டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மத்தியானத்திலிருந்தே கனத்த காத்து மட்டும் வீசிக் கொண்டேயிருந்தது. பொழுது சாய்ந்த நேரத்தில் காத்துடன் திடீரென சாரல் தூவத் தொடங்கியது. இமைப்பொழுதில் வானிலை மாற்றத்தை எதிர்பாரா என் வெற்றுடம்பு, சாரல் பட்டதும் சிலிர்த்தது.
வெகுநாட்களுக்குப் பிறகு, மனமும் உடலும் ஒன்றிய ஒரு சிலிர்ப்பு அது. இந்தச் சிலிர்ப்பு சாதரணமானது தான். ஆனால் என் ஊரில் அடைந்தது தான் புல்லரிக்க வைக்கிறது
அது கிளறிவிட்ட ஞாபகக் குமிழிகள் கொஞ்ச நஞ்சமல்ல
“ஏலேய் கணேசா… அந்த வெறகு கட்ட கொண்டு காய்ச்சற வீட்டுக்குள்ள வைடா, தூத்தல் போடுது” என்று கத்தி கொண்டே வீட்டருகே கழனியில் சேர்த்து வைத்திருக்கும் விறகுக் கட்டுகளை நோக்கி ஓடுவாள் பாட்டி
பெறத்தாலேயே ஓடிச் சென்று என் பலத்துக்கு எட்ட மட்டும் ஒரு விறகு கட்டை தூக்கிக் கொண்டு ஒரு பக்க வசமாக வைத்தபடி ஓடி வருவேன்.
அத்துனையும் காய்ந்த வேலிக்குச்சிகளும் மிதமான கட்டைகளும் வைத்து வேலி நாறாலேயே இரண்டு மூன்று வரிசை போட்டு இறுகக் கட்டப்பட்டிருக்கும். முட்கள் வேறு பதமாக நீட்டியபடி இருக்கும். உடம்பில் படாதவாறு கோளாறோடு தான் பிடித்து தூக்க வேண்டும்.
இல்லையென்றால் உள்ளங்கைகளிலோ அல்லது தூக்கிச் செல்லும் போது கைகளிலோ தொடையிலோ எங்கு வேண்டுமானாலும் முட்கள் கீறி விடும்.
”ஒத்த மழைய காணும், ஒரே வெள்ள வெயிலா அடிச்சுகிட்டு வானம் பருத்தி பஞ்சா வெடிச்சு கிடக்கே” என வாய்க்கும் கைக்குமாக ஆடுமேய்க்கும் போது இதையேத் தான் சொல்லி அலுத்துக் கொள்வாள்..
அப்ப ஒரு நாலஞ்சு வருசமா கம்மா, காடு கரையில தண்ணி இல்லாமல் போக, வயசும் தவந்து போச்சு. காட்டு மேட்டுல அலஞ்சு திரிஞ்சு இன்னும் ஆடு மேய்க்க முடியாதுனு எல்லாத்தையும் வித்தவ தான்
இப்ப பயர் ஆவுசுல “பொது வேல” பாத்துகிட்டு அவபாட்ட ஓட்டிட்டு இருக்கா. ஆவுசு காம்பவுண்டக்குள்ள இருக்குற செடி செத்தய புடுங்கி போட்டு சுத்தமா தூத்து பெறக்கி வச்சா போதும்.
வேலை நேரம் போக, அங்கு சுற்றியிருக்குற வேப்பங்குச்சி, வேலி விறகு, அகத்திகட்ட என எதை எதையொ சேர்த்து செத்த நேரத்தில் லேசுல தூக்க முடியாத அளவுக்கு ஒரு கட்டு சேர்த்து விடுவாள்.
வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்புவர்களிடம் விறகுக்கட்டை ஏற்றிவிட்டு வீட்டில் போட்டு விடச் சொல்லுவாள். சில நேரங்களில் பயர் ஆபிஸ் வேனில் தூக்கிவிட்டு தானும் ஏறிக்கொள்வாள்.
இது போக வயக்காட்டில் முளைத்துக் கிடக்கும் வேலி மரங்களை ஆள் வைத்து வெட்டி காயப் போட்டு விடுவாள். காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வீடு சேர்த்து விடுவாள் பெரும்பாலும் என்னைத் தான் சைக்கிளில் போய் கட்டி கொண்டு வரச் சொல்லுவாள். அதுவும் சைக்கிள் காடு வரை செல்லாது. ஓடைப்பாதையில் தான் நிப்பாட்டிச் செல்வேன்.
ஒவ்வொன்றாய் அடுக்கி கட்டுகட்டி காட்டிலிருந்து பாதைக்கு தூக்கி வருவதற்குள் நாலைந்து இடங்களிலாவது, முக்கியமாக துண்டு கொண்டு போகாத நாட்களில் தலையில் ஒரு முறையாவது குத்தி விடும்.
அனிச்சையாக விறகு கட்டை கீழே போட எத்தனித்த கை தலையைத் தடவச் செல்லுமுன், கீழே போட்டால் கட்டு அவிழ்ந்து விறகு சிதறிவிடும் கயிறும் கூட அறுந்து போகக் கூடும்
பிறகு திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பித்து மல்லுக்கட்டி தூக்கவும் வேண்டும் என்றெண்ணம் உதித்துவிடும். கட்டிய விறகுக் கட்டை குத்துக்காலிட்டு தானாக தன் தலையில் தூக்கிவைக்கும் அதே வேளையில், சும்மாடு கீழே விழாமலும் கைகளில் முட்கள் கீச்சாதவாறு பிடிக்கும் லாவகமும் பழக்கப்பட்டவர்களுக்கே வாய்க்கும்.
வலியைப் பொறுத்துக் கொண்டு ”எப்படா சைக்கிள் வருமென்று” கால்தடம் பார்த்தபடி வாய்க்கால் வரப்புகளைக் கடந்து கொண்டுபோய் கேரியரில் வைப்பதற்குள் ”ஏந்தான் பாட்டி நம்மல இப்படி கொடும படுத்துறா” என்று தோன்றும்
இருந்தும் கேரியரில் கட்டை வைத்து விட்டு சும்மாடு துண்டை அப்படி ஒரு உதறு உதறும் போது மனமும் தலையும் கனமின்றிக் கூத்தாடும். கேரியரில் வைத்ததோடில்லாமல் சீட்டில் ஏறிச் செல்லலாமென்றால், விறகின் முட்கள் நீட்டியபடி காத்துக் கொண்டிருக்கும்
நுனி சீட்டில் உட்கார்ந்தபடியோ, பெரிய கெட்டு என்றால் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள வீட்டிற்கு சைக்கிளை உருட்டியபடியோ கொண்டு வந்து ஒரு வழியாக கழனியில் சேர்த்து விடுவேன்.
இப்படி கொஞ்ச கொஞ்சமாக கழனியில் சேர்த்தது வைத்தது போக, அடுப்பாங்கரைக்குள் ஆள் உயரத்துக்கு விறகை அடுக்கி வைத்திருப்பாள். ஆனால் மழை வரும் போது மட்டும், விறகே இல்லாதது போல வீட்டில் யாருடைய பேரையாவது சொல்லிக் கொண்டே கழனிக்கு ஓடுவாள்
அந்தப் பெயர்க்காரர்கள் அவள் பின்னாலேயே ஓடுவார்கள்.
இதைக் கவனித்துக் கொண்டிருக்கும் தாத்தா ‘அந்தானக்கி வெள்ளம் வருதாக்கும், அதியப்பிடிச்ச முண்ட இப்போ எதுக்கு ஒரு சொம வெறக வீட்டுக்குள்ள வைய்க்கா… அவள வச்சி எரிக்கவா?” என்று சத்தம் போட்டு வைவார்
“வச்சு எரிச்சா, பெறவு ஒங்களுக்கு எவ கஞ்சி ஊத்துவா” என்று தன் இருப்பின் நிதர்சனத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்வாள் பாட்டி
அப்பொதல்லாம் மழை வந்தாலே விறகு எடுத்து வைப்பது தான் மண்டையில் முதலில் உரைக்கும். விறகை பத்திரப்படுத்தி வைப்பதே பெரிய பாடாய்ப்படும்.
அந்நினைவிலிருந்து வெளிவர கூதல் அடிக்க ஆரம்பித்து விட்டது. இது போன்ற இன்னும் எத்தனை எத்தனையோ அமிழ்ந்து போன நினைப்புகளை அந்தச் சாரக் காத்து மெல்ல வருடி வருடி மேக்கிணறு தண்ணீர் போல் என்னை ததும்ப விட்டுக் கொண்டிருந்தது.
பொதுவாக அடைமழைக் காலங்களிலோ அல்லது குற்றால சீசனிலோ தான் இந்த மாறியான சாரல் அடிக்கும். அதுவும் சித்திரை கடைசியிலேயே சாரக்கெட்டியிருப்பது இன்னும் அபூர்வம். பருவப் பிறழ்வாகக்கூட இருக்கலாம்.
ஏழு மணிக்கெல்லாம் கிய்யென்று இருட்டிக் கொண்டது. இன்னும் சாரல் வெறிப்பாதாயில்லை. ஒன்றிரண்டு ஆட்கள் மட்டும் கையில் குடையுடன் தெருவில் நடமாடுவதாகத் தட்டுப்பட்டது.
யாரும் எதற்காகவும் ஓடவில்லை. முக்கியமாக அவர்களுக்கு விறகு பற்றிய கவலையேயில்லை. இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் விறகும் இல்லை, விறகு நனைவது பற்றி கவலை கொள்ள எங்கள் பாட்டியும் இல்லை
தாத்தா சொன்னது போல அவள் சேர்த்து வைத்திருந்த விறகை வைத்து தான் அன்று அவளை எரித்தார்கள். விறகெல்லாம் எரியும் போது அவள் நெஞ்சு நிமிர்த்தி எழும்ப, இரண்டு பேர் மாறி மாறி கட்டையால் அடித்து மீண்டும் படுக்க வைத்தார்கள்
கொழுப்பு வடிந்து விறகின் இடுக்குகளில் ஊடுருவி கனத்த நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவளும் விறகோடு விறகாக பொசுங்கிப் போனாள்.
விறகுகளால் நிரம்பிக் கிடந்த கழனியில் இன்று தும்பையும் துத்தியுமாக மண்டிக் கிடக்கின்றன.
தூறல் சற்று குறைந்தது போலத் தெரிகிறது. பாட்டி இருந்திருந்தா “சாரக்கெட்டிகிட்டு கழுத விடுதான்னு பாரேன்” என்பாள்.
தூத்தலின் சத்தத்தோடு பாட்டியின் குரலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings