இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மறுநாள் மாலையில் நெய்லி அலைபேசியில் நரேனைத் தொடர்பு கொண்டு, “கவிதா வந்தாளா? என்ன சொன்னாள்?” என்று கேட்டாள்.
நரேன் எல்லாவற்றையும் விவரித்து விட்டு, “காலையிலே வந்து எனக்கு காட்டிற்குள் செல்வதற்கு அனுமதி வாங்கித் தாருங்கள். நான் போய் வசந்திற்கு என்னாயிற்று என்று பார்த்து விட்டு அந்தச் செடியைக் கொண்டு வருகிறேன்” என்றாள்.
அனுப்பி வைத்தேன். அவள் அந்த ஆலகாலச்செடியைப் பார்க்கும் வரை தொடர்பில் இருந்தாள். அதன்பின் என்னாயிற்று என்று தெரியவில்லை. போன் அடிக்கிறது, ஆனால் எடுக்க மாட்டேன் என்கிறாள்” கொஞ்சம் கவலை தோய்ந்த தொனியோடு சொன்னான்.
”உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? பெண் பிள்ளையை காட்டுக்கு, அதுவும் கொஞ்சம் கூட தெரியாத இடத்துக்கு… இப்படி அனுப்பி வச்சிட்டு…. சே!…. ம்….சரி… அவளுக்கு எதாவது ஒண்ணு ஆச்சிண்ணா…. என்னச் செய்யபோறோம்ணு தான் தெரியல… திடீர்னு வசந்த் வந்து கேட்டால் என்ன பதில் சொல்லப் போறோம்ணு தான் தெரியல…
சரி நீ சீக்கிரம் ஆஸ்பத்திரியிலே இருந்து எழும்பி வெளியே வர்றதுக்கு பாரு… எங்க திட்டம் என்னணு சொல்றேன்.. இந்த பதினாலு நாள் முடிந்ததும் நேரா ஆஸ்பத்திரிக்கு வந்து உன்னையும் கூட்டிக்கிட்டு ஒரு காரிலே நேரே காட்டுக்கு போற மாதிரி தான் ஐடியா… சோ…. தயாராக இருக்கிறது நல்லது… அதுக்கு முன்னாடி வசந்த் அல்லது கவிதாவின் போன் வந்தா உடனே போன் பண்ணு…”
“சரி”
“என்ன ஒண்ணும் பேச மாட்டேங்கிற…”
“பின்ன என்ன?… என்ன சொன்னாலும்…. செய்தாலும்… தப்புண்ணு சொன்னா நான் என்ன செய்றது….”
“நரேன். ஏரக்குறைய நான் ஒரு அடிமை மாதிரி தான் உணர்கிறேன்”
“ஏன் நெய்லி அப்படி சொல்கிறாய்?”
”இவனுக வெரட்டுற வெரட்டல்ல என்ன செய்யப் போறோம்ணு தான் புரியல… ம்…ம்… நீ முடிஞ்சா அதுக்கு முன்னால முடிஞ்சா காட்டிற்குப் போக முடியுமா பாரு.. இவனுகட்ட கைய நீட்டி பணம் வாங்கிட்டு இப்ப என்ன செய்யணும்ணு தான் புரியல…”
“ஸாரிப்பா… போனமா செடிய புடுங்கினமா … கொண்டு கொடுத்தமா… நம்ம வேல முடிஞ்சிதுண்ணு நெனச்சேன். இவ்வளவு எதிர்பார்க்காத நிகழ்வுகள் நடக்கும்ணு நெனக்கல… கண்டிப்பா முயற்சி செய்யறேன்.”
********************************************************************
அமைச்சர் மணிமாறனின் கோபம் உச்சியில் நின்று கொண்டிருந்தது. “பிரபு, கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீரா? அந்த மருந்துக் கம்பெனிகாரன் நான் என்னவோ அவனை ஏமாற்றி விட்டதைப் போல கத்தி விட்டுப் போகிறான். நீ இங்கே இருந்து என்னத்த புடுங்கிகிட்டு இருக்கேண்ணு புரியலை…”
அறையின் அங்குமிங்கும் அலைந்து கொண்டே கேட்டவர், தன் உதவியாளன் முத்துராமனைக் கூப்பிட்டு, ”முத்து, இனி இவரை நம்பிப் பிரயோசனமில்லை. என்ன செய்யலாம். நீயே சொல்லு” என்றார்.
தலையை சொறிந்து கொண்டு நின்ற முத்து, ஏதோ சொல்லிய போது முதலில் அமைச்சருக்கு புரியவில்லை. “என்ன முத்துராமன், கொஞ்சம் பலமா சொல்லு” என்றார்.
”நம்ம தான் வந்தவுடனே நம்ம வேலய ஆரம்பிச்சுருவோமே சார். ஆஸ்பத்திரியிலே ஒரு நர்ஸப் புடிச்சி கையிலே கொஞ்சம் பணத்தைக் கொடுத்துட்டேன். இதுவரைக்கும் கெடச்ச தகவல் பிரகாரம், அனேகமாக நரேன் உடம்பு சரியானதும் காட்டிற்கு போறதா பிளான் இருக்கு. பதினாலு நாளாயிற்றுண்ணா… அந்த நெய்லி அதான் அவனுடைய காதலியும் அந்த இங்கிலாந்துகாரனுவளும் சேர்ந்து காட்டுக்குள்ள போற மாதிரி ஐடியா…”
“அது சரி….” அமைச்சர் கேட்க ஆரம்பிக்கு முன், “அதுக்கு முன்னால அவன் காட்டுக்குள்ள போயிற்றாண்ணா நமக்கு எப்படி தெரியுமுண்ணுதானே கேக்கிறீங்க?” என்றான் முத்துராமன்.
“முத்து நீ வில்லண்டா.. நான் கேக்க நெனக்கிறத அப்படியே யோசிக்கிறடா… ஆமா… அதுக்கு என்ன வழி பண்ணியிருக்க..”
“நீங்க கவலைப்படாதீங்க… இனிமே நரேன் ஒரு இஞ்ச் அசைஞ்சாலும் நமக்கு செய்தி கொடுக்க ஆள் இருக்கு”
“ஆங்… எதையும் ஆதாயமில்லாமல் முத்து செய்ய மாட்டான். இதுக்குத்தான் வந்த அன்னைக்கே பத்தாயிரம் வாங்கிட்டுப் போனியா?” என்ற அமைச்சர், “பிரபு நீங்க ஒண்ணு பண்ணுங்க. அந்தக் கொரோனா மருந்துச் செடியை கொண்டு வர்றதுக்கு வேற ஏதாவது வழி இருந்தாலும் கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்க..” என்றார்.
”அய்யா… அந்த நீலாங்கர நர்சை பார்த்துட்டு வர்றேன். முடிஞ்சா அந்த கண்ணன் பயலையும் புடிச்சு இழுத்துட்டு வர்றேன்” என்றான் உதவியாளன் முத்து.
“என்ன பண்ணுவியோ தெரியாது. அந்த செடி சீக்கிரமா நம்ம கைக்கு வரணும்” என்றார் அமைச்சர்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings