2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
ஆண்கள் மருந்தடித்தல், கவாத்து செய்தல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளிலும் பெண்கள் இலை பறிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர், கத்தியால் அறுக்கப்படும் இலைகளை விட கைகளால் பறிக்கப்படும் இலைகளுக்கே மதிப்பு அதிகமாம்.
அதுவும் வெறும் மொட்டிலை மாத்திரமே கிள்ளியெடுக்கப் படுமானால் அது “வொயிட் டீ” என மிக அதிக விலைமப்புடையதாகிறது. மொட்டும் இரு கொழுந்துகளும் மட்டும் பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுவதே உயர்ரக தேயிலைத்தூளாகிறது. பொதுவாகவே இளங்கொழுந்து கள் மட்டுமே தேயிலைத்தூள் தயாரிக்கப் பயன்படுமாம். தேயிலைத் தூள் அரைக்கப் படும் போதும் அளவினைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுமாம். “டஸ்ட்” எனப்படும் நுண்ணிய தூள் தான் கடைசி ரகமென சொல்லப்படுகிறது.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் பெயர், வயது, பணி நேரம், சம்பள விவரங்கள் குறித்து விசாரித்தபோது, “நீங்க ஏன் இதெல்லாம் கேக்கறீங்க? அரசாங்கம் எங்களுக்கு என்ன நல்லது செஞ்சது?” என்றாள் ஒரு பெண்.
“உங்களுடைய நலனை பாதுகாக்க தான் நாங்க இருக்கோம். உங்களுக்கு குறைந்த பட்ச கூலி, ஓய்வு, லீவு, போர்வை, கம்பளி, குடியிருப்பு, குடிதண்ணீர், கழிவறை, மின்வசதி, கல்வி வசதி, மருத்துவ வசதி… இதெல்லாத்தையும் செக் பண்ணி… இல்லாட்டி உங்களுக்கு அந்த வசதிகளை பெற்றுத் தர்றது தான் எங்க நோக்கம்”
“இத மாதிரி எத்தனையோ பேர் வருவீங்க, போவீங்க, ஆவறதில்லீங்க” என்றாள் அவள்.
“எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கம்மா. என்னைக்காவது ஒரு நாள் விடிவு காலம் வரும்னு நம்பித்தான் ஆகணும்!” என்றாள் நித்யா.
“மலை ஜாதிக்கு ஒதுக்கீடு இருக்குங்கறாங்க. என் பொண்ண கஷ்டப்பட்டு டிகிரி படிக்க வச்சேன். டி.என்.பி.எஸ்.சி. லாம் எழுதினா. வேலை கிடைக்கல. பணம் கொடுத்தாதான் வேலை கிடைக்கும்னு சொல்றாங்க!”
“அப்படியெல்லாம் இல்லம்மா. எங்கோ ஒன்றிரண்டு அப்படி நடக்கலாம். அதுவும் எழுத்து தேர்வுல நடக்க கண்டிப்பா வாய்ப்பில்ல. நானெல்லாம் பாஸாகலியா? இந்தாங்க என் போன் நம்பர். உங்க பொண்ண எங்கிட்ட பேச சொல்லுங்க. எப்படி படிக்கணும், எப்படி எழுதணும்னு சொல்லித் தர்றேன். அப்புறம் அவ நாலு பேருக்கு சொல்லித் தருவா!”
“சரிங்க” என்று சொல்லி முகவரி அட்டையைப் பெற்றுக் கொண்டாள் அந்தப் பெண்.
அதன்பிறகே விவரங்களைக் கூற ஆரம்பித்தனர். அவளைப் போன்ற ஒரு சிலர் சொந்தக் குடியிருப்பு அருகிலேயே இருப்பதால் நிர்வாகம் வழங்கும் குடியிருப்பில் வசிப்பதில்லை எனத் தெரிவித்தனர்.
அவர்களுடைய விவரங்களைக் கேட்டு கையொப்பம் பெற்றுக் கொண்டிருக்கையில் இன்னொரு புறத்தில் ஆம்புலன்ஸ் வந்து சென்றது.
“என்னாச்சு?”
“யாருக்காவது அடிபட்ருக்குங்க. இதெல்லாம் இங்க அடிக்கடி நடக்ற விஷயம்தாங்க”
“அடிக்கடியா? அப்படி அடிபடற அளவு இங்க என்ன இருக்கு?!”
“கவாத்து பண்ணி வச்சிருக்க குச்சியெல்லாம் கத்தி மாதிரி கூர்மையா இருக்குங்க. தேயிலைச் செடிக்குள்ள போயி எல பறிக்கக்குல்ல கவனமா இல்லன்னா குத்திக் கிழிச்சிடுமுங்க. ரத்தம் கொட்டுங்க. அந்தப் புண்ணு ஆற பல மாசம் ஆகுங்க. பாம்பு கடிச்சிடுங்க. அட்டப்பூச்சி கடிச்சிதுன்னா உணர்வே யில்லாம ரத்தம் போயிட்டிருக்குங்க, தெரிய வரப்ப பாதி ரத்தம் போயி மயக்கம் வந்திருக்குங்க!”
“அட்டை கடிச்சா கல்லு உப்பு போட்டா விழுந்திடும்னு சொல்வாங்களே?”
“ஆமா கல் உப்பு, மூக்குப் பொடின்னு போட்டுக்குவோங்க. விழுந்துடுந் தாங்க. ஆனா அதுக்கு, கடிக்கறது தெரியணுங்களே!”
“உங்க நிர்வாகம் இதுக்கான பாதுகாப்ப செஞ்சு தர்லியா?, கம் பூட்டு (ரப்பர் காலணிகள்), தோட்ட மருத்துவமனை எதுவுமே இல்லையா?”
“இல்லீங்க. 30 கி.மீ. தள்ளிதான் ஆஸுபத்ரிக்கு போகணுங்க. யாரும் செத்தாக்கூட மொதலாளி வரமாட்டாருங்க. போன வாரம் ஒரு பொண்ணு தூக்கு போட்டு தொங்கிச்சுங்க. அதுக்குக் கூட மொதலாளி வரவும் இல்லிங்க; எதுந் தரவும் இல்லிங்க.”
“தூக்குப் போட்டுக்கிச்சா, ஏன்?”
“தெரியலீங்க”
“அடப்பாவமே! என்ன அநியாயமா இருக்கு! நீங்க எல்லாரும் ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக்ல உள்ள பேரைத்தான சொல்லியிருக்கீங்க. அப்பதான் உங்களுக்குச் சேர வேண்டிய சம்பள பாக்கிய வாங்கித் தர முடியும். இங்க நிறைய பேருக்கு கூப்பிட ஒரு பேரும், ரெக்கார்ட்ல வேற பேரும் வச்சிருப்பீங்கன்னும், ஒரு பழைய கேஸ்ல அப்படி இருந்ததால வாங்கிக் கொடுத்த செக்கெல்லாம் மாத்த முடியாம ஓனருக்கே லாபமா முடிஞ்சதாகவும் செந்தில் சொன்னார். ”
“அப்போ எல்லாரும் ஆதார் கார்டுல இருக்கிற பேரச் சொல்லுங்க” என்றாள், முதலில் பேசிய பெண். மாற்றிச் சொல்லப்பட்ட பெயர் விவரங்களைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஒருபுறம் ஆர்க்கிட்ஸ் என்று சொல்லப்படும் அலங்கார மலர் வகைகள் பயிரிடப்பட்டுருந்தன. இவை தேயிலையை விட பல மடங்கு லாபம் ஈட்டக் கூடியவையாம்.
இன்னொரு புறம் மேரக்காய் (சௌசௌ காயைத்தான் இங்கு மேரக்காய் என்கிறார்கள்), முட்டைக் கோசு போன்றவை பயிரிடப்பட்டிருந்தன. மற்றொருபுறம் காளான் பயிரிடும் கொட்டகைகள் இருந்தன.
அப்படியே தொழிலாளர் குடியிருப்பு பக்கம் நடந்தனர், ஓடுகளில் விளம்பரப் பதாகைகள், தகரங்கள் போன்றவற்றைக் கொண்டு ஏகப்பட்ட ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன. கதவுகளிலும் தகர ஒட்டுக்கள் காணப்பட்டன. தரைகள் பெயர்ந்து கிடந்தன. மின் இணைப்பு இருப்பதற்கான அறிகுறியோ, ஆண்/ பெண் கழிவறைகளோ, குடிநீர் வசதியோ காணப்படவில்லை.
திரும்பிச் செல்லும்போது வேறு வழியாகச் சென்றனர். ஓரிடத்தில் கூடாரம் அமைத்து நீலகிரித் தைலம் காய்ச்சிக் கொண்ருந்தனர். தைல வாசனை அந்தப் பிரதேசம் முழுவதற்கும் ஒருவித இனிய சுகம் தந்து கொண்டிருந்தது.
அலுவலகம் சென்று சேர்ந்தவுடன் ஆய்வறிக்கையை உதவியாளரிடம் கொடுத்து, “எந்தச் சட்டத்தையும் ஃபாலோ பண்ணல. இன்ஸ்ஃபெக்ஷன் ஆர்டர ரெஜிஸ்டர் போஸ்ட்ல அனுப்புங்க” என்றாள்.
“சரிங்க மேடம்” என்றார் உதவியாளர்.
மறுநாள் காலை நடைப்பயிற்சி செல்லும்போது அந்த மர்ம வெள்ளை மாளிகை நோக்கிச் சென்றாள். விக்கோ மரத்தடியில் ஒரு பழமும் காணாது அதிசயத்து மேல் நோக்க, ஒரு குட்டிப் பையன் பழம் பறித்துக் கெண்டிருந்தான்.
“டேய், தம்பி! எல்லாப் பழத்தையும் எடுத்துட்டியா? விக்கோ பழத்தின் ருசியைச் சுவைக்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டாயே! கொஞ்சம் கருணை காட்டடா. எனக்கும் ஒன்றிரண்டு போடு! தம்பி, போடு!” என்றாள்.
கலகலவெனச் சிரித்துக் கொண்டே கீழே பார்த்த பையனின் மையிட்டது போன்ற கண்களும், அடர்ந்த கருகரு இமைகளும், கன்னத்துக் குழிவும், வெண்ணெய் போன்ற நிறமும், இவன் பெண்ணாய்ப் பிறந்திருந்தால் பேரழகாய் இருந்திருப்பானே என்று நினைக்கத் தூண்டியது.
மரத்திலிருந்து சரசரவென இறங்கி பையிலிருந்த மொத்தமும் எடுத்து நித்யாவிடம் நீட்டினான். ஐந்து பழங்களை பெற்றுக்கொண்டு, நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தால், வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு கார் இவள் கையைக் காட்டியும் கண்டுகொள்ளாமல் சர்ரென வேகம் எடுத்துப் பாய்ந்தது.
பூட்டிக் கொண்டிருந்த காவலரிடம், “அண்ணா, கார்ல போறது யார்ணா? அந்தப் புல்லில் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டா?” என்று கேட்டாள்.
“இங்க நிக்கக்கூடாதும்மா. கேமராவ்ல பார்த்துட்டிருப்பாங்க. போ…ங்…க…” என்றவர் அப்படியே மயங்கிச் சரிந்தார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings