டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அடர்ந்த பெரிய காடு அதில் மரத்தடியில் யானைகுட்டி அமர்ந்திருந்தது. வழக்கமாக யானை குட்டி காட்டிற்குள் சென்று உணவு உண்டு, அருகில் இருக்கும் குளத்தில் தண்ணீர் குடிக்கும். எப்போதும் தன் காதுகளை ஆட்டியவாறு மெல்ல அசைந்து கொண்டு, யானை கூட்டத்தோடு விளையாடிக் கொண்டிருக்கும்.
அன்று யானைகுட்டி நடக்க முடியாமல் அமர்ந்திருந்ததை பார்த்து அங்கு பாட்டி யானையும், மற்ற யானை கூட்டமும் வந்தனர்.
அப்போது அந்த யானைக்குட்டி, பாட்டி யானையிடம் தனது முன்னங்கால்களை நீட்டி “வலிக்குது, இரத்தம் வருதுன்னு” சொன்னது. கூட்டத்தில் இருக்கும் அனைத்து யானைகளும், முழு அரவணைப்போடு அதைத் தொட்டு ஆறுதல் அளித்தனர். ஆனால் வலி தங்க முடியாமல் யானைகுட்டி தவித்தது.
‘என்ன செய்வது’ என்று யாருக்கும் தெரியவில்லை. சில மணி நேரத்திற்கு பின் சிறிது சிறிதாக யானை கூட்டம் கலைந்து சென்றது. பாட்டி யானை மட்டும் அங்கேயே நின்றது.
அப்போது அந்த வழியாக வந்த நரிக்கு “யானைகுட்டி ஏன் இப்படி உட்காந்திருக்குது” என்று சந்தேகம் ஏற்பட்டது.
அருகில் வந்து, “என்ன யானை குட்டியாரே சாப்பிட போகலையா? ஏன் உட்கார்ந்து இருக்கீங்க” என்று கேட்டது.
“வா நண்பா, என் காலில் என்னமோ நேத்து தட்டுப்பட்டது. அதையும் மிதிச்சுட்டேன். அப்புறம் ரத்தம் வர ஆரம்பிச்சது. இப்போ ரொம்ப வலிக்குது. வலி ரொம்ப அதிகமா இருக்கு. என் காலை எடுத்து வைத்து நடக்க முடியாத சூழ்நிலையில் நான் இருக்கேன்” என்று வருத்தமாக பேசியது யானைகுட்டி.
“அப்படி என்ன மிதிச்ச?” என்று கேட்டது நரி.
“அது தெரியல” என்றது யானைகுட்டி.
“எந்த இடத்தில் அந்த பொருள் இருந்தது” என்று கேட்டது நரி.
“அந்த சாலை பக்கத்தில் இருக்கிற பெரிய மூங்கில் காடு பக்கத்தில் உள்ள மரத்தில் கீழே நிறைய பொருள் கிடந்தது. அங்க தான்” என்றது யானைகுட்டி.
உடனே, நரி அது என்ன பொருளை பார்க்குறதுக்கு வேகமாக அந்த இடத்துக்கு போச்சு. அங்க போய் பார்த்தப்ப நிறைய பொருள்கள் கிடந்திருந்தது. அதை உற்று பார்த்தது, அதில் ஏதோ திரவம் மாதிரி இருந்தது. அதை முகர்ந்து பார்த்தது, வாடை சுத்தமா நல்லா இல்லை.
“இது என்னான்னு தெரியலையே, இங்க யார் வச்சுருப்பா” என்று யோசித்து பார்த்தது. அந்த யானைகுட்டி மிதித்து பொருள் உடைந்து, பல சிறு பொருளாக கிடந்தது.
“அதில் ஒன்று தான் யானை குட்டியின் காலில் குத்தியிருக்கும், அதனால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கு” என்று நரி புரிந்து கொண்டது. “அது என்ன பொருள்” என்று தெரிந்து கொள்ள, அது யானைகுட்டி கிட்ட மறுபடியும் வந்தது.
“அது என்ன பொருள், யானைகுட்டிக்கு எப்படி வைத்தியம் செய்றது” என்று யோசித்தது நரி.
அப்போது மரத்து மேலே இருந்த குரங்கு எட்டிப் பார்த்து, “என்ன நரியாரே யோசிக்கிற?” என்று கேட்டது.
“யானைகுட்டி மிதிச்ச பொருளை பார்த்தேன். எப்படி வந்ததுன்னு தெரியலை” என்றது நரி.
“எனக்கு தெரியும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நிறைய மனுஷங்க வந்தாங்க. அங்கே உட்கார்ந்து, ஏதோ சாப்பிட்டாங்க. நான் போனப்ப கூட பழங்கள் தூக்கி போட்டாங்க. நானும், எங்க குரங்கு கூட்டமும் அதை சாப்பிட்டோம். அவர்கள் ஏதேதோ சாப்பிட்டு விட்டு, அந்த பொருட்களை இங்கே போட்டுட்டு போயிட்டாங்க. யானைகுட்டி, அந்த பக்கமா வந்ததப்ப அதை மிதிச்சது” என்று மரத்திலிருந்தவாரே சொல்லியது குரங்கு.
அதை கேட்ட நரி வெகு நேரம் யோசித்தும் எந்த பயனும் இல்லை. யானைகுட்டி வலியால் துடித்தது.
“சரி,கொஞ்ச நாளில் மனுஷங்க மறுபடியும் வருவாங்க. அப்போ,அது என்ன பொருள்னு தெரியும். இப்ப வா மருந்து ஏற்பாடு பண்ணுறேன்” என்று யானைகுட்டியின் தும்பிக்கையை தன் தும்பிக்கையால் பிடித்து மெதுவாக அழைத்து சென்றது பாட்டி யானை.
நாட்கள் பல சென்றன.
ஆனால் நரி மட்டும் “அது என்ன பொருள்” என்று தெரிந்து கொள்ள தினமும் அங்கு சென்று பார்த்து, “அந்தப் பொருள் என்னவென்று”, அங்க உள்ள விலங்களுடன் ஆலோசனை கேட்டது.
அது பற்றி யாருக்கும் தெரியவில்லை. எல்லாரும் வந்து நுகர்ந்து பார்த்து, “அதைப் பற்றி தெரியவில்லை” என்று கூறி சென்றனர். ஆனால் அதிகாரிகள் சிலர் அந்த பக்கம் சென்றவர்கள், அந்த பொருளை பார்த்தும் அப்புறப்படுத்தாமலே இருந்தனர்.
கடும் வெயில் நேரம் ஆரம்பமானது. யானைகுட்டியோட கால் மற்றும் உடல்நிலை ரொம்ப மோசமாகி கெட்டுப் போனது. யானைகுட்டியால் நடக்க முடியாமல் காலில் ரொம்ப நீர் வடிந்து கிடந்தது.
வெயில் அதிகமாக இருந்ததனால் என்னவோ, அந்த மரத்துக்கு கீழே இருந்த உடைந்த பொருள் நெருப்பு பற்ற ஆரம்பித்தது. பக்கத்தில் இருக்கின்ற மூங்கில் மரங்கள் எல்லாமே எரிய ஆரம்பிச்சது. அந்த தீ எல்லா பக்கமும் பரவ ஆரம்பித்தது. மரத்தில் இருந்த குரங்கு கூட்டம் எல்லாமே எரிந்து சாம்பலானது.
யானை கூட்டமே பிளிறி ஓட ஆரம்பித்தன. அந்த யானை குட்டியால் ஓட முடியாமல் நெருப்பில் சிக்கி இறந்து போனது. சில நாட்களாக அந்த பகுதி முழுவதும் தீ சூழ்ந்திருந்தது. அந்த நெருப்பிலிருந்து சில விலங்குகள் மட்டும் தப்பின.
நெருப்பிலிருந்து தப்பிய நரி, தன்னுடைய நண்பரான குரங்கு, யானைகுட்டி ரெண்டு பேருமே அந்த நெருப்பிலே இறந்து போனது நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டது.
தீ அடங்கிய பின் அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் சோதனையிட்டு, “எப்படி காட்டுத்தீ உருவானது?” என்று பார்த்தனர்.
அப்போது அங்கு கிடந்த சாராய பாட்டில்களால் தான் இந்த இடம் தீ பிடித்தது என்பதை அறிந்தனர்.
“இந்த காட்டுக்குள்ள வர ஆட்கள் பாட்டில்களை போட்டு போகிறதுனால் இங்குள்ள விலங்குகள் மிதித்தால் காயம் ஏற்படும், அதில் சூரிய ஓளிபட்டால் தீ பிடிக்கிறது. பல அழிவுகள் ஏற்படுகிறது. இங்க வந்து போனவங்க யார் யார் என்கிற தகவலை சேகரித்து, அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என்று முடிவு பண்ணி கிளம்பினாங்க.
புதரின் மறைவிலிருந்து கேட்ட நரி, வருத்தமாக அழிந்த தனது காட்டை திரும்பி பார்த்தது
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#Ads – Kids Story Books – Deals from Amazon 👇
#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings