in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (இறுதி அத்தியாயம்) – ஜெயலக்ஷ்மி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஜெகஜோதியாய்  திருமணம் நடக்கப்போகிறது என்று பார்த்தால் மாளிகை ஜெகஜோதியாய் பற்றி எரிந்து கொண்டிருந்தது.   வெளியே நின்ற ராஜசேகர் மற்றும் சஞ்ஜீவன் குடும்பத்தார் தவிர தர்மலிங்கத்தின் மொத்தக் குடும்பமும், தூக்கத்திலேயே பொசுங்கிக் கொண்டிருந்தது.

இருபத்தாறு வருடங்களுக்கப் பிறகு தந்தையையும், சகோதரனையும் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் வந்த சஞ்ஜீவனும் தன் கண்முன் அவர்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து, மாரடைப்பால் உயிரிழந்தார்.  அவரது மகன் சஜித் சி.பி.ஆர். கொடுத்தும், ஆம்புலன்ஸ் வரும்வரை உயிர் தங்கவில்லை.

மின் விபத்து என்று சொல்லப்பட்டாலும், பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்ததும், மாளிகை எரிந்ததும் ஒரே நாளில் நடந்ததால் வியாபார எதிரிகளின் சூழ்ச்சியாகவே கருதத் தோன்றியது.

எல்லாவற்றையும் இழந்து, கடன் சுமையுடன், கோத்தகிரி வெள்ளை மாளிகைக்கு வந்த ராஜசேகருக்கு, வெளிநாட்டு வியாபாரி ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது.

“முதலீடு போட்டு சரக்கு அனுப்ப முடியாட்டா விடுங்க. இப்ப ஒரு நல்ல பிஸினெஸ் வந்திருக்கு. சரக்குக்கு பதில் ஆட்கள அனுப்புங்க. கொள்ள லாபம் சம்பாதிக்கலாம்“ என்றது குரல்.

“ஆளா? புரியல“ என்றார் ராஜசேகர்.

“ஆமா. கிட்னி, லிவர் தானம் பண்ற ஆளு. ஏகப்பட்ட பேஷண்ட்ஸ் காத்து கெடக்காங்க. சைனால டோனார்ஸ் கெடைக்காம கைதிகள்ட்டருந்து எடுக்கிறான். ஈரான்ல சட்டப்பூர்வமாவே காசுக்கு வாங்கிக்கிறான். ஒரு கிட்னியே ஒரு லட்சம் டாலர் போகுது. இதுக்கு ‘ப்ளட் மார்க்கெட்’ இல்ல ‘ரெட் மார்க்கெட்’னு பேரு. முடியுமா?“

மோட்டு வளையிலருந்து கண்களை அகற்றி ஆய்வாளர் முருகவேலின் பக்கம் பார்வையைத் திருப்பிய ராஜன் தொடர்ந்து, “அதுக்கு அப்புறம் ஏஜெண்ட்ஸ வச்சு அம்மா, அப்பா இல்லாத பிள்ளைங்க, பிச்சைக்காரங்க, பைத்தியக்காரங்கன்னு கையில கெடச்சவங்கள கடத்த ஆரம்பிச்சாங்க. இந்தியால இருக்கற நோயாளிகளுக்கு சஜித் ஆஸ்பத்திரிலயும், சென்னைல அவன் ஃப்ரெண்டோட ஆஸ்பத்ரிலயும் ஆப்பரேஷன் நடக்க ஆரம்பிச்சிச்சுங்க. எங்க அப்பாக்கு இது பிடிக்கலங்க. சஞ்ஜீவனோட இழப்பையும் தாங்கிக்க முடியாம, படுத்த படுக்கையாய்ட்டாருங்க.

‘ஏம்ப்பா வெள்ளை மாளிகைக்கு வரல?’ன்னு கேட்டப்ப இந்த கதைய சொன்னாரு. ரெண்டு நாள்ல செத்தும் போய்ட்டாருங்க. கேள்விப்பட்டு வந்த ராஜசேகர் எனக்கு ஆறுதல் சொல்லி தன் கூட வரச் சொல்லி கூப்பிட்டாருங்க. என் தங்கச்சியும் கல்யாணம் ஆயி போய்ருச்சிங்க. அம்மாவும் முன்னாலயே நோயில செத்துப் போச்சிங்க. சின்ன வயசிலருந்தே வெள்ளை மாளிகைலயே இருந்தும் பழகிட்டேனுங்களா, தனியா என்ன பண்றதுன்னு தெரியாம அவரு கூடயே வந்துட்டேனுங்க.

கல்யாணங்கூட பண்ணிக்கலிங்க. ஆனா பாவிங்க கடைசில என் தங்கச்சி பொண்ணயே கடத்திட்டாங்க. அதப் பாத்துட்டு, நா எங்காளுங்கள கூப்பிடப் போறேன்னு கத்தி கலாட்டா பண்ணேன். ராஜசேகருக்கு ஃபோன் பண்ணேன்.

“பொறுமையா இரு. ராஜன். பத்ரமா வீட்ல கொண்டு விடச் சொல்றேன்”னு சொன்னவரு, மேனேஜரு, “அது அபூர்வ ஏபி நெகடிவ் குரூப். டெஸ்ட்லாம் எடுத்தாச்சு. முக்கிய தலைவரோட அவசர லிவர் தேவைக்கு கச்சிதமா பொருந்துது“ன்னு சொன்னதும், எனக்கு வெஷம் கொடுக்க சொல்லிட்டாருங்க.

எனக்கு வெஷத்த ஊத்தினப்ப, மேனேஜருக்கு உங்க போலீஸ் ஒருத்தரே ஃபோன் பண்ணி, இங்க ஸர்ச் பண்ண வரப் போறாங்கன்னு தகவல் கொடுத்துட்டாங்க. அந்த பரபரப்புல, மேனேஜரு வெளிய கௌம்புனாருங்களா, அவரு கார் டிக்கில ஏறி, அவரு ராஜசேகருக்கு ஃபோன் பண்ண வண்டிய நிறுத்தின நேரம் ரோட்ல எறங்கி, லாரில ஆஸூபத்ரிக்கு வந்து விழுந்திட்டங்க“

“சரி, கடத்னவங்கள எங்க வச்சிருக்காங்க?“

“உறுப்ப எடுத்துட்டு பொண்ணுன்னா விபச்சாரத்துக்கும், பையன்னா நக வேல, பை வேலைக்கு வித்துருவாங்க. உறுப்ப எடுத்துட்டு வெளிய அனுப்புனா ரிஸ்க். வித்துட்டா பணமும் வரும் வெளிய போகாமயும் பாத்துக்குவாங்கனு யாரோ ஐடியா கொடுத்துருக்காங்க. ரெண்டு மரத்துக் கெடையில பொதரு மாறியிருக்குல்லங்க? அது செட்டப்பு. வலது பக்க மரத்துக்கு பின்னால கைய விட்டிங்கன்னா சுட்சு இருக்கும். அத தட்னதும் பொதரு வெலகி, லாரி போற அளவு பாத வரும். அந்த பாதைல போனா கொக வரும். வாசல்ல அதே மாறி மரம், சுட்சு போட்டா கொக வாசல் தெறக்கும். அதுல சிலர வச்சிருக்காங்க. எந் தங்கச்சி மகள எப்படியாது காப்பாத்துங்க சார்“ என்றார் ராஜன், நா தழுதழுக்க.

வெள்ளை மாளிகை காட்டு குகைக்குள் மிகப் பெரிய ஆராய்ச்சிக் கூடமே கண்டுபிடிக்கப் பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்கப் பட்டனர். தொழில் நுட்பிவியலர் உதவியுடன் அவர்கள் கணினி பரிசோதிக்கப் பட்டு, மனித உறுப்புக்களுக்காக வெளிநாடு அனுப்பப்பட்டோர் விவரம் எடுக்கப்பட்டது.

பரம்பரையாக மிகப் பெரிய வியாபாரக் குடும்பம் என்பதால், அரசியல் செல்வாக்கும், சர்வதேச தாதாக்கள் தொடர்பும் கொண்டு, ஏகப்பட்ட உரிமங்கள் வைத்திருந்தனர். 1920களிலேயே ஹாம் ரேடியோ வயர்லெஸ் கருவிகள் வைத்திருக்கின்றனர். அதை மேம்படுத்தி இந்த ‘ரத்த சந்தை’க்காக தனி தொலை தொடர்பு வலை அமைப்பே உருவாக்கி வைத்துள்ளனர்.

அவர்களுடைய உள்நாட்டு, வெளிநாட்டு தொடர்புகள் கண்டறியப்பட்டு, மைக்கண்ணனும், அவனோடு கடத்தப்பட்ட பெண்ணும், பிரபலத்தின் வீட்டில் மீட்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்ட பெண்களும், பிரபலத்தின் தாயார் வீட்டிலிருந்த அப் பெண்களின் சகோதரிகளும், அவர்களைப் போல இந்த வலையில் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப் பட்டனர்.

சஜித் மருத்துவமனை மட்டுமன்றி அவனுடன் தொடர்பிலிருந்த மருத்துவமனைகளிலுமிருந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றி விட்டு ‘சீல்’ வைக்கப் பட்டது.

இந்த வியாபாரத் தொடர்பிலிருந்த சர்வதேச தாதா, சஜித்தின் தாய், தங்கை, தங்கையின் கணவர் உட்பட அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம், சிறார் நீதிச் சட்டம், போக்சோ சட்டம், மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் சட்டம், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் என அனைத்துச் சட்டங்களின் கீழும் வழக்கு பதியப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ராஜன் அவர்களோடு இருந்தாலும் அப்ரூவர் ஆனதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது

இலங்கை வழியாக வெளிநாடு தப்பி விடலாம் என நினைத்து, கள்ளத் தோனி ஏற ராமேஸ்வரம் கடற்கரை நோக்கி வேகமாகச் சென்ற ராஜசேகர் மற்றும் சஜித்தை ஏற்றிச் சென்ற கார் லாரியில் மோதி விபத்துக் குள்ளானதில் அவர்களுடைய மூளை, ஈரல், சிறுநீரகம் என அத்தனையும் வெளியே கொட்டிக் கிடக்க, காகங்கள் கொத்தித் தின்றன.

நித்யாவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது “அக்கா, நான் காசினி பேசறேங்க! எப்டி இருக்கீங்க அக்கா? உங்கள நான் அக்கான்னு கூப்பிடலாங்கள்ல, மேடம்?“ என்றது குரல்.

“தாராளமா கூப்பிடு காசினி. காசினி! நீ ஒரு தேவதை! அழகும், அறிவும், திறமையும் ஒருங்கே அமைந்த காரிகை! நானும் ஒரு வகைல அனாதை தான்.  உன்ன மாதிரி ஒரு தங்கை எனக்கு கிடைச்சா, அது எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.  சரி நீ எப்டி இருக்க? “

 “நான் ரொம்ப நல்லா இருக்கேங்க, அக்கா. ரெண்டு பசங்கள ஸ்கூல்ல சேர்த்துட்டோங்க.  அரசு கொடுத்த இலவச பட்டா இடத்துல வீடு கூட கட்டிட்டோங்க. நான் ஏற்கெனவே மண் பானை, எம்ப்ராய்டரிலாம் நல்லா பண்ணுவேன்னு சொன்னேனுங்கள்ல, அதனாலேயே சுய உதவிக்குழு தலைவியா, மாடர்ன் டெரகோட்டா ஆர்ட்ஸ், எம்ப்ராய்டர்டு க்ளாத் மெட்டீரியல்ஸ், பேக்ஸ், டாய்ஸுனு விதவிதமா நிறய பண்றோங்க. நேரடி விற்பனை நிலையங்களும் ஆரம்பிச்சு செமத்தையா போய்ட்டிருக்குங்க. உங்களோட இன்ஸ்பைரேஷன்ல என்ன மாதிரி கொத்தடிமையா மாட்டிட்டு இருக்கோம்னே தெரியாம வாழ்ந்திட்டிருக்கிற, பலரை மீட்டு தொழிலதிபர்களா மாத்திட்டிருக்கேங்க அக்கா!  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு, ‘சுதந்திரப் பறவைகள்’னு இயக்கமே ஆரம்பிச்சிட்டேங்க அக்கா!“ என்றாள் குதூகலமாக!  அன்று கண்ணீரும், கம்பலையுமாக கதறிக் கொண்டிருந்த காசினி கண் முன் வந்து மறைந்தாள்.

 “நீங்க என்னங்க்கா பண்றீங்க?“

“நானும் உன் சுதந்தரப் பறவைகளோட சேர்த்துப் பறக்கவிட சில சிறைப் பறவைகளை மீட்டுட்டிருக்கேன்,  காசினி” என்றாள் சிரித்துக் கொண்டே.

“உனக்கொரு விஷயம்  தெரியுமா, காசினி? என்னோட இன்ஸ்பைரேஷனே நீ தான். அன்னிக்கு உன் குடும்பத்த மீட்டு வண்டில ஏத்தினப்ப, உன் கண்கள்ல கண்ணீர் மறைஞ்சு, ஒரு சந்தோஷ மின்னல் மின்னுச்சு பாரு…  உன் கண்களில் மின்னிய அந்த மின்னல் என் கண் வழியே என் மூளைக்குள்ள போய் என் நாடி நரம்பெல்லாம் ஒரு ஆனந்த மின்சாரத்த பாய்சிச்சு பாரு… அந்த சந்தோஷம் ஒரு போதையா மாறி, அது ‘இன்னும் வேணும்’, ‘இன்னும் வேணும்’னு என்னைத் தூண்டுச்சு. அந்த தூண்டுதல் தான் இத்தனை பேர மீட்டெடுக்க எனக்கு தேவையான பவர தந்துச்சு. தேங்க்யூ மை டியர் தங்கச்சி!”  என்றாள் நித்யா உணர்ச்சி பொங்க!

 அவர்கள் இடத்திலுமிருந்து எழுந்த சந்தோஷப் பறவைகள், உல்லாசப் பறவைகளா மாறி ஆகாயத்திலேறி ஒன்றையொன்று தழுவிக் கொண்டன!.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    2023-24 போட்டிக்காக எங்கள் எழுத்தாளர்கள் எழுதிய 1294 படைப்புகள் ஒரே இணைப்பில் (Contest Posts Compiled in One Link)

    2023-24 போட்டி முடிவுகள் குறித்த UPDATE