“திருவிளையாடல்” திரைப்படத்தை நாம் எல்லோருமே பார்த்திருப்போம். அதில் தருமியாக வரும் நாகேஷ், அரசவையில் நக்கீரரைப் பார்த்து, “அய்யா… பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் உண்டு!… குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் உண்டு!… இதில் நீர் எந்த வகை என்று உமக்கே தெரியும் என்று நினைக்கிறேன்!” என்று கூறுவதாக ஒரு வசனம் வரும். உண்மையில் இந்த வசனம் அந்த புராண காலத்திற்கு மட்டுமல்ல, இந்தக் காலத்திற்கும் பொருத்தமான ஒரு வசனம்.
ஆம்!… நம்மைச் சுற்றி அது போன்ற குறை சொல்லிப் புலவர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் உள்ளார்கள். பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில், குடும்பத்தில், அரசியலில், என்று சமூகத்தின் எல்லா நிலைகளிலும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
சில பள்ளிகளில் சில ஆசிரியர்களே குறை சொல்லிப் புலவர்களாய் இருப்பார்கள். அவர்கள், நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் பாராட்டிப் பேசிக் கொண்டு, படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்களிடம் அந்தக் குறையையே திரும்பத் திரும்பச் சொல்லித் திட்டிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது…“போன பரிட்சைல இருபதே மார்க்கு வாங்கினியே… நீயெல்லாம் எப்படிடா உருப்படப் போறே?” என்று அந்தக் குறையை தங்கள் வாயால் சொல்லா விட்டால் அவர்களுக்கு மண்டையே வெடித்து விடும். உண்மையில் அவ்வாறு செய்வது அந்த மாணவர்களை நெறிப்படுத்தாது. மாறாக அவர்கள் மனதில் வெறுப்பை வளர்த்துவிடும். “அட… பரவாயில்லையே… போன தடவையை விட இந்த தடவை கொஞ்சம் முன்னேறியிருக்கியே!…வெரி குட்…வெரி குட்!!… இதை இப்படியே கண்ட்டினியூ பண்ணு!… அவ்வளவுதான்!” என்று குறையை வெளிச்சம் போட்டுக் காட்டாமல், அந்தக் குறையினூடே தெரியும் சிறிய நிறையை வெளிச்சம் போட்டுக் காட்டலாமே?.
இன்று, பல அலுவலகங்களில் பல உயர் அதிகாரிகள் குறை சொல்லிப் புலவர்களாய் இருந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் கீழ் பணி புரியும் ஊழியர்கள் கடுமையாக உழைத்து, முழு ஆற்றலைப் பயன்படுத்தி, திறமையோடு செய்து முடிக்கும் பெரிய பணிகளை வெகுவாகக் கண்டு கொள்ளாமல், அலட்சியப்படுத்தி விட்டு, அந்த ஊழியர்களிடம் அவ்வப் போது காணப்படும் சின்னச் சின்ன குறைகளை மட்டும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பர். அந்தக் குறைகளை மட்டும் நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்று அந்த ஊழியர்கள் மீதொரு கரும்புள்ளி விழ வைப்பர். உதாரணமாக, எப்போதுமே கொடுத்த வேலை இலக்கினை, குறிப்பட்ட நேரத்திற்கு முன்பாக செவ்வனே செய்து முடிக்கும் பணியாளன் எப்போதாவது ஒரு முறை சூழ்நிலை காரணமாய் பணிக்குத் தாமதாய் வர நேர்ந்து விட்டால், அதைப் பெரிது படுத்திச் பேசுவதை விட, “என்னப்பா…வேலைல அசகாய சூரனாயிருக்கே?… டிஸிப்ளின்ல கோட்டை விடறியே?… சரி… சரி… இந்த முறை பரவாயில்லை… இதே அடிக்கடி நடக்காமப் பார்த்துக்கோ?..” என்று நாசூக்காகச் சொல்லி விட்டு, தொடர்ந்து அதைப் பற்றிப் பேசாமல் இருக்கும் பட்சத்தில் அப்பணியாளன் சுய ஒழுக்கத்திற்கு தானாகனே மாறுவான்…என்பதை மறுக்க முடியுமா?
அடுத்து குடும்பம். சில குடும்பங்களில் கணவன்மார்களும், பல குடும்பங்களில் மனைவிமார்களும் குறை சொல்லிப் புலவர்களாய் இருப்பது ஒரு நியதியாக இருந்து வருகின்றது. எப்போதோ ஒரு முறை மார்க்கெட்டிற்குப் போன கணவன் தவறிப் போய் சொத்தைக் கத்திரிக்காயை வாங்கி வந்து விட, அதையே வருடம் முழுவதும் வருவோர் போவோரிடமெல்லாம் மனைவியானவள், “க்கும்.. .மார்க்கெட்டிற்குப் போய் ஒரு நல்ல காய்கறி வாங்கி வரத் துப்பில்லை.. இவரை நம்பி என்ன பண்ண முடியும்?” என்று குறை சொல்லிக் கொண்டே இருந்தால் கணவர் காவி கட்டிப் போவதைப் பற்றி யோசிக்காமல் வேறு என்ன செய்வார்?
அதே போல்தான், சில கணவர்கள், மனைவியின் சமையலை வருடம் முழுதும் உண்டு கொழுத்து விட்டு, எல்லோரிடமும், “என்னத்தைச் சமைக்கறா?… ச்சை!… கொடுமைன்னு சாப்பிட வேண்டியிருக்கு!… அன்னிக்கு ரசத்துல உப்பைக் கொட்டி வெச்சா!… அதுக்கு முந்தி ஒரு தரம் தோசையைக் கருக வெச்சா!” என்று குறைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருந்தாரானால், அங்கு கணவன் மனைவி உறவு எப்படி இருக்கும்?
சரி…இந்தக் குறை சொல்லிப் புலவர்கள் எப்படி உருவாகிறார்கள்?
முதல் காரணம், தங்களிடம் உள்ள குறைகள் வெளி வராதிருக்க, அல்லது அவைகள் மறைபட்டுக் கொண்டேயிருக்கத்தான் அவர்கள் பிறரது குறைகளை பெரிதாக்கி தங்களைக் காத்துக் கொள்கிறார்கள்.
இரண்டாவது, எங்கே மற்றவர்கள் நன்கு செயல் பட்டு… நல்ல பெயர் பெற்று… உயரத்திற்குச் சென்று விட்டார்களானால் தங்களுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடுமோ?… அல்லது தங்களை கீழ் நிலைக்குத் தள்ளி விடுவார்களோ? என்கிற அச்சத்தில் பிறர் உயர்வைத் தடுக்கும் முயற்சியாகத்தான் பிறர் குறையை பெரிதாக்கி காட்டுகின்றனர் இந்தக் குறை சொல்லிப் புலவர்கள்.
மூன்றாவது, தன்னம்பிக்கை இல்லாத ஒருத்தன்தான் பிறரைக் குறைப்படுத்தி, அந்த இடைவெளியில் தான் உயர முயற்சிப்பான். திறமையால் ஜெயிக்க முடியாத சோம்பேறிகளுக்கு எப்படித் தெரியும்?..அந்த முறையில் தான் அடையும் உயரம் ஒரு தற்காலிக சொர்க்கம் என்பது.
நான்காவது, எதிர்மறை எண்ணக்காரர்கள்தான் பொதுவாகவே குறை சொல்லிப் புலவர்களாய் இருப்பார்கள். அவர்கள் கண்களுக்கு பாசிட்டிவ் விஷயங்கள் புலப்படாது, மாறாக நெகடிவ் விஷயங்கள் மட்டுமே எளிதில் புலப்படும். அதன் காரணமாகவே அவர்கள் நிறைகளை விட்டு விட்டு குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஐந்தாவது, தவறான கோட்பாடு ஒன்றைத் தங்கள் பாணியாய் வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் பெரும்பாலும் இந்தக் குறை சொல்லிப் புலவர்களாய் இருப்பர். ரிட்டையர்டு ராணுவ அதிகாரி நண்பர் ஒருவர் இருந்தார். ஒரு முறை அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார், “நாம யாரையும் அவ்வளவு சீக்கிரத்துல பாராட்டி விடக் கூடாது!… அப்படிப் பாராட்டினோம்… போச்சு!… அவ்வளவுதான் அவங்களுக்கு உடனே தலைக்கனம் வந்திடும்!… அப்புறம் பாராட்டிய நம்மையே பலத்தைச் சோதிக்கக் கூப்பிடுவாங்க!… அது மட்டுமல்ல?… நாம எப்பவும் மத்தவங்க குறைகளைச் சொல்லிக் காட்டிட்டே இருக்கணும்!… இல்லேன்னா அவங்க தங்களிடம் எந்தக் குறையுமே இல்லை!…தாங்கள் “பக்கா பர்ஃபெக்ட்”னு நெனச்சுக்குவாங்க!… ஸோ.. நாம அவங்க செஞ்ச குறைகளைச் சொல்லிச் சொல்லிக் குட்டிக்கிட்டே இருக்கணும்!… அப்பத்தான் நமக்கே மதிப்பு!”
ஆக, மனிதர்களாகிய நாம், பிறரின் குறை நிறை இரண்டையுமே சமமாகப் பாவித்து, சாத்வீக உறவை சாத்தியமாக்கினாலே போதுமே, உலக வாழ்க்கை உன்னதாமாகிவிடுமே?… மனித நேயம் மணம் பரப்பத் துவங்கி விடுமே?.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings