டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
சிண்டு நண்பனைப் பார்ப்பதற்குத் தன் வீட்டிலிருந்து புறப்பட்டான். அப்போது அவனுக்கு சைக்கிளில் செல்லலாமா, இல்லை பக்கத்தில் தான் உள்ளது நடந்தே செல்லலாமா என்று யோசித்தான். சரி நடந்தே செல்லலாம் என்று புறப்பட்டான்.
அப்போது சாலையில் ஒரு பக்கத்தில் உள்ள மரங்கள் எல்லாம் செழிப்போடும், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பூத்துக் குலுங்கும் பூக்களும், பறவைகளின் சத்தங்களும் நிறைந்துக் காணப்பட்டது.
ஆனால் மறுபக்கத்தில் இருந்த மரங்கள் காய்ந்து போன கிளைகளோடும், இலைகளற்றும் செழிப்பற்றும் இருந்தது
சிண்டுக்கு ஒரு சந்தேகம் வந்தது? ஏன் இந்தப் பக்கத்தில் மரங்கள் செழிப்போடும் மறுபக்கத்தில் மரங்கள் செழிப்பற்றும் காணப்படுகிறது என மனதில் நினைத்துக் கொண்டு அங்கேயே நிற்கிறான்
சிண்டுவின் நண்பன் மண்டு, இன்னும் சிண்டுவைக் காணவில்லையே என்று தேடி வருகிறான். மண்டு சாலையோரம் நிற்கும் சிண்டுவைக் கண்டு “என்னை பார்க்க வருவதாய் சொல்லிவிட்டு இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்கிறான்
“உன்னை பார்க்கத் தான் வந்து கொண்டிருந்தேன், ஆனால் இந்த மரத்தைப் பார்த்ததும் என் கவனம் இங்கு சென்று விட்டது மண்டு”
“இங்கே என்ன தெரிகிறது சிண்டு. மரத்தைப் பார்த்து கொண்டே ஏன் இருக்கிறாய்?”
“இங்கே பார் மண்டு, இந்தப் பக்கத்தில் உள்ள மரங்கள் எல்லாம் செழிப்பற்றுப் பூச்சிப் பட்டது போல் உள்ளது. மறுபக்கத்தில் உள்ள மரங்கள் எல்லாம் செழுமையோடு இருக்கிறது உனக்கு தெரியவில்லையா ? அதனால் தான் என் மனதில் கேள்வி எழுகிறது. உனக்கு பதில் தெரியுமா?”
“எனக்கு பதில் தெரியும்”
“என்னவென்று சொல், எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது”
“இந்த சாலையோரம் ஒரு பக்கம் முழுவதும் வீடுகளாய் உள்ளது, உனக்கு தெரிகிறதா. அந்த வீடுகளின் சுவற்றைப் பார்த்தாயா சிண்டு. ‘இங்கு குப்பைக் கொட்டாதீர், மீறினால் அபராதம் விதிக்கப்படும், எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டுங்கள்’ என்ற வாசகம் இந்த சுவர்களில் எழுதப்பட்டுள்ளது
ஆனால் நாம் என்ன செய்கிறோம். அபராதத்திற்குப் பயந்து வீடுகள் உள்ள பக்கத்தில் குப்பைகளைக் கொட்டாமல் எதிரில் உள்ள குப்பைத் தொட்டியிலும் குப்பைகளைக் கொட்டாமல் நம் மனம் போனப் போக்கில் இங்கு வளரும் மரம் செடி கொடிகளின் மேல் குப்பையைக் கொட்டுகிறோம்.
இதனால் என்ன பாதிப்புகள் வருகிறது இன்று நம் மக்கள் இன்னும் உணரவில்லை. அவர்கள் உணர்ந்தால் தான் இதை நம்மால் மாற்ற முடியும் . இதில் மக்கும் குப்பைகள் மக்காதக் குப்பைகள் என இரண்டு வகை உண்டு, உனக்கு தெரியுமா சிண்டு”
“எனக்கு தெரியாது மண்டு, நீ இப்பொழுது சொல்லும் போது தான் மக்கும் குப்பை, மக்காதக் குப்பை உண்டு என்பது எனக்கு தெரிகிறது. சரி நீ சொல் மக்கும் குப்பை என்றால் என்ன? மக்காத குப்பை என்றால் என்ன?”
“சரி நான் சொல்கிறேன் கேள். இதில் மக்கும் குப்பைகள் (காய்கறிக் கழிவுகள் , காகிதங்கள், உயிரினங்களின் கழிவுகள், மனிதர்களின் கழிவுகள்) மட்டும் இருந்தால் மரம் செடிகளைப் பாதிக்காமல் அதற்கு உரமாக இருக்கும் . இதனால் செடிகளும், மரங்களும் செழிப்போடு வளரும்
நாம் உண்பதற்குச் சத்தானக் காய்கறிகளையும் சத்தானக் கீரைகளையும் இந்த மரங்கள் நமக்கு உணவாகத் தரும். ஆனால் மக்காதக் குப்பைகள் (பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள்) உள்ளதால், மரம், செடி, கொடிகளைப் பாதிப்பதால் அதன் தன்மையை இழந்து சத்து இல்லாமல் செழிப்பற்றுக் காணப்படுகிறது. அதனால் தான் வீடுகள் உள்ள பக்கத்தில் மரங்கள் செழிப்பாகவும் அழகாகவும் காணப்படுகிறது”
“சரி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் மண்டு? உனக்கு யார் சொன்னாங்க, இல்லை எதில் நீ படித்தாய்?”
“அதுவா சிண்டு, நான் ஒரு நாள் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் அங்குள்ளக் குப்பைத் தொட்டியில் குப்பையைப் போடாமல் மரங்கள் நிறைந்தப் பகுதியில் வீசினேன்.
அந்த சமயத்தில் எனது தமிழ் ஆசிரியர் அங்கு நடந்து வந்து கொண்டிருந்தார். நான் பிளாஸ்டிக் பாக்கெட்டை மரம் நிறைந்த பகுதியில் தூக்கி வீசியதைப் பார்த்தார். நான் ஆசிரியர் வருவதைக் கவனிக்காமல் தூக்கி வீசி விட்டேன். பிறகு ஐயோ ஆசிரியர் என்னை திட்ட போகிறார் என்று பயந்துக் கொண்டே நின்றேன்”
“உன் ஆசிரியர் உன்னை அடித்து விட்டாரா? இல்லை திட்டினாரா? என்ன செய்தார் சீக்கிரம் சொல் மண்டு, என்ன நடந்தது?”
“என் ஆசிரியர் என்னிடம் கோபப்படவில்லை. என்னைப் பார்த்து இது தவறு, நீ தூக்கி வீசும் இந்த பிளாஸ்டிக் பாக்கெட்டால் மரம் செடிகள் பாதிக்கப்படும், அது மட்டுமல்லாமல் இதை உண்ணும் ஆடு மாடுகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது.
இந்த கழிவுகள் மழை வரும் போது ஆறுகளிலும் கடல்களிலும் இவ்வாறு இந்நீர்நிலைகளில் கலக்கப்படுவதால் அங்கு வாழும் உயிரினங்கள் உதாரணமாக மீன்கள், நண்டுகள் இன்னும் பல உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த மீன்களை நாம் வாங்கி உண்ணும் போது இதை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு நாம் செய்யும் தவறு நம்மையே ஒரு சுழற்சி முறையில் பாதிக்கிறது. இனி குப்பைகளை முக்கியமாக மக்காத குப்பைகளைக் கவனமாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இதை பற்றிய விழிப்புணர்வு நம்மைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
இதனால் நாம் வாழும் சுற்றுச்சூழல் மாசற்று தூய்மையாகும். சுவாசிக்கும் காற்றும் நமக்கு இயற்கையாக இருக்கும். இதனால் மனிதர்களுக்கு வரும் நோய்கள் குறைய ஆரம்பிக்கும். இந்த மாசு உள்ள காற்றை சுவாசிப்பதால் நமக்கு சுவாசக் கோளாறுகளும் , புற்று நோய்களும் வருவதைத் தடுக்கலாம்.
இதற்கு ஒரு முக்கியமான வழி மரங்களைப் பாதுகாப்பதே முறையானது. அப்போது தான் நமக்கு தூய்மையான காற்றும் அந்தந்த பருவங்களில் மழையும் பொழியும் என்று விளக்கமாக அறிவுரைகளைக் கூறினார்.
என் ஆசிரியர் கூறுவதை நான் அப்போது அலட்சியமாக எடுத்துக் கொண்டேன். ஆனால் இப்போது நீ இந்த மரங்களைப் பார்த்து என்னைக் கேள்வி கேட்ட பிறகு தான் எனக்கு நான் செய்த தவறு புரிகிறது. இனி நானும் எப்போதுமே குப்பைத் தொட்டியில் தான் குப்பையைப் போடுவேன்” என்றான் மண்டு.
“நீ சொல்வதை கேட்கும் போது எனக்கு ஒன்று ஞாபகம் வருகின்றது. நானும் என் பாட்டியும் ஒரு நாள் கடைக்குப் பொருட்கள் வாங்குவதற்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு குப்பை அள்ளும் தொழிலாளர்கள் இருந்தார்கள் . அவர்களைப் பார்க்கும் போது பழைய ஆடைகள் உடுத்தியும், அழுக்காகவும் காணப்பட்டார்கள்.
நான் அவர்களைப் பார்த்து சிரித்தேன். பிறகு சிலர் அங்கங்கு கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் சிலக் குப்பைகளையும் சேகரித்துக் கொண்டிருந்தனர். அதையும் நான் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தேன்.
இப்போது தான் எனக்கு ஒன்று புரிகிறது ! நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று ! அவர்கள் நாம் வாழும் இடத்தைத் தூய்மைப்படுத்துகிறார்கள் . நம் நாட்டைச் சுத்தம் செய்கிறார்கள். ஆனால் நாம் அவர்களைக் கேலி செய்கிறோம் .
நான் என் தவறை உணர்ந்து விட்டேன் . அவர்கள் மதிப்பிற்குரியவர்கள் , இனி அவர்களை நான் மதிப்பேன். அவர்கள் இந்த குப்பைகளை நாற்றங்கள் வருவதால் எடுப்பதை நிறுத்தி விட்டால் இந்த இடம் எப்படி இருக்கும் நினைக்கவே பயமாக இருக்கிறது.
இனி நானும் குப்பைகளை வெட்ட வெளியில் மரம், செடி, கொடிகளைப் பாதிக்காமல் குப்பைத் தொட்டியில் தான் போடுவேன். அப்போது தான் நாம் வாழும் இடத்தைச் சுற்றி உள்ள மரங்கள் செழிப்பாகவும், தூய்மையானக் காற்றையும் நமக்களிக்கும்” என்றான் சிண்டு.
அது மட்டுமல்லாமல் இவ்வாறு செய்தால் தான் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவப்படுத்துவது போல் இருக்கும்
சிண்டுவும் மண்டுவும் இதற்கு ஏதாவது நம்மால் முடிந்தது செய்ய வேண்டும் என்று யோசித்தனர். மண்டுவிற்கு ஒரு யோசனை வந்தது.
“நாம் இந்த இடத்தில் ஒரு பதாகை வைப்போம்” என்றான்
“இங்கு எப்படி பதாகையை வைக்க முடியும். நம்மிடம் ஒன்றுமே இல்லையே”
மண்டு உடனே அங்குள்ள குப்பைத் தொட்டியிலும் கீழேயும் ஏதாவது கிடைக்குமா என்று தேடினான். அங்கு சில கசங்கிய காகிதங்களும் விரிசலோடு ஒரு பலகையும் இருப்பதைக் கண்டான்
அதை எடுத்துக் கொண்டு வந்து சிண்டுவும் மண்டுவும் அதில் “தயவு செய்து குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும். இதை நாம் செய்யாவிட்டால் நம்மைக் காக்கும் மரங்களும் செடிகொடிகளும் தன் இயல்பை இழந்து செழிப்பற்று போய்விடும். இதனால் நாம் சுவாசிக்கும் தூய்மையானக் காற்றும் குறைந்து விடும்” என்று அந்தக் காகிதத்தில் எழுதி பலகையில் ஒட்டினர்.
பிறகு குப்பைத் தொட்டியின் அருகே உள்ள ஒரு மரத்தில் பலகையை இருவரும் சேர்ந்து கட்டினர்
சிண்டுவும் மண்டுவும் இதைப் பார்த்து “இனி நம் மரங்கள் பாதுகாக்கப்படும். நம்மை சுற்றியுள்ள இடமும் தூய்மையாக இருக்கும். அனைவரும் குப்பைத் தொட்டியில் தான் குப்பையைப் போடுவார்கள்” என்று மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டனர்.
சிண்டுவும் மண்டுவும் இங்கு இன்று நாம் செய்த செயல் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் இன்று ஏதோ ஒன்று நாம் சாதித்தது போல் மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர்கள் இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டே விளையாட அந்த இடத்தைவிட்டு சந்தோஷமாகப் புறப்பட்டனர்.
(முற்றும்)
#Ads – Kids Story Books – Deals from Amazon 👇
#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
GIPHY App Key not set. Please check settings