in ,

கூடடையும் பயணத்தில் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வேக வேகமாய் ஸ்டேஷனுக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் திவாகர், நடுங்கியபடி அமர்ந்திருந்த மனிதனையும், உடன் அமர்ந்திருந்த சிறுவனையும்  பார்த்தவாறே இருக்கைக்குச் சென்றமர்ந்தார்.

“என்ன பழனி யார் இவங்க?”

“மார்க்கெட் திருடன் சார்… கூட இருப்பது மகன்!”

“இவனைப் பார்த்தா அப்படித் தெரியலையே?” 

“வெளித் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்திறாதீங்க… மொபைல் கடைக்கு வாங்கற மாதிரிப் போய்…. ஒரு செல்போனை ஆட்டையைப் போட்டிருக்கான்!… கடை ஓனர் கண்காணிப்பு கேமரால பார்த்துட்டு.. இங்க போன் பண்ணினார்!…  நான்…. ஒரே அமுக்காக அமுக்கிட்டேன்” என்றார் கான்ஸ்டபிள் பழனிவேலு.

சில நிமிடங்கள் அவர்களைக் கூர்ந்து பார்த்த இன்ஸ்பெக்டர்,  “தம்பி!…இங்க வாப்பா!” சிறுவனை அழைத்தார்.

சிறுவன் தன் தந்தையைப் பார்க்க, “டேய்…குமாரு… போடா… நம்ம இன்ஸ்பெக்டர்தான் ஒண்ணும் பண்ண மாட்டார்” என்றான் அவன்.

ஆனாலும் சிறுவன் தயங்கித் தயங்கிச் சென்றான்.

அவன் அருகே வந்ததும் அவன் தோளைத் தொட்ட இன்ஸ்பெக்டர்,  “உன் பேர் என்ன?” கேட்டார்.

“கு… மார்”

“என்ன கிளாஸ் படிக்கறே?”

“ஏழாம் கிளாஸ்”

“வெரி குட்!… உங்கப்பா மொபைல் திருடினாரா?”

“ஆன் லைன் கிளாஸ் இருக்கு… பையனுக்கு உடனே மொபைல் வாங்கிக் குடுங்க… இல்லேன்னா ஆப்ஸெண்ட் போட்டுடுவோம்…. இல்லேன்னா ஸ்கூலை விட்டே நிறுத்திடுவோம்!”ன்னு… டீச்சர் அப்பாவைத் திட்டுறாங்க!… அவருகிட்ட காசே இல்லை!… அவர் என்ன பண்ணுவார்?””

“சரி… அதுக்காக திருடலாமா?” இன்ஸ்பெக்டர் கேட்க,

“எங்கப்பாவுக்கு என்னை நல்லா படிக்க வைக்கணும்!…. பெரிய ஆபீஸராக்கணும்!ன்னு ஆசை!… கூலி வேலை செய்யற அவரால எனக்கு மொபைல் வாங்கித் தர முடியல!… எங்கே என் படிப்பு நின்னு போயிடுமோ?ன்னு ஒரு பயம்… அதனாலதான்…. அவர் மொபைல் போனை எடுத்தாரு..!.. என்னுடைய படிப்புக்காகத்தானே எடுத்தார்? அது தப்பா?” அப்பாவியாய்க் கேட்ட சிறுவனிடம்,

“அடுத்தவங்க பொருளைத் திருடறது குற்றம்தான்… அதுக்கு சட்டத்துல நிச்சயம் தண்டனை உண்டு”

“அப்படின்னா…. என்னைய மாதிரி ஏழை மாணவர்களெல்லாம் படிக்கக் கூடாதா?” சிறுவன் கேட்க, அந்தக் கேள்வி திவாகருக்கு பழைய சம்பவத்தை நினைவிற்குக் கொண்டு வந்தது.

கல்லூரிக் காலத்தில் வறுமையின் காரணமாய்  ஃபீஸ் கட்ட முடியாமல் போக, திவாகர் படிப்பிற்கே முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

*****

“என்ன திவா தம்பி… ஏன் முகம் ஒரு மாதிரியிருக்கு?” பக்கத்து வீட்டு கசாப்கடை பாய் கேட்டார்.

                இளவயது திவாகர் தங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையையும், தன்னுடைய நிலையையும் சொல்லி முடிக்கவில்லை,  “ஒரு நிமிஷம்” என்றபடி வீட்டிற்குள் சென்று திரும்பிய பாயின் கையில் பணம், “இந்தா தம்பி… இதுல முப்பதாயிரம் இருக்கு போதுமா?”

                 திவாகர் தயங்க, “கசாப்புக் கடைக்காரன் காசுல படிச்சா படிப்பு வராதா?” கேட்டார்.

                “எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரு”

 “அவர்கிட்ட எதுக்குச் சொல்றே?… சொல்லாதே!…”

                 “ம்ம்ம்… நீங்க இந்தப் பணத்தை எனக்குக் கடனாய்க் குடுங்க… நான் படிப்பு முடிச்சதும்… வேலைக்குப் போயிடுவேன்!… முதல் சம்பளம் வாங்கினதும் திருப்பிக் குடுத்துடுவேன்… நீங்க இதுக்குச் சம்மதித்தால்தான்  வாங்கிக்குவேன்”

                “சரி… அப்படியே ஆகட்டும்ப்பா!” என்றார் பாய்.

******

                படித்து முடித்து, இன்ஸ்பெக்டர் உத்தியோகத்தில் சேர்ந்ததும் முதல் சம்பளத்துடன், அந்தப் பெரியவரைத் தேடிப் போய், அவர் இறந்து விட்ட தகவலோடு சோகமாய்த் திரும்பிய திவாகருக்கு, திருப்பிச் செலுத்தாத அந்தக் கடன் உள்ளுக்குள் உறுத்திக் கொண்டேயிருந்தது. அந்தச் சுமையை இறக்கி வைக்க ஆண்டவன் அனுப்பிய ஜீவன்தான் இந்தச் சிறுவன் என்று தோன்றியது.

                 “விருட்”டென எழுந்தார்.

“ரெண்டு பேரும் என் கூட வாங்க!” சொல்லி விட்டு, இன்ஸ்பெக்டர்  வெளியேற, சிறுவனும் அவனது தந்தையும் எதுவும் புரியாமல் குழப்பத்தோடு  பின் தொடர்ந்தனர்..

எல்லோரும் ஏறியதும் கிளம்பியது ஜீப்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம், ஒரு மொபைல் கடை முன் நின்றது ஜீப். “ம்ம்… இறங்குங்க”

கடைக்குள் சென்ற இன்ஸ்பெக்டர், “ஒரு நல்ல மொபைல் போன்… ஆன் லைன் கிளாஸ் அட்டெண்ட் பண்ற மாதிரி குடுப்பா” என்றார் அங்கிருந்தவனிடம்.. அவன் நாலைந்து மொபைல்களை மேஜை மீது பரப்பினான்.

அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து, “என்ன விலை?”  கேட்டார்.

“பதினஞ்சாயிரம் சார்”

“இதுக்கு பில் போடுங்க”

பணத்தைச் செலுத்தி விட்டு, மொபைல் பாக்ஸை வாங்கிக் கொண்டு வெளியேறினார் இன்ஸ்பெக்டர்.

மூவரும் மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

‘இங்க பாருப்பா… கல்விக்காக செஞ்ச திருட்டு…ங்கற ஒரே காரணத்துக்காக மன்னிச்சு விடறேன்!… இனிமே இந்த மாதிரி செய்யக் கூடாது!..”என்ற இன்ஸ்பெக்டர் அந்த சிறுவன் பக்கம் திரும்பி,

“தம்பி….. இதுல எண்பத்திநாலு நாளைக்கு ரீசார்ஜ் பண்ணி இருக்கேன்! இதுல பாடம் மட்டும்தான் படிக்கணும்!… சினிமா பார்க்கக்கூடாது… வீடியோ கேம் விளையாடக் கூடாது….. என்ன?” என்றார்.

சிறுவன் சந்தோஷத்துடன் தலையை மேலும் கீழும் ஆட்ட,

“எண்பத்திநாலு நாள் ரீசார்ஜ் முடிஞ்சதும்… இங்க வந்து என்னைப் பார்க்கணும்! மொபைலைக் காட்டணும்! ஆன்லைன் வகுப்பு தவிர வேற எதாச்சும் பார்த்திருக்கியா?ன்னு செக் பண்ணிட்டு அடுத்த எண்பத்திநாலு நாளைக்கு ரீசார்ஜ் பண்ணித் தருவேன்!” புன்னகையோடு இன்ஸ்பெக்டர் திவாகர் கேட்க, சிரிப்புடன் தலையாட்டினான் சிறுவன்.

அவன் தந்தை திவாகரைக் கையெடுத்து கும்பிட, “ஏழ்மைக்காக ஒரு தடவை தப்பு செய்ய ஆரம்பிச்சேன்னா.. அது அப்படியே தொடர்ந்து உன்னை புரபஷனல திருடனாவே மாத்திடும்!!… அதனால இனிமேல் இந்த வேலையெல்லாம் வெச்சுக்காத!” என்ற இன்ஸ்பெக்டர் பாக்கெட்டிலிருந்து  ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து, “சரி… போயிட்டு வாங்க!” என்றார்.

 அவர்கள் சென்றதும், “சார்… நீங்க கிரேட் சார்” என்றார் கான்ஸ்டபிள் பழனிவேலு.

“கான்ஸ்டபிள்… தவறுகளுக்குத் தண்டனை குடுப்பதை விட… அது உருவானதற்கான காரணத்தை கண்டுபிடிச்சு… அதைச் சரி பண்ணிட்டா போதும்… அதுக்கப்புறம் தவறே நடக்காது!” என்றார் இன்ஸ்பெக்டர்.

எண்பத்திநாலாம் நாள் காலை.

“அப்பா இன்ஸ்பெக்டர் சார் இன்னொரு எண்பத்திநாலு நாளைக்கு ரீசார்ஜ் பண்ணிட்டார்… மெஸேஜ் வந்திருக்கு!” என்றான்..

“ஆனா அவர் “நேர்ல வாங்க! செக் பண்ணி பார்த்துட்டுத்தான் ரீசார்ஜ் பண்ணுவேன்”னு சொன்னாரே?.. சரி… அதுக்காக நாம போகாம இருக்கக் கூடாது!” என்றார்.

இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் குழப்பமாயினர்.

இன்ஸ்பெக்டர் திவாகரின் இருக்கையில் வேறொரு இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்.

குமாரின் தந்தை கான்ஸ்டபிள் பழனிவேலிடம் விசாரித்தார்.  “நம்ம இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆயிட்டாரா?”

சட்டென்று முகம் மாறிய கான்ஸ்டபிள்,  “நீங்க பேப்பரெல்லாம் படிக்கிறதே இல்லையா?…” கேட்டார்.

“இல்லையே சார்?… ””

“அதான் உங்களுக்குத் தெரியலை!… கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் திவாகர்… கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரியில் சேர்க்க, சிகிச்சை கொடுக்க… இறந்து போனவங்களை அடக்கம் செய்ய…. ராத்திரியும் பகலும்  பாடுபட்டார்!… கடைசில அவருக்கும் கொரோனா ஒட்டிக்கிச்சு!… தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி லட்சக்ணக்கில் செலவு பண்ணியும்… அவரை காப்பாற்ற முடியலை!” குரல் கரகரத்தது கான்ஸ்டபிள் பழனிவேலுக்கு.

அதிர்ந்து போயினர் தந்தையும் மகனும்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, “வந்து…. இன்னைக்கு காலையில ரீசார்ஜ் பண்ணிட்டதா மெசேஜ் வந்ததே?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டார் தந்தை.

“நான்தான் ரீசார்ஜ் பண்ணி விட்டேன், சார் அட்மிட் ஆகறதுக்கு முன்னாடி, என்னைக் கூப்பிட்டு, “பழனிவேலு நான் திரும்பி வருவேனா?… மாட்டானா?..ன்னு தெரியாது!… அதனால நீ இந்த நம்பருக்கு வர்ற இருபத்திமூணாம் தேதி….. அடுத்த எண்பத்தி நாலு நாளைக்கு ரீசார்ஜ் பண்ணிடு”ன்னு சொல்லிட்டு போனார்”

மனம் தாளாமல் “குபுக்”கென்று பொங்கி வாய் விட்டு அழுதார் சிறுவனின் தந்தை. சிறுவனோ பிரமை பிடித்தவன் போல் வானத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.

“கடவுள் உன்னைச் சோதிக்கிறார் என்றால் கவலைப்படாதே… சிரித்துக் கொண்டு ஏற்றுக் கொள்!… ஏனென்றால் தான் சோதிக்கத் தகுதியுள்ளவனாக உன்னைத் தேர்ந்தெடுத்துள்ளாரே?… அதுவே பெருமைப்படக் கூடிய விஷயம்தானே?”

இன்ஸ்பெக்டர்  திவாகரின் குரல் விண்ணிலிருந்து ஒலித்தது.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சுடிதார் போட்ட எரிமலை ஒன்று (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    எதற்கும் அழாதவன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை