in

லோகன் (குறுநாவல் – பாகம் 2) – சின்னுசாமி சந்திரசேகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

எஸ்கேப்….

வியர்வை வழிய, கண்முன் சிறைக்கம்பிகள் நிழலாட, ஸ்டெப்னியைத் தூக்கக் கையை வைக்கும்போது பின்னாலிருந்து மற்றொரு போலீஸ்காரரின் குரல் கேட்டது, ‘ராமய்யா… சிக்காக்கொண்டா போளிமகா.. இவர்னெல்லா பேஹ கலுசுபிடு..’ (ராமய்யா.. சிக்கிக்கிட்டான் ..இவர்களையெல்லாம் சீக்கிரம் அனுப்பிவிடு)

அந்த ராகவேந்திர சுவாமிகளே கான்ஸ்டபிள் உருவில் வந்து அவனை நான்கு வருட நரகச் சிறையில் இருந்து காப்பாற்றியதாக நினைத்துக் கொண்டான் லோகன். ‘ஓ’வென்று உரக்கக் கத்தித் தன் மகிழ்ச்சியை வெளிக் காண்பிக்க உள்ளம் துடித்தாலும், சூழ்நிலை கருதி, உணர்வுகளை அடக்கி, அமைதியாக மாநில எல்லையைக் கடந்தான் லோகன்.

இதுவரை, இருந்தும் அனுபவிக்க முடியாமல் இருந்த குளிர்ந்த தென்றல் காற்றும், பசுமையான மலைத்தொடர்களும், டிக்கியில் பின்னால் அடைத்து வைத்திருந்த விலையுயர்ந்த பொருட்களும் அவனுக்கு உட்சாகத்தை ஊட்டின.

வளைந்து வளைந்து சென்ற கார், ஒரு ஷட்டர் இடப்பட்டிருந்த கட்டிடத்தின் முன் நின்றது. மெலிதாக மூன்று முறை ஹாரன் ஒலித்ததும், ஷட்டரைத் திறந்து கொண்டு, உடம்பில் சதையே இல்லாமல் மனோபாலா போல் ஒருவன் வெளியே வந்தான். கார் உள்ளே நுழைந்ததும், எதுவும் பேசாமல் லோகனின் அருகில் வந்து நின்றான்.

‘பச்சைக் கலர்.. நம்பர் பிளேட்..புது டயர்..’ என்றான் லோகன்.

எந்த சந்தேகமும் கேட்காமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டுச் சென்றுவிட்டான் ஒல்லி மனிதன். லோகனுக்குத் தெரியும், இன்னும் இரண்டு நாட்களில் அவனின் இந்தக் கார் அவனுக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றுரு கொண்டுவிடும் என்று.

டிக்கியில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் வெளியே வந்து ஷட்டரை மூடினான லோகன். அங்கங்கே உள்ள அவனின் நம்பிக்கையான ஆட்கள் மூலம், கொண்டு வந்த பொருட்கள் உருமாற்றப்பட்டு பணமாகக் கையில் வந்துவிட்டது லோகனுக்கு.

ஒரு பழைய லாட்ஜில் அழுக்கடைந்த முடை நாற்றம் வீசும் படுக்கையில் படுத்திருந்தான். இது போன்ற லாட்ஜ் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது என்றாலும், பாதுகாப்பானது என்ற ஒரே காரணத்திற்காக தேர்வு செய்வான். வெற்றியைக் கொண்டாடும் பழக்கம் அவனுக்கு எப்போதும் இருந்ததில்லை.

கொண்டாட்டம் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டும் என்பதோடு, நகரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போலீசின் ஸ்லீப்பர் செல்களின் கவனத்தில் படுவதையும் அவன் விரும்பவில்லை. ஏனோ இந்த முறை நடந்த வேட்டையில் அவனுக்கு முழுத் திருப்தி இல்லை. அவன் முழுத்திறமையையும் உபயோகிக்கும் வாய்ப்பு கிடைக்காதது காரணமாக இருக்கலாம்.

அன்று மாலை நேரம், அந்த அறையிலிருந்து வெளியேறி நகரத்து வீதிகளில் நடந்தான். அவனது உடை, நடை, நாகரிகம் முழுவதையும் மாற்றி, வேலை தேடி அலையும் ஒரு மனிதனைப் போலவே தெரிந்தான்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு குறிப்பிட்ட டாஸ்மாக்கில் நுழைந்து அங்கிருந்த விற்பனையாளரிடம், ‘கங்காரு பிராண்ட் விஸ்கி ஹாப்’ என்றான். இவன் முகத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்த அந்த மனிதன் சட்டென்று உள்ளே சென்று வந்து ஒரு சிறிய பார்சலை இவன் கையில் திணித்தான். தயாராய் வைத்திருந்த பண நோட்டுக்களை அவன் கையில் சொறுகிவிட்டு வெளியில் நடந்தான் லோகன்.

ஆளரவமற்ற ஒரு தெருவிளக்கின் அடியில் நின்று அந்தப் பார்சலைப் பிரித்தான் லோகன். உள்ளே ஒரு வெள்ளைத் தாளில், ஒரு வீட்டின் முகவரி மாத்திரம் இருந்தது. அந்த முகவரியைத் தன் மூளையில் நன்றாகப் பதிவு செய்துகொண்டு கையில் இருந்த காகிதத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து சாக்கடையில் வீசினான்.

தடையங்களை எப்போதும், எங்கேயும் விட்டு வைப்பதில்லை அவன். ஒரு வேட்டையின் போது உபயோகித்த உடைகள், காலணிகள், தொப்பி போன்ற சகல பொருட்களையும் தீயிட்டு அழித்து விடுவான்.

இன்னும் உறங்குவதற்கு வெகுநேரம் இருந்தது. மூளையில் பதிவு செய்திருந்த முகவரிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டான். முகவரி இருந்த ஸ்டாப்பிற்கு முதல் ஸ்டாப்பிலேயே இறங்கி, சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று அந்த வீட்டின் எதிரில் நடந்தான். ஓரக்கண்ணால் அந்த வீட்டை நோட்டமிட்டான்.

கொஞ்சம் இருளடைந்து, அவன் விரும்பியவாறு ஆளரவமற்று இருந்தது அந்த வீடு. அவனின் டாஸ்மாக் நண்பன் கொடுத்த தகவலின்படி அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் போயிருக்கிறார்கள் என்பதை நாளை பகலில் வந்து உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மீண்டும் பேருந்து பிடித்து, அந்த நாற்றம் பிடித்த அறைக்குள் வேண்டா வெறுப்பாக நுழைந்தான்.

அடுத்த நாள் அதே போல் அந்த இடத்திற்கு மாற்றுவழியில் செல்லும் பேருந்தில் ஏறி அந்த வீட்டை நெருங்கினான். டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்களை உபயோகித்தால், பின்னாளில் அவனின் போக்குவரத்தை உறுதி செய்யும் சாட்சிகளாக அவை மாறிவிடக்கூடும் என்பதால்தான் பேருந்துப் பயணம்.

நடைபாதைவாசி போல் நடந்து, அந்த வீட்டின் வரைபடத்தை மனதில் பதித்துக்கொண்டான். இரவு பத்து மணி வரை அந்த வீட்டுக்கு யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, ஒல்லி மனிதனின் ஒர்க்க்ஷாப்பை அடைந்தான் லோகன்.

புதிய நம்பர் பிளேட்டும், கலரும், புதிய டயரும் மாற்றப்பட்ட அவன் கார் அடையாளம் தெரியாமல் கம்பீரமாக நின்றது. ஒல்லி மனிதன் கேட்கும் முன்பே லோகன் கை நிறைய அள்ளிக் கொடுத்தவுடன், மகிழ்ச்சியைக் கூட வெளிப்படுத்தாமல் வாங்கிக் கொண்டான் ஒல்லிமனிதன் மனோபாலா.

காரை லாட்ஜிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி நிறுத்திவிட்டு நடந்து சென்று ரூமை அடைந்தான். மனதில் திட்டங்களைத் தீட்டி, செய்முறையை ஒருமுறை ரிகர்சல் பார்த்துவிட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு உறக்கத்தைத் தழுவினான் லோகன்.

இரவு இரண்டு மணி வாக்கில் அந்த வீட்டின் பின்பக்கச் சுவர் அருகில் நின்றிருந்தான் லோகன். காரை அரை கிலோ மீட்டர் தள்ளி, இருளான ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி விட்டு வந்திருந்தான். கருப்பு நிற உடையும், அதே நிறத்தில் கிளவுசும் அணிந்து இருள் மனிதன் போல் சுவரை ஒட்டி பல்லி போல் பொறுமையாக நின்றான்.

டெஸ்ட்டரை வைத்து, சுவரிலோ அதைச் சுற்றியுள்ள இடங்களிலோ மின்சாரம் செலுத்தப் பட்டிருக்கிறதா என்று பார்த்தான். ஒரு சிறு கல்லை எடுத்து உள்ளே வீசினான். காய்ந்த இலைகளின் மேல் சப்தத்துடன் விழுந்த கல்லுக்கு எதிர் விளைவுகள் இல்லை என்பதால் தைரியமடைந்தான்.

சில புத்திசாலி வீட்டுக்காரர்கள் நாயை அவிழ்த்து விட்டுவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களை நாய்க்கு சாப்பாடு வைக்கச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள். கல்லை எறிந்தவுடன், நாய் இருந்திருந்தால் நிச்சயம் குரைத்திருக்கும் என்பது லோகனின் கணக்கு. ஒரே தாவலில் குரங்கைப் போல காம்பவுண்டு சுவற்றைத் தாண்டினான்.

கால் நிலத்தில் ஊன்றும்போது, சப்தம் எழாமல் இருக்க குதிகால்கள் இரண்டையும் உபயோகித்துக் கொண்டான். அந்த இருளும், அமைதியும், அதன் இடையில் ஒலிக்கும் இரவுப் பூச்சிகளின் ரீங்காரமும் அவனுக்குப் பிடித்த சூழ்நிலையாக இருந்தது. பொதுவாகவே அவன் இரவுப் பிரியன். மெதுவாக பூனைபோல் நகர்ந்து பின்னால் சுற்றி வந்தபோது அவன் எதிர்பார்த்த தண்ணீர் பைப் அந்த இருளிலும் நன்கு தெரிந்தது.

ஒரு பயிற்சி பெற்ற சர்க்கஸ்காரனைப் போல ‘சர சர’வென்று ஏறி முதல் மாடியில் இறங்கினான் லோகன். இருளில் பொருட்களைப் பார்க்கும் திறனை முறையான பயிற்சியின் மூலம் வளர்த்திக் கொண்டிருந்தான் அவன். அவனின் தொழிலுக்கு அது மிகவும் அத்தியாவசியமும் கூட. மாடியில் உள்புறம் தாளிடப்பட்டிருந்த கதவின் முன் நின்று, தன் பாக்கெட்டில் வைத்திருந்த சிகரெட் லைட்டர் போன்ற ஒரு பொருளை எடுத்தான்.

கதவின் உள்தாள் இருக்கும் பகுதியில் அதை வைத்து ஆன் செய்தவுடன் ஒரு வண்டு துளைப்பதைப் போல சப்தத்துடன் இயங்கி, விரல் நுழையும் அளவுக்கு ஒரு துளை உண்டாக்கியது. அத்துளையினுள் ஆள்காட்டி விரலை விட்டு, இடப்பட்டிருந்த தாளை நீக்கினான் லோகன். ஓட்டை போட்ட இடத்திலிருந்து வெளிவந்த அந்த மரத்துண்டை பத்திரமாக பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

கதவை மெல்ல சாத்திவிட்டு இருளில் பார்த்தபோது அது ஒரு படுக்கை அறை என்று தெரிந்தது. எப்போதும் டார்ச் போன்ற சாதனங்களை அவன் உபயோகிப்பதில்லை. காரணம், இயற்கை உபாதைக்காக அந்நேரத்தில் எழும் அக்கம் பக்க வீட்டாருக்கு அந்த வெளிச்சம் சந்தேகத்தைக் கிளப்பக் கூடும்.

எதிர்பார்த்ததைப் போலவே ஒரு இரும்பு பீரோவும் இருந்தது. அவனது உள்ளுணர்வு முதலில் பீரோவைத் திறக்கச் சொல்லியது. அவனது சாவிக்கு மிக எளிதாக அடி பணிந்தது பீரோ. துணிகளுக்கு அடியில், இரண்டு மூன்று நெக்லசுகளும், வளையல்களும், மோதிரங்களும் சிதறிக் கிடந்தன. அவைகளை எடுத்துக்கொண்டு, மீண்டும் பீரோவை அழகாகப் பூட்டினான்.

வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தாலும், லோகன் வந்து வெளியேறியது உடனே தெரியாது. நகை இல்லை என்பது தெரியும்போதுதான் அதிர்ச்சி அடைவார்கள். அவ்வளவு நேர்த்தியான திருடன் அவன். மீண்டும் அவன் பட்சி சொல்லியதால், படுக்கையை உயர்த்திப் பார்த்தான். அடியில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பணம் நிச்சயம் கருப்புப் பணமாகத்தான் இருக்கும்.

பணத்தையும், நகைகளையும் முதுகுப்பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்து கதவைச் சாத்தினான். துளையில் விரல் விட்டு உள்தாளைப் போட்டான். பாக்கெட்டில் போட்டு வைத்திருந்த மரத்துண்டை எடுத்து, அதில் ஒரு பசையைத் தடவி அந்தத் துளையில் பொருத்தினான். துளை இருந்த இடம் தெரியாமல் பொருந்திக்கொண்டது மரத்துண்டு. கதவை உடைக்காமல், பூட்டை உடைக்காமல் திருடு போனது எப்படி என்று வீட்டாரும், போலீசாரும் ஆரம்பத்தில் மண்டையை உடைத்துக் கொள்வார்கள்.

லோகன் மீண்டும் கார் அருகில் வந்து, பானெட்டைத் திறந்து எஞ்சின் பகுதியை நோக்கினான். எஞ்சினின் உள்ளே, எஞ்சினின் ஒரு பகுதியைப் போலவே வடிவமைக்கப் பட்டிருந்த ஒரு மூடியைத் திறந்தான். மேல் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாய் சென்று கொண்டிருந்த ஒயர்களைத் தூக்கினான்.

அதன் அடியில் அமைந்திருந்த ஒரு சேம்பரில் தன் முதுகுப்பையில் வைத்திருந்த நகைகளையும், பணத்தையும் வைத்து மீண்டும் பழையது போலவே மூடி, பானெட்டையும் மூடினான். நள்ளிரவில் சுற்றும் ரோந்து போலீசாரின் கையில் சிக்காதிருக்க அவனின் மெக்கானிக் நண்பன் செய்து கொடுத்திருந்த ஏற்பாடு இது.

அப்படி சிக்கும்போது ரோந்து போலீசார் கேட்கும் கேள்வி, ‘எங்கே போய்விட்டு இந்த நேரத்தில் வருகிறாய்?’. அதற்கு ரெடியாக இருந்தது அட்வான்ஸ் புக்கிங் செய்து அவன் கையில் வைத்திருந்த கேளிக்கை விடுதியின் அனுமதி நுழைவுச் சீட்டு.

அடுத்த கேள்வியான ‘எங்கே போகிறாய்?’ என்ற கேள்விக்கு நேர்மையாய் அவன் தங்கியிருக்கும் விடுதியைச் சொல்லி விடுவான். ஆனால் அதிர்ஷ்டவசமாய் எந்தப் போலீசும் வழியில் இல்லாததால், தன் லாட்ஜை அடைந்தான் லோகன்.

அலுப்பிலும், வெற்றிகரமாக நடந்து முடிந்த வேட்டையின் மகிழ்ச்சியிலும் படுக்கையில் விழுந்தவன் அடுத்த நாள் காலை பதினொரு மணி வரை உறங்கினான். அறையில் ஏதும் தடையங்கள் விடவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, அந்த நாற்றம் பிடித்த அறையைக் காலி செய்து விட்டு, காரை எடுத்துக் கொண்டு சிவாஜி நகரில் உள்ள அவனது நண்பன் கரீம் பாயின் பீடாக்கடைக்குச் சென்றான்.

கரீம் பாயைப் பார்த்து, ‘ஏக் மிட்டா சாஹியே’ என்றான். கரீம் பாய் பதில் எதுவும் பேசாமல் கடையைப் பையனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அடுத்து அரை மணி நேரம் கழித்து இந்திரா நகரில் உள்ள அவரது குடோனுக்குள் லோகனின் கார் நுழைந்தது.

ஆள் அரவமற்ற அந்த குடோனில், கதவுகளைச் சாத்தி விட்டு வந்த பாயிடம் நகைகளையும், கொஞ்சம் பணத்தையும் கொடுத்து விட்டு, ‘காடிக்கோ பேஜ்தோ’ என்று கூறிவிட்டு நடையைக் கட்டினான் லோகன்.

லோகனுக்கு வாய்த்திருக்கும் வரம் என்னவேன்றால், எல்லா ஊர்களிலும் பரவிக் கிடக்கும் அவனது நண்பர்கள் லோகனின் விருப்பப்படியே நடந்து கொள்வார்கள். ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள். பணம் தாராளமாகக் கொடுப்பான். அவர்களும் தொழிலில் சுத்தமாக இருப்பார்கள்.

லோகனுக்குத் தேவை ஏற்படும்போது அவனது பணத்தை அப்படியே திருப்பிக் கொடுப்பார்கள். செய்யும் தொழில் எப்படி இருந்தாலும், அதிலும் ஒரு நேர்மை இருக்கும். அதனால், லோகனுக்கு பேங்கில் கணக்கு வைத்துக் கொள்வது, ஏடிஎம் கார்டு வைத்துக் கொள்வது போன்ற தேவைகள் ஏற்படவில்லை. சிக்கல்கள் கருதி அவன் அதை விரும்புவதும் இல்லை.

காலாற நடந்து கொண்டிருந்தவனுக்கு, மனதில் ஏனோ வெறுமை தோன்றியது. இரண்டு வெற்றிகரமான வேட்டை முடிந்த பின்னும் மனதில் ஏதோ ஒரு ஏக்கம் இருந்தது. லாவண்யாவைப் பார்த்தால் அது தீரும் என்று தோன்றியது. அது காமத்தினால் அல்ல என்பது அவனுக்குத் தெரியும்.

லோகனை அறிந்த அவன் நண்பர்களுக்கு நன்கு தெரியும், அவன் மது அருந்துவது இல்லை, புகை பிடிப்பது இல்லை, பெண்கள் பின்னாலும் சுற்ற மாட்டான் என்பது. அப்படி இருந்தும் லோகன் ஒரு பெண்ணை நினைத்து ஏங்குவது, அதுவும், அந்தமானில் இருக்கும் லாவண்யாவை என்பது, அவனின் கடந்த காலம் தெரியாதவர்களுக்கு ஒரு விசித்திரம்தான்.

லாவண்யாவை முதன் முதலில் போர்ட்பிளேயரில் சந்தித்த சூழ்நிலையை நினைத்துப் பார்த்தபோது லோகனின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 5) – ராஜேஸ்வரி

    லோகன் (குறுநாவல் – பாகம் 3) – சின்னுசாமி சந்திரசேகரன்