2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
லாவண்யாவின் வீட்டுக்கு உற்சாகமாகக் கிளம்பிய லோகன், திருவிழாவிற்குப் போகும் சிறுவனின் உற்சாக மனநிலையில் இருந்தான். ரிசப்சனில் காத்திருந்த லாவண்யா, புன்முறுவலுடன் அவனை எதிர்கொண்டாள். அலுவலகத்திலிருந்து வந்ததாலோ என்னவோ அவள் முகத்தில் கொஞ்சம் களைப்புத் தெரிந்தது.
‘அதிக வேலையா இன்று? யூ சீம் டயர்ட்’ என்றான் லோகன் கவலையுடன்.
‘வழக்கம்போலத்தான்’ என்று பதிலளித்து விட்டு, டிரைவரிடம், ‘வீட்டிற்கு’ என்றாள்.
‘ஒரு புதிய மனிதனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதில் ஏதேனும் சங்கடம் உண்டா?’ என்ற அவனின் கேள்விக்கு அவள் சிறிய சிரிப்புடன் பதில் சொன்னாள், ‘எங்க வீட்டிற்கு வந்து பாருங்கள்’ என்றாள்.
இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சிறிய வீடு என்றாலும், வீடு சுத்தமாக இருந்தது. ஹாலில் வெள்ளை வெள்ளை முண்டு உடுத்தி, எலுமிச்சை நிறத்தில் சோபாவில் அமர்ந்திருந்த அவளின் அம்மா ஏதோ பல நாள் பழகியவர் போல’ ‘வரூ..இரிக்கு’ என்று உபசரித்தார்.
லாவண்யாவின் அந்தப் பளபளக்கும் மஞ்சள் நிறம் அவள் அம்மாவிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
‘அம்மாவிடம் பேசிக்கிட்டு இருங்க.. ஃபிரஷ் ஆயிட்டு வர்ரேன்’ என்று கூறி பக்கத்து அறைக்குள் நுழைந்தாள் லாவண்யா.
மலையாளம் நன்கு தெரிந்த லோகனுக்கு, அவள் அம்மாவிடம் பேசுவதில் சிரமம் இருக்கவில்லை. அவளின் அம்மாவும் லோகனுக்குத் தர்மசங்கடம் தரும் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை.
தான் கேரளாவில் பிறந்தது, திருமணத்திற்குப் பிறகு போர்ட்பிளேயர் வந்தது போன்ற அவளைப் பற்றிய பேச்சே ஓடிக் கொண்டிருந்தது.
வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து ஐந்து வயது மதிக்கத் தகுந்த ஒரு சிறுவன் இறங்கி வீட்டிற்குள் வந்தான். ‘பாட்டி’ என்று ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டான்.
‘லாவண்யாவோட மோன். ஃபிரண்டோட வீட்டுக்கு களிக்காம் போயதா’ என்று அந்தச் சிறுவனை அறிமுகப்படுத்தினாள் பாட்டி. ஒரு கணம் அதிரிச்சியில் உறைந்து போனான் லோகன். லாவண்யாவிற்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருப்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அவன்.
அடுத்த அதிர்ச்சியாக, ஒரு ஆட்டோ வந்து நின்று அதிலிருந்து லாவண்யாவின் கணவன் இறங்கி வருவாரோ என்று எதிர்பார்த்தான்.
அவன் நினைப்பை உணர்ந்தவள் போல லாவண்யாவின் அம்மா கூறினார், ‘லாவண்யா ஹஸ்பெண்டை டைவோர்ஸ் செஞ்சு’. ஆனால் அவன் அதிரிச்சி அடைந்த அளவிற்கு அந்த வீட்டினர் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவன் உணர்ந்தான்.
பூப்போட்ட நைட்டியுடன் வெளியே வந்தாள் லாவண்யா. ஆபீஸ் அலங்காரங்களைக் களைந்துவிட்டு, முடியை அலட்சியமாகக் கொண்டை போட்டிருந்தாள். தன்னை அலங்கரித்துக் கொள்ள அவள் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் வரும்போது ஒரு நல்ல சோப்பின் வாசமும் கூடவே வந்தது.
‘ஹலோ கிருஷ்.. இது லோகன். மை ஃபிரண்ட்… லோகன், இது என் சன் கிருஷ்’ என்று இருவரையும் அறிமுகப்படுத்தினாள்.
‘ஹை அங்கிள்’ என்று சாதாரணமாக பேச்சைத் தொடங்கிய கிருஷ், தமிழ்நாட்டைப் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டான். அம்மாவிடம் தமிழிலும், பாட்டியுடன் மலையாளத்திலும் மாற்றி மாற்றி அவன் உரையாடியது லோகனுக்கு விசித்திரமாக இருந்தது.
‘பேசிக் கொண்டிருங்கள்… அதற்குள் டின்னர் தயார் செய்து விடுகிறேன்’ என்று கூறிவிட்டு சமையலறையில் புகுந்தாள் லாவண்யா.
அன்று இரவு நான்கு பேரும் சேர்ந்து இரவு உணவு அருந்தியது, லோகனுக்கு சிறுவயதில் தன் தாய் தந்தையுடன் உட்கார்ந்து சாப்பிட்ட ஞாபகம் வந்தது. இதுபோல் ஒரு குடும்பச் சூழ்நிலையில், வீட்டு உணவு அருந்துவது அவன் வாழ்க்கையில் இதுவரை நடந்தது இல்லை என்பதையும் உணர்ந்தான்.
இரவு உணவுக்குப்பின் பாட்டியும், பேரனும் ஒரு படுக்கை அறைக்குள் சென்று விட்டார்கள். சாப்பிட்ட பிறகு சமையல் அறையை லாவண்யா சுத்தம் செய்தபோது, பக்கத்தில் நின்று லோகன் அவளோடு உரையாடிக் கொண்டிருந்தான்.
‘நான் கிளம்பட்டுமா?’ என்றான் லோகன்.
‘ஏன் காலையில் போகலாமே?’ என்றாள் லாவண்யா. உரையாடல் பலநாள் பழகிய நெருக்கமானவர்களின் உரையாடல் போல் வெளிப்படையாக இருந்தது.
‘உங்களுக்கு எதற்கு சிரமம்? பெட்ரூம் கூட ஒண்ணுதான் இருக்கு போல…’
‘வீ வில் ஷேர் மை ரூம்’ என்றாள்.
அவன் தூரத்தில் இருந்த ரசித்த அவளின் முகமும், உதடுகளும் அன்று அவனுக்கு அருகாமையில் வந்து சுகம் தந்தன. அவளின் துடிக்கும் இமைகள் அவனின் கன்னத்தில் வருடின. அவளின் சந்தன நிற உடலின் கதகதப்பில், கண் மூடி மயங்கிக் கிடந்தான் லோகன்.
ஒரு பெண் இத்தனை ரகசியங்களின் சுரங்கமா? என்று பிரமித்தான். நாடாளும் மன்னர்கள் கூட பெண்ணால் தங்கள் முடி துறந்தனர் என்ற கதைகளை இப்போது அவன் நம்பினான்.
அவளின் அருகாமையில் அவனின் மனச்சுமைகள் காற்றில் கரைந்து, வடிந்து அவனை எடையற்றவனாக்கின.
அவன் காதுகளில் அவள் கிசுகிசுத்தாள், ‘உன்னுடைய கேள்வி கேட்காத தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. முக்கியமாக எனது கடந்த கால வாழ்க்கை பற்றி எதுவும் நீ எதுவும் கேட்காதது’.
‘நீ மாத்திரம் என்ன? என்னைப் பற்றி எதுவும் கேட்காமல், என்னை வீட்டுக்கு வரச் சொல்லி விருந்து வைத்து, உன்னையும் கொடுத்து.. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்ப வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறாய்’.
பாட்டியும், கிருஷூம் உறங்கிக் கொண்டிருக்க, தமிழ்நாட்டுக்குப் புறப்படுவதற்கு முன் ஒருமுறை வருவதாகக் கூறி லாவண்யாவிடம் விடைபெற்றுக் கிளம்பினான் லோகன்.
அன்று அவனுக்கு முக்கியமான ஒரு வேலை இருந்தது. நகை செய்யும் நண்பனிடமிருந்து ஆர்டர் கொடுத்திருந்த கில்ட் நகையை வாங்கி வர வேண்டும். அந்த வேலையும் முடிந்து, அறையில் அந்த நகையையும், நகையின் போட்டோவையும் அருகருகில் வைத்துப் பார்த்தபோது இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாதது மிகவும் திருப்தியாக இருந்தது.
போட்டோவில் இருந்ததைப் போலவே ‘பிரைஸ் டேக்’ தயார் செய்து கட்டினான். அடுத்து செய்ய வேண்டிய வேலைதான் வேட்டையின் முக்கியப் பகுதி. மிகக்கவனமாகவும், சரியான பயிற்சியுடனும் மேற்கொள்ளப்பட வேண்டியது. அதற்கான தகுதியான ஆளும் அவன் கைவசம் இருந்தான். அவனை நேரில் சந்தித்து விரிவாக விளக்கினான்.
‘குடும்பப் பாங்கான, டீசண்டான ஒரு பெண்ணை உன் மனைவியாக நடிக்க ஏற்பாடு செய்து கொள். நீயும் டீசண்டா டிரஸ் பண்ணிக்கிட்டு அந்த நகைக்கடைக்குப் போ. இந்தப் புகைப்படத்தில் உள்ள நகை உள்ள இடத்திற்கு நேராகப் போகாமல் கேஷுவலாகப் போ. மற்ற நகைகளையும் பார்த்துக் கொண்டே போக வேண்டும். நான் குறிப்பிட்ட நகையைப் பார்த்தவுடன், அதன் நம்பரை வைத்து அதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னோடு வரும் அந்தப் பெண்மணி அந்த நகையை எடுத்துப் பார்க்கும்போது, கை தவறுவது போல் நழுவ விடவேண்டும். நீ உடனே விழுந்த நகையைக் குனிந்து எடுக்க வேண்டும். எடுக்கும்போது, இமைக்கும் நொடியில், நீ கொண்டு போன நகையையும், அங்கிருந்த நகையையும் மாற்ற வேண்டும். கடையின் நகையை நீ கொண்டு வர வேண்டும். நகையை மாற்றுவது மின்னல் போல் நடக்க வேண்டும். காமிராவில் சிக்கக்கூடாது. அந்தப் பெண்ணுக்கும் கூடத் தெரியக் கூடாது. முக்கியமாக நீங்கள் இரண்டு பேரும் உடனே கிளம்பி வரக்கூடாது.
மற்ற நகைகளைப் பார்வையிட்டு விட்டு, அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு சிறிய கிஃப்ட் வாங்கிக் கொடுத்துவிட்டு வா. நாளை இதே நேரம் இதே இடத்தில் சந்திப்போம். முக்கியமாக மாட்டிக் கொண்டால் என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடாது’.
அவன் கைநிறைய பணத்தைத் திணித்துவிட்டுக் கிளம்பினான் லோகன்.
அவன் சொன்ன வேலையைச் சிறப்பாகச் செய்திருந்தான் நண்பன். அறையில் அமர்ந்து, அந்த நகையை மென்மையாகத் தடவினான் லோகன். இது லாவண்யாவின் சங்குக் கழுத்தில் கிடக்கும்போது எவ்வளவு அழகுடன் காட்சியளிக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான்.
பெரிய நகைக் கடைகளில், மாதத்திற்கு ஒருமுறை வல்லுனர் வந்து, அங்குள்ள நகைகளின் எடை, தரம் போன்றவற்றை பரிசோதித்து அதை ‘பிரைஸ் டேக்’குடன் ஒப்பிட்டு சரி பார்ப்பார். நகைகளை வாங்கிச் சென்ற கஸ்டமர்கள், கஷ்ட காலத்தில் விற்கச் செல்லும்போது மாத்திரமே அதன் உண்மைத் தன்மை வெளிப்படும்.
அதற்குப் பல காலம் பிடிக்கும். அதற்குள் லோகன் போன்ற ஆட்கள் எங்கோ மாயமாய் மறைந்து விடுவார்கள். கவனமாக, நகையில் தொங்கிக் கொண்டிருந்த ‘பிரைஸ் டேக்’கை எடுத்துக் கிழித்து, பிளஷில் போட்டுத் தண்ணீரை அடித்து விட்டான்.
படுக்கையில் படுத்தும் ஏனோ தூக்கம் வரவில்லை. மணியைப் பார்த்த போது மாலை நான்காயிருந்தது. குளித்துவிட்டு, நல்ல உடையணிந்து கிளம்பினான் லோகன். அவனையறியாமல், கால்கள் லாவண்யாவின் அலுவலகத்தை நோக்கிச் சென்றன.
அன்று லாவண்யா எங்கும் செல்லாமல் அலுவலகத்திலேயே இருந்தாள். அடுத்த நாள், தான் செல்ல இருப்பதாகவும், அம்மாவையும், கிருஷ்ஷையும் பார்த்துச் சொல்லி விட்டுப் போக அன்று மாலை ஏழு மணிக்கு மேல் அவள் வீட்டுக்கு வருவதாகவும் கூறினான்.
மேலும், அன்று இரவு டின்னர் தன்னுடைய ட்ரீட் என்றும், வெளியில் ஒரு ரெஸ்ட்டாரெண்டில் சாப்பிடலாம் என்றும் கூறினான். வழக்கம்போல ஒரு புன்சிரிப்புடன் லகுவாக அதை ஏற்றுக் கொண்டாள் லாவண்யா.
இரவு ஏழு மணிக்கு, டாக்சியில், கையில் மூன்று அழகிய பார்சலுடன் லாவண்யாவின் வீட்டின் முன் வந்து இறங்கினான் லோகன். டாக்சியை வெயிட்டிங்கில் இருக்கச் சொன்னான்.
வழக்கம்போல பாட்டி உற்சாகமாக அவனை வரவேற்க, அவரின் கையில் கொண்டு வந்த விலையுயர்ந்த சால்வை அடங்கிய பார்சலைக் கொடுத்தான். ஓடி வந்து கட்டிப்பிடித்த கிருஷ்ஷுக்கு ரிமோட்டில் பறக்கும் ஹெலிகாப்டர் அடங்கிய பார்சலைக் கொடுத்தான். புன்முறுவலுடன் வந்த லாவண்யாவிடம் கையில் இருந்த பார்சலைக்கொடுக்க, ‘என்ன?’ என்ற புருவ வினாவுடன் அவனைப் பார்த்தாள்.
‘ஓபன் அன்ட் சீ’ என்றான்.
அழகிய அந்த நகையைக் கண்டு திகைத்தாள் லாவண்யா.
‘நகையே போடாத எனக்கு நகையா?’ என்றாள். மற்ற இருவரும், தங்களுக்குக் கிடைத்த பரிசை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, ‘எங்கள் எல்லோரையும் மகிழ்வித்ததற்கு நன்றி’ என்று கண்ணைச் சிமிட்டினாள்.
பாட்டி வர மறுத்து விட்டதால், அவர்கள் மூவர் மாத்திரம் அந்த ரெஸ்ட்டாரெண்டில் தனி டேபிளில் அமர்ந்திருந்தனர். மெல்லிய இசையும், அடர்த்தி குறைந்த வெளிச்சமும் அந்தச் சூழ்நிலையை உற்சாகமூட்டியது.
பணிவாக வந்து நின்ற சப்ளையருக்கு லாவண்யாவே ஆர்டர் கொடுத்தாள். அவளின் ஒவ்வொரு அசைவும், அவனுக்கு கிளர்ச்சியூட்டுவதாகவே இருந்தது. அருகில் இருந்த மீன் தொட்டியைப் பார்க்க கிருஷ் சென்றபோது, அவளின் மெல்லிய விரல்களைப் பற்றிக்கொண்டு கேட்டான்.
‘பரிசு பிடித்ததா?’
‘எனக்கு நகைகளின் மேல் எப்போதும் ஈடுபாடு இருந்ததில்லை. ஏதாவது அவசரத்துக்கு உதவும். நன்றி. சாரி டு சே திஸ்’ என்றாள்.
அன்றைய நாளும் இனிதாகவே கழிந்தது. அடுத்த நாள் கிளம்பி, சென்னை வந்து சேர்ந்த லோகனுக்கு, எதையோ அந்தமானில் தொலைத்துவிட்டு வந்த உணர்வே இருந்தது.
அடுத்த நாள் அந்தமானுக்கு டிக்கெட் புக் செய்துவிட்டு, பழைய ஞாபகத்தில் மூழ்கி, ரெஸ்ட்டாரெண்டில் உட்கார்ந்திருந்த லோகனுக்கு, அவனின் அடுத்த நாள் அந்தமான் பயணம் பெரும் அதிர்ச்சி தருவதாக இருக்கும் என்று அப்போது தெரியவில்லை.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings