதெல்லாம் ஒன்னும் இல்ல மாப்ள.. அவளுக்கு அடிக்கடி இப்படித்தான் உடம்புக்கு வரும். நீங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க” என்று சமாளித்தாள்.

விஜயாவின் வீட்டுக்காரரும் “ஆமா..மாப்பிள்ளை, அவ அப்படியெல்லாம் மாத்திரை போட்டதில்ல. தலைவலி….னு மாத்திரை போட்டுருப்பா. அதை தப்பா புரிஞ்சுகிட்டு பாப்பா கோவப்படுது. அக்கா சொன்ன மாதிரி டாக்டருங்க சும்மா இப்படித்தான் பயமுறுத்துவாங்க. விஜயா தான் அக்கா மாமாக்கு இங்க தான் நடத்தணும்… னு பிரியப்பட்டு சொல்லிச்சு. ” என்று மழுப்பினார்.

மறுநாள் ஆதினி தன் அத்தைகள் கையிலும், சித்திகள் கையிலும் ஆளுக்கொரு மாத்திரை கொடுத்தாள். எல்லார் முகத்திலும் கேள்விக்குறி.

“ஆதி..இது என்ன மாத்திரை?என்று கேட்ட சித்தியிடம், ” இது சாப்பிட்டா, பாத்ரூம் போக வேண்டாம். ஏன்னா..வரவே வராது. உங்க எல்லோருக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்” என்று கிண்டலாகக் சொன்னாள்.

“அப்படி ஒரு மாத்திரை வந்திருக்கா? என்று சிலர் ஆச்சரியப்பட்டனர் சிலர். “ஏய், எங்களப் பார்த்தா எப்படி தெரியுது? ரொம்ப அதிகபிரசங்கியா நடந்துக்கற?” என்று கோபப்பட்டனர்.

அதன்பிறகு வந்த மூன்று வருடங்களில் ஒவ்வொரு விஷேங்களிலும், பண்டிகை நாட்களிலும் ஆதினியால் தன் அம்மாவை, மாதவிலக்கு மாத்திரை போட்டுக் கொள்ள விடாமல் தடுக்க முடியவில்லை. தந்தையிடமும், பாட்டியிடமும் மன்றாடியும் ஒன்றும்  நடக்கவில்லை.

ஒருநாள் ஆதினி தனக்கு தலை சீவிக்கொண்டு இருந்த தாயிடம், “அம்மா, நீ ஏன் இப்படி பயப்படற?” என்றாள்.

அவளின் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட விஜயா, கண்களில் நீர் கோர்க்கச் சொன்னாள்.” நீ சொல்றது சரிதான். எனக்கு பயம்தான். நான் சடங்கான போது எனக்கு வயது 13. முதல் நான்கு மாதவிலக்கிற்கு என்னை மகிழ்வித்த என் அம்மா, அதன்பிறகு வந்த விலக்கு நாட்களில் என் மேல் எரிந்து விழுந்தார்கள்.14 வயதில் ஒருமுறை விநாயகர் சதுர்த்தியன்று விலக்காகி விட்டேன். அன்றைய தினத்தில் உடலில் பட்ட அடி என் மனதிலும் காயமாகிவிட்டது” சொல்லும்போதே விஜயாவின் கண்கள் பயத்துடன் கண்ணீரை பொழிந்தது.

“என்னம்மா ஆச்சு? அம்மாச்சி உனை அடிச்சுட்டாங்களா?” என்று ஆதரவாக அன்பாகக் கேட்ட  ஆதினியிடம் “சாதாரண அடி இல்ல, விளக்குமாத்தால்ல அடிச்சு வீட்டுக்குள்ள வரக்கூடாது..ன்னு அக்கம்பக்கத்து வீடெல்லாம் பார்க்க மாதிரி வெரட்டி விட்டுடாங்க. அன்னிக்கு முழுக்க நான் வெயில்ல ரொம்ப நேரம் உட்கார்ந்து கஷ்டப்பட்டேன்.  இங்க கல்யாணம் கட்டி வந்தப்புறம் முதல் விலக்கை கொண்டாடினாங்க. அடுத்து வந்த விலக்குக்கு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அதனால எனக்கு இந்த நாள் வந்தாலே மனசு வெறுப்பாயிரும்” என்றாள் கண்ணீரை துடைத்தபடி.

“உனக்கு இந்த மாதிரி கஷ்டம் வரக்கூடாது..ன்னு தான் கடவுளை வேண்டிக்கிறேன்” என்றாள் விஜயா.

‘எனக்கு இந்த மாதிரி நிலமை வந்தால் காளியாக உருமாறி எல்லாரையும் அழித்து விடுவேன்’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டாள் ஆதினி.

அந்த நாளும் வந்தது. ஆதினிக்கு வரன் நிச்சயமாகி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. சரியாக அவளுக்கு அந்த நாளில் விலக்கு நாளும் வந்தது.

விஜயா ஆதினி கைகளில் மாத்திரைகளை திணித்தாள். “வேற நாள் அமையல. இப்போ விட்டா இன்னும் நாலு வருசத்துக்கு நடக்காதாம். ஜோசியர் சொல்லிட்டாரு. இந்த ஒரு தடவ மட்டும் போட்டுக்க. வேற வழியில்ல, அப்புறம் புகுந்த வீட்டுல உன் விருப்பப்படி நடந்துக்க. யாரும் உன்ன தடுக்க முடியாது. வெளியூருக்கு போகப்போற. உன் விருப்பபடி இருந்துக்கலாம்” என்று ஆதினியை வற்புத்தினாள் விஜயா.

இப்போது தன் பேச்சு யாரிடமும் எடுபடாது என்று அவர்கள் கல்யாண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டதிலிருந்து தெரிந்து கொண்டாள் ஆதினி.

முதல் காரியமாக அந்த மாத்திரைகளை குளியலறையில் கரைத்துத் தள்ளி தன் மனதில் கொழுந்துவிட்ட கோபத்தை தணித்தாள்.

முதலிரவு அறையில் ஆதினி தன் கணவன் காலில் விழுந்து வணங்கினாள். “ஏய் ஆதினி, என்ன இது? நீ ரொம்ப முற்போக்குவாதின்னு நினைச்சேன்” என்று சொல்லி சிரித்தான்.

அவன் அருகில் அமர்ந்த நந்தினி, “இல்ல, ஒரு பெண்ணால தான் பெண்ணோட கஷ்டத்தைப் புரிஞ்சிக்க முடியும்..னு சொல்வாங்க. ஆனா நீங்க என் நிலமையப் புரிஞ்சுகிட்டு நடந்துக்கிட்டது என் உணர்வுகளுக்கு நீங்க  கொடுத்த மரியாதையா நினைச்சுத்தான், அதுக்கு நன்றியாத்தான் உங்களை நமஸ்கரித்தேன்” என்றாள் ஆதினி மகிழ்ச்சியாக.

“உன்னைப் போல தான் நானும். இந்த உடம்பும் மனசும் இறைமை கொடுத்தது. இதை மதிக்கணும். எதிரா செயல்படக் கூடாதுங்கற கொள்கை கொண்டவன். அதனால தான் உன்னோட  நிலைமையை என்னால புரிஞ்சிக்க முடிந்தது.” என்று அன்பாக சொன்ன கணவனின் நெஞ்சினில் காதலுடன் சாய்ந்தாள் ஆதினி.

எழுத்தாளர் ராஜேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அறிவுக் கண்(நீர்)… (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    டாக்டர் மாப்பிள்ளை! (சிறுகதை) – இரஜகை நிலவன்