எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திருமணமான பெண்கள் இரண்டு ரகம்.
மாலை நேரம் கணவன் பணியிலிருந்து திரும்பி வருகையில், மிகைப்படுத்தப்படாத அலங்காரத்தோடு, மிளிரும் புன்முறுவலோடு வரவேற்று, அவன் உடை மாற்றி ஆற அமர வந்தமர்ந்த பின் அவன் கையில் ஆவி பறக்கக் காஃபி கொடுத்து விட்டு, அதன் பிறகு தான் சொல்ல நினைப்பதை நாசுக்காக ஆரம்பிப்பது ஒரு ரகம்.
அவ்வாறில்லாமல் அவன் உள்ளே நுழைந்தும் நுழையாததுமாய் சமையலறையில் இருந்து வியர்வை வழிய ஓடி வந்து, கத்தலாய் பேசத் துவங்குவது இன்னொரு ரகம்.
இதில் என் மனைவி சித்ரா இரண்டாவது ரகம். நானும் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டேன் அவள் மாறுவதாய் இல்லை.
அன்றும் அப்படித்தான் நான் வெளியே சிட்அவுட்டில் நின்று ஷூ லேசை கழற்றும் போதே ஆரம்பித்து விட்டாள்.
“ஏங்க… இது உங்களுக்கே நல்லா இருக்கா?… அப்படி என்ன தப்புப் பண்ணிட்டான் அவன்னு நீங்க இப்படி பண்ணிட்டீங்க?”.
எனக்குக் கோபம் தலைக்கேறியது “கொஞ்சம் அமைதியா இருக்கறியா?… மனுஷன் வந்ததும் வராதுமா ஏன் இப்படிக் கத்தறே?” கேட்டு விட்டு அவள் முகத்தைக் கூடப் பாராமல் வேக வேகமாக வீட்டிற்குள் நுழைந்தேன்.
என் பின்னாடியே ஓட்டமாய் வந்தவள், “அவன் இங்கு வந்திட்டுப் போனானுங்க!… அவன் மூஞ்சியைப் பரிதாபமாய் இருந்திச்சுங்க” என்றாள்.
சட்டெனத் திரும்பி அவளை முறைப்பாய் பார்த்து, “யார் வந்திட்டுப் போனாங்க?… அதைச் சொல்லு மொதல்ல!”. பல்லைக் கடித்தபடி கேட்டேன்.
“அதாங்க… அந்தப் பேப்பர்க்காரப் பையன்!…. முருகேசன்!”.
“ஓ….”.
“அவனுக்கு செஞ்சிட்டிருந்த பணஉதவியை நிறுத்திட்டீங்களாமே?”.
இதற்கு மேல் கோபத்தை அடக்க முடியாது என்கிற எல்லையை தொட்டு விட்ட நான், “இதோ பாரு சித்ரா!… அவனுக்கு பண உதவி செய்யறதும்… செய்யாததும் என்னுடைய இஷ்டம்!… நீ உன் வேலை என்னவோ… அதை மட்டும் பார்த்துட்டு போ!” அனலாய்க் கக்கினேன் வார்த்தைகளை.
அரண்டு போனாள். முகம் பேயறைந்தது போலாக, மெல்லப் பின் வாங்கி சமையலறைக்குள் சரண்டர் ஆனாள்.
ஒரு வழியாய் அவள் வாயை அடைத்து விட்ட திருப்தியில் நானும் உள் அறையை நோக்கி திரும்பினேன். ஆனாலும் என் மனது குழம்பித் தவித்தது. “நான் செய்தது சரிதானே?”
விஷயம் வேறொன்றுமில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் காலை ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். வேகமாக என்னைக் கடந்து சென்றான் ஒரு பேப்பர்ப்பையன். அப்போது அவன் சைக்கிள் கேரியரில் இருந்து நழுவி விழும் பேப்பர் கட்டை நான் பார்த்து விட, கூச்சல் போட்டேன் அவன் நின்றான்.
அதற்குள் அந்தப் பேப்பர்க்கட்டு தரையில் விழுந்து தெறித்து ரோடெங்கும் தாறுமாறாய்ப் பறந்தது.
ஒற்றை ஆளாய் அவற்றைச் சேகரிக்க அவன் தடுமாற,
நானும் உதவினேன். பத்து நிமிடத்தில் எல்லாவற்றையும் சேகரித்துக் கட்டிய பின், “ஏம்பா… உனக்கு என்ன வயசு? பார்க்க ரொம்பவும் சின்னப் பையனா இருக்கறியே?” அங்கலாய்ப்பில் கேட்டேன்.
“பதினாலு வயசு சார்”
“ஹும்… படிக்க வேண்டிய வயசு!” சன்னக் குரலில் நான் புலம்ப, அது அவன் காதில் விழுந்து விட்டது.
“சார்…. நான் படிச்சிட்டுத்தான் சார் இருக்கேன்!” என்றான்.
“நான் வியப்பானேன் அப்படியா ஆச்சரியமா இருக்கே!”.
“ஆமாம் சார்… எனக்கு அப்பா இல்லை… அம்மா மட்டும்தான்!… அவங்க நாலஞ்சு வீட்டுல பத்துப்பாத்திரம் தேய்ச்சு… அதுல கிடைக்கறதை வெச்சுக் குடும்பச் செலவுகளை சமாளிக்கிறாங்க!… நான் இப்படி காலை நேரத்தில் பேப்பர் போட்டு… மாலை நேரத்துல ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை பார்த்து என்னோட படிப்புச் செலவைப் பார்த்துக்கிறேன்!… கொஞ்சம் பற்றாக்குறையாகத்தான் இருக்கு… இருந்தாலும் எப்படியோ நடக்குது!”.
“இந்தச் சின்ன வயசுல இவனுக்கு இவ்வளவு பொறுப்புணர்ச்சியா?” நெகிழ்ந்து போனேன். அவனுக்கு ஏதாவது ஒரு விதத்துல உதவி செஞ்சே ஆகணும் என்கிற ஒரு உத்வேகம் எனக்குள் வந்தது.
என் முகவரியை அவனிடம் தந்து, “ஈவினிங் ஏழு மணி வாக்குல என்னை வீட்ல வந்து பாரப்பா!” என்று சொல்லி விட்டு வந்தேன்.
மாலை வீடு தேடி வந்தவன் கையில் ஒரு ஆயிரம் ரூபாயைத் திணித்தேன். “இதை இந்த மாசச் செலவுக்கு வெச்சுக்கோ!… இனிமேல் இதே மாதிரி மாசம் ஆயிரம் ரூபாய் உன் படிப்புச் செலவுக்காக நான் கொடுத்துடறேன்!… நீ நல்லாப் படிச்சு நல்ல உயர்ந்த ஸ்தானத்துக்கு போகணும் என்ன!”.
அருகிலிருந்த சித்ராவும், “ஆமாப்பா… எங்களுக்கு குழந்தை இல்லை என்பதினால் உன்னையே எங்க மகனா நினைச்சு இதைச் செய்கிறோம்… பேரைக் காப்பாத்துப்பா!” என்றாள்.
விழியோரங்களில் நீர் பனிக்க, “சார்…. நீங்க கண் கண்ட தெய்வம் சார்!” என்று சொல்லி விட்டுச் சென்ற அந்த முருகேசன்தன் இன்று எங்கள் பிரச்சனை.
அன்று இரவு பத்தரை மணி இருக்கும் சுவர் பக்கமாய்த் திரும்பிப் படுத்திருந்த என்னை மேவாயை தொட்டுத் திருப்பினாள் சித்ரா, “என்னங்க கோபமா?”.
“உன் மேல எனக்கென்ன கோபம்?”.
“இல்லைங்க… அவனைப் பார்க்க ரொம்பப் பாவமா இருந்துச்சு!… அதான்”.
“இங்க பாரு சித்ரா!… நான் எதைச் செய்தாலும் சரியான காரணத்தோடதான் செய்வேன்!… இதையும் கூட ஒரு காரணத்தோடதான் செஞ்சிருக்கேன்!… நாளைக்குக் காலைல நீ என் கூட வாக்கிங் வர்றே!”.
“நானா?… எதுக்கு?”.
“வர்றே… அவ்வளவுதான்!”.
மறுநாள் காலை நானும் சித்ராவும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிரில் வந்த வேறொரு பேப்பர்ப் பையனின் சைக்கிளை கையை குறுக்கே நீட்டி நிறுத்தினேன்.
“என்ன சார் பேப்பர் வேணுமா?”.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!… நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு!… இந்த ஏரியாவுல முருகேசன்தானே பேப்பர் போடுவான்!… நீ எப்படி?”.
“அவன் எங்கே சார் இப்பெல்லாம் பேப்பர் போட வர்றான்?… அவன் இப்ப நல்ல வசதியாயிட்டான் சார்!…. இதுக்கெல்லாம் இனி வருவானா சார்?”.
“அப்படியா?… அவன் நின்னு எத்தனை நாளாச்சு?”.
“ரெண்டு மாசமிருக்கும் சார்!”.
சித்ரா அதிர்ச்சியானாள்.
“சாயந்திர நேரத்தில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை பார்த்திட்டிருந்தானே?…”
“அதையும் நிறுத்திட்டான் சார்!”
சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்த சித்ரா, “ஒருவேளை படிப்புச் செலவுக்கென்று கை நீட்டி நம்ம கிட்ட காசு வாங்குவதால் ஒரு பயம் வந்து முழு நேரத்தையும் படிப்புக்கே செலவு பண்றானோ… என்னமோ?” இன்னும் அந்த முருகேசன் மேல் நம்பிக்கையை விடாமல் சித்ரா பேச,
“சித்ரா… உனக்கு இன்னொரு தகவலையும் சொல்றேன் தெரிஞ்சிக்க இப்பவெல்லாம் முருகேசன் முந்தி மாதிரி ஒழுக்கமா ஸ்கூலுக்கு போறதில்லையாம்… அடிக்கடி கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு போயிடுறானாம்!… ரிப்போர்ட் வந்திருக்கு!… திருட்டு தம் வேற அடிக்கிறானாம்”
“நெஜம்மாவா?” நெஞ்சில் கை வைத்தாள்.
“தப்பு அவன் கிட்ட இல்லை சித்ரா என் கிட்டேதான் தப்பு!… கஷ்டப்பட்டு உழைச்சு காசு சம்பாதிச்சிட்டிருந்தவனுக்கு சும்மாவே பணத்தைக் கொடுத்தேன் பாரு?… அதுதான் மாபெரும் தப்பு!… இலவசமாய்க் காசு வரும் போது எதுக்குக் கஷ்டப்படணும்?ன்னு அவன் நினைச்சிட்டான்!… நல்ல பொறுப்புணர்ச்சியோட இருந்த பையனை நானே கெடுத்துட்டதா ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டுது சித்ரா” நான் சொல்லிக் கொண்டே போக இடையில் புகுந்த சித்ரா.
“அவனுக்கு செஞ்சிட்டிருந்த பண உதவியை நீங்க நிறுத்தியது ரொம்பச் சரிங்க!”
அவள் புரிந்து கொண்டது எனக்கு சற்று திருப்தியாயிருந்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு முருகேசன் மறுபடியும் பேப்பர் போடும் பணிக்கே திரும்பி விட்டதாகவும், ஆனால் ரேஸ்கோர்ஸ் ஏரியாவிற்கு பதிலாக வேறொரு ஏரியாவிற்கு போய் விட்டதாகவும் புதுப் பேப்பர் பையன் மூலமாக தெரிந்து கொண்ட போதுதான் என்னுள் எரிந்து கொண்டிருந்த குற்ற உணர்ச்சி அணைந்து போனது.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings