இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரங்கூனிலிருந்து தான் பர்மாவில் ஈட்டிய பெரும் பொருளுடனும், மனைவி குழந்தைகளுடனும், மதராஸூக்கு திரும்பிய தர்மலிங்கம் அங்கு ஒரு மாளிகையை விலைக்கு வாங்கி பாதிப் பொருட்களை வைத்துவிட்டு, தன் நண்பனின் நினைவுகளுடன் உதகமண்டலம் திரும்புகிறார்.
இப்போது உதகமண்டலம் போகும் பாதையே வெகுவாய் மாறியிருக்கிறது. ஆங்கிலேயர் முயற்சியால் நிறைய தேக்கு, தேயிலை, காஃபி, சின்கோனா தோட்டங்கள் வழியெங்கும் முளைத்திருக்கின்றன.
தோடர்களின் எருமைகள் மேயும் சதுப்பு நிலங்களெல்லாம், நிலத்தடி நீரை உறிஞ்சும் தைல மரங்கள் நடப்பட்டதால் கடினப்பட்டிருந்தன. அவர்கள் வண்டி முன்னோக்கிச் செல்ல, சாலையுடன் சேர்ந்து, தர்மலிங்கத்தின் நினைவுகளும் பின்னோக்கிச் சென்றன.
கொள்ளையடித்து விட்டு கோத்தகிரியில் ஒளிந்திருந்த போது, நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் அணிவகுத்தன. ‘ஆங்கிலேயரின் கண்களுக்கு எப்படி தப்பிப் பிழைத்து, அவனுக்கு மேல் வியாபாரம் செய்ய வேண்டுமென்ற கனவை எப்படி நிறைவேற்றுவது?’ என்று தர்மலிங்கம் தவித்தபோது, குட்டன் அவர்களது மூன்போ, ஓடையாள்போ கோயில்களுக்கு அழைத்துச் சென்றார்.
“எங்க பொள்சி திருவிழா நடக்கறப்ப எத்த வேண்டினாலும் உடனே நடக்குங்க. நீங்க ஒங்க ஆசயச் சொல்லி வேண்டுதல் செய்ங்க. கண்டிப்பா நடக்குங்க“ என்றார் குட்டன், தர்மலிங்கத்திடம்.
அப்போதும் நம்பிக்கையின்றி தர்மலிங்கம் தலை கவிழ்ந்தவாறே இருக்க, “நாளைக்கு நடக்கற திருவிழாவ்ல பாருங்க, மழ பெய்யணும்னு நாங்க பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டவுடனேங்க மழ கொட்டும் பாருங்க, அப்ப நம்புவீங்க“ என்றார்.
அப்போது அந்த வழியே அவர்கள் இனத்தைச் சார்ந்த பெரியவர் வர குட்டன் அவர்முன் மண்டியிட்டு வணங்கினார். அவர், இவரது தலையில் பாதத்தை வைத்து “பதக் பதக்“ என்று கூறிவிட்டு தர்மலிங்கம் கவலை படிந்த முகத்தோடு இருப்பதைப் பார்த்து, “உன் நண்பன் ஏன் கவலையோட இருக்கான்? நாளைக்கு கோயிலுக்கு கூட்டி வா. எல்லாம் நல்லபடியா நடக்கும்“ என்றார், அவர்களது மொழியில்.
மறுநாள் அதே போல் இவர்கள் பாடி ஆடியதும் மழை பொழிய, நம்பிக்கையுடன் குட்டன் ஏற்பாடு செய்து தந்த குதிரையில் தான் ஒளித்து வைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு, கண்ணீரோடு நண்பனிடம் பிரியாவிடை பெற்று ரங்கூனுக்கு கிளம்பினார் தர்மலிங்கம்.
குட்டனின் உதவியுடன் கோத்தகிரியில் 1500 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் பர்மாவிலிருந்து கொண்டு வந்த தேக்கு மரங்களை பயன்படுத்தி 1916ல் வெள்ளை மாளிகையை நிர்மாணித்து தன் மனைவி, மக்களை விட்டுவிட்டு, சென்னைக்கு போய் இறக்குமதி வியாபாரத்தை துவக்குகிறார் தர்மலிங்கம்.
அவர் எங்கு உலகத்தைச் சுற்றினாலும், கோத்தகிரியில் அவர் குடும்பத்தைக் கண் போல் காக்கிறார் குட்டன். அவருக்குப் பின் தர்மலிங்கத்தின் குடும்பத்தினர் சென்னையிலேயே தங்கிவிட்டாலும், அவ்வப்போது குடும்பத்துடன் வந்து கோத்தகிரி வெள்ளை மாளிகையில் தங்குவது வழக்கம்.
அப்போதிருந்து தான் அது விருந்தினர் மாளிகை ஆக்கப்பட்டது. குட்டனுடைய மகன் பொன்ஷ் குட்டனும், குட்டனைப் போலவே தர்மலிங்கத்தின் மகன் சிரஞ்சீவி காலத்தில் வெள்ளை மாளிகை நிர்வாகத்தையும், அவர்கள் குடும்பம் வந்து தங்கும் போதெல்லாம் கூடவே இருந்து அவர்கள் தேவை அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.
சிரஞ்சீவியின் இரண்டாவது மகன் சஞ்ஜீவன் மருத்துவர். அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரியும் ஒரு ஏழை கேரளப் பெண்ணைக் காதலிக்கிறார். அவரையே திருமணம் செய்வேன் என அடம் பிடிக்கிறார்.
சிரஞ்சீவி அதற்குச் சம்மதிக்காததால், உங்கள் சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம், என் காதலே முக்கியம் என, அவரைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேரளாவில் குடி புகுந்து விடுகிறார்.
சிரஞ்சீவியின் மூத்த மகன் ஜெகஜீவன் குடும்ப வியாபாரத்தைக் கவனித்து வருகிறார். பொன்ஷ் குட்டனின் மகனும், ராஜனின் தந்தையுமான மந்தேஷ் குட்டன் அவருக்கு உறுதுணையாக இருந்து வெள்ளை மாளிகை நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.
இதுவரை எல்லாம் சுபமாகத்தான் நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் தர்மலிங்கத்தின் காலத்தில் போலல்லாது, அவர்கள் குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குட்டன் குடுபம்பத்தினரின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
வெள்ளை மாளிகையின் நிர்வாகி என்ற அளவில் மட்டுமே மந்தேஷ் குட்டன் நடத்தப்பட்டார். சஞ்ஜீவனுக்கு மட்டும் மந்தேஷ் குட்டனை மிகவும் பிடிக்கும்.
கேரளாவிற்குச் சென்ற சஞ்ஜீவன் கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் பணியாற்றி வந்தார். பெரிய வியாபாரக் குடும்பத்தில் பிறந்து ஆடம்பரமாக வாழ்ந்து பழகிய அவருக்கு அவரது வருமானம் போதுமானதாக இல்லை. இருப்பினும் அவரது மகனையும், மகளையும் மருத்துவமே படிக்க வைத்தார்.
அவருடைய மகனுக்கு குடும்பத்தின் பாரம்பரிய வியாபார மூளை இருந்தது. குடும்பத்தில் இத்தனை மருத்துவர்களை வைத்துக் கொண்டு நாம் ஏன் இன்னொருவருக்கு வேலை பார்க்க வேண்டும்? ஏன் சொந்தமாக மருத்துவமனை கட்டக்கூடாது எனக் கேட்டான்.
“ஏற்கனவே, உங்க ரெண்டு பேரையும் படிக்க வைக்கவே கடன் தான் வாங்கிருக்கேன். என்னதான் லோனே போட்டாலும் கொஞ்சமாவது கைலருந்து இன்வெஸ்ட் பண்ணனும். அதுக்காவது பணம் வேணுமே, எங்கிட்டக் கேட்டா நான் எங்க போறது?“ என்றார் சஞ்ஜீவன்.
“உங்க அப்பாட்ட போலாமே“ என்றான் அவன்.
அதிர்ந்து போய் மனைவியை திரும்பிப் பார்த்தார், இவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்ற தொனியில்.
“அவங்கள ஏம்ப்பா முறைக்கறீங்க? என்னிக்கு இருந்தாலும் எனக்கு தெரிஞ்சுதானே ஆகணும்? நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதுக்காக இன்னுமா கோபமா இருப்பாங்க? என் தாத்தாக்கிட்ட நான் கேக்கறேம்பா. அவ்ளோ சொத்த வச்சிட்டு நாம ஏன் கஷ்டப்படணும்? கொடுக்க முடியாதுன்னு சொன்னா லீகலா க்ளெய்ம் பண்ணலாம்பா“ என்றான்.
“நாந்தான் நீங்களும் வேண்டாம், உங்க சொத்தும் வேண்டான்னு சொல்லிட்டு வந்தேன். லீகலா க்ளெய்ம் பண்ண போறாராமே? அந்தளவு சொல்லிக் கொடுத்திருக்க நீ. அப்போ என் சொத்தப் பாத்துதான் என்னக் கல்யாணம் பண்ணிகிட்டயா?“ என்றார் மனைவியைப் பார்த்து.
“ஐயோ! நிங்கள் எந்தானு பறையுன்னது?“ என்று அவர் ஆரம்பிக்கு முன்னே, “தமிழ்ல பேசுன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன். ஒழுங்கா தமிழ்ல பேசு“ என்றார் அவர்.
“நீங்க என்ன சொல்றீங்க? இத்தன வருஷமா உங்ககிட்ட நா எதாவது கேட்ருப்பனா? பிள்ளைங்க ஏன் கஷ்டப்படணும்னுட்டு தான் நாஞ் சொல்லியது“ என்றார் அவர்.
“அந்த நெனப்ப இன்னியோட விட்ருங்க. நா, உன் அம்மா, நீ மூணு பேரும் சம்பாதிக்கறோம்ல? இனி உந்தங்கச்சியும் சம்பாரிக்க ஆரம்பிச்சிடுவா. வீட்லயே க்ளினிக் ஆரம்பிச்சிக்கலாம். அப்புறம் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கலாம்“ என்றார் அவர்.
“நாலு பேர் உழைப்பையும் தனித்தனியா இன்னொரு ஹாஸ்பிடலுக்கு கொடுக்கறதுல லாபம் இல்லப்பா. என்னிக்கு க்ளினிக் ஆரம்பிச்சு, என்னிக்கு ஹாஸ்பிடலா கன்வெர்ட் பண்றது? என்னிக்கு நாங்க கல்யாணம் பண்றது? உங்களுக்கு கஷ்டமா இருந்தா, விடுங்க. நா பாத்துக்கறேன்“ என்றான் அவன்.
சொன்னதோடு நில்லாமல் சிரஞ்சீவியிடம் போய் நின்றான். தன் செல்ல மகனை இத்னை வருடம் தன்னை விட்டுப் பிரித்து விட்டுப் போன தாயின் முகம் அவனிடம் இருந்ததால், அவனைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார் அவர்.
ஜெகஜீவன் தான் அவரைச் சமாதானப்படுத்தி, பணத்தை வாங்கிக் கொடுத்தார். இன்னும் பற்றாக்குறை ஏற்பட்டாலும் திரும்ப வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். அதனால் அவனுக்கு ஜெகஜீவன் மேல் பிரியம் ஏற்பட்டது.
ஜெகஜீவனின் மகன் ராஜசேகரிடமும் நன்கு ஒட்டிக் கொண்டான். இருவருக்குமே நல்ல பரம்பரை வியாபார மூளை இருந்ததால், நல்ல இணக்கம் ஏற்பட்டு அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டனர்.
யார் கண் பட்டதோ! தர்மலிங்கத்தின் குடும்பத்தில் மிகப் பெரிய இடி இறங்கியது. ஜெகஜீவனின் மகளது திருமண ஏற்பாடுகள் ஜெகஜோதியாய் நடந்து கொண்டிருந்தது. மொத்தக் குடும்பமும் ஒரு வாரத்திற்கு முன்னரே சென்னை மாளிகையில் குழுமியிருந்தது. சஞ்சீவனின் குடும்பம் மட்டுமே பாக்கி.
ஜெகஜீவன் ராஜசேகரை அழைத்து சஞ்ஜீவன் மந்தேஷ் குட்டன் சொன்னால் கேட்பார் என்பதால், மந்தேஷ் குட்டனையும் அழைத்துக் கொண்டு, கொச்சிக்குப் போய், சித்தப்பா குடும்பத்தை அழைத்து வருமாறு கூறுகிறார்.
அவர்கள் இருவரும் கொச்சிக்குப் போய் சஞ்சீவனை சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு, மகிழ்வுடன் வீட்டை நெருங்குகையில். ராஜசேகருக்கு வந்த அலைபேசி அழைப்பினால். அதிர்ந்து போய் வண்டியை நிறுத்தினார்.
அவர்களது மிகப் பெரிய சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக வந்தத் தகவல்தான் அது. சமாளித்து வீட்டை நெருங்கினால் அவர்கள் கண்முன் கண்ட காட்சி அனைவரையும் அப்படியே உறைய வைத்தது. சஞ்ஜீவன், “அப்பா!“ என அலறியவாறே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings