in ,

கொஞ்சம் காமெடியும் வேணும் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

பொதுவாகவே திரைப்படங்களில், அப்படம் எப்பேர்ப்பட்ட சீரியஸான கதையமைப்பு கொண்டதாக இருந்தாலும் சரி, அல்லது திகில் படமாக இருந்தாலும் சரி, அதில் காமெடி டிராக் என்று ஒன்றை வைத்திருப்பார்கள்.  

அதேபோல், பிரபலமான வெகுஜனப் பத்திரிக்கையான போதிலும், இலக்கியத்தரமான பத்திரிக்கையான போதிலும், அதில் “சிரிப்பு” அல்லது “தமாஷ்” என்று ஒரு பகுதியை ஒதுக்கி, சின்னச் சின்ன சிரிப்புத் துணுக்குகளை அங்கு இடம் பெறச் செய்திருப்பார்கள்.  

இன்னும் சொல்லப் போனால, அக்காலத்தில் மன்னர்கள் கூட தங்களுடைய அரண்மனையில் காமெடிக்கென்று “அரண்மனை விதூஷகன்” ஒருவனை நியமித்திருப்பார்கள்.

இவையெல்லாம் எதற்கு? என்றால்,  முழுக்க, முழுக்க ஒரே ரீதியில் பயணிக்கும் மனத்தை சற்று மாற்றுப் பாதையில் பயணிக்க வைக்கவே.

சரி! எதற்கு இந்த மாற்றுப் பாதை? தேவையா? என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் “இனிப்பு என்பது சுவைதான், அதற்காக மூன்று வேளையும் இனிப்பை மட்டுமே உண்டு வாழ முடியுமா?”  முடியாது!, திகட்டி விடும்.  அதுபோலத்தான் வாழ்க்கையும். ஒரு மனிதன் தன் மனத்தை, தனது தொழிலின் காரணமாகவோ, அல்லது வியாபாரத்தின் காரணமாகவோ, எல்லா நேரத்திலும் இறுக்கமாகவே, சீரியஸாகவே வைத்திருப்பதென்பது சரியான முறையல்ல.

அலுவலகத்திலோ, பணித்தளத்திலோ ஒருவேளை இறுக்கமாக இருக்க வேண்டும் என்பதே கட்டாயச் சூழ்நிலை என்கிற பட்சத்தில் அவ்வாறு இருக்கலாம்.  ஆனால், அந்த நிலையை அலுவலகப் பணி முடிந்த பின்பும், இல்லத்திற்கு தூக்கி வந்து, குடும்ப அங்கத்தினர் மீது பிரயோகிப்பது சரியல்ல.

உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனத்தில் பலரை தனக்குக் கீழே வைத்து வேலை வாங்க வேண்டிய ஒரு நிர்வாகி கொஞ்சம் கண்டிப்பானவராக இருக்க வேண்டியது கட்டாயம். அந்தக் கண்டிப்பை அவர் வீடு வரை கொணர்ந்து மனைவி மீதும், குழந்தைகளின் மீதும், திணிப்பது நிச்சயம் ஆரோக்கியமன்று.  

எப்பேர்ப்பட்ட கண்டிப்புத் தந்தையானாலும் தன் குழந்தையைச் சிரிக்க வைக்க அவர் ஏதாவது ஒரு காமெடி செய்தேயாக வேண்டும்.  அவருடைய சேட்டையைப் பார்த்து அது சிரிக்கும் போதுதான் அங்கு பாசமும், பற்றுதலும் பதிவாகும்.

இவ்வுலகில். எல்லாக் குழந்தைகளுக்கும் தன் தந்தைதான் முதல் ஹீரோ.  அந்த ஹீரோ கொஞ்சம் காமெடி கலந்த ஹீரோவாக இருந்து விட்டால் நிச்சயம் சந்தோஷம் சதிராடும், உற்சாகம் ஊற்றெடுக்கும்.

“அய்யோ! அவன் சரியான சிடுமூஞ்சி!”

“ம்ஹூம்! அந்த ஆளு ஒரு முசுடு!”

“அவரா? அவர் ரொம்ப ரஃப் அண்ட் டஃப்!”

இது போன்ற கமெண்ட்டுகள் சிலரைப் பற்றி கூறப்படும் போது, குறிப்பிட்ட அந்த நபர்களின் உயர்வு நிலைகள் அனைத்தும் ஒரே நொடியில் பாதாளத்திற்குச் சென்று விடுகின்றதல்லவா?.  உயர்கல்வி கற்று, ஒரு உயர் பதவியில் அமர்ந்து கொண்டு, கடுமையான முகத்தோடு இருப்பதில் என்ன பிரயோஜனம்? நமக்குள் சிலரை நாமே பார்த்திருப்போம்.  தங்கள் பேச்சின் நடுவில் சிறுசிறு நகைச்சுவைகளைத் தூவுவார்கள்.

பேசும்போதும்… பேசாது இருக்கும் போதும் கூட முகத்தை சிரித்த பாவத்துடனேயே வைத்திருப்பார்கள்.  அவ்வாறு இருக்கும் நபர்களை யாருமே அச்சமின்றி அணுகுவர், அன்போடு பேசுவர், பழகுவர். 

சிரிப்பு (Laughter) என்பது மனிதனோடு கூடப் பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு. இது ஓர் ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களிலும் இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று. சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன.  உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல்கூடிய ஆக்சிஜனை உள்வாங்கிக் கொள்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது மூளை அதிகமான சந்தோச ஹார்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது.

உலகில் எல்லா மனிதர்களுக்கும் பிரச்சினை என்பது ஏதோ ஒரு ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.  சிலர் இருபத்தி நான்கு மணி நேரமும், தங்களுடைய பிரச்சினை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பர். அதன் காரணமாக, அந்த சிந்தனை அழுத்தத்தின் விளைவாக, அவர்களது முகமே கர்ண கடூரமாய் மாறிப் போவது அவர்கள் அறியாத விஷயம்.  

சிலரோ, எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மனத்தின் ஒரு மூலையில் புதைத்து வைத்துக் கொண்டு, தங்களது அன்றாட அலுவல்களில் உற்சாகமாக ஈடுபடுவர்.  அதன் காரணமாக அவர்களது முகத்தில் ஒரு தெளிவும், பொலிவும், தேஜஸாய் மிளிரும்.  

ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் நம்முடைய உடல் ஒவ்வொரு வடிவமெடுக்கும்.  எந்த உணர்ச்சியால் நாம் அதிகம் ஆட்கொள்ளப்படுகின்றோமோ, அந்த உணர்ச்சிக்குத் தக்க மாதிரி, அதை வெளிப்படுத்தும்படியாக, நம் உடல் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை பெறும்.

மண்ணில் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும், என்றால் முதலில் விருப்பத்தோடு வாழ வேண்டும். விரக்தியோடு இருத்தல் கூடாது. வாழ்தலுக்கும் இருத்தலுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.  முடிந்தவரை யாரிடமும், எந்தவிதப் பகைமையும் காட்டாமல் வாழ்தல் வேண்டுமென்றால் நிச்சயம் நாம் நகைச்சுவையை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும்.

சிரித்தாலும் கண்ணீர் வரும், அழுதாலும் கண்ணீர் வரும்.  நாம் சிரித்தே கண்ணீர் சிந்தலாமே?

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமான கையிருப்பு சிரிப்பு.  இதன் சிறப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு.

ஆக, நகைச்சுவை என்பது நகைக்க மட்டுமல்ல, நம் மன இறுக்கங்களைத் தொலைக்கத்தான். அதே போல் காமெடி என்பது வெறும் கலகலப்பிற்கு மட்டுமல்ல, நம் கவலைகளை மறப்பதற்கும்தான், என்பதை உணர்ந்து கொஞ்சம் நாமும் காமெடி பண்ணுவோம் சார்!

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தோல்வியா? நோ பிராப்ளம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    நம்மாலன்றி யாரால் முடியும்? (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்