in ,

கெட்டாலும்! (சிறுகதை) – ராஜா ஹரி

எழுத்தாளர் ராஜா ஹரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

கதிர் வேகமாக நடந்தான், வெயில் உக்கிரமாக அடித்துக் கொண்டிருந்தது, தலைமுடி வியர்வையில் குளித்தது போல நனைந்து கழுத்தின் வழியே ஊர்ந்து முதுகில் இறங்கியது. பாலிஸ்டர் சட்டை என்பதால் வெக்கையினால் முதுகு தோல் உரிவது போல எரிந்தது.

பெரியப்பா ஆபிஸ் கிளம்புவதற்குள் பார்த்துவிட வேண்டும். எட்டி நடை போட்டான். சனியன் காலில் போட்டிருக்கும் ரப்பர் செருப்பு ஒத்துழைக்கவில்லை. அடியில் மாட்டியிருந்த ஊக்கு கழன்றுவிட்டது போல, ஊக்கின் முனை ரப்பர் செருப்பின் அடியில் இருந்து துளைத்துக் கொண்டு காலின்மேல் குத்தத்துவங்கியது.

“ஸ்ஸ்….ஆஆ ..”

கதிருக்கு செருப்பை கழற்றி வீசி எரிந்து விடலாம் என்று ஆத்திரம் வந்தது. இப்போது செருப்பை போட்டுச் செல்லலாமா அல்லது கழற்றி எரிந்து விடலாமா என்று குழப்பமாய் இருந்தது. அப்பாவிடம் கேட்டால் நிச்சயம் கிடைக்காது.

“போடா.தே…பையலே ” என்று குடிக்கப் போய்விடுவான்  தே… பையன்” இப்போது கேட்கவும் முடியாது   முன்பெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்  அப்பாவிடம் பயம் இருந்தது. முதலாம் ஆண்டு முடியும்போது..அப்பா என்பது மாறி அவன் என்றானது. இப்போது அவன், இவன் என்று மாறி கெட்டவார்த்தையில் மனதிற்குள் திட்ட ஆரம்பித்தான்.

அதன் பிறகுதான் கதிருக்கு மனம் லேசானது போல இருந்தது. இல்லையெனில் அன்று முழுவதும் அப்பாவை கண்டம் துண்டமாய் வெட்டி எரிந்து விட மனம் வெறி கொண்டலையும் .

அம்மா. ஏன் இப்படியாகிப்போனாள்.. அப்பாவால் தான் இப்படி ஆனாளா.. இல்லை அம்மாவால் தான் அப்பா இப்படி ஆகிப்போனாறா ? சில நேரங்களில் குடித்து விட்டு அழும் போது பாவமாய் இருக்கும்.

“உங்க பெரியப்பன் நம்மளயெல்லாம் ஏமாத்திட்டான்டா” தாத்தாவ ஏமாத்தி நமக்கு சேர வேண்டியதெல்லாம்……அதன் பிறகு காதில் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் வந்து விழும்…

மறுநாள் காலை ஒன்றும் நடக்காதது. போல போய் ரெண்டாயிரம் வாங்கிட்டு வாடா என்பார். ஒவ்வொரு முறையும் விதம்விதமாய் பொய் சொல்லி வாங்கி வர வேண்டும்.

எக்ஸாம் பீஸ் கட்ட வேண்டும்,

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை

வாடகை குடுக்கவில்லை

இன்றும் காசு வாங்கி வரச் சொல்லியிருந்தார், நன்றாக குடித்திருந்தார், கண்களில் ஏதோ வெறி. அருகில் வருகையில் பீடி நாத்தமும், சாராய நெடியும் வாந்தி வரச்செய்தன. “டேய் இங்க  வாடா …”

உன் பெரியப்பண்ட போய் ரெண்டாயிரம் வாங்கிட்டு வா…

அதோடு அதுவும் சொன்னார்.

காசை வாங்கி விட்டு இந்தா இத வச்சு நெஞ்சுல ஒரே சொருகு சொருகிறு..

கட்டிலுக்கு கீழே கிடந்த பெரிய ஸ்கூரு டிரைவரை எடுத்து நீட்டினார் ……அப்பதான் தாத்தா சொத்து நமக்கு வரும்…நாம பெரிய வீட்டுக்கு போயிறலாம்…எல்லா பிரச்சனையும் தீர்ந்திரும்…

கதிருக்கு அவமானங்கள் பழகி போயி விட்டிருந்தது. பெரியம்மா முன்பெல்லாம் போனால் உள்ளே உட்கார வைத்து காபி கொடுப்பாள்… மெத்து, மெத்தென்ற அந்த சோபாவில் உட்கார்ந்து அவள் கொடுக்கும் அந்த காபி குடிக்கும் பத்து நிமிடங்கள் சொர்க்கம்..

பின் பெரியப்பா அப்பாவை திட்டிக் கொண்டே பணம் கொடுப்பார்.. சில நேரங்களில் அரவிந்தின் பழைய சட்டைகளும் டீ. சர்ட்டும்  கிடைக்கும். 

காலிங் பெல்லை அழுத்திய போது உள்ளே பெரியம்மா “டேய் யாருன்னு பாருடா” என்று அரவிந்திடம் சொல்வது கேட்டது.

இரண்டு நிமட மௌனத்திற்குப் பின் அரவிந்த் கதவை திறந்தான். “ஹே ப்ரோ கம் இன்… ம்மா ஆ கதிர்….” உள்ளே தலையை திருப்பி இரைந்தான்.

பெரிப்பா.இருக்காரா?

ம்ம்….உள்ள வா…

எனக்கு காலேஜ் லேட்டாச்சு. பை பை..என்றுவிட்டு ஓடினான்.

மாடியில் அவனுக்கு தனி ரூம். சுவர்களில் பெரிதாய் ஜஸ்டின் பீபர் படத்தை ஒட்டியிருப்பான். கேமிங் லேப்டாப் வைத்திருக்கிறான். அதில் வைஸ் சிட்டி. ஒருமுறை தனியாக இருக்கும் போது, அந்த வெப் சைட்டில்…கடவுளே இப்படியெல்லாம் செய்வார்களா…. உடம்பே சூடாகி   வியர்த்து ஓடி வந்துவிட்டான்.

எனக்கும் இப்படி தனியறை இருந்தால் நன்றாக இருக்கும். எல்லோரும் ஒரே அறையில்… சை..வேறு எதுவும் வேண்டாம். இரவில் அவ்வப்போது கேட்கும் அந்த முனங்கல்கள்…. “முண்ட ….தூக்குடி…” அம்மாவின் மௌனமான எதிர்ப்பும், பின் சிலபுரியாத சப்தங்களும்… கதிர் காதுகளை இறுகப் பொத்திக்கொள்வான்.. அம்மா பாவம் என்று மட்டும் தெரியும்…

வாடா…

பெரியம்மா அழைத்து உள்ளே உட்கார வைத்தாள். 

காபி சாப்பிடுறியா

மய்யமாய் தலையசைத்தான். கையில் இருந்த துணிப்பையில் அந்த ஒரு அடி நீள ஸ்கூரு டிரைவர் .இருந்தது. சேலாக துணிப்பையை விலக்கி எட்டிப் பார்த்தான். அதன் முனையில் இருந்த பிசுபிசுப்பை துடைத்தெடுத்தான். நல்ல கனமாய் உறுதியாய் இருந்தது. கைபிடியும் நல்ல பிடிப்புடன் கைக்கு வாகாக….சொருகினால் வெண்ணையில் இறங்குவது போல இறங்கும்.

மறுபடியும் மறுபடியும் அப்பாவின் அந்த குரல்…. “அவன கொன்னுறா… அவன கொன்னுரா…நெஞ்சின் வலப்புறத்தில் இரண்டு ‘கைகளால் தொம் தொம் என்று அறைந்து காட்டி… ஒரே செருகு… அப்டியே வடக்க எங்காவது ரயில புடிச்சு ஒடிப்போயிரு …” பிறகு பிறகு….

கதிர் தலையை உலுக்கிக்கொண்டான்…. இப்போது மனது மிகவும் தெளிச்சியாய் இருந்தது. காப்பியை அமைதியாய் குடித்தான்.. உள்ளிருந்து. மீனு குட்டி வந்தாள்.

த்தா…த்தா   க்கா .கா  என்று ஏதோ ஒரு   விளையாட்டு பொருளை இடதுகையால் நீட்டிப்படி தத்தக்கா பித்தக்கா என்று வந்தது. கதிர் முகத்தை திருப்பிக்கொண்டான்.

இன்றைக்கே வடக்குபக்கம் ஓடி விட வேண்டும்.

கொண்டுவந்திருந்த பையை சேலசாக திறந்து பார்த்தான். அந்த பெரிய ஸ்கூரு டிரைவர் உள்ளிருந்தது. முனையில் பிசுபிசுப்பாய் அந்த கரை. பெரியம்மா வந்து மீனுகுட்டியை தூக்கிக்கொண்டு உள்ளே போனாள். பாத்ரும் கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

“செல்வி…சாப்பாடு ரெயா….நான்……” .  கத்தியவர் … கதிரை பார்த்ததும் நிறுத்திக் கொண்டார்.

“என்னடா..” கதிர் எழுந்து கொண்டான். கையில் அந்த பையை கெட்டியாக பிடித்துக் கொண்டான். அருகில் வரட்டும் … அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தார். கைகளில் வாட்சை திணித்துக்கொண்டே “எதுக்குடா பணம்.?”

கதிர் மெளனமாயிருந்தான்

“டேய் .”

உடம்பை ஒரு மா மாதிரி முன்னால் வளைத்துக்கொண்டே இடுப்பில் பெல்டை சொருகிக்கொண்டே கதிரை ஒரு மாதிரி  ஆயாசமாய் பார்த்தார் .

“டேய் உன்னத்தான்டா கேக்குறேன்.”

“இல்ல பெரிப்பா”

“என்ன இல்ல …..?”

அப்பா….

அப்பா…?

மிக அருகில் வந்தார், கதிர் பைக்குள் கையை விட்டு அந்த ஸ்கூரு டிரைவரை வெளியே எடுத்தான் …..

என்னடா..இது.?

கதிரின் கைகள் நடுங்கின  உள்ளங்கை வியர்வையில்  அதன் மரகத பச்சை கைப்பிடி வழுக்கியது.

“பெரிப்பா..அப்பா…..”

.”பெரியப்பாப்பாவிற்கு ஏதோ தப்பாய் பட்டது. “

“அப்பாக்கு என்னடா.?”

“அப்பாவ….அப்பாவ ….”

அவர் காலடியில் அந்த ஸ்கூரு டிரைவரை போட்டுவிட்டு தரையில் உட்கார்ந்து ஒவென்று கதறி அழ ஆரம்பித்தான்.

எழுத்தாளர் ராஜா ஹரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகளிர் நாள் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    எங்கிருந்தோ வந்தாள் (சிறுகதை) – பவானி உமாசங்கர்