in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 4) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3

மீண்டும் காட்டுப் பகுதியைக் கடந்தவுடன் திரும்பும் பாதையில் சோதனைச் சாவடி போன்று கம்பி கட்டி பூட்டு போட்டிருந்து!.

“இதான் ஹத்தப்பள்ளம் எஸ்டேட்டுங்க மேடம். கீழ இறங்கி சாவி இருக்கான்னு பார்க்கிறேனுங்க ” என்றார் செந்தில்.

நித்யாவும் கீழிறங்கி நின்றாள். ஈர மண்ணில் ஏதோ விலங்கின் பெரிய பெரிய கால் தடங்கள் தெரிந்தன.

     “இது எந்த அனிமலோட ஃபுட் பிரிண்ட்?” என்று கேட்டாள் நித்யா.

     “தெரியலீங்க மேடம். புலியோடது மாதிரி இருக்குங்க”, என்றார் செந்தில்.
“நானும் வந்ததிலருந்து புலிங்கறீங்க, கரடிங்கறீங்க. காட்டெருமைதான் எல்லா இடத்லயும் திரியுது. வேறெதையும் காணோம்” என்றாள் சலிப்புடன்.

     “என்னவோ புலியும், கரடியும் வந்தவுடனே இவங்ககிட்ட வாலை குழைச்சிக்கிட்டு நிற்கப் போறது மாதிரியும், இவங்க ஏதோ அத தடவிக் கொடுக்கப் போறது மாதிரியும்ல கேக்கறாங்க. வண்டலூர் ஜூல பார்த்த அனிமல்ஸ் மாதிரி நினைப்பு போல. அப்படி பாதுகாப்பு இருக்ற இடத்லேயே மாட்னா மட்டனாக்கிட்ற சம்பவங்கள்லாம் இவங்க கேள்விப்பட்டதில்லையா, இல்ல  மறந்துட்டாங்களா?” என்று செந்திலிடம் முணுமுணுத்தவாறே அங்கிருந்து அகன்றார் ஆனந்த்.

     ஒரு தாய், ஆறேழு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை, ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை மூவரும் அவரவர் அளவுக்கேற்ற விறகுக் கட்டுகளை தலையில் சுமந்து கொண்டு சீரான இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர்.

     அக்காட்சி பார்வைக்கு ரம்மியமாக இருந்தாலும் மனதை உருத்தவே, ”நில்லுங்க! ஏம்மா, அந்தக் குழந்தைங்க தலையில விறகுக் கட்ட வச்சிருக்கியே இது நியாயமா? பெரிய குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்பலாம்ல? அரசாங்க ஆதிவாசி பள்ளிகள் கூட இருக்கே!” என்று கேட்டாள் நித்யா, மிகுந்த ஆதங்கத்துடன்.

     “அதுவேதாங்க தூக்க ஆசப்படுது, வீட்டுக்கு இங்கிருந்து ரொம்பதூரம் போகனும், ஸ்கூலுக்கு அனுப்ப முடியாது” என்றாள் புரிந்தும் புரியாத மொழியில்.

     “உண்டு உறைவிட பள்ளிகள் இருக்கு, ஸ்கூலுக்கு அனுப்பும்மா”

பதிலின்றி சென்று கொண்டேயிருந்தார்கள். “இவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு நடத்தணும்பா!”

      சிறிது நேரத்தில் இரண்டு ஆண்கள் அவ்வழியே சென்றனர். அவர்களும் இருளர் கிராமத்திற்கு செல்வதாகவும், அவர்களில் ஒருவருக்கு மட்டுமே தமிழ் தெரியுமெனவும் தெரிவித்தனர்.

      “எவ்வளவு தூரம் நடந்தே போவீங்க?”

      “12 கி.மீ.  இருக்குமுங்க”

     “என்ன தொழில் பண்றீங்க?”

     “தினை விதைப்போம், தேன் எடுப்போம்”

     “ஓ…! சூப்பர். தினை மாவும், தேனும் அருமையான சுவை தரும் உணவாச்சே! குறிஞ்சி நில உணவு! இன்னமும் அப்படியே ஃபாலோ பண்றீங்களா? தேன் வச்சிருக்கீங்களா?, உங்க கூட வந்தா தேனும் தினையும் விலைக்கு தருவீங்களா?”  என்று கேட்டாள்.

     “இல்லீங்க, எங்க சாப்பாட்டுத் தேவைக்குப் போக மீதத்த ஆதிவாசி ஆஃபீஸுல கொடுத்துருவோமுங்க!”

     “ஒரு கிலோ தேன் எவ்வளவுக்கு விப்பீங்க?”

     “அது தெரியாதுங்க, அவங்க கொடுக்கறத வாங்கிக்குவோங்க”

     “எவ்ளோ கொடுப்பாங்க?”

     “100ங் கொடுப்பாங்க, 200ம் கொடுப்பாங்க”

     “அடப்பாவிகளா! நம்மகிட்ட 500, 600 க்கு விக்கறாங்களே!, இவங்களுக்கு மதிப்பே தெரியலயே” என்று புலம்பினாள்.

     “கலப்படம் வேற பண்ணுவாங்க மேடம்” என்றார் ஆனந்த்.

     “சாவியக் காணோங்க மேடம், மேனேஜருக்கு கால் பண்ணா, இப்போ யாரும் அங்கில்ல. மேடத்த ஆஃபிஸ்ல வந்து பார்க்கிறேங்கிறார் மேடம்” என்றவாறே செந்தில் அருகில் வந்தார்.

     “ஆஃபிஸ்ல வந்து பார்க்கறதுக்கு பேரு இன்ஸ்பெக்ஷன் இல்ல, இப்போ இன்ஸ்பெக்ஷன் பார்க்க என்ன வழி?” என்று கேட்டாள்.

     “நடந்து போலாங்க, ஆனா 7, 8 கி.மீ. நடக்கணும்” என்றார் ஆனந்த்.

     “சரி, வாங்க, நடக்கலாம்” என்றாள்.

     “கேட்டத் தாண்டி யாரைக்கேட்டு உள்ள போனீங்கன்னு கேட்க மாட்டாங்களா?”

     “தொழிலோ, வணிகமோ நடைபெறுகிறதா சந்தேகப்படற எந்த இடத்துக்குள்ளயும் ஆய்வுக்காக நுழையவும், எந்த ஆவணங்களையும் பறிமுதல் செய்யவும் சட்டப்படியான அதிகாரம் எனக்கு இருக்கே” என்று கூறிக் கொண்டே கம்பிக்கடியில் குனிந்து முன்னேறிச் சென்றாள்.

     செந்திலும், ஆனந்தும் ஆளுக்கொரு மரக்குச்சியை கையில் எடுத்துக்கொண்டு நடந்தனர்.

     சரிவில் இறங்கி கொண்டை ஊசி வளைவில் திரும்பிய நொடி நீ…ண்ட பெ…ரிய கருநிற நாகம் சரசரவென குறுக்கே சென்றது.

     உடல் ஒரு நொடி உறைந்து, அடுத்த நொடி அட்ரினலையும், கார்டிசாலையும் ஏகமாய்ச் சுரந்தது. இதயம் வெளியே வந்து விழுந்துவிடுமோ என்றெண்ணுமளவுக்கு துடித்து, கால்களுக்கும், கைகளுக்கும் இரத்தத்தைப் வேகவேகமாய்ப் பாய்ச்சியது. மூவரும் சத்தமின்றி, அசையாமல் நின்றனர். அதிர்வுகளைத் தானே பாம்புகள் சுலபமாய் இனங்கண்டு கொள்ளுமாம். அதன் பாதுகாப்புக்கு பங்கம் வராதவரை அது மனிதனை தாக்குவதில்லை.

     உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘கடவுள் சித்தப்படி நடக்கட்டும்’ என்று தொடர்ந்து நடந்தாள்.

     அடுத்த வளைவில் மேலிருந்து நீரருவி சடசடவென கொட்டி, பாதையின் குறுக்கே ஓடியது.

     “திடீர் திடீர்னு காட்டாறு  இப்டித்தான் ஓடி வருங்க ” என்றார் ஆனந்த்,

     “கல்லுல பாத்து கால வச்சி வாங்க மேடம், கல்லு புரண்டுடும்” என்றார் செந்தில்.

     ஒரு வழியாக கண்ணுக்கெட்டும் தூரத்தில் மாளிகை தெரிந்தது. வலதுபுறம் செல்லும் பாதையில் தொழிலாளர் குடியிருப்புகள் காணப்பட்டன.

     ”குவார்ட்டர்ஸ்ல ஆள் இருக்கா, இல்லையா?, உடைஞ்சு கிடக்கு, ஆனா துணி காயுது!, பக்கத்ல போய் பார்க்கணும்” என்றாள்.

     மாளிகைக்கு முன்னால் கட்டைகளை போட்டு எரித்திருந்தனர்

      “கேம்ப் ஃபைர் நடத்தினாங்களா, என்ன?”

      “நைட்ல புலிலாம் வரும், அதுக்காக எரிச்சிருப்பாங்க, மேடம்” என்றார் ஆனந்த்.

       மாளிகை பூட்டியிருந்தது. ஆங்கிலேயர்க் கால கட்டிடம் போன்றிருந்தது, உயரமாயும், பெரிய கண்ணாடி சன்னல்களுடனும், தேக்கு மர வேலைப்பாடுகளுடனும் காணப்பட்டது. சுற்றிலும் நெல்லி மரங்கள் இருந்தன. உட்காருவதற்கு சிமெண்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து தோட்டத்தின் எல்லா இடங்களையும் பார்க்க முடிந்தது. ஒரு புறத்தில் கீழே செழுமையான தேயிலைத் தோட்டத்தில் ஆட்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். தூரத்தில் மொட்டைப் பாறையில் மூன்று யானைகள் நின்று கொண்டிருந்தன.

     “யானை தான அங்க?”

     “ஆமாங்க மேடம், தெப்பக்காடு யானைகள் முகாம் அந்த பக்கந்தாங்க இருக்கு. ஆனா தொன்னூறு கி.மீ. சுத்திட்டுத்தானுங்க போகணும்” என்றார் ஆனந்த். சிறிய நெல்லிக்காய் அளவிலான சிவப்பு நிற பழங்களை கொண்டு வந்து சீமை கொய்யா என்று கொடுத்தார். பார்க்க கொய்யா பழம் மாதிரியே இருந்தாலும், பளபளவென்றிருந்த அதன் ஆழ்ந்த சிவப்பு நிறமும், சாறு நிறைந்த இனிய சுவையும் மனதை ஈர்த்தது,

       இன்னொரு புறம் காஃபி மரங்களும், சற்றே  சிறிய கட்டிடமும் காணப்பட்டது.

     “சரி வாங்க!” என்று கூறிக்கொண்டே அக்கட்டிடத்தை நோக்கி நடந்தாள். சன்னல் வழியே எட்டிப் பார்த்த போது மூட்டை மூட்டையாக காஃபி கொட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சிறிதளவு காஃபி கொட்டைகள் கீழே கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அருகில் எடை பார்த்து, பொட்டலமிட வசதியாக எடைக்கருவிகளும் இருந்தன. ஆனால், அதற்குரிய சான்றிதழ் இருப்பதாகத் தெரியவில்லை. கட்டிடத்தைச் சுற்றி சுற்றி வந்தாலும் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

     அங்கிருந்து கீழே பார்க்க சூழ்நிலை என்னவோ மிக ரம்மியமாகத்தானிருந்தது. ஆனால் எந்தச் சட்டத்தையும் மதிப்பதாகத் தான் தெரியவில்லை.

     வெளியே வந்தவுடன் அலுவலகம். இப்போது திறந்து கிடந்தது. ஆனால் ஆட்கள் யாரையும் காணவில்லை. தோட்டத்தின் நான்கு பிரிவுகளின் வரைபடங்கள் பெரிய பெரிய பலகைகளில் வரைந்து வைக்கப்பட்டிருந்தன.

    “அடேயப்பா 1000 ஏக்கருக்கு மேல் இருக்கும் போலிருக்கே!”

     “ஆமாங்க மேடம்” என்றார் செந்தில்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எங்கள் பொங்கல் (சிறுகதை) – சுஶ்ரீ

    ரோசம்மா (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி