2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
கதிரவன் மறையும் அந்தி மாலை பொழுது பூஞ்சோலையில் புதிதாக பூத்த மலர்கள் சுகந்தம் பரப்பிக் கொண்டிருந்தன. மாங்கிளிகளும், பூங்குயில்களும் கீதம் இசைக்க காற்றும் வண்டுகள் துளைத்த மூங்கிலுக்குள் புகுந்து குயில்களுக்கும், கிளிகளுக்கும் இணையாக போட்டியிட்டு ரீங்காரமாய் ஒலித்தன.
அதை கேட்டு இரசித்தபடியே குலோத்துங்க சோழர் பெருமான் மெல்ல நடந்து வர அதற்கு இணையாக கவிசக்கரவர்த்தி கம்பர் உடன் நடந்து வந்து கொண்டிருந்தார். மக்களை போற்றி காத்து நிற்கும் மன்னனோ கம்பீரமான நடையுடன் பிடரி அசைய மெல்ல மெல்ல நடையெடுத்து அசைந்தசைந்து நடந்து வரும் ஒரு காட்டுச் சிங்கம் போல இருந்ததார்.
கம்பரோ மிக பிரமாண்டமாக வளர்ந்த ஒரு காட்டுப் புலி போல சுற்றிலும் கேட்கும் ஒலிகளையும் சின்னச் சின்ன வண்டுகள் இடும் ரீங்காரங்களையும் கவனித்தபடியும் எதையெல்லாம் கவியாக சமைக்கலாம் என்று ஆலோசித்தபடியும் மெல்ல நடந்து வந்தார் காண்போரின் கண்களுக்கு சிங்கமும் புலியும் நட்பு பாராட்டி நடந்து வந்து கொண்டிருப்பது போலவே தெரிந்தது.
இதற்கிடையில் குலோத்துங்க சோழன் திடீரென, “ஹா… ஹா.. ஹா… ” என்று உடல் குலுங்க நகைக்க, அந்த இடத்தில் மற்றவாரயிருப்பின் அரசனோடு சேர்ந்து நகைத்து ஒத்து ஊதியிருப்பார்கள்.
ஆனால் அரசனோடு நடந்த கவிசக்கரவர்த்தியோ அரசன் நகைப்பதை இரசித்து விட்டு மெதுவாக, “அரச பெருமானே ஏன் தீடிரென்று தாங்கள் நகைத்தீர்கள்? “
” அம்மானே என் நகைப்புக்கு என்ன காரணத்தை கூறுவேன்” என்று கூறிவிட்டு மீண்டும் உடல் குலுங்க சிரித்தார்.
“தங்களின் திடீர் நகைப்புக்கு காரணம் என்னவென்பதை யாம் அறிந்து கொள்ள கூடாதோ? “
“கவிசக்கரவர்த்தியே நீரறியாததும் உண்டோ இவ்வுலகில்? “
அதற்கு கம்பரோ, “மருமானே தாங்களும் தாங்கள் ஆளும் இந்த இராச்சியமும் இந்த இராச்சியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சகலபிரஜைகளும் நமக்கு ஐக்கியம் என்பதற்கும் யாதொரு சந்தேகமும் இல்லை ” என்று கூறிவிட்டு தானும் கூட நகைத்தார்.
குலோத்துங்க சோழனுக்கோ கம்பர் கூறிய அவ்வாக்கியங்கள் செவி கொள்ளவில்லை சட்டென முகம் வாடி, ‘இவரென்ன தம்மை நம்மைப் போல பெரும் வேந்தனென நினைக்கின்றாரா! எம்முடைய ஆளுகைக்கு உட்பட்டு நாம் கொடுக்க வாங்கிச் சீவனம் பண்ணுகின்ற சாதாரண வித்வான்தானே ஆனால் இவரோ நம்மை கொஞ்சம் கூட மதியாமல் யாம் இவருக்கு ஐக்கியம் என்கிறாரே இது தகுமா? இதே வார்த்தையை மற்றவர்கள் யாரேனும் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் ‘ என்று நினைத்துக் கொண்டே சோழன் கோபம் தலைக்கேற கம்பர் என்பதால் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு மேற்கொண்டு கம்பருடன் எதுவும் பேசாது பூங்காவிலிருந்து விருட்டென்று வெளியேறி அரன்மனைக்குள் போய் சப்ரகோள மஞ்சத்தில் படுத்துக் கொண்டார்.
அந்த நேரத்தில் வழக்கப்படி அரசனின் பட்டத்தரசி ‘புவனமுழுதுடையாள்’ தனது பணிப்பெண் உதவியுடன் அரசனுக்கு சாப்பிட சிற்றுண்டி கொண்டு வந்து வைத்து விட்டு சாப்பிடும்படி கூறினாள்,
“அரசே என்ன அப்படியே அமர்ந்திருக்கிறீர்கள் நான் கொண்டு வந்த சிற்றுண்டியில் தங்களுக்கு நாட்டமில்லையே “
“எமக்கு யாதொரு சிற்றுண்டியும் வேண்டாம் உனது உபசரிப்பும் வேண்டாம்” என்று கூறி கம்பரின் மேல் இருந்த கோபத்தை அரசியின் மீது காட்டினான்.
அரசியோ உடனே பணிப் பெண்ணை நோக்கி பார்வை ஒன்றை வீச பணிப்பெண்ணும் புரிந்து கொண்டு உடனே அவ்விடத்தை விட்டு அகன்றாள், உடனே அரசி சோழனின் அருகில் நெருங்கி அமர்ந்தாள், ” வேந்தே என்ன நடந்து விட்டது? ஏன் இப்படி கோபம் கொள்கிறீர்கள்?”
“ஒன்றும் நடக்கவில்லை என்னை கொஞ்சம் தனிமையில் இருக்க விடு” என்று சோழன் அரசியிடம் வெறுப்புடன் கூறினான்.
அதற்கு அரசியோ, “பெருமானே தாங்கள்தானே அடிக்கடி கூறுவீர்கள் நமக்கு எத்துனை கோபம் இருப்பினும் அதனை மற்றவர்கள் மேல் காட்டக் கூடாதென்று மேலும் தங்களின் கோபத்தை இந்த சிற்றுண்டியின் மீது காட்டுவது என்ன பிரயோஜனம் அதுமட்டுமல்லாது தாங்கள் கோபப்படும் அளவிற்கு யார் என்ன கூறிவிட்டனர் “
“நான் கூறியது உன் செவிகளுக்கு கேட்க வில்லையா இல்லை கேட்டும் நீயும் மற்றவரை போல என்னை உதாசீனப்படுத்துகிறாயா?”
” அரசே நான் தங்களை உதாசீனப் படுத்துகிறேனா பொற்கொடிகள் தான் படர்ந்திருக்கும் மரத்தினை உதாசீனப் படுத்திடுமா என்ன!! இல்லை அசைந்தாடும் நாணலோடு காற்றுக்கு என்ன பிணக்கு இருந்து விடப்போகிறது தாங்களோ இந்த நாட்டை ஆளும் வேந்தன் நானோ தங்களை ஆளும் ஒரு இராணி நான் எதற்காக தங்களை உதாசீனப்படுத்த போகிறேன் ” என்று கூறிவிட்டு சிற்றுண்டி பாத்திரைத்தை கையில் எடுத்து அதிலிருந்த கணிகளுள் ஒன்றை எடுத்து அரசனுக்கு புகட்ட அரசனின் வாயருகே கொண்டு செல்ல
வேந்தன் அந்த கனியை வேகமாக தட்டி விட்டு விட்டு, ” ஓ… இந்த இராச்சியத்தையே கட்டி ஆளும் வேந்தன் நான் என்னையோ நீங்கள் ஆளுவதாக ஆளாளுக்கு கூறுகிறீர்கள் இவ்விடத்தை விட்டு உடனே சென்று விடு” என்று தனது கோபத்தை அரசியின் மீது கொட்டித் தீர்த்தான் புவனமுழுதுடையாள் கண்களில் ததும்பிய நீரை துடைத்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
@@@@@
அரசியார் கண்களில் நீர் மல்க வருவதை கண்ட தாசி பொன்னி என்பவள் ஓடி வந்து அரசியின் கண்களை துடைத்து விட்டபடி, ” இராணியாரே என்ன நடந்தது ஏன் இப்படி அழுது கொண்டு வருகிறீர்கள்?” என்று வினவியதும் புவனமுழுதுடையாளின் கண்களில் மேலும் நீர் கோர்க்க
அதனை கண்ட தாசி பொன்னி, “அரசியே நடந்ததை கூறாமல் இப்படி அழுது கொண்டிருந்தால் நான் என்னவென்று ஆறுதல் கூற “
“பொன்னி உமது அரசருக்கு யார் மீதோ கோபம் போலிருக்கிறது அதை என்னிடம் கொட்டி தீர்க்கிறார் “
தாசி பொன்னி என்பவள் அரசனின் அந்தப்புரத்தில் மன்னனின் வைப்பாட்டியாக இருந்தாள் அதனால் அரசியாரும் அவளிடம் நடந்த அனைத்தையும் கூறினாள்,
” ஹ… ஹ… ஹ… இதற்குத்தானா எமது இராணியார் கண்களில் இத்தனை கண்ணீர் “
அரசி உடனே பொன்னியை கோபமாக முறைத்து கொண்டு, “பொன்னி எனக்கு நடந்ததை பார்த்து நகைக்கின்றாயா? ம்ம்.. ம்ம்… அரசர் என் மீதல்லவா கோபத்தை காட்டினார் மாறாக உன்னிடம் அல்லவே அதனால் தான் நீ இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாய் போலும் “
தாசி பொன்னி உடனே சிரிப்பதை நிறுத்தி விட்டு, “அரசியே எமது மன்னர் கோபத்தை வேறு யாரிடம் காட்டுவார்? கோபம் இருக்கும் இடத்தில்தான் அன்பும் அதிகம் இருக்கும் எமது வேந்தர் இந்த தாசி பொன்னியை விட உங்களைத்தான் அதிகம் நேசிக்கிறார்…. தற்போது அரசரை சிற்றுண்டியை சாப்பிட வைக்க வேண்டும் அவ்வளவதானே இதோ நான் அதை செய்கிறேன் ” என்று கூறய பொன்னி அரசர் படுத்திருந்த சப்ரகோள மஞ்சத்தின் அருகில் சென்றாள்
அங்கு குலோத்துங்க சோழன் ஒருகளித்து படுத்திருந்தார். அவரை மெல்ல தட்டினாள் அரசர் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் அதே போல படுத்துக் கொண்டார். தாசி பொன்னியோ மெல்ல அரசருக்கு பிடித்த பாடல்களை பாட ஆரம்பித்தாள் அது கேட்டு மயங்கிய அரசரிடம் மெல்ல அருகில் நெருங்கி அதிசுந்தரம் காட்டி அவரை எழுந்து உட்கார செய்து விட்டு பாத்திரத்தில் இருந்த கனியை எடுத்து ஊட்டி விட்டாள் மெதுவாக அதை சுவைத்த அரசரிடம்,
“அரசே சர்வோர்த்தமயமாகிய தமது பத்தினி மேல் தங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? “
அரசர் எதுவும் கூறாமல் பொன்னியிடமிருந்து முகத்தை வேறு பக்கமாக திருப்பி வைத்துக் கொண்டார்,
“அது சரி இப்போது என்னிடமும் இணங்காமல் பிணங்குவது ஏனோ? காரணத்தை கூறுங்களேன்” என்று கொஞ்சினாள் பொன்னியின் கொஞ்சலுக்கு சற்று பலன் கிடைத்தது,
” ம்ம்… நாடாளும் வேந்தனாகிய எம்மை யாரும் மதிப்பதில்லை”
“தங்களை மதிக்காமல் போனது யார் என்று சற்று விளக்கமாக கூறுங்களேன் “
பொன்னியின் உரையாடல் அவளது குரல் தேனில் நனைத்து எடுத்தது போல இருக்க அரசரும், கம்பருக்கும் தனக்கும் இடையில் நடந்த உரையாடலை பற்றி கூறினார்.
வாழ்வு தாழ்வு இரண்டுக்கும் தன்னோடு இணைந்து பயணிக்கும் அருமை மனைவியிடம் கூட சொல்லாது மனதிற்குள்ளேயே வைத்து மறுகிய நிகழ்வை ஒரு தாசியாகிய தன்னிடம் கூறியதும் பொன்னி மிகவும் மகிழ்ந்து போய்,
“இதற்கு தானா இவ்வளவு சோகம் கொண்டீர்கள் உம்மை தமக்கு ஐக்கியம் என்று வெறும் வாயினால் கூறிய கம்பரை மெய்யாகவே எமக்கு அடிமையாக்கி காட்டுகிறேன் அதுவும் அந்த கவிசக்கரவர்த்தி கம்பர் ஒரு தாசிக்கு அடிமையாக்குகிறேன் பாருங்கள்”
என்று சூழுரைத்து விட்டு,
“கம்பர் எனக்கு அடிமை அந்த கவலையை விடுங்கள் தாங்கள் முதலில் சிற்றுண்டியை சாப்பிடுங்கள் “
என்று கூறிய பொன்னி அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டு போனாள். அங்கே சென்றதும் தனது தாதியை அழைத்தாள்,
” தாதிப் பெண்ணே கம்பர் இவ்வழிக்கு வருவார் அவர் வந்ததும் நான் அழைத்ததாக கூறி உள்ளே அழைத்து வா”
என்று தாதிப் பெண்ணை வீட்டு வாயிற்படியிலேயே நிறுத்தி விட்டு அவள் உள்ளே சென்று கட்டிலில் படுத்து ஒரு போர்வையை எடுத்து போர்த்திக் கிடந்தாள்.
கம்பரோ பூங்காவிலேயே அரசர் திரும்ப வந்து விடுவார் என்று காத்திருந்தார். சூரியன் மறையத் தொடங்கியதும் பூங்காவின் காவலாளி வந்து தீபங்களை ஏற்றத் தொடங்கினான். அரசர் வருகையை எதிர்பார்த்திருந்த கம்பர் அவர் வராததை உணர்ந்ததும்,
‘ஒருவேளை நாம் சொன்ன சொல் அரசர் மனதை தைத்திருக்க வேண்டும் அதனால் சீற்றம் கொண்டு திரும்ப வரவில்லை போலும் சரி எல்லாம் நாளை தெரியவரும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தமது பல்லக்கை வரவைத்து வீட்டிற்கு புறப்பட்டார். போகும் வழியில் கம்பரின் வருகைக்காகவே காத்திருந்த பொன்னியின் தாதிப்பெண் கம்பரின் பல்லக்கை கண்டவுடன் அருகில் சென்று கும்பிட்டுவிட்டு,
“பெருமானே தங்களை எமது அம்மாள் அழைத்து வரச் சொன்னார் நான் அதற்காகவே காத்திருந்தேன்”
என்று கூறியதும் கம்பரும் பல்லக்கிலிருந்து இறங்கி தாசி பொன்னியின் வீட்டிற்க்குள் நுழைந்தார். கம்பர் உள்ளே சென்றதும் திகம்பரியாய்க் கட்டிலின் மீது கிடந்த தாசி பொன்னியை கண்டார் அவள் கிடந்த கோலத்தை கண்டுவிட்டு,
” அம்மாளே எம்மை அழைத்தது ஏனோ அறிந்து கொள்ளவே வந்திருக்கிறோம்”
பொன்னி கம்பரின் குரலை கேட்ட அடுத்த கணத்தில் ஓடி வந்து கம்பரை கட்டிக் கொண்டு,
“கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமானே தங்களின் கவிகளுக்கு இந்த பொன்னி அடிமையாகிப் போனேன் அதோடு இந்த பெரும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மீது மோகம் கொண்டும் விட்டேன் எனவே இந்த தாசி பொன்னியின் மோக ஆசையை நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும் “
என்று தாசி பொன்னி தனது குரலில் தேவாமிர்தத்தை தடவி பேசினாள்.
கம்பரோ அவள் கட்டிக் கொண்டிருந்த கைகளை மெல்ல எடுத்து விடுவித்து விட்டு,
” அம்மாளே நீ அரசனின் மனைவி ஸ்தானத்தில் இருக்கிறாய் நான் எப்படி உன் மோகத்தை தீர்த்து வைக்க முடியும்?”
” அதுவும் அரசனுக்கு மனைவி என்றாவதனால் எனக்கு மகள் எனறு ஆகும் இது மிகப்பெரிய பாவம் இதை விடுத்து வேறு எதை கேட்டாலும் செய்து தர சித்தமாயிருக்கிறேன்”
என்று கம்பர் கூறக் கேட்டு முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டாள்,
” ஆனாலும் தங்கள் மீது நான் மோகத்தை வளர்த்துக் கொண்டு விட்டேனே என்ன செய்வேன் இந்த அடிமைக்கு வேறு வழி இருந்தாள் கூறுங்களேன்”
” அம்மா பொன்னி நீ எதை கேட்டாலும் கட்டாயம் செய்து தருவேன் ஆனால் என்னை இந்த பாவ செயலை செய்யும்படி மட்டும் கூறிவிடாதே”
என்று கம்பர் தாசி பொன்னியிடம் பிரமாணிக்கம் (சத்யம்) செய்து கொடுத்தார், உடனே பொன்னி வேறுவிதமான நடிப்பை வெளிப்படுத்தி,
” அப்படியானால் நான் என்ன கேட்டாலும் செய்து தருவீர்களா?”
” அப்படித்தான் நான் உனக்கு பிரமாணிக்கம் செய்திருக்கிறேன் உனக்கு என்ன வேண்டும் என்று கூறு யாம் செய்து தருகிறோம்”
என்று கம்பர் கூறியதும் பொன்னியும் தயங்கியபடியே மெல்ல தனது ஆசையை கூறினாள்,
“அப்படியானால் நீர் எமக்கு அடிமை என்று சாசனம் எழுதிக் கொடுப்பீர்களா?”
கம்பரும்,
” ஆகா இதற்கு ஏது தடையும் இல்லை உடனே எழுதி தருகிறேன்”
உடனே ஏடும் எழுத்தாணியையும் கொண்டுவரச் சொல்லி
“தாசி பொன்னிக்குக் கம்பனடிமை” என்று எழுதி அதில் வருடம், மாசம், தேதி, அனைத்தையும் எழுதி தமது கையோப்பத்தையும் இட்டு கொடுத்து விட்டு சென்று விட்டார்.
சந்தோசத்தில் துள்ளிய பொன்னி உடனடியாக இதை அரசரிடம் கொண்டு போய் சேர்ப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கம்பர் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்ற ஏடை ஒரு துணியில் வைத்து கட்டி எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு புறப்பட்டாள். அரன்மனையின் உள்ளே சென்றதும் நேராக அந்த புரத்திற்கு சென்றாள்.
அரசனோ அந்த ஏட்டை வாங்கி படித்து பார்த்து விட்டு, “பொன்னி நீ சாமர்த்தியசாலிதான் அதுவும் பெரும் சாமர்த்தியசாலி என்றே கூறவேண்டும் இவ்வளவு விரைவில் இந்த பெரிய காரியத்தை எளிதில் முடித்து வந்து விட்டாயே பலே! பொன்னி பலே! “
பொன்னியும் அரசனின் பாராட்டுக்குள் நனைந்து போனாள்.
“பொன்னி நாளை சூரியோதயமானவுடனே அரச மண்டபத்திற்கு முன்பாகவே செல்வேன், அங்கு சென்றதும் சகலமானவர்களையும் அழைத்து வரச் செய்து அனைவரது முன்னிலும் அந்த கம்பனிடம் இந்த ஏட்டை காட்டுவேன் எனவே அந்த நேரத்தில் அந்த கம்பனின் முகத்தை காண நீயும் அரசவைக்கு வரவேண்டும் ” என்று மிக சந்தோசமாக கூறிவிட்டு இரவு ஓய்வுக்கு சென்றார்
@@@@@
அடுத்த நாள் அரச சபை சற்று நேரத்துடனே கூடச் செய்தான். அனைவரும் வந்து விட்டார்களா என்று உறுதி படுத்திக் கொண்டு விட்டு கம்பரை அழைத்தார்,
” கவிச்சக்கரவர்த்தி கம்பரே இதில் கையொப்பம் இட்டிருப்பது யாரென படித்து பார்த்து விட்டு கூறவும்”
என்று கூறிவிட்டு ஏட்டினை கம்பரின் கையில் கொடுக்க கம்பரும் அதை வாங்கி படித்து அங்கிருந்த அனைவரையும் பார்த்து விட்டு குலோத்துங்க சோழரிடம்,
“அரசே இந்த ஏட்டில் இருக்கும் கையொப்பம் எம்முடையதே”
என்று கூறியதும் அரசர் அந்த ஏட்டை வாங்கி அங்கிருந்த வாசிப்போனிடம் தந்து உரக்க வாசிக்கும்படி பணித்தார்,
வாசிப்போனும் அந்த ஏட்டில் எழுதியிருப்பதை உரக்க வாசித்தான்,
“இந்த ஏட்டில் எழுதியிருப்பது யாதெனில் ‘தாசி பொன்னிக்குக் கம்பர் அடிமை'”
என்று கூறிடவும் அவையில் உள்ள அனைவரும் இது என்ன அநியாயம் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாசி பொன்னிக்கு அடிமையா இது எப்படி சாத்தியம் என்று ஆளாளுக்கு பேசத்தொடங்கினர். அரசரோ கம்பரை பார்த்து,
“நீர் தாசி பொன்னிக்கு அடிமைதானே? “
“அரசே இந்த ஏட்டில் எழுதியிருப்பது அதுதானே அதிலென்ன சந்தேகம் உமக்கு”
அரசர் உடனே தன் உடல் குலுங்க பெருநகை செய்து விட்டு,
“கவிச்சக்கரவர்த்தி கம்பரே நீர் பெரும் வித்வானல்லவா என்றிருந்தும் நீர் தாசி பொன்னிக்கு அடிமை என்று எழுதி கொடுத்திருக்கிறீரே இது உமக்கு வெட்கமல்லவா? “
கம்பரோ சற்று புன்முறுவலுடன்,
” யாம் ஏதாவது திருடிவிட்டோமா? இல்லை வேறு ஏதேனும் செய்யத் தகாத காரியத்தை செய்து விட்டேனா? அப்படி ஒன்றுமில்லையே? அதற்கு ஏன் இப்படி நகைக்கின்றீர்கள் அரசே? “
அரசர் சற்று துணுக்குற்று ‘இந்த கம்பருக்கு சிறிது கூட வெட்கம் என்பது இல்லை போலிருக்கிறதே’,
“கம்பரே நீர் என்ன கூறுகிறீர்? ஒரு மிகப்பெரிய கவிஞர், மேலும் கவிச்சக்கரவர்த்தி என்று பட்டம் பெற்ற மிகப்பெரும் வித்வான் நீர் ஒரு சாதாரண தாசிக்கு அடிமை என்பதில் வெட்கம் இல்லையா உமக்கு “
“அரசே அந்த ஏட்டில் எழுதியிருக்கும் தாற்பரியத்தை உள்ளபடி அறிந்தவர்க்கு வெட்கபடுவதில் என்ன அர்த்தம் இருக்க போகிறது எதற்கு வெட்கபடவேண்டும்?”
அரசர் சபையோரை மறுபடியும் ஒருமுறை பார்த்துவிட்டு,
” சபையோரே இந்த கம்பர் என்ன உளறுகிறார் ஒரு தாசிக்கு இந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடிமை என்பது அவருக்கு வேண்டுமெனில் வெட்கக் கேடு இல்லாமிலிருக்கலாம் ஆனால் இந்த அரசபைக்கு மாபெரும் வெட்கக் கேடு என்ன சொல்கிறீர்கள்”
அரசன் கூறியதை கேட்ட அனைவருமே அவர் கூறியதை ஆமோதிப்பது போல தலையாட்டினார்கள். ஆனால் கம்பரோ,
” அரசே அந்த ஏட்டில் எழுதியிருப்பது ‘தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை’ என்பது ஆறு பதங்களால் முடிந்த ஒரு வாக்கியம் அவ்வளவே இதில் வெட்கமேது?”
” என்ன வெறும் வாக்கியமா? என்ன கூறுகிறீர்கள் கம்பரே தங்களுக்கு பித்து பிடித்து போனதா என்ன?”
“அரசே ஆறுபதங்களால் முடிந்த ஒரு வாக்கியத்திற்கு தாங்ளுக்கு அர்த்தம் என்னவென்று கூறுகிறேன் கேளுங்கள் அதன் பிறகு தங்களுக்கே புரியும் இதில் கம்பர் வெட்கபடும் அளவிற்கு ஒன்றுமில்லை என்பது”
அரசன் குலோத்துங்கச் சோழன் ஒன்றும் புரியாமல் அமைதியாக,
” சரி உமது விளக்கத்தை கூறும்”
என்றார் அதற்கு கம்பர்,
” அரசே ‘தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை’ இந்த வாக்கியத்தில் முதற்பதம் ‘தா’ இது இறுதி யகர வொற்றுத் தொகுத்தல் விகாரம் 2 வது ‘சி’ இது குறுக்கல் விகாரம் 3 வது ‘பொன்னி’ இதுவோ விகுதி பெற்றது 4 வது ‘கு ‘இது குறுக்கல் 5 வது ‘கம்பர்’ 6 வது ‘அடிமை ‘ இவைகளை முறைப்படி சொற்பிரிப்பு செய்தால் தா என்பது’ தாய்மை’ அதாவது அன்னை என்று கூட எடுத்துக் கொள்ளலாம் சி என்பதன் பொருள் மங்களகரம் பொன்னி என்பதற்கு லட்சுமி ‘கு’ என்பது நான்காம் வேற்றுமை உருப்பிடைச் சொல், கம்பர் என்பது இயற்பெயர் ‘அடிமை’ என்பதன் விளக்கம் தங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று எண்ணுகிறேன் இருப்பினும் கூறுகிறேன் கேளுங்கள் அதாவது அடிமை என்பது அடிமை தொண்டு செய்வது இவையாவும் சொற்பொருள் முழுப் பொருள் யாதென்றால், உலகமாதாவாகிய லட்சுமி தேவிக்கு கம்பன் அடிமை என்பதே இங்கனம் யாம் அந்த ஏட்டில் ‘மகாலட்சுமிக்கு இந்த கம்பன் அடிமை’ என்றுதானே எழுதிக் கொடுத்திருக்கிறோம் இதனால் எனக்கோ இல்லை இந்த அவைக்கு எந்தவொரு இழிவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன் இதையேன் தாங்கள் இத்தனை பரிகாசம் செய்கிறீர் என்பதுதான் எமக்கு புரியவில்லை “
என்று கூறினார். அதை கேட்டதும் அரசன் குலோத்துங்கச் சோழனுக்கு கம்பர் மீதிருந்த அத்தனை கோபமும் தலைக்கேறியது,
” அப்பப்பா யாரை பரிகசித்தாலும் தகும் ஆனால் இந்த கவிஞர்களை மட்டும் பரிகசிக்கவே கூடாது ஏனென்றால் இவர்கள் அரச சபையில் வந்து அரசரை பற்றி கவிதை வாசிப்பார்கள் பொன்னும் பொருளும் கொடுக்கா விட்டால்”
” அந்த வாக்கியங்களை கொண்டே அந்த சபையோர் முன் வைத்து ‘புத்தியில்லாதவன்’ அரசன் என்றும் ‘திரியாவரக்காரன்’ என்றும் இன்னும் பலவிதமாக தூசித்து சொல்வார்கள் அதை கேட்டு நாம் அரசனையே தூசித்து எழுதுகிறாயா என்று கேட்டால் உடனே அவர்கள் அந்த வாக்கியங்களுக்கே நான் தங்களை தூசித்து எழுதினேனா இல்லையே “புத்தியில் ஆதவன்’ அதாவது தாங்களை அறிவில் சூரியனுக்கு சமமானவன் என்றும், ‘திரியாவரக்காரன்’ என்பது ‘ மாறுபடாத நல் வரம் பெற்றவன் ‘என்று கூறுவார்கள் தூசித்து சொன்ன வார்த்தைகளையே தமக்கு சாதகமாக மாற்றி கூறினாலும் கூறுவார்கள் பொல்லாத கவிஞர்கள் அம்மம்மா யமனை காட்டிலும் இவர்கள் கொடியவர்கள் “
” போற்றினும் போற்றுவர்: பொருள் கொடாவிடில் தூற்றினும் தூற்றுவர் : சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர் :
வன்க ணாளர்கள் தூற்றினும் பாவலர் கொடிய ராவரே, “
என்று கூறி விட்டு சபையிலேயே கவிச்சக்கரவர்த்தி கம்பரை, சோழ அரசன்,
” இன்று முதல் நீர் எமது தேசத்தில் இருக்க வேண்டாம் நான் உமக்கு கொடுத்த விருதுகள் முதலானவைகள் வைத்து விட்டு எங்கேயாவது போய் விடும்”
என்று கூறியதும் கம்பரும் அப்படியே சசகல விருதுகளையும் ஆடை ஆபரண முதலியனைத்தையும் வைத்து விட்டு வேறு தேசம் சென்று விட்டார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings