in ,

கொடுத்து வைத்தவள் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

வித்யாவை போய் ஒருதடவை நேரில் பார்த்து விட்டு வர வேண்டும் என்று மூன்று நாட்களாய் நினைத்துக் கொண்டிருகிறாள் சொர்ணம். முடியவே இல்லை.  ஒருவழியாய் இன்றுதான் அதற்கு விடிவு வந்திருக்கிறது.

மத்தியானத்திற்கும் சேர்த்து காலையிலேயே சமைத்தாகிவிட்டது. பாத்திரங்களையும் கழுவிப் போட்டாகிவிட்டது. துணிதுவைக்கும் வேலையும் கிடையாது.

புழக்கடை பக்கம் போனாள். ‘அத்தை நான் சொன்னேனில்லே, என் ப்ரெண்ட் வித்யானு ஒருத்தி… டிரான்ஸ்பர்ல இங்க வந்திருக்கான்னு… அவளை போய் கொஞ்சம் பார்த்துட்டு  வந்திடறேன்… ‘ என்று விட்டு மொபெட்டில் கிளம்பி விட்டாள்.

கோட்டூர்புரம் போலிஸ் ஸ்டேஷனுக்கு பின்புறம் தான் வீடு என்று சொல்லியிருந்தாள், வித்யா.  அண்ணா லைப்ரரிக்கு நேர் எதிரே என்று கூகிள் மேப் சொன்னது. அவள் சொன்ன முகவரிக்கு பத்து பதினைந்து நிமிடத்தில் போய் சேர்ந்து விட்டாள். இவளை எதிர்பார்த்து வீட்டு வாசலிலேயே காத்திருந்த வித்யா, இவளைப் பார்த்தவுடன் ரொம்பவும் மகிழ்ந்து போய் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

‘என்னடி கொஞ்சம் இளைச்சுட்டே போல‘ என்றாள் சொர்ணம். வித்யா புன்னகைத்தாள். ‘ஆபீஸ் கொஞ்சம், தூரம் சொர்ணா… கோயம்பத்தூர்ல ஆபிஸ்க்கு பக்கத்திலேயே வீடு. இங்கே அப்படி இல்லை. தினமும் மொபெட்டுல பத்து கிலோ மீட்டர் போயிட்டு வர வேண்டியிருக்கு… ’ என்றாள்.  பேசிக்கொண்டே  உள்ளே போனார்கள்.

‘சரி என்ன குடிக்கறே? டீயா, காபியா, உனக்கு காபிதான் பிடிக்கும்னு தெரியும், காபியே போடறேன்… ‘ என்றவாள், ஏதோ நினைத்துக் கொண்டது போல, ‘ கொஞ்சம் இரு ‘ என்று விட்டு பக்கத்து அறைக்கு போய் ‘அம்மா நான் காபி குடிக்கப் போறேன், உங்களுக்கும் கொண்டு வரட்டுமா… ‘ என்றாள்.

அவளது அம்மாதான்  ஊரிலிருந்து வந்திருப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்ட சொர்ணம், ‘அம்மா வந்திருக்காங்களா, எப்போ வந்தாங்க…’ என்று கேட்டுவிட்டு,  ‘ நான் ஒரு தடவை கோயம்பத்தூர்ல வச்சு பார்த்திருக்கேன், எங்கே, பெட் ரூம்லயா இருக்காங்க… ’ என்றபடி நகர்ந்தவளை இழுத்து நிறுத்தி, ‘எங்க அம்மா வரலை, எங்க மாமியார்தான் வந்திருக்காங்க. லேசா காய்ச்சல் இருந்தது. நான்தான் கம்பளியைப் போட்டு போர்த்திவிட்டிருந்தேன், காபி போடறேனில்லையா, அவங்களும் குடிக்கறாங்களானு கேட்டேன்… அவ்வளவுதான்… நீ உட்கார்…  ‘ என்றாள்.

விழிகளை விரித்து ஆச்சரியம் கலந்த பார்வையில், ‘நீ அம்மான்னு கூப்பிட்டு பேசவும் உங்க அம்மாதான் இருக்காங்கன்னு நினைச்சுட்டேன்… ஸாரி…  ’ என்றாள் சொர்ணம். புன்னகைத்தபடி ‘ நான் என் மாமியாரை அம்மானுதான்’ கூப்பிடுவேன், அப்படியே பழகிடுச்சு… ’  என்றாள் வித்யா.  இன்னும் வியப்பு அடங்கவில்லை சொர்ணத்திற்கு.

காபியை கலந்து ஒரு கப்பை மாமியாரிடம் கொடுக்கப் போனாள் வித்யா. கூடவே போன சொர்ணம் ‘ வணக்கம்மா’ என்று கும்பிட்டாள்.

கம்பளியை விலக்கிக் கொண்டு எழுந்தவள், ‘ யாருன்னு புரிபடலையேம்மா ’ என்றாள் அந்தம்மாள்.

வித்யா குறுக்கிட்டு, ‘அம்மா நான் சொல்லுவேன்ல, என் பிரெண்டு, யூனியன் பேங்க்ல வேலை பாக்கற ஒருத்தரோட வொய்ஃப், சூளூர்லேர்ந்து சென்னைக்கு டிரான்ஸ்பர்ல வந்திருக்காள்னு. அவத்தான் இவள், கே.கே.நகர்ல இருக்கா. ஒரு பொண்ணும் இருக்கா. மூணாவதோ நாலாவதோ போறான்னு நினைக்கறேன்… ‘ என்றாள்.

சொர்ணமும், ‘பொண்ணு நாலாவது படிக்கறாம்மா ‘ என்றாள். ஃபேன் ஸ்விட்சை போட்டு விட்டு வேகத்தை கூட்டிவைத்துவிட்டு பேசிக் கொண்டே ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார்கள்.

நான் எங்க மாமியாரை அத்தைன்னு தான் கூப்பிடுவேன் என்றாள் சொர்ணம். புன்னகைத்த வித்யா, ‘ ஆரம்பத்திலேர்ந்தே அம்மானு சொல்லியே பழகிப் போச்சு.  அவங்களும் என்னை ஒரு மகள் மாதிரிதான் பார்த்துக்கறாங்க… ‘ என்றாள்.

 ‘ அவங்களுக்கு காய்ச்சல் மட்டும் இல்லேன்னா, இந்நேரம் காபியே அவங்கதான் கலந்து கொடுத்திருப்பாங்க… ‘ என்றாள் வித்யா.  கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க மாட்டாங்க. எல்லா வேலைகளிலுமே எனக்கு ஒத்தாசை பண்ணிக்கிட்டேத்தான் இருப்பாங்க…  எங்க அம்மா கூட அப்படி பாத்துக்க மாட்டாங்க… ’ வித்யா சொல்லிக் கொண்டே போனாள். சொர்ணம் வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

காபி குடித்து முடித்ததும், ‘ ஏய்,  சொர்ணம், லஞ்சுக்கு வெஜ் புலாவ் வைக்கலாம்னு ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன், நீ இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும், புரிஞ்சதா. கோயம்பத்தூர்ல எப்போபார்த்தாலும், சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிட்ட மாதிரி வந்தவுடனே ஓடுவியே. அப்படி ஓடக்கூடாது. சாப்பிட்டுட்டு சாயங்காலமாத்தான் போகனும்…’ என்றாள் வித்யா. அவளது மாமியார் மெல்ல அங்கே வந்து நின்றாள்.

‘ஏன்மா எழுந்திரிச்சி வந்திட்டீங்க, இன்னும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே… ‘ என்றாள் வித்யா மாமியாரை பார்த்து.

‘இல்லைம்மா இப்போ கொஞ்சம் பரவாயில்ல. வெளியே வந்தா கொஞ்சம் காத்தோட்டமா இருக்குமேனு வந்துட்டேன். சரி, உன் சினேகிதி வந்திருக்காளே, என்ன சமைக்கப் போறே… ‘ என்றாள் மாமியார்.

‘ வெஜ் புலாவ் சமைக்கறேம்மா, பீன்ஸ், காரட்லாம் கழுவி எடுத்து வச்சிருக்கேன், ப்ரிஜ்ல காலிபிளவரும் இருக்கு, அதையும் சேத்துக்கனும், வெங்காயம் வெட்டனும், சைடு டிஷ்க்கு முட்டை வேகவச்சு ஃப்ரை பண்ணிக்கலாம்னு இருக்கேன்… ‘ என்றதும்,  மாமியார் காய்க் கட்டரை எடுத்துக் கொண்டு சம்மணம் போட்டு தரையில் உட்காந்து கொண்டாள்.

‘நீங்க ஏம்மா கஷ்டப்படறீங்க, கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கங்க, நான் வெட்டறேன் கொடுங்க… ‘ என்று சொர்ணம் அவளருகில் வந்தாள்.

‘நல்ல கதையா இருக்கே, நீ எங்க வீட்டுக்கு வந்திருக்கற விருந்தாளிம்மா, உன்னை உட்கார வச்சி நாங்கள்தான் உபசரிக்கணும், நீ உன் பிரண்டோட பேசிட்டிரு, மடமடன்னு எல்லாத்தையும் கட் பண்ணிடறேன் ’ என்றபடி காய்களை நறுக்க ஆரம்பித்துவிட்டாள் மாமியார்.

‘இப்படித்தான், என்னை கொஞ்சம் கூட வேலை செய்ய விடமாட்டாங்க… ‘ என்றாள் வித்யா சிரித்துக் கொண்டே.

வாஷிங் மிசின் ஓடி முடிந்ததற்கு அடையாளமாக சத்தம் போட்டது. ‘துணி அலசி முடிச்சிடுச்சு போல… ’ என்று வித்யா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, காய்களை கட் பண்ணி முடித்திருந்த மாமியார் எழுந்து, ‘வித்யா நான் போய் எடுத்து மாடில காயப் போட்டுட்டு வாரேம்மா, நீ வேலைய பாரு… ‘ என்று மடமடவென எழுந்து போய்விட்டாள்.

மாமியாரும் மருமகளும் அம்மா மகள் போல பழகுவதை பார்த்து சொர்ணத்திற்கே பொறாமையாய் இருந்தது.

‘பார் சொர்ணா, நான் சொல்லலை, உடனே எழுந்திரிச்சி துணி காய போட போய்ட்டாங்க பார்… ‘ என்று சிரித்தாள் வித்யா. சொர்ணமும் சிரித்தபடி ‘ நீ குடுத்து வைச்சவ… ‘ என்றாள்.

‘ஏன் உன் மாமியார் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்களா… ‘ என்று கேட்டாள் வித்யா.

‘ஏன்… பண்ணுவாங்களே… உங்க மாமியார் மாதிரியேதான்.  எனக்கு ஒரு வேலையுமே தரமாட்டாங்க… ‘ என்று சிரித்தாள் சொர்ணம்.

ஒரு வழியாய் சாப்பாடு தயாராகி, சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் பேசிக்க கொண்டிருந்து விட்டு கிளம்பத் தயாரானாள் சொர்ணம்.  மாமியாரும் வித்யாவும் ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமே… ‘ என்று கேட்டு பார்த்தார்கள்.  ஒருவழியாய் அவர்களை சமாதனப்படுத்தி விட்டு  கிளம்பி விட்டாள் சொர்ணம்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே, ‘ ஏன்மா இவ்ளோ நேரமா… ‘ என்றாள் மாமியார்.

‘கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன்… லஞ்ச் சாப்பிட்டிட்டுத்தான் போகச் சொல்லி ஒரே வற்புறுத்தல்… அதான் லேட்… ‘ என்றாள்.

‘சரி சரி… ஸிங்க்ல பாத்திரம் ரொம்பி போயிடுச்சு… டீ போட்ட பாத்திரம் காய்ஞ்சு கிடக்கு. ரொம்ப நேரம் என்னால நிக்க முடியாதுல்ல… அதனால் போட்டு வச்சிட்டேன்… இதோ ரெண்டு தடவை டீ கலக்கி குடிச்ச டம்ளர்லாம் கூட கிடக்கு. வாஷிங் மிஷின்ல துணி பிழிஞ்சு மூணு மணி நேரமா அப்படியே கிடக்கு… என்னால படியேற முடியாதில்லையா… நீயே கொண்டு போயி போட்டுடு… ரொம்ப நேரமா தலைவலி. கொஞ்சம் டீ போட்டுக் கொடேன்… ‘ மாமியார் சொல்லிக்கொண்டே போய் சோபாவில் உட்கார்ந்துகொண்டாள் மாமியார்.

‘எல்லாம் அப்படி அப்படியே கிடக்குதே… இந்த டீ குடிச்ச டம்ளர் கூட காயவெச்சுக் கிடக்குதே… ‘ என்று வெறுப்பை உமிழ்ந்தவள், அப்படியே வித்யாவுக்கு ஓடியோடி ஒத்தாசை செய்து கொண்டிருந்த அவளது மாமியாரையும் நினைத்துக்கொண்டாள்.

 ‘ம்… குடுத்து வச்சவ… ‘

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 15) – முகில் தினகரன், கோவை

    சுயகவுரவம் (சிறுகதை) – சுஶ்ரீ