எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அம்மா, உங்களை மாதிரி நீலக் கண்கள் ஏன் எனக்கில்லை? அப்பாவும், நீங்களும் வெள்ளையாக இருக்கிறீர்கள். நான் மட்டும் கருப்பாக இருக்கிறேனே“ என்று (ஆங்கிலத்தில்) கேட்டுக் கொண்டேயிருப்பாள் டோரத்தி.
அவளுடைய தாயின் சகோதரி, தன் மகள் இதே சந்தேகத்தைக் கேட்டபோது, அவள் இந்தியாவிலிருந்து தத்தெடுக்கப்பட்டதாக கூறுவதை, டோரத்தி கேட்க நேரிடுகிறது.
டோரத்தி வளர்ந்த பிறகு ஆராய்ச்சியில் சிறந்து விளங்கி முதுகெலும்பு பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக செயற்கை நரம்பு நாண்களை உருவாக்கி மிகப் பெரும் பெயர் பெற்று நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப் பட்டாள்.
ஆனாலும், அவளைப் பெற்றவர்களைக் குறித்த சந்தேகம் மட்டும் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவள் தன் தாயிடம், அம்மா, நீங்கள் என்னை மிக நன்றாக வளர்த்துள்ளீர்கள். நீங்கள் தவறாக எண்ணவில்லையென்றால் எனது உண்மையான பெற்றோர் யாரென்று கூறுவீர்களா? எனக் கேட்டாள்.
“எனக்கே அது தெரியாது குழந்தாய், இந்தியாவில் மதுரை மாவட்டத்திலுள்ள அரசுக் காப்பகத்திலிருந்து முறைப்படி உன்னை தத்து எடுத்தோம். நீ எங்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசு எனக் கருதியே உனக்கு டோரத்தி எனப் பெயர் வைத்தோம்“
இந்தியா குறித்து தேடித்தேடி படிக்க ஆரம்பித்தாள் டோரத்தி. இயற்கையிலேயே அறிவாற்றல் மிக்கவளாகையால் தமிழ் மொழியை மிக விரைவிலேயே கற்று் கொண்டாள்
“அம்மா நான் இந்தியா செல்ல என்னை அனுமதிப்பீர்களா?“
“நீ விரும்பினால் சென்று வா“
பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்ற இந்திய மாணவர்களிடம் பேசி, தேனியைச் சேர்ந்த சரவணனைக் கண்டறிந்தாள். அவனும் படிப்பை முடித்து ஊருக்குச் செல்லத் தயாராக இருந்ததால், இருவரும் சேர்ந்தே செல்லலாம் எனவும், அவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் எனவும் முடிவாயிற்று.
மதுரை காப்பகத்தில் விசாரித்த போது, உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையச் செவிலி, ராசாத்தி என்பவரால் குழந்தை அந்தக் காப்பகத்தில் சேர்க்கப் பட்டதெனத் தகவல் கிடைத்தது. அந்தச் சுகாதார நிலையம் சென்று விசாரித்த போது, அப்போதிருந்தவர்களுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அருகிலிருந்த வயதான பெண்களிடம் விசாரித்தனர். ஒரு கிழவி,
“நர்ஸ் ராசாத்தியா? அவ நாகமல புதுக்கோட்டையில இருந்து இங்க நெதமும் வருவா. அவ சொந்தக்காரக கூட இங்கன ஓட்டல் நடத்துறாக“ என்றார். அந்தக் ஹோட்டலில் ராசாத்தியின் அலைபேசி எண்ணை வாங்கினர்.
“உங்களை நேரில் பார்க்க வேண்டும்“ என முகவரியைப் பெற்றுக் கொண்டனர்.
“இருபத்தைந்து வருஷம் முன்னால் ஒரு குழந்தையை மதுரை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா?“
“ம்ம்… ஆமா“
“அந்தக் குழந்தையின் பெற்றோர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியுமா?“
“எனக்கெப்பிடி தெரியும்?. ஒருநா காலையில பி.ஹெச்.சி.க்குப் போறப்ப வாசல்ல கெடந்தது, அக்கம்பக்கத்தில வெசாரிச்சா, யாரோடதும் இல்லண்ணுட்டாக. அதேன் காப்பகத்துல கொண்டு போயி சேத்து விட்டேன்“ தூரத்தில் தெரிந்த தாயின் உருவம் கானல் நீராய் மறைந்து விட்டது போல் தவித்தது அந்தக் கன்று.
அவள் முகம் வாடியதைப் பார்த்து, “நீதான் அந்தக் கொழந்த, இல்ல?. மச்சத்தப் பாத்தவொடனே நெனச்சேன். தொப்புள் கொடி கூட வாடாத, அப்பப் பொறந்த பச்ச மண்ணத்தேன் யாரோ தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாக. எனக்குத் தெரிஞ்சி அங்கனக்குள்ள யாருக்கும் அப்ப கொழந்த பொறக்கல. தேதி கரெக்டா தெரிஞ்சா உசிலம்பட்டி கவர்மெண்ட் ஆஸ்பத்திரில கேட்டுப் பாருங்களேன்“
“இருவத்தஞ்சு வருஷமா? அத எங்கப் போய் தேட்றது?“ டோரத்தியின் முகம் மொத்தமாய்ச் சுருங்கிப் போயிற்று.
“இரு, இரு… ஒரு வழி இருக்கு… பாப்போம்“
மருத்துவ உதவியாளை மடக்கி, “நீங்க நெனச்சா ஒதவி செய்யலாண்ணே. கொஞ்சம் மனசு வைங்கண்ணே“ கூறி இரண்டு புத்தம் புது ஐநூறு ரூபாய் தாள்களை அவரது சட்டைப் பையில் திணித்தான்.
“இருவத்தஞ்சு வருஷம்னா சும்மா வெளையாட்டா“ மேலும் இரண்டு தாள்களை அவரது சட்டைப் பையில் திணித்துவிட்டு, “நாங்க வெய்ட் பண்றோம்ணே“
தேதியும் நேரத்தையும் குறிப்பிட்டு, அந்த நேரத்தில் பெண் குழந்தை பெற்றவர்களின் விவரத்தை எடுத்துத் தருமாறு கோரினர். இவர்கள் அதிர்ஷ்டம் அந்த நேரத்தில் ஒரே ஒரு குழந்தை தான் பிறந்திருந்தது. பெற்றோர் பெயரையும், முகவரியையும் தெரிந்து கொண்டு அந்த கிராமத்திற்குச் சென்றனர். கன்றுக்கு மறுபடியும் தூரத்தில் தாயைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
சுண்ணாம்பு காரை பூசப்பட்டு ஆங்காங்கே பெயர்ந்து போன, பழைய வீடுகளும், அதைக் கடந்தவுடன், சப்பாத்தி கள்ளிகளும், புதர்ச் செடிகளும் நிறைந்த அந்த சூழ்நிலை டோரத்திக்கு அந்த கிராமத்தின் நிலையை ஓரளவு எடுத்துக் காட்டியது. வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள் கண்களில், கிணற்றில் ஒரு மனிதன் விழும் காட்சி தென்பட, “ஓ மை காட்! ஸ்டாப் த கார்”
அவனுடைய தாயும், தகப்பனும் விஷயத்தைக் கேள்விப்பட்டு அலறிப் புடைத்து ஓடி வந்தனர். சோதனைகளுக்குப் பின்பு மருத்துவர்கள், அவன் குடித்துவிட்டு விழுந்திருப்பதால் சிகிச்சை தாமதப்படுவதாகவும், அவனது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டு நரம்புகள் செயலிழந்ததால் இடுப்புக்குக் கீழேயுள்ள பகுதிகள் அனைத்தும் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். அவன் தாய் கதறித் துடித்தாள். டோரத்தி தலைமை மருத்துவ அலுவலருடன் பேசி தனது கண்டுபிடிப்பான செயற்கை நரம்பு நாண் மாற்றம் மூலம் மீளுருவாக்கம் செய்யலாம் என்பதை விளக்கி, அதற்கான ஏற்பாடுகளையும் தானே முன்னின்று செய்கிறாள்.
“எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு, உங்க மகன் குணமாகிடுவான்“ என்றாள் டோரத்தி
“எங்க கொலத்த காப்பாத்த வந்த கொலதெய்வமே“ என்று அவள் காலில் விழ வந்தனர் வேலுவும், மாரியும். சற்றே நகர்ந்து மாரியைத் தூக்கி நிறுத்தினவளின் முகத்தை முதன்முறையாக நிமிர்ந்து பார்த்த மாரிக்கு தூக்கி வாரிப் போட்டது. டோரத்தியையும் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு ஆட்கொண்டது.
“நீ… நீங்க… எந்த ஊரு? ஒங்க அம்மா, அப்பா“ என்று குழறினாள் மாரி.
“அதைத் தேடித்தான் வந்…ருக்றேன்… நீங்க மாரி…யம்மா?“
“ஆமா!“
“இருபத்தஞ்சு வர்ஷம் முன்னால் ஒரு குழந்தையை…“
அவளைக் கட்டிக் கொண்டு ஓ… வெனக் கதறினாள் மாரி. தாயைப் பார்த்த கன்றுக்கு இப்போது மடியை முட்டி பால் குடிக்கத் தோன்றவில்லை. காயப்பட்டு நோயோடு கிடக்கும் தாயைப் பார்க்கும் பச்சாதாபம் தான் தோன்றிற்று.
சரவணன் முகத்தில் புன்னகை பூத்தது. அந்த பெண்ணை எங்கோ பார்த்த உணர்விருந்தாலும் வேலுவுக்குத்தான் ஒறும் புரியவில்லை. மாரியை என்னவென்று கேட்கிறான். அவள் அவனை வெறுப்புடன் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் அவன் அப்படியே கரைய…
“அரிசி எச்சிப் போச்சி. குருதவல்லியோ, சோளமோக் கூட இல்ல. புள்ளைக பசியில வாடுது“
ஏற்கெனவே, முழுக்க குடித்துவிட்டு கொலைப்பசியில் வந்தவனுக்கு எரிச்சல் மூள, “ஏண்டி, ஒரு ஆம்பளப்புள்ளய பெத்துக் குடுடீன்னு சொன்னா, மூணும் பொட்டையா பெத்துப் போட்டுட்டு, பஞ்சப் பாட்டா பாடிக்கிட்டிருக்க. இதுகள கள்ளிப் பாலு குடுத்து கொன்டு போடுன்னு சொன்னா காதுல வாங்குனியா? பசியில வாடுதாமே? கழுத்த திருவிப்புட்றேன்” என்று பிறந்து பத்து நாட்களே ஆன மூன்றாவது பெண் குழந்தையைத் தூக்க, ஐயோ வேண்டாம் என்று தடுப்பதற்காக இவள் அவன் காலைப் பிடிக்க, குடி வெறியில் இருந்தவன் தள்ளாடிச் சாய, குழந்தையின் தலை நச்செனச் சுவற்றில் மோத, குழந்தை பேச்சு மூச்சற்றுப் போனது. குழந்தை உடல் நலமின்றி இறந்ததாகக் கூறி புதைத்து விட்டனர்.
பிள்ளைப் பேறுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அடுத்ததும் பெண்ணாக பிறக்க, கதிகலங்கிப் போனாள் மாரி.
குழந்தையைப் பார்த்த செவிலி, “ரொம்ப அழகான குழந்தை, அது நெற்றியில் க்ரீடம் போல மச்சத்தப் பாத்தியா?. இந்தக் கொழந்த மிகப் பெரிய அரசுப் பதவில உக்காரும் பாரு“ என்றாள்.
“இப்பயும் பொட்டயா? கொன்டு பொதச்சிட்டு வா, இல்லனா வராத“
“எங்கனயோ உசிரோடயாவது கெடக்கட்டும்“ என்று அரசு காப்பகத்தில் சேர்க்கும்படி கூறினாள். அவள் அம்மாவுக்கு விவரம் புரியாமல் ஆரம்ப சுகாதார மையத்தில் போட்டாள். அதற்குப்பின் பிறந்த ஆண்பிள்ளைதான் தற்போது டோரத்தி காப்பாற்றியவன்.
“ஆம்பளப் புள்ள தான் வேணுமின்டயே, பாத்தியா ஆம்பளப் புள்ள ஒங்கூடச் சேந்து குடிச்சிபுட்டு கொலயருக்குது. பொம்பளப்புள்ளய கொல்லச் சொன்ன. அதுதான் கொல தெய்வமா வந்து காப்பாத்துது“
வேலு வயிறைப் பிடித்துக் கொண்டு, மயங்கிச் சரிந்தான். குடித்துக் குடித்துக் கல்லீரல் கெட்டுப் போனதாகத் தெரிவிக்கப் பட்டது. அவனது சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, இன்னமும் அப்பகுதியில் பெண் சிசுக் கொலை வழக்கத்தில் இருப்பதை அறிந்த டோரத்தி, என்னை மாதிரி எத்தனை பொக்கிஷங்கள் கருவிலேயே சிதைக்கப்படுகின்றனவோ என்று, மாவட்ட ஆட்சியருடன் பேசி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியவள், சமூக சேவை நிறுவனங்களுடன் சேர்ந்து கிராமப்புற பகுதிகளில் காப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்தாள். தொடர்ந்து உதவிகள் செய்வதாக கூறிவிட்டு, தன்னை வளர்த்து ஆளாக்கிய தெய்வங்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
“என்ன மன்னிச்சிரு தாயி…“ என்று காலில் விழுந்தான் வேலு, மாரியின் கண்களில் மாரி பொழிந்தது.
“மன்னிப்போ, அழுகையோ வேண்டாம். எல்லாம் நன்மைக்கே, உங்ககூட இருந்திருந்தா இத்தன பேருக்கு வாழ்வு கொடுத்திருப்பேனான்னு தெரியல“ என்றவாறு, சரவணனுக்கும் நன்றி கூறி விடைபெற்றாள், ‘கடவுளின் நன்கொடை‘ என்ற டோரத்தி!
எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings