in ,

கொடும்பாளூர் இளவரசி (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கொடும்பாளூர் இளவரசி வானதி, சோழ அரண்மனையின் பின்பக்கம் இருந்த நந்தவனத்தை நோக்கி சுற்றும்முற்றும் பார்த்தவாறே மெல்ல நடந்தாள். வெண்ணிலா இந்நேரம் வந்திருப்பாள்..வெண்ணிலா மட்டுமே அவளுடைய ஒரே தோழி. அவளிடம் பேசும்போது தான் மனசு மகிழ்ச்சியாக இருக்கிறது…தன்னை புரிந்து கொண்டவளும் அவள்தான் என்று நினைத்தவாறே நடந்தாள் நந்தவனம் நோக்கி

“வெண்ணிலா! நான் வர சற்றுத் தாமதமாகிவிட்டது. இளவரசர் வருவதால், அரண்மனையே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது… உனக்கு தெரியுமா… எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு, இந்த நந்தவனத்து ஓடைக்கு உன்னிடம் பேச வருவதற்குள் எவ்வளவு சிரமப்பட்டுப் போகிறேன் தெரியுமா?”

“தெரியும் மகாராணி!”

“என்னடி… திடீரென்று என்னை மகாராணி ஆக்கிவிட்டாய்…நீ என் ஆத்ம சினேகிதி … ‘வானதி’ என்று பெயர் சொல்லி கூப்பிட சொன்னால் அதைத்தான் கேட்க மாட்டேன் என்கிறாய், இப்பொழுது என்ன மகாராணி என்கிறாய்.”

“தேவி! தாங்கள் கொடும்பாளூர் இளவரசி. கொடும்பாளூர் அரசர் பெரிய வேளாளரின் செல்வப்புதல்வி. உங்கள் சித்தப்பா சின்ன வேளாளரின் அருமை வளர்ப்பு மகள், சோழ இளவரசி குந்தவை தேவியாரின் அருமை தோழி… எல்லாவற்றிற்கும் மேலாக சோழநாட்டின் கண்ணான இளவரசர் அருள்மொழிவர்மரின் உள்ளம் கவர்ந்த கள்ளி. ஒருவேளை இளவரசர் மகாராஜா ஆகிவிட்டால், பின்னர் தாங்கள் மகாராணி தானே… அதான் இப்பொழுதே அப்படி கூப்பிட்டேன்” என்றாள் வெண்ணிலா.

“அடியே.. இளவரசர் ஒருக்காலமும் மகாராஜாவாகப் போவதில்லை. நானும் சோழநாட்டின் மகாராணி இல்லை… நாங்கள் இருவரும்… ஒருவேளை அவர் என்னை திருமணம் செய்து கொண்டால்… கடல்கடந்து எங்காவது சென்று விடுவோம். “

“ஐய்யோ தேவி! சோழநாட்டின் கண்ணை கடத்திக்கொண்டு போவேன் என்று சொல்கிறீர்களே!”

“ஏய் வெண்ணிலா… நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு என்னிடம் அன்பாக இருப்பதால் உன்னை மட்டுமே என் தோழியாக நினைக்கிறேன். நீயும் நான் சொல்வதைக் கேட்காமல் ஏதேதோ சொல்லி என்னைக் கேலி பண்ணுகிறாய்.” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வானதி.

“சரி! சரி! தேவி கோபித்துக் கொள்ளாதீர்கள்! இவ்வளவு காதலை சோழ இளவரசர் மேல் மனதிற்குள் வைத்திருக்கும் தாங்கள் அதை ஏன் வெளிப்படையாக அவரிடம் சொல்லக் கூடாது. அவருடைய சகோதரி குந்தவைப் பிராட்டியாரின் மனம்கவர்ந்த தோழி அல்லவா நீங்கள்? உங்களுக்கு சொல்லுவதற்கு எல்லாவித உரிமையும் இருக்கும்போது ஏன் உங்கள் காதலை அவரிடம் சொல்லக்கூடாது?”

“அது மட்டும் என்னால் முடியவே முடியாது வெண்ணிலா. நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதையெல்லாம் அவர் முகத்தை பார்த்ததுமே மறந்து விடுகிறேன். இவ்வளவு ஏன்? அவரை தள்ளி இருந்து பார்த்தாலே என் மனம் படபடக்கிறது… நாக்கு உள்ளே இழுத்துக் கொள்கின்றது… கண்கள் சொருகி விடுகிறது… இதில் நான் எப்படி என் மனதின் காதலை அவரிடம் தெரிவிப்பேன்.”

“இளவரசி! நான் ஒன்று சொல்வேன் கோபித்துக் கொள்ளாதீர்கள்…”

“சொல்லுடி! நீ என்னத்தை புதிதாக சொல்லப் போகிறாய்… ஏற்கனவே அரண்மனையில் இருக்கும் மற்ற சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லோரும் என்னை பார்த்து பரிகசித்து சிரித்து பைத்தியக்காரி என்கிறார்கள்”.

“அம்மா! வருத்தப்படாதீர்கள்! நான் சொல்ல வந்ததும் அதுவே! மற்ற சிற்றரசர் வீட்டு இளவரசிகளுக்கு இளவரசர் மேல் ஒரு கண். சோழநாட்டின் பிரியத்திற்குரியவர் அல்லவா?. அவரை மணந்து கொண்டால், தங்களுடைய செல்வாக்கும் தங்கள் நாட்டின் செல்வாக்கும் உயரும் என்பதால் அவரை வளைத்துப் போட பார்க்கிறார்கள். இந்த நிலையில் நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை சொல்லாமல் வைத்திருந்தால் அது அவர்களுக்கு வசதியாக போய்விடும் …இளவரசர் சீக்கிரம் ஈழத்திற்கு கிளம்ப போகிறார் அவர் அங்கு போவதற்கு முன்னால் உங்கள் மனதை அவரிடம் திறந்துக் காண்பித்துவிடுங்கள் இளவரசி”.

“அது மட்டும் என்னால் முடியாது… அது மட்டும் என்னால் முடியாது …அவரை நேருக்கு நேராக பார்த்து என் காதலை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை..அவர் முகத்தை பார்த்தால் என் வாயிலிருந்து வார்த்தை வராது …கண்டிப்பாக என்னால் சொல்ல முடியாது …கண்டிப்பாக முடியாது “

“வானதி! யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறாயா? உன்னைக் காணாமல் அரண்மனை பூராவும் தேடிக்கொண்டிருக்கிறேன். மற்ற பெண்கள் உன்னை பரிகசிப்பது சரியாகத்தான் இருக்கிறது.” என்று செல்லமாக கடிந்து கொண்ட குந்தவை நாச்சியார், வானதியை அன்புடன் அணைத்துக் கொண்டார்.

வெட்கத்தில் தலை கவிழ்ந்த வானதி, “ஒன்றுமில்லை அக்கா பொழுது போகவில்லை அதனால் சும்மா பாடிக் கொண்டு இருந்தேன் கொஞ்ச நேரம்” என்று சமாளித்தவள், பின் அவருக்கு தெரியாமல் மனதிற்குள், “அக்கா! உங்களுக்கு தெரியாது வெண்ணிலா என் மனதில் உள்ளவற்றை சொன்னால், மற்ற பெண்களைப் போல் சிரிக்க மாட்டாள்”.

“அடியே! வெண்ணிலா நான் அரண்மனைக்கு கிளம்புகிறேன்… அக்கா வந்துவிட்டார்கள்.. நீ தேய்ந்தாலும், ஒளிந்தாலும், எங்கேயும் போய் விடாதே… நாளைக்கும் இதே நேரம் உன்னுடன் பேச வருவேன்” என்று மானசீகமாகக் கூறிக் கொண்டாள்.

விண்ணில் காய்ந்த வெண்ணிலவு கள்ளமில்லா அந்தப் பெண்ணிலவைப் பார்த்து கண் சிமிட்டியது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கொய்யாப் பாட்டி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    அம்மாவின் ஆசை (சிறுகதை) – சத்திய பானு