2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7
கிராம நிர்வாக அதிகாரியை அழைத்துக் கொண்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பை ஹத்தப்பள்ளம் தோட்ட நிர்வாக அலுவலகத்தில் ஒட்டும் பொருட்டு மீண்டும் அங்கு சென்றனர். அலுவலகத்தின் அருகில் அதே காவலாளி நின்றிருந்தார்.
“நோட்டீஸ உங்க நிர்வாகம் வாங்காததால இங்க ஒட்டிட்டுப் போறோம். சொல்லிடுங்க” என்றாள்.
அலுவலக வாசலில் வரிசையாக ஒட்டிவிட்டு கிராம நிர்வாக அலுவலரையும் நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டு அவரிடம் சாட்சி கையெழுத்தும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்னர்.
குடியிருப்பு பகுதிக்கருகில் வரும்போது ஒரு வீட்டில் ஒரு பெண் படுத்திருந்தாள். இவர்கள் சத்தம் கேட்டு எழுந்து வந்தாள். காண்போரைக் கவந்திழுக்கும் கட்டழகுப் பெண்!. அகல் விளக்கு போன்ற கண்கள். அச்சடித்தது போன்ற வளைந்த அடர்ந்த புருவம். அடர்ந்து, நீண்டு, வளைந்த கருகரு இமைகள்; கருகருவென சுருண்ட பளபளக்கும், காடென அடர்ந்த கார்கூந்தல். கத்தி போன்ற மூக்கு. தேனில் முக்கியெடுத்த செம்பஞ்சு இதழ்கள். அகன்ற தோள்கள். வழுக்குப் பாறை போன்ற சறுக்கும் இடை. வெண்ணெய் தடவிய ஐம்பொன் சிலை போன்ற உடல்! நெற்றியில் குங்குமம் இட்டிருந்தாள். அவள் காதுகளில் அணிந்திருந்த பெரிய வளையங்கள் அழகுக்கு அழகு சேர்த்தன.
“சேற்றில் முளைத்த செந்தாமரையோ, செவ்வந்தி பூச்சரமோ!” என்ற டி.ஆர், மகாலிங்கத்தின் குரல் பின்னணியில் ஒலிப்பது போல் தோன்றியது.
அகல்விளக்கில் எண்ணெய் நிரம்பி நிற்பது போல், அவள் கண்களில் நீர் தளும்பிக் கொண்டிருந்தது.
“உன் பேரு என்னம்மா? ஏன் அழற?” என்று கேட்டாள் நித்யா.
“என் பேரு காசினிங்கோ. குழந்தைக்கு உடம்பு சரியில்லங்கோ. அதனாலத்தான் அழுவறங்கோ” என்றாள் அவள்.
”ஏம்மா நீ அழுதா குழந்தைக்கு உடம்பு சரியாய்டுமா? ஆமா நீ யாரு? இங்க வேலை பார்க்கிறியா?”
“ஆமாங்கோ ”
“உன் வயசென்ன?”
“19”
“என்ன! பத்தொன்பதா? அதுக்குள்ள கல்யாணமாய்டுச்சா?”
“ஆமாங்கோ. மூணு குழந்தை பெத்துட்டேங்கோ”
“என்ன மூணு குழந்தைகளா? 19 வயசிலயா?”
“எங்க ஊர்ல 12, 13 வயசில கல்யாணம் பண்ணிடுவாங்கோ”
“அடக்கடவுளே! இங்க எவ்ளோ நாளா வேலை பார்க்கிற?”
“கல்யாணம் ஆயி வந்ததிலருந்து இங்கதாங்கோ வேல பார்க்கறேங்கோ”
“சம்பளம் எவ்ளவு?”
“அதெல்லாம் தெரியாதுங்கோ. ரேஷன் அரிசி தருவாங்கோ. வாரமாச்சினா 500 ரூவா தருவாங்கோ.”
“என்ன…து?! வாரம் 500 ரூபாயா? ”
“ஆமாங்கோ. எங்க மாமனாரு முதலாளிட்ட கடன் வாங்கிருந்தாருங்கோ, அதுக்கு கழிச்சிக்குவாங்கோ ”
“ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் வேலை செய்வீங்க?”
“காலைல 6 மணிக்கு கெஸ்ட் ஹவுஸுக்கு போயி முதலாளிக்கு சமைச்சு வச்சிட்டு, எல பறிக்க போயிடுவேணுங்கோ. மதியம் 12.30 மணிக்கு திரும்ப கெஸ்ட் ஹவுஸுக்கு போயி சாப்பாட்ட சூடு பண்ணி கொடுத்துட்டு மறுபடியும் எல பறிக்க போயிடுவேணுங்கோ. 5 மணிக்கு வந்துட்டு. மறுபடியும் நைட்ல கெஸ்ட் ஹவுஸுக்கு போயி முதலாளிக்கு சமைச்சு வச்சிட்டு வருவேணுங்கோ. கெஸ்ட்டுங்க வந்தா நைட்டு 11 மணிகூட ஆகுங்கோ. ”
“சரி, குழந்தைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலியா?”
“ஹாஸ்பிடலுக்குங்களா? இங்கிருந்து வெளிய போக முடியாதுங்கோ. கல்யாணம் ஆகி வந்ததோட சரிங்கோ. ஒறவுக்காரங்க கல்யாணம் காட்சினு எதுக்கும் போக முடியாதுங்க. காமட்ராயன் திருவிழாக்குங் கூட போறதில்லீங்கோ. மூத்த கொழந்த கெஸ்ட் ஹவுஸ்ல சமைச்சிட்டிருக்கும்போது தண்ணி தொட்டில விழுந்துருச்சிங்கோ. ஆஸூபத்திரிக்கு கூட்டிப் போகலாம்னு போனா மேனேஜரு அந்த பெஞ்சியில கெடத்து. வண்டி வருது. நாங்க கூட்டிப்போறோம். நீ வேலயப் பாருண்ணாருங்களா. நானு போயிட்டு ஒரு மணி கழிச்சி வந்தா புள்ள வெறச்சி கெடக்குதுங்க” எனும்போதே அணை போட்டு வைத்திருந்த அகல் விளக்கு, அலை கடலென பொங்கி வழிந்தது!. அடக்க முடியாமல் கதறினாள்.
நித்யாவின் கண்களிலும் கண்ணீர் அரும்பியது.
“ஏம்மா? மத்த லேடீஸெல்லாம் வெளிலருந்து வரதா சொல்றாங்களே?”
“ஆமாங்கோ. சில பேரு வெளிலருந்து வர்றாங்கோ. அவங்கள லாரியில உள்ள ஏத்திட்டு வருவாங்கோ. வெளிய கொண்டு விடுவாங்கோ. ஆனா, எங்க மாமனார் கடன் வாங்கிருக்றாரே! நாங்க போக முடியாதுங்கோ”
“அப்படி எவ்ளோதான் கடன் வாங்கினீங்க?”
“எங்க வீட்டுக்காரர் சின்ன வயசா இருக்கும்போதே எங்க மாமியாருக்கு உடம்பு முடியாம போச்சாங்கோ. மருத்துவ செலவுக்கு பணம் வாங்கியிருக்காங்கோ. அஞ்சாயிரம்தான் வாங்கினதா சொல்றாங்கோ. ஆனா வட்டியெல்லாம் சேர்ந்து போச்சாங்கோ”
“நீ, உன் வீட்டுக்காரர், உன் மாமனார் எல்லாரும் இங்கதான வேல செய்றீங்க? நீ வந்தே சில வருஷங்கள் ஆகுதுங்கற. வாரம் 500 ரூபா தான் சம்பளம் தர்றாங்கங்கற, மூணு பேர் சம்பளத்துல இத்தன வருஷம் பிடிச்சும் 5000 ரூபா கடன் இன்னும் கழியலையா? உன்னப் பார்த்தா கொஞ்சம் படிச்ச பெண்ணா தெரியுதே, நீயுமா எதுவும் கேட்கல?” என்று கேட்டாள்.
“அந்தக் கதைய ஏன் கேக்கறீங்க? எல்லாம் என் தலையெழுத்து!” என்றவளின் கண்கள் எங்கோ வெறித்தன. காலச்சக்கரம் பின்னோக்கி கடகடவென ஓடியது. இருபது வருடங்களுக்கு முந்தைய அவர்களுடைய கோகாலில் போய் நின்றது.
(கோத்தர்களின் வசிப்பிடம் ‘கோகால்’ என்றும், வீடு ‘பய்’ என்றும், தெரு ‘கேரி’ என்றும் அழைக்கப்படுகிறதாம். ‘கோத்தர் கேரி’ மருவிதான் கோத்தகிரி ஆனதாம். ‘கிரி’ என்றால் ‘மலை’ என்று நினைத்தது தவறாம்!.)
அம்மா மாடியும், அப்பா பெள்ளனும் மட்பாண்டம் செய்து கொண்டும் சாமை, தினை, கேழ்வரகு விளைவித்துக் கொண்டும் ஆனந்தமாக வாழ்ந்தனர். அவர்களுக்கு ஒரே குறை… குழந்தை இல்லாதிருந்தது.
அவர்களின் கடவுளான காமட்டராயன் திருவிழாவில், தேவாதியிடம் (பூசாரி) போய் வெள்ளிக் காணிக்கைகளை இட்டு, தங்களுக்கு குழந்தை பிறந்தால் அடுத்த திருவிழாவிற்கு அய்யனோர் கோயிலுக்கு புது மூங்கில் கூரை அமைக்கும் பணி முழுவதையும் தானே செய்வதாகவும், வெள்ளியில் குழந்தை சொரூபம் செய்து தருவதாகவும் பெள்ளன் வேண்டுதல் செய்தார்.
பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை. எனவே, அவளது தாய் மாடியும் அவள் பங்குக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான அவர்களது குல தெய்வமான ‘சேல மர’த்தைச் சுற்றிச் சுற்றி வணங்கிளாள். (அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சேல மரம், அரச மர வகையைச் சார்ந்தது. அதுவும் இம்மரம் பத்து தலைமுறையைத் தாண்டியதாம். சுமார் நாற்பது மீட்டர் சுற்றளவு உள்ளது. ஏராளமான உயிர்க் காற்றை உற்பவிக்க வல்லது. எனவே கருவுறுதலை தூண்டியிருக்கக் கூடும்.)
அவ்வளவு வேண்டுதலுக்குப் பிறகு மாடி கருவுற்றதால், பெள்ளன் அவளைத் தாங்கோ தாங்கென்று தாங்கினார். ஆப்பிளும், ஆரஞ்சும், மர டொமேட்டோவுமாகத் தேடித்தேடி பறித்துக் கொண்டுவந்து கொடுத்தார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings