எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ ஒலிபெருக்கியில் பாடல் அலற திடுக்கிட்டு எழுந்தான் செங்கோடன்.
‘விநாயகர் சதுர்த்தி விசேஷம்’ மனதுக்குள் நினைத்துக்கொண்டான். விரைந்து சென்று குளித்து விட்டு உடைமாற்றி வீட்டைப்பூட்டிவிட்டு இறங்கி கோயில் நோக்கி நடந்தான்.
இந்தக் கோவில் என்றில்லை, அருகாமையில் இருக்கும் எந்தக் கோவில் என்றாலும், விசேஷம் என்றால் முதல் ஆளாக ஓடி அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வான். அவனுக்கு அதில் ஒரு ஆத்மதிருப்தி. மற்றவர்களுக்கு வேலைப்பளு குறைவு.
‘என்ன செங்கோடா?! கோவிலுக்கா?’ காலை நடைப்பயிற்சி முடிந்து வரும் நாராயணன் கேட்டார். பக்கத்துவீட்டுக்காரர். கோவில் நிர்வாகக்குழு உறுப்பினர். ‘ ஆமா சார்!’ கை காட்டி விட்டு நடந்தான்.
‘ஆமா… விநாயகர் சதுர்த்தி வசூல் பணத்தை கொடுத்துட்டியா?’
மறந்திருந்தான். ‘அய்யோ! வீட்லருக்கு, மறந்துட்டேன்..’ இழுத்தான். ‘தோ..போய் எடுத்திட்டு வந்துர்றேன்..’ திரும்பி நடக்க முற்பட்டான்.
‘சரி! பரவால்ல, மதியபூஜைக்கு வரும்போது மறக்காம கொண்டு வா’
தலையாட்டிவிட்டு நடந்தான். எந்த விசேஷத்திற்கும் பணம் வசூலித்துக் கொடுக்க செங்கோடனைத்தான் அழைப்பார்கள். அவன் ராசி அப்படி! குழுவிலிருந்து இரண்டுபேர் வீதம் தெருத்தெருவாகப் போய் நோட்டீஸ் கொடுத்து வசூல் செய்தாலும் செங்கோடனைப்போல ரசீது நோட்டு தீர்ந்து போவதில்லை. எப்படி வசூலிக்கிறான்?! ஆச்சரியமாக இருக்கும்.
செங்கோடனுக்கு யாரும் கிடையாது. இருபது வருடங்களுக்கு முன் தெருக்கூத்து போட வந்த நாடோடிகள் கூட்டத்திலிருந்து பிரிந்து இந்த விக்னேஷ்வரன் கோவிலில் தான் நாராயணனால் கண்டெடுக்கப்பட்டான். அன்றிலிருந்து அவன் கோவில் பிள்ளை.
கோவிலில் வேலைகள், கோவில் நிர்வாகக்குழு சார்பில் பள்ளிக்கூடப்படிப்பு, கோவில் மடப்பள்ளியில் தங்கிக்கொண்டு, பிரசாதம் சாப்பிட்டுக்கொண்டு வளர்ந்தான். பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து மேலே படிக்க பிடிக்காமல் இருந்து விட்டான்.
பிழைப்புக்காக அந்த சுற்றுவட்டார வீடுகளின் பிள்ளைகளுக்கு கணிதமும், தமிழும், அறிவியலும் சொல்லிக்கொடுக்கிறான். இதுபோல் விசேஷ நாட்களென்றால் பிள்ளைகளிடம் வீட்டுப்பாடம் செய்யச்சொல்லிவிட்டு கோவிலே கதி என்று கிடப்பான். அவன் வசிக்கும் ஒற்றையறை வீடு நாராயணனுக்கு சொந்தமானது. வாடகை வாங்காமல் அவனை எடுபிடியாக வைத்துக்கொண்டார்.
கோவிலில் அன்று நிறைய வேலை இருந்தது. முடித்துவிட்டு வந்து களைத்துப் போய் படுத்து தூங்கிவிட்டான். ஒலிப்பெருக்கியில் சீர்காழி உருகி உருகிப் பாடிக்கொண்டிருக்க, சட்டென்று விழித்துக்கொண்டு முகத்தைக் கழுவிவிட்டு, வசூல் பணத்தை எடுப்பதற்காக அலமாரியை திறக்க, வைத்த இடத்தில் பணம் இல்லை.
‘பிள்ளையாரப்பா! இதென்ன சோதனை?!’ பதைபதைப்புடன் அந்த அறை முழுவதும் தேடிப் பார்த்தான். இல்லை. இத்தனை வருட நாணயத்தை, நம்பிக்கையை தொலைத்தது போல் ஆகாதா?
பணவிஷயம் என்பதால் சந்தேகம் வரும். அத்தனை பேரும் அவனைத்தான் கேட்பார்கள். அவனைத் தவிர யாரும் வராத அந்த வீட்டிற்குள் இருந்து பணம் எப்படி காணாமல் போகும்? அவனது இதயம் படபடப்பானது.
‘அப்பனே! விநாயகா! நீயே கதின்னு வாழ்ந்தேனே?! இது என்ன என்றைக்குமில்லாத சோதனை? என்ன செய்வது? நாராயணன் பணம் கொண்டுவரச் சொல்லிருக்காரே!’ அவனுக்கு அழுகை வந்தது.
‘பிள்ளையாரப்பா! கைவிட்டுடாதே’ அரற்றிக்கொண்டே மீண்டும் அந்த அறையை சலித்துத் தேடினான். பணம் இல்லை. ரொக்கமாக ஐந்தாயிரம் வசூலித்து வைத்திருந்தான்.
‘இனி என்ன செய்வது?’ குழம்பினான். கோவில் வேலை செய்வதற்காக மாச சம்பளம் என்று அவனுக்குக் கிடையாது. அவனும் அதை எதிர்பார்த்ததில்லை. இடையிடையே நாராயணன் கையில் கொஞ்சம் பணம் வைத்துக்கொள்ளச் சொல்லித் தருவார். அதுபோக ட்யூஷன் எடுத்துக்கிடைத்த பணம் கொஞ்சம் போஸ்டாஃபீஸில் சேர்த்து வைத்திருந்தான். இப்போதைக்கு அதை எடுத்துக் கொடுப்பதுதான் வழி!
வீட்டைப் பூட்டிவிட்டு தபாலாபீஸ் நோக்கி நடந்தான். ரொக்கமாக பத்தாயிரத்து ஐநூறு இருந்தது. நல்ல ஒரு கைபேசி வாங்கும் ஆசையில் செலவுபோக சேர்த்துவைத்த பணம். பெருமூச்செறிந்தான்.
‘கோவிலுக்குத்தானே?!’ என்று சமாதானம் கூறிக்கொண்டு ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்து வந்து நாராயணனிடம் கொடுத்தான். பின்பு வேலைகளில் முழுகிப்போனான். அறைக்குத் திரும்பி வந்து படுத்துக்கொண்டான்.
‘நல்லவேளை! இத்தனைவருடத்தில் சம்பாதித்த நல்லபேரை இழக்காமல் இருந்தேனே? பணம் மீண்டும் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் நல்லபேர்?!’ அந்த நேரத்தில் போஸ்டாஃபீஸிலிருந்து பணம் எடுக்கும் யோசனையைத் தந்ததற்காக விநாயகருக்கு நன்றி கூறினான்.
மீண்டும் மாலை எழுந்து கோவில் வேலைகளுக்காக ஆயத்தமானான். குளித்துவிட்டு சட்டையை போட்டுக்கொண்டபோது சட்டைப்பை கனத்தது. தொட்டுப்பார்த்தான். நேற்றைய வசூல் பணம்! ஆச்சரியம் தாளாமல் மீண்டும் பார்த்தான். ஐந்தாயிரம் இருந்தது.
‘ஆனைமுகத்தான்…அவன்..’ ஒலிப்பெருக்கியில் சீர்காழி பாடலானார்.
பணத்தை பத்திரமாக அலமாரியில் வைத்து வீட்டைப்பூட்டி விட்டு நடந்தான். ‘இன்றைக்கு விநாயகருக்கு ஒரு புஷ்பார்ச்சனை செய்யவேண்டும்’ நினைத்துக் கொண்டான்.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings