2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தன் மரணத்திற்குப் பின், தன் மூன்று மகள்களுக்கிடையில் சண்டையோ… சங்கடமோ… ஏற்பட்டு விடக் கூடாதென்பதற்காக, தான் நல்ல சுயநினைவோடு இருக்கும் போதே அந்த பாகப்பிரிவினையைச் செய்து முடித்து விட வேண்டும், என்கிற எண்ணத்தில் தன் மூன்று மகள்களையும் வரவழைத்திருந்தாள்.
வீட்டிலுள்ள பொருட்களையும், பாத்திரங்களையும் தானே மூன்று பாகமாய்ப் பிரித்து தனித்தனியே வைத்தாள்.
மகள்கள் மூவரும் தாயார் செய்த பாகப்பிரிவினையை அப்படியே ஒப்புக் கொண்டனர்.
ஆனால், சாந்தா மட்டும் முகம் வாடிப் போனாள்.
அதைக் கண்டுபிடித்து விட்ட ரங்கநாயகி, உடனே கேட்டாள். “என்னடி… உனக்கு ஏதாச்சும் மனச் சங்கடமா?”
“ம்… ஒண்ணுமில்லை” என்று அவள் வாய் சொன்னாலும் மனம் கிடந்து தவித்தது. “ச்சை!… அம்மாவுக்கு இந்த ஓரவஞ்சனை ஆகாது!… வீட்டிற்கு மூத்த பெண் நான்… எனக்கு மட்டும் அந்த பழைய கால மரக் கட்டிலைக் கொடுத்துட்டு… எனக்குப் பின்னாடி பொறந்தவங்க… இந்த சாரதாவும்… ரஞ்சிதாவும் அவங்களுக்கு மட்டும் கோட்ரேஜ் பீரோவையும், தையல் மிஷினையும், கொடுத்திருக்காளே!… நான் என்ன அத்தனை இளப்பமா?… ம்ஹும்.. வேண்டாம் இந்த கட்டிலையும் நான் எடுத்திட்டு போகக் கூடாது!… “எனக்கு வேண்டாம் தாயீ… நீயே வச்சுக்கோ”ன்னு மூஞ்சியில் அடிச்ச மாதிரி சொல்லிட வேண்டியதுதான்!”
அவள் எண்ணத்தைப் படித்து விட்டவள் போல், “அம்மா!…என்கிட்ட தான் ஏற்கனவே ஒரு பீரோ இருக்கல்ல?… அப்புறமும் எதுக்கு என்னை பீரோவை எடுத்திட்டுப் போகச் சொல்லுறே?… இந்த பீரோவை சாந்தா அக்காவை எடுத்துட்டு போகச் சொல்லும்மா” என்றாள் இரண்டாவது மகள் சாரதா.
அதை ஏற்றுக் கொள்ளாதவளாய், “த பாரு… உனக்கு கொடுத்ததை நீ அமைதியா எடுத்துட்டு போ!… உனக்கு வேண்டாம்னா… விட்டுடு!… அது இங்கேயே இருந்துட்டுப் போகட்டும்!… அதை விட்டுட்டு “இதை அவளுக்கு குடு… அதை இவளுக்கு குடு!’ன்னு நீ எனக்கு சொல்லாதே!”. ரங்கநாயகி அம்மாள் கோபமாய் சொல்ல, சாரதா அடங்கிப் போனாள்.
கேட்டுக் கொண்டிருந்த சாந்தாவிற்கு உடம்பெல்லாம் எரிந்தது. “ஹும்… என் கூடப் பொறந்தவளுக்கு என் மேல் இருக்கற கரிசனம் கூட என்னைப் பெத்தவளுக்கு இல்லையே?”
அடுத்த நாள், வாசலில் வந்து நின்ற டெம்போவில் கோட்ரேஜ் பீரோவும், தையல் மெஷினும் ஏற்றப்பட, ”ஏண்டி சாந்தா…. உன்னோட மரக்கட்டிலையும் இதே டெம்போல ஏத்திக்கிட்டு போயி… உன் வீட்டுல இறக்கிக்கலாமல்ல?… ஒரே வாடகைல போயிடுமல்ல!” என்று ரங்கநாயகி அம்மாள் கேட்க,
“விருட்”டெனத் தலையைத் திருப்பி, “இங்க பாரும்மா… எனக்கு உன்னோட கட்டிலும் வேண்டாம்!… கத்திரிக்காயும் வேண்டாம்… நீயே வெச்சு அனுபவி” கோபமாய்ச் சொல்லி விட்டு உள் அறைக்குச் சென்ற சாந்தா, தன் சூட்கேசில் துணிமணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வேக வேகமாக வெளியேறினாள்.
அவள் போவதைப் பார்த்து மனம் தாளாமல், “ப்ச்… பாவம்மா சாந்தா!… பேசாம அவ எது கேட்கிறாளோ அதைக் கொடுத்திடலாமல்ல!… பாரு எப்படிக் கோவிச்சிட்டு போறாள்”னு” மூன்றாவது மகள் ரஞ்சிதா அம்மாவிடம் சொல்ல,
அவளை எரித்து விடுவது போல் பார்த்தாள் ரங்கநாயகி அம்மாள்.
அந்த சுட்டெரிக்கும் பார்வையை தாங்க முடியாத ரஞ்சிதா, அமைதியாக அங்கிருந்து நகர்ந்தாள். “அம்மா ஒரு புதிர்!… அவளைப் புரிஞ்சுக்க யாராலேயும் முடியாது”
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் தாய் வீட்டு பக்கமே தலைவைத்து படுக்காத சாந்தாவை சமாதானம் செய்யும் நோக்கத்தில் ரங்கநாயகியே சாந்தாவின் வீட்டிற்கு வந்தாள்.
“ஏண்டி… என்ன ஆச்சுடி உனக்கு?… அம்மா வீட்டுப் பக்கம் போகக் கூடாதுன்னு ஏதாவது விரதமா?” கேட்டாள்.
பதில் பேசாமல் மௌனம் சாதித்தாள் சாந்தா.
“ஹும்… என் புருஷன் இருந்திருந்தால் நான் ஏண்டி உங்களையெல்லாம் எதிர்பார்க்கிறேன்?… ‘எனக்கு அவரு…. அவருக்கு நானு’ன்னு நிம்மதியா வீட்டோட இருந்திருப்போம்” கண் கலங்கிச் சொன்னாள் ரங்கநாயகி அம்மாள்.
“க்கும்… இப்ப வந்து பேசு!… அன்னைக்கு பாகம் பிரிக்கும் போது மட்டும் அவளுகளுக்கு நல்ல நல்ல சாமான்களை தூக்கிக்கிட்டு… எனக்கு பழைய மர கட்டிலைக் கொடுத்தியே?… அப்பவே இந்த யோசனை இருந்திருக்கணும்!” என்றாள் சாந்தா வெடுக்கென்று.
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தாள் ரங்கநாயகி அம்மாள்.
“என்ன நான் வயிறெரிஞ்சு கேட்கிறேன்… நீ சிரிக்கிறியா?… என்னைப் பார்த்தா உனக்கு அத்தனை இளப்பமாய்ப் போச்சா?” கோபமாய் கேட்டாள் சாந்தா.
“அடியேய்… நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான்!… ஒண்ணு மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கடி நான் எந்த காரியத்தைச் செய்தாலும் ஒரு காரணத்தோட தான் செய்வேன்… ஒரு நன்மைக்காகத்தான் செய்வேன்” சொல்லி விட்டுத் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் ரங்கநாயகி.
ஆணித்தரமாய் கூறிய தாயாரை நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள் சாந்தா.
“அடியேய் சாந்தா!… உன் தங்கச்சிக ரெண்டு பேருக்கும் உனக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் கல்யாணம் ஆச்சு!… ஆனா ரெண்டு பேரும் ஆளுக்கு ரெண்டுன்னு குழந்தைகளை பெற்றுப் போட்டுட்டாளுக!… நீ கல்யாணம் ஆகி ஒன்பது வருஷம் ஆகியும் இன்னும் ஒரு குழந்தையை கூடப் பெக்கலை!…”
ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்த சாந்தாவை தாயின் அந்தப் பேச்சு மேலும் சீண்டி விட, “த… இப்ப எதுக்கு அதைப் பத்திப் பேசறே?… குத்திக் காட்டறியா?” எரிமலையானாள்.
“ஏய்… நான் உனக்கு கொடுத்தேனே ஒரு கட்டில்?… அது சாதாரணக் கட்டில் இல்லைடி… ஆகி வந்த கட்டிலடி!… என்னோட மாமனாரும் மாமியாரும் முதல் ராத்திரி கொண்டாடியது அந்தக் கட்டில்ல தான்!… அவங்களுக்கு எட்டுப் பிள்ளைக!…”
சாந்தா தலைஅயிச் சாய்த்துக் கொண்டு பார்க்க,
“அதே மாதிரி நானும் உங்கப்பனும் முதன்முதலா சேர்ந்தது அதுலதான்!… கடைசி வரைக்கும் சேர்ந்து வாழ்ந்ததும் அதில்தான். எங்க வம்சம் எப்படி விருத்தியடைஞ்சிருக்கு பார்த்தியா?…”
சாந்தாவுக்கு லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.
“அதான் ஒருவேளை அந்தக் கட்டில்ல நீயும் உம்புருஷனும் சேர்ந்தாலாவது…. உன்னோட வயித்தில் ஒரு புழு பூச்சி உருவாகாதா?… என்கிற ஆதங்கத்தில் தாண்டி அதை உனக்கு கொடுத்தேன். உன் தங்கச்சிக முன்னாடி இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி உன்னை நோகடிக்கக் கூடாதுன்னுதான் வெறுப்பாய் பேசினேன்” என்றாள் ரங்கநாயகி அம்மாள்.
அந்த தாய் மனதின் உண்மையான அன்பை உணர்ந்து கொண்ட சாந்தா தன்னையறியாமல் அந்த குச்சிக் கைகளைப் பற்றி கண்களில் ஒட்டிக் கொண்டாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings