2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“வயசானா மனுஷங்களுக்கு புத்தி பேதலிச்சா போகும். சே ஏன்தான் இப்படி நடந்துக்கறாரோ உங்க தாத்தா. எந்தக் கல்யாணப் பத்திரிகை வந்தாலும் முத ஆளா கிளம்பிடறாரு.
அப்பாதான் சொல்லிட்டாரில்ல, இனிமேல்லாம் இப்படி அலைய வேண்டாம்பா நான் முடிஞ்சா போயிட்டு வந்திடறேன். முக்கியமானவங்க வீட்டு விஷேசத்துக்கு மட்டும் நீங்க போனா போதும்னு.
கேக்குறாரா பாரேன். வயசாக வயசாக ஒரு ஒழிமானம் வரனுமில்ல. இன்னும் என்ன ஆசை வேண்டிக் கிடக்கு. எங்க போனாலும் கூடக்கூட பாட்டியையும் கூட்டிகிட்டு போயிடறார். பிள்ளைங்களோட சவுகரிய, அசௌகர்யங்களைப் பத்தி யோசிக்கிறதே இல்லை.
போற இடங்கள்ல டீஸண்ட்டாவும் நடந்துக்கறதில்லை. பார்த்தவங்க யாராவது வந்து சொல்லும் போது நாக்கைப் பிடுங்கிக்கலாம் போல இருக்கு. தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க வீட்டில எல்லாம் தலை காட்ட முடியலை. எங்க போனாலும் இவர் புராணம் தான் எல்லாரும் பாடறாங்க.
வீட்டில இருந்தாலும் அரை நாழி சும்மா இருக்கறதில்லை. என்னவோ இவருதான் குடும்பத்தையே தூக்கிப் பிடிச்சுக்கிட்டு நிக்கற மாதிரி நினைப்பு. வாசக்கதவைப் பூட்டினியா, வராந்தா லைட்டை அணைச்சிட்டியான்னு ஏதாவது தொணதொணன்னு நச்சரிச்சுகிட்டே இருக்கறது. ஏன் இங்கே யாருக்கும் பொறுப்பு இல்லையா. அப்படி அப்படியே போட்டுடுவோமா” என பிள்ளைகளிடம் குறைபட்டுக் கொள்ளும் ராஜம் கூடவே ஒரு விஷயமும் மறக்காமல் சொல்லுவாள்.
“நானெல்லாம் இப்படி ஒரு நாளும் இருக்க மாட்டேன்பா. வயசாயிடுச்சு நமக்கு, நாம கொஞ்சம் ஒதுங்கிப்போம் பிள்ளைங்க பொறுப்பா பாத்துப்பாங்கன்னு உங்க மேல நம்பிக்கை வச்சு ஒதுங்கிடுவேன். ஒரு நாளும் நீங்கள்ளாம் என்னை நினைச்சு சங்கடப் படற மாதிரி நடந்துக்க மாட்டேன். வயசாயிடுச்சுங்கிறதுக்காக தொணதொணன்னு பேசி இம்சை பண்ண மாட்டேன். பேரக்குழந்தைகளோடவும், கோயில் குளம்னும் என் பொழுதைப் போக்கிப்பேன்” என்று.
அந்த அம்மாதானா இது என்று குழப்பமாக உள்ளது அவள் பிள்ளைகள் சுமந்துக்கும், விமலனுக்கும்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மனைவியுடன் வெளியில் சென்று வரலாம், ஒரு சினிமாவுக்குப் போயிட்டு வரலாம் இப்படி ஏதாவது ப்ளான் பண்ணி குழந்தைகளைப் பாத்துக்கம்மா என்று அம்மாகிட்ட சொன்னா மறுத்து ஒண்ணும் பேசறதில்லையே தவிர முகத்தில பெரிய மாற்றம் வந்துதான் மறையுது.
சரி குழந்தைங்க படுத்தறாங்க போலன்னு வீட்டிலேயே ஏதாவது படம் பதிவிறக்கம் செய்து பாக்கலாம்னு உக்கார்ந்தா, “குழந்தைங்களை வச்சுகிட்டு இது என்ன கண்றாவி படம், இது என்ன ஒரே கூத்தும் கும்மாளமுமா ஒரு நிகழ்ச்சி” என்று ஏதாவது சொல்லிகிட்டே இருக்காங்க.
யாரோட தொந்தரவும் இல்லாம டிவி பாக்கனும்னு நினைக்கிறாங்க. அதுக்கு ஏதாவது இடைஞ்சல் வந்தா மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிறாங்க.
தாத்தா பாட்டிக்கு சொன்ன ஒழிமானம் இப்ப எங்க போச்சு. பேரக்குழந்தைகளோடவும், கோயில் குளம்னும் இருப்பேன்னு சொன்ன வார்த்தைகள் மறந்து போயிருக்குமா. யோசிக்க யோசிக்க தலை வலிதான் வந்ததே ஒழிய புரிந்து கொள்ள முடியவில்லை அவள் பிள்ளைகளால்.
வீட்டில எத்தனையோ விஷேசங்களை இரண்டு பேருமா மனைவியோட சேர்ந்து அம்சமா நடத்தி இருக்காங்க. கிரஹப்பிரவேசமே ஒண்ணுக்கு ரெண்டா பண்ணியாச்சு. இதைத்தவிர அப்பாவுக்கு பீமரத சாந்தி, அம்மா அப்பாவுக்கு கல்யாணம் முடிஞ்ச ஐம்பதாவது வருஷம், இப்படி எத்தனையோ சின்ன விஷேசம் முதல் பெரிய விஷேசம் வரை சிறப்பா பண்ணியாச்சு.
பிள்ளைகளை நம்பி பொறுப்பைக் கொடுத்திடுவேன்னு சொன்ன அம்மா இன்னும் நம்பிக்கை வைக்காத காரணம் புரியவே இல்லை.
அப்பா அம்மாவுக்கு சதாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர் அண்ணன் தம்பி இருவருமாய்.
“புரோகிதரை கன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா, சாப்பாட்டுக்கு அரேன்ச் பண்ணியாச்சா, சரியான டயத்துக்கு வந்திடுமில்லையா, யாரும் குறை சொல்ற மாதிரி நடந்திடக் கூடாது இல்லையா அதனாலதான் கேக்கறேன். மத்தபடி வயசான தொணதொணப்பெல்லாம் வந்திட்டுதுன்னு நினைக்காதீங்க. ஒரு நாளும் எனக்கெல்லாம் அது வரவே வராது” என்று இடையிலேயே இதையும் சொல்லிக் கொண்டு.. ஒருநாளைக்கு மூன்று முறையாவது இதே விஷயத்தைக் கேட்டுக் கொண்டு, அடாடா தாங்க முடியலை.
மருமகள்களிடம் வேறு விசாரணை. “பூவுக்கு சொல்லியாச்சா பாலுக்கு சொல்லியாச்சா” என்று. கூடவே “நியாபகத்துக்குத் தாம்மா கேக்கறேன் தொணதொணக்கிறேன்னு நினைச்சுக்காதீங்க” என்று வேறு.
நாம மிகச் சரியாகத்தான் நடந்து கொள்கிறோம் என்று நினைக்கிறது மட்டுமில்லாம, அதை விடாம சொல்லிகிட்டே இருக்கிறவங்ககிட்ட என்னன்னு சொல்றது எப்படி அவங்க தப்பைப் புரிய வைக்கிறது முடியவே முடியாது. சொன்னாலும் வருத்தப்படுவாங்களே ஒழிய மாறப் போறதில்லை.
நாளைக்கு நாம எப்படி நடந்துக்குவோமோ தெரியாது. எனவே கண்டும் காணாம சகிச்சுகிட்டு வாழப்பழகறதுதான் சரின்னு தோன்றியது அவள் பிள்ளைகளுக்கு.
அம்மா பேசும்போது அவர்களுக்கு கோபமோ எரிச்சலோ வருவதற்குப் பதில் அவள் முன்பு பேசிய வார்த்தைகளுடன் இப்போதும் நானெல்லாம் படுத்தமாட்டேன், நச்சரிக்க மாட்டேன், உங்களையெல்லாம் நம்பாமல் இருக்க மாட்டேன் என்று பேசுவதும் சேர்ந்து மிகவும் திகைப்பாகத்தான் இருக்கிறது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
எல்லோர் வீடுகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே தத்ரூபமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அருமை மா! பாராட்டுக்கள்!!