in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 12) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11

 மாறுதல் வந்தது. ஆனால்… சென்னைக்கு பணியிட மாறுதல்!

     மாறுதல் எதிர்பார்த்ததுதான். ஆனால், அந்த வெள்ளை மாளிகையின் மர்மத்தை கண்டறியாமலே போவது வருத்தமாக இருந்தது.

     சென்னை வந்ததும் அவளுக்கிருந்த முதல் வேலை, மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படையையும், கொத்தடிமைத் தொழிலாளர் கண்காணிப்பு குழுவையும் மறுகட்டமைப்பு செய்வது.

     எங்கிருந்தாலும் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று தன் பணியைத் தொடர்ந்தாள்  நித்யா.

    ஒரு நாள் மாலை வேளையில் காவல் ஆய்வாளரிடமிருந்து அழைப்பு வந்தது.

    “மேடம், நான் ‘கே#’ இன்ஸ்பெக்டர் பேசறேன். எங்களுக்கு ஒரு ஹன்ட்ரட் கால் வந்தது. ஒரு பத்தொன்பது வயசுப் பொண்ணு பார்க்ல அழுதுட்ருக்கான்னு.  (வாசகர்களே!, பத்தொன்பது வயதென்றதும், அது ‘காசினி’ என்று கற்பனையை ஓட விட வேண்டாம்.)  அவளும் அவ தங்கையும் ஆறு வருஷமா “… ….” (ஒரு பிரபலத்தின் பெயரைச் சொன்னார்) வீட்ல வேலை பாக்றதாவும்,   அவளையும், அவ தங்கையையும் மீட்டு அவங்க அம்மாட்ட அனுப்பி வைக்கணும்னும் சொல்றா. அவ தங்கையை “…..”  வீட்டிலிருந்து மீட்கணும், மேடம்” என்றார். 

            “மேடம், ரெண்டு பேருமே போர்டீன் இயர்ஸ் கம்ப்ளீட் ஆனவங்கனு சொல்றீங்க, டொமஸ்டிக் லேபர்… ஹஸார்டஸும் இல்ல. இருந்தாலும் 18 வயசுக்கு கீழு இருக்கிற பொண்ணுங்கறதால ரெஸ்க்யூ பண்ணி, வேற ஏதாவது பிரச்சினை இருக்கான்னு பாப்போம். டீம் அரேஞ் பண்ணிட்டு திரும்ப கால் பண்றேன்” என்றாள்.

            “தடுப்புப் படையின் முக்கிய உறுப்பினர்களிடம் தொலைபேசி மூலம் கலந்து ஆலோசித்தாள்.  தற்போது மாலை ஆகிவிட்டதால் அடுத்த நாள் காலை 11 மணிக்கு குழுவினர் மூலம் மீட்கலாம் என முடிவு செய்து காவல் ஆய்வருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவரும் “சரிங்க மேடம்” என்றார்

            மறுநாள் காலை செய்தித்தாளில் மேற்படி இரு சிறுமிகளும் மீட்கப்பட்டதாக செய்தி வந்திருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்து காவல் ஆய்வாளரை அலைபேசியில் அழைத்தாள்

            “என்னம்மா, ரெண்டு குழுந்தைகளையும் மீட்டுட்டதாக நியூஸ் வந்திருக்கே!”

            “ஆமாங்க மேடம், எங்க டி.சி.சார் உடனடியா ரெஸ்க்யூ பண்ண சொல்லிட்டார் மேடம்.  அதனால் நைட்டே ரெஸ்க்யூ பண்ணி சின்னப் பொண்ணை கெல்லீஸ் ஹோம்லயும், பெரிய பொண்ணை 18 வயது முடிஞ்சவங்கறதால வளசரவாக்கம் ஹோம்லயும் வச்சிருக்கோம் மேடம்” என்றார்,

            “இப்ப பதினேழு வயசு, பத்தொன்பது வயசுன்னாலும் ஆறு வருஷம் முன்னாடி 13 வயசிலயே கூப்புட்டு வந்திருக்காங்க, மேடம். மொட்டை அடிச்சி விட்ருவேன்னு மிரட்டியிருக்காங்க, அவங்க வீடு மூணாவது மாடில இருக்கு.  அங்கிருந்து வெளிய விடாம அடச்சி வச்சிருக்காங்க மேடம், சும்மா விடக்கூடாது, மேடம்” என்றார் தொடர்ந்து.

            “கண்டிப்பா!”  என்றாள் நித்யா

            மாவட்ட ஆட்சியரிடமும் கோட்டாட்சியரிடமும் அலைபேசியில் தகவல் தெரிவித்தாள்

“பாண்டட் லேபருக்கான ஃபேக்டர்ஸ் எல்லாம் இருக்கு, மேடம், ஆர்.டி.ஓ.ட்டயும் பேசிட்டேன் மேடம், டீம் வந்துட்டிருக்காங்க மேடம், ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் மேடம்” என்றாள் மாவட்ட ஆட்சியரிடம் .

            “ஓ.கே. ஃபர்ஸ்ட் அக்யூஸ்ட விசாரிங்க” என்றார் மாவட்ட ஆட்சியர்.

            “சரிங்க மேடம்” என்றாள்.

            கோட்டாட்சியர் வந்தவுடன் கோட்டாட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமுக ஆர்வலர் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் அந்தச் சிறுமியரிடம் தனித்தனியே விசாரிக்கப்பட்டது. 

            ஆரம்பத்தில் தான் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவளென்றும், தான் மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரபலத்தின் வீட்டிற்கு வந்ததாகவும், தனது அக்கா ஆறு வருடங்களுக்கு முன்னரே வந்து விட்டதாகவும், தான் அவர்கள் வீட்டில் நன்றாக இருப்பதாகவும், அக்கா மட்டுமே அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்ததால், அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதனால் அக்கா அங்கிருந்து தப்பி சென்றதாகவும், தான் அந்த பிரபலத்தின் வீட்டிலேயே இருக்க விரும்பியதாகவும் கூறினாள். 

            பிறகுதான் தெரிந்தது, முன்தினம் அந்தப் பெண் மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட இரவே, அந்தப் பிரபலம் அந்தச் சிறுமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பதும், அவர் இவளிடம் தான் நன்றாக இருப்பதாகவும், அவர் தனக்கு ஆங்கிலம் கற்பிப்பதாகவும், கூறச் சொல்லியிருக்கிறார் என்பதும்.

            அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தின் நிர்வாகியிடம்,

            “எப்படி நீங்க விக்டிம  அஃபென்டர் கிட்ட பேச அலவ் பண்ணிணீங்க?. அவங்ககிட்ட பேச அனுமதிக்காம பாதுகாப்பு கொடுக்குறது தான் உங்க கடமை.  இனி இப்படி செய்யாதீங்க!” என்றாள் நித்யா.

            மேலும், அச்சிறுமியிடம் விசாரித்த போது, மேற்கூறிய பிரபலம் தனது தாயாருக்கு பணம் கொடுத்து, தங்களை ஒரு பெண்மணி மூலம் சென்னைக்கு அழைத்து வந்ததாகவும், தான் சமையல் செய்வதாகவும், தனது அக்கா துணி துவைப்பது, அதை காய வைத்து மடித்து வைப்பது, வீடு சுத்தம் செய்வது, கழிவறை, குளியலறைகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்வதாகவும் தெரிவித்தாள்.  தங்களுக்கென்று தனி அறையும், கழிவறையும் கொடுத்திருக்கிறார்கள் என்றும், தங்களுக்கான சமையலையும் தாங்களே சமைத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தாள்.

            “வெளியே எங்கேயாவது போயிருக்கீங்களா?” என்று கேட்கப்பட்டதற்கு,

            “நாங்க தனியா போக மாட்டோம், ‘மேடம்’ எப்போதாவது பார்ட்டிக்கு போனா, கூட கூட்டீட்டு போவாங்க” என்றாள் ஹிந்தியில்.

            “பார்ட்டில போய் என்ன செய்வீங்க? என்று கேட்டதற்கு,

            “அங்கேயும் போய் க்ளீன் பண்றது, சாப்பாடு சர்வ் பண்றது மாதிரியான வேலைகளைச் செய்வோம்.  டான்ஸும் ஆடுவோம்” என்றாள் ஹிந்தியிலேயே.

            “டான்ஸ் ஆடுவீங்களா…? வேற யாராவது ஆண்கள் உங்களைத் தொட்டிருக்காங்களா? “என்று கேட்டார் பெண்கள் நல அலுவலர்.

            “இல்லை” என்றாள் அச்சிறுமி.

            “இங்லீஸ்ல என்னெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்டாள் நித்யா.

            “ஃபுட் ஆர்டர் பண்ணாலோ, வேற ஏதாவது கொரியர் வந்தாலோ, அது எவ்வளவு என்று கேட்டு பணம் கொடுப்பதற்கும், மீதிப் பணத்தை கணக்கிட்டு வாங்கி வைப்பதற்கும், கையெழுத்து போடவும் கற்றுத் தந்தார்கள்” என்றாள்

            “உங்களுக்கு சம்பளம் ஏதாவது தருவார்களா?” என்று கேட்டதற்கு,

            “இல்லை. அம்மாவுக்கு தேவைப்படும்போது அம்மாவுடைய அக்கவுண்டில் அனுப்புவார்கள்” என்றாள்.

            அதன் பிறகு அவள் அக்காவிடம் விசாரிக்கப்பட்டது.

            அவளும் கிட்டத்தட்ட அதே விஷயங்களைத்தான் சொன்னாள்.

            ஆனால், தனது தாயாருக்கு நான்கு பெண்கள், இரண்டு ஆண்களென, ஆறு குழந்தைகள் இருப்பதாகவும், அதில் இரண்டு ஆண் குழந்தைகள் மட்டுமே அம்மாவுடன் இருப்பதாகவும், இவளுக்கு மூத்த அக்காவும், கடைசி தங்கையும் மேற்கூறப்பட்ட  பிரபலத்தின் தாயாருடைய வீட்டில், மும்பையில் வேலை செய்வதாகவும் தெரிவித்தாள்.  மேலும், இதற்காக தனது தாயாருக்கு எண்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாள்

            “அடிப்பாங்களா?

            “ஆமா”

            “எதுக்கு அடிப்பாங்க?”

            “வேலை செய்யாட்டா, வீட்டை கிளீனா வைக்காட்டா அடிப்பாங்க. அதுமட்டுமல்ல, மூணாவது மாடியில் அவங்க வீடு இருக்கு.  நாங்க அங்கிருந்து தனியாக கீழே போனது கூட கிடையாது.  ஆனா அந்த ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாக் கூட முடிய வெட்டி விட்டுடுவாங்க, மொட்ட அடிச்சி விட்டுருவேன்னு மிரட்டுவாங்க” என்று அவள் கூறியபோது திடீரென அவள் கண்களில் ஒரு வலியுடன், அவள் குரலில் ஒரு வெறியும் தோன்றியது

            “என் அம்மாட்ட வேண்டாம். என்னை என் பாட்டியிடம் விட்டுடுங்க” என்றாள் அப்பெண் ஹிந்தியிலேயே, திடீர் வெறியுடன்.

            தனக்கு ஆங்கிலம் தெரியாதெனவும் கையெழுத்து போட மட்டுமே கற்றுக் கொடுத்ததாகவும் கூறினாள்.

            “ யார் முடி வெட்டி விடுவாங்க?”

            “…. மேடம்தான்” என்று கோபத்துடன் அந்த பிரபலத்தின் பெயரைச் சொன்னாள்.  ஏனோதானோவென்று கத்தரித்து விடப்பட்ட தன் முடியை வெறுப்பாகக் காட்டினாள்.

            அவர்கள் பெற்றோருக்கு அழைப்பு விடுத்த போது, அவர்களுக்கு தனியாக அலைபேசி இல்லையெனவும், வேறொரு நபரின் அலைபேசியில் தான் அழைத்துப் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.  அந்த நபரிடம் பேசிய போது, அவர்கள் தாயார் சென்னைக்கு புறப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். 

            சிறுமிகளை மீண்டும் பாதுகாப்பு இல்லங்களிலேயே ஒப்படைத்துவிட்டு, அந்த பிரபலத்தை விசாரிக்கும் பொருட்டு குழுவினர் அவர் வீட்டிற்குச் சென்றனர்.  

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    செவ்வந்திக்கு ஒரு செக் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    முள் பாதை (அத்தியாயம் 3) – பாலாஜி ராம்