2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
கேட்டுக்குள் கையை விட்டு மயங்கிச் சரியப்போன வெள்ளை மாளிகை காவலாளியின் இரண்டு கரங்களையும் பற்றி, தனது கால்களை கேட்டில் அழுந்த மிதித்துக் கொண்டு இழுத்துப் பிடித்துக் கொண்டு, “தம்பி இங்க ஓடி வாடா” என்று கத்தினாள்.
மைக்கண்ணன் ஓடி வந்தான்.
“அந்த ஸ்டூல தாத்தா பக்கத்ல நகட்டி வைடா” என்றாள்.
நகர்த்தியதும் கேட்டில் சாய்ந்தார் போல் அவரை அமர வைத்துவிட்டு, இடதுபுறமிருந்த நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து அவர் முகத்தில் தெளித்தனர்.
அவர் விழித்ததும் ஜாக்கெட் பையிலிருந்த விக்கோ பழங்களை அவரிடம் கொடுத்து, “வாய்ல போட்டுக்குங்கண்ணா. (சிறிதளவு ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் இருக்கக்கூடும், இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்று கருதியே கொடுத்தாள். ஆனால், விக்கி பழங்கள் என்ற எலயோகார்ப்பஸ் டெக்டோரியஸ் நுண்ணுயிர் எதிர்ப்பானாகவும், நீரிழிவு, மூலம், புற்று போன்ற பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.) உடம்பு ரொம்ப சுடுதே. ஃபீவரா?” என்று கேட்டாள்.
“ம்” என்றார்.
“இருங்க. போய் டேப்ளட்ஸ் வாங்கிட்டு வர்றேன். கொஞ்ச நேரம் தாத்தாவ பாத்துக்கடா தம்பி” என்று ஓடிப் போய் ரொட்டி, பால் மற்றும் மாத்திரைகள் வாங்கி வந்து கொடுத்தாள்.
தாத்தாவின் கண்கள் கலங்கின. “நன்றிங்கம்மா” என்று கைகூப்பினார்.
“ஏண்ணா ஹாஸ்பிடல் போகக்கூடாதா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் வேணாங்க. வழக்கமா மொதலாளி வந்தா உடனே திரும்பிடுவாருங்க. நைட்டு போகாம இங்கியே இருந்துட்டாருங்க. அதான் சாப்ட போக முடியலீங்க” என்றார்.
“இங்க என்னதாண்ணா நடக்குது?” என்று கேட்டாள்.
“சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுங்க. நான் இந்த ஸ்டூல்லயும், இந்த ரூம்லயும் மட்டுந்தா இருக்கணுங்க. வண்டிங்க வரும், போகும். மேனேஜர் ஃபோன் பண்ணி சொன்னா கேட்ட திறப்பேங்க. வேற யாரையும் உள்ள விடக்கூடாதுங்க. இருபத்து நாலு மணி நேரமும் கேமரா பாத்துட்டிருப்பாங்க. அவ்ளோ தாங்க” என்றார்.
நித்யாவிற்கு ஏமாற்றமாக இருந்தது. “ஓனர் இல்லன்னா மேனேஜர் நம்பராவது கொடுங்களேண்ணா. நானாவது பேசிப் பாக்கறேன்” என்றாள்.
“தயவுசெஞ்சு என் பொழப்பக் கெடுத்திறாதீங்கம்மா” என்றார்.
ஹத்தப்பள்ளம் எஸ்டேட்டுக்கு அனுப்பிய பதிவுத் தபால் ‘ஆள் இல்லை’ எனத் திரும்பி வந்தது.
“போஸ்ட்மேனும் உடந்தை தாங்க மேடம். இடம் கண்டுபிடிக்க முடியலைன்னு கூட ரிடர்ன் பண்ணுவாங்க.” என்றார் செந்தில்.
அப்போது ஆனந்தின் அலைபேசி ஒலித்தது. “கொஞ்சம் இருங்க, மேடத்திட்ட கொடுக்கிறேங்க” என்றவாறே அலைபேசியைக் கொடுத்தார்.
“யாரு?”
“ஹத்தப்பள்ளம் மேனேஜர் பேசறாருங்க மேடம்”
அலைபேசியை வாங்கிக் காதில் வைத்து, “ஹலோ” என்றாள்.
“வணக்கம், மேடம். நான் ஹத்தப்பள்ளம் மேனேஜர் பேசறேங்க” என்றது எதிர்முனை.
“ம்ம்ம்… சொல்லுங்க”
“மேடம் எஸ்டேட்டுக்கு வந்தீங்களாம். ஐயா உங்கள வந்து பார்க்கச் சொன்னாங்க, மேடம்”
“அப்படியா? எதுக்கு?”
“சும்மா பேசத்தாங்க, மேடம்”
“ஓஹோ! அப்படினா நான் அங்க வந்தப்ப ஜீப் டிரைவர்னு சொல்லி உட்கார்ந்திருந்தாரே, உங்க ஐயா, அப்பவே என்கிட்ட பேசியிருக்கலாமே?”
“இல்லிங்க மேடம், அப்போ உங்கள யாருன்னு தெரிஞ்சிருக்காதுங்க”
“நாங்க உள்ள நுழைய முடியாம, செக் போஸ்ட் சாவி கேட்க செந்தில் கால் பண்றப்ப யாருன்னு தெரியல. ஒருத்தி ரெண்டு அஸிஸ்டென்ட்ஸோட உங்க இடத்ல சுத்திச் சுத்தி விசாரிச்சிட்டிருக்கா, அப்பவும் தெரியல. உங்க ஓனர் கண்ணு முன்னாடியே அவரோட ஃப்ரெண்ட்னு சொல்லப்பட்ட மேனேஜர்கிட்ட விசாரிக்றப்பவும் தெரியல. அவரோட மேனேஜர் அவர் முன்னாலயே அவரை டிரைவர்னு சொல்றப்பவும் தெரியல. இன்ஸ்பெக்ஷன் ஆர்டர ரெஜிஸ்டர் போஸ்ட்ல அனுப்பினப்பறம் தான் லைட்டா தெரிஞ்சிருக்கும் போல! அப்பவும் ஆளில்லைன்னு திருப்பி அனுப்பிருக்கீங்க, அந்த எஸ்டேட்ல பொறுப்பான ஆள் யாருமே இல்லாம தான் எஸ்டேட் ரன் ஆகுது போல!” என்று விசு ஸ்டைலில் மூச்சுவிடாமல் பேசிவிட்டு,
“சரி, பரவாயில்ல, நான் உங்க ஐயாவைப் பார்க்க அவசியம் இல்ல, ரெஜிஸ்ட்ரேஷன் சர்டிஃபிகேட், வாட்டர் போட்பிலிட்டி சர்டிஃபிகேட், மஸ்டர் ரோல், சம்பளப் பதிவேடு, வொர்க்ர்ஸுக்கு கம்பளி, போர்வை போன்ற பெனிஃபிட்ஸ் கொடுத்த பதிவேடு மாதிரி என்னென்ன டாக்குமெண்ட்ஸ் வச்சிருக்கீங்களோ, அத்தனையும் எடுத்துட்டு வாங்க. பிறகு பேசிக்கலாம்” என்றாள்.
“மேடம் சென்னைலருந்து வர்றீங்க போல, ஐயாட்ட சொல்லி டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கலாம். ஐயா மந்திரிக்கு சொந்தக்காரருங்க. ஆட்சியே நம்ம ஆட்சிதான்” என்றது எதிர்முனை.
“என்னோட டிரான்ஸ்ஃபெர நான் பார்த்துக்றேன். இருபத்தஞ்சு, முப்பது வருஷமா உங்களையே நம்பி வாழ்ந்திட்டிருக்ற தொழிலாளர்களுக்கு நல்லது செய்ங்க. எம்ப்ளாயீஸ் நல்லா இருந்தா தான் எம்ப்ளாயர் நல்லாருக்க முடியும்” என்றாள் நித்யா.
“சரிதாங்க மேடம். வொர்க்கர்ஸுக்கு நல்ல பெனிஃபிட்ஸ் தாங்க கொடுக்குறோம். குவார்ட்டர்ஸ் கொடுத்திருக்கோம். ஈ.பி. பில் நாங்கதாங்க கட்டுறோம். இங்க விளையுற காய்கறி கூட கொடுக்குறோம்”
“எல்லாம் சரிதாங்க, மேனேஜர் ஐயா!. இதை நீங்க, நாங்க அங்க வந்தப்ப நேர்லயே சொல்லியிருக்கலாம். நீங்க கொடுக்கிற இடிஞ்சு தகர்ந்த குவார்ட்டர்ஸ் அழக நாம சேர்ந்தே பாத்திருக்கலாம். ஈ.பி. பில் கட்டறதா சொல்றீங்க, ஈ.பி. கனெக்ஷென்தான் காணோமப் போச்சு, ஐயா!. குடிதண்ணி, டாய்லெட் மட்டுமில்ல, ஓடுகூட ஒட்டுத்தான் போட்ருந்துச்சு ஐயா!. நீங்க கொடுக்கற மேரக்காய் சாப்பிடணுமா, இல்ல அவங்க உழைப்புக்காக கவர்ன்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிருக்க மினிமம் வேஜ நீங்கக் கொடுத்து, அவங்க விருப்பப்படி காய் வாங்கி சாப்பிடனுமாங்றது அவங்க உரிமை, ஐயா” என்றாள் நக்கல் தொனிக்க.
“சரிங்க மேடம். ஐயாட்ட கேட்டுச் சொல்றேங்க” என்றவாறு துண்டிக்கப்பட்டது எதிர்தரப்பு.
மாலையில், “வாக்கிங் போயிட்டு, வெளியே சாப்பிட்டு வர்லாம். வர்றீங்களா?” என்று கேட்டனர் வீட்டு உரிமையாளர் மனைவியும், பக்கத்து வீட்டு பெண்ணும்.
“சரி” என்றதும் கிளம்பினார்கள்.
திரும்புவதற்குள் இருட்டிவிட்டது. ஒரு திருப்பத்தில் திரும்புகையில் கும்மிருட்டாக இருந்ததால் பக்கத்து வீட்டு பெண் தனது அலைபேசியின் விளக்கை ஒளிர விட்டாள். ஒரு விளக்குக்கு எதிரொளியாக எதிரில் இரு விளக்குகள் அந்தரத்தில் ஒளிர்ந்தன! ஒரு நொடி நிசப்தம்.என்ன இது? அடுத்த நொடி ‘ஆ…’ வென அலறியபடியே மூவரும் வந்த வழியே திரும்பி ஓடினர். சரிவில் ஒரே ஓட்டமாக ஓடி அரை கி.மீ. தள்ளிச் சென்றே நின்றனர்.
அந்த இரு விளக்குகள்… ஒற்றைக் காட்டெருமையின் கண்கள்!. விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் அலுவலகம் சென்றவுடன்,
“ரிசீவ் ஆகாம திரும்பி வந்த ஹத்தப்பள்ளம் எஸ்டேட் இன்ஸ்பெக்ஷன் ஆர்டர நோட்டீஸா கன்வர்ட் பண்ணி வி.ஏ.ஓ. வ கூட்டிட்டுப் போய் அவங்க ஆஃபிஸ் கதவுல ஒட்ட ஏற்பாடு பண்ணுங்க” என்றாள் உதவியாளரிடம்.
“சரிங்க மேடம்” என்றார் உதவியாளர்.
“இவங்க ஏதோ வில்லங்கத்த இழுக்க ரெடியாய்ட்டாங்க” என்றார் ஆனந்த், செந்திலிடம்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings