2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
மின்னலென எதிரே வந்த லாரியைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்த ஆனந்த், சட்டென பிரேக் போட்டு ரிவர்ஸில் போனார். பின்னாலிருந்து காவல் ரோந்து வாகனத்தின் சத்தம். அப்போது லாரியும் கிரீச்சிட்டு நின்றது. லாரி ஜீப்பை விட உயரத்தில் இருந்ததால், லாரியில் யார் இருந்தார்கள் என்று தெரியவில்வை. அந்த அளவு, ஜீப்பும் லாரியும் எதிரெதிரே கிட்டத்தட்ட ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு நின்றன.
ஆனந்துக்கு அவ்வளவு கோபம் வந்து நித்யா பார்த்ததே இல்லை. இறங்கி டிரைவரைப் பார்த்து கெட்ட வார்த்தையில் கத்தத் துவங்கினார்.
லாரி டிரைவர் ‘ஈயென’ அசட்டுத்தனமாய் இளித்தான்.
பின்னாலிருந்த வாகனத்திலிருந்து காவல் ஆய்வாளர் இறங்கி வந்தார்.
”தெரியாம வந்துட்டேங்க, போயிரலாம்னு நினைச்சேங்க” என்றான் லாரி டிரைவர்.
செந்தில் சர்வ நாடியும் ஒடுங்கி நடுங்கிக் கொண்டிருந்தார். நித்யாவோ அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அவள் எண்ண ஓட்டமோ ‘நாம செத்தா யாருக்கு கால் பண்ணுவாங்க, நம்ம பிணத்தை வாங்க யார் வருவார்கள்?’ என்றிருந்தது.
ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. காவல் வாகனச் சத்தம் கேட்டதால் மயிரிழையில் உயிர் தப்பியது போலிருந்தது.
ஆனந்த்தின் பதற்றம் நிற்கவில்லை. ‘வாழ்க்கையில எதையுமே அனுபவிக்காத என்னையும் சேர்த்து கொல்ல பாத்திருச்சே இந்த வில்லங்கம்’ என நினைத்திருக்கக் கூடும்.
“ரிலாக்ஸ் ஆனந்த். அதான் ஒன்னும் ஆகலைல. நீங்க ஒரு எக்ஸலண்ட் டிரைவர். அந்த டென்ஷன்லயும், சடெனா வண்டிய ரிவர்ஸ் எடுத்தீங்க பாருங்க. க்ரேட் ஜாப். கூலாகுங்க. ஜாலியான பாட்டா போடுங்க பார்க்கலாம்” என்று சமாதானப் படுத்தினாள்.
சிறிது நேரத்தில் மறுபடியும் சட்டென ஜீப் நின்றது, என்ஜின், முன் விளக்கு அணைக்கப்பட்டது.
“என்னாச்சு ஆனந்த்? என்றாள் நித்யா.
“அங்க பாருங்க மேடம் ! யானை!” என்றார் ஆனந்த்
அவ்வளவு பெரிய யானையை நித்யா பார்ப்பது இதுதான் வாழ்வில் முதல் முறை. தந்தங்கள் இரண்டும் தரையைத் தொட்டுவிடும் போல ! அவ்வளவு பெரியது. ‘என்ன பண்ணப் போறீங்க? என்பது போல் ஜீப்பையே வெறித்துக் கொண்டு நின்றது.
“ஏன் ஆனந்த்? ஏன் வண்டிய நிறுத்தினீங்க? தொடர்ந்து போய்கிட்டே இருந்தா என்ன பண்ணிடும்?
“ஒத்த யானை ரொம்ப ஆபத்தானதுங்க மேடம், துரத்த ஆரம்பிச்சிடுதுன்னா அவ்வளவுதான் ஜீப்பைக் கவிழ்த்து விட்டுடுங்க” என்றார் செந்தில், பின்புறமிருந்து.
“அப்படியே நின்னு பார்க்குது பாருங்க” என்றார் ஆனந்த்.
அந்த யானை சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டு மெதுவாகக் திரும்பி காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தது.
“வந்ததிலிருந்து வெறும் காட்டெருமையை மாத்திரம் பார்க்கிறோமே, யானை, புலி, கரடி எல்லாம் கண்ணிலேயே படமாட்டேங்குதே மொட்டப் பாறையில பாத்த யானை கூட ரொம்ப தூரத்ல சின்னதா தெரியுதுன்னு அன்னிக்கு சொன்னேனே, அதுக்காக வண்டிய நிறுத்தினீங்கனு பார்த்தா, இப்படி பில்டப் கொடுத்து பயங்காட்றீங்களே!” என்று கூறி சிரித்தாள்.
பெரிய சிவந்த கண்களுடன் வாலில்லா குட்டிக் குரங்கு போன்றதொரு விலங்கு மெதுவாக சென்றது “என்ன அது?” என்று கேட்டாள் நித்யா.
“ தேவாங்குங்க மேடம்” என்றார் ஆனந்த்.
‘ஏதோ ஒன்னு! ரிலாக்ஸ் ஆனியே தம்பி! அதுவே போதும்’ என நினைத்துக் கொண்டாள்.
ஜீப் ஊருக்குள் நுழையும்போதுதான், நித்யாவுக்கு ஞாபகம் வந்தது. காலையில் வீட்டு உரிமையாளரின் மனைவி ” மேடம், இன்னிக்கு நீங்க சமைக்க வேண்டாங்க, எங்க ஹரீஷுக்கு பர்த்டே, நைட் பார்ட்டி இருக்குங்க” என்றார்.
”ஆனந்த் எங்கயாவது ஸ்போர்ட்ஸ் ஷாப் இருந்தா வண்டிய நிறுத்துங்க, ஹவுஸ் ஓனர் பையனுக்கு பர்த்டே. கிப்ட் வாங்கணும்” என்றாள்.
”சரிங்க மேடம்” என்றார் ஆனந்த். ஹரீஷ் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்பவனாதலால் அவனுக்கு ஒரு கிரிக்கெட் விளையாட்டு மட்டை வாங்கிக்கொண்டு கிளம்பினாள். வீட்டிற்கு வந்ததும் முகத்தைக் கழுவி பொட்டிட்டுக் கொண்டு வீட்டு உரிமையாளர் வீட்டிற்குச் சென்றாள். கேக் வெட்டி பரிசுகள் கொடுத்து முடிந்ததும் ‘பாட்டுக்குப் பாட்டு’ நடனம் என எல்லாவற்றிலும் இவளே வலிய உற்சாகமாக பங்கேற்றதைப் பார்த்து ”மேடம், இன்னிக்கு என்னங்க இவ்வளவு உற்சாகம்” என்றார் வீட்டு உரிமையாளர்.
”இன்னிக்கு ஒரு குடும்பத்த விடுவிச்ச சந்தோஷம் என்று கூறிவிட்டு படுக்கச் சென்றாள்.
காசினி குடும்பத்தார் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப் பட்டனர். தாசில்தாரால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. அதற்கு பின்னர் தான் பிரச்சினை ஆரம்பித்தது. காவல் நிலையத்தில் அரசியல்வாதிகள் செல்வாக்கு ஆரம்பித்தது. ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்தார். புகாரை மாற்றிக் கொடுத்தால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வேன் என்றார்.
அடுத்த நாள் செய்தி, பத்திரிக்கைகளில் வந்ததை அடுத்து அரசுச் செயலர், மாநில மனித உரிமை ஆணையர் ஆகியோர் தலையிட்டு அழுத்தம் கொடுத்ததையடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், நிர்வாகத் தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. முதலாளி தலைமறைவானதாகக் கூறப்பட்டது
காசினி, அவள் கணவர் மற்றும் மாமனார் பெயர்களில் வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டு ஆளுக்கு முப்பதாயிரம் தொழிலாளர் துறை சார்பில் வரவு வைக்கப்பட்டது. அவர்கள் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றொரு நாள் வேறோர் தோட்ட நிறுவனத்தை ஆய்வு செய்யச் சென்றனர்
அன்று போன தோட்ட நிறுவனம் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது.
உள்ளே நுழையுமிடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு சோதிக்கப்பட்டு பதிவேட்டில் பதியப்பட்டது, கிருமிநாசினி திரவம் கைகளில் தெளிக்கப்பட்டது.
தார்ச் சாலைகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டு வெள்ளைக் கோடுகள் வரையப்பட்ருந்தது, ஓரங்களில் விதவிதமான மலர்கள் மலர்க்காட்சி போல வைக்கப்பட்டிருந்ததன. செம்பருத்தியில் அனைத்து வண்ணங்களுமிருந்தன.
நீர்த்தேக்கம் போல் அமைக்கப்பட்டு வாத்துக்கள் நீந்த விடப் பட்டிருந்தன.
தேயிலைத் தோட்டம் பயிரிடப்பட்ட இடங்கள் கூட மிக நேர்த்தியான வடிவில் இருந்தன. சட்டப்படியான எல்லாப் பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டிருந்தன. உரிமம், சட்டச் சுருக்கங்கள், சம்பள தேதி போன்றவை மரச்சட்டங்களாக செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன.
தொழிலாளர் குடியிருப்புகள் மிகத் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வெள்ளை அடிக்கப்பட்டிருந்தன. கழிவறைகள், சுற்றுப்புறங்கள் அனைத்துமே துடைத்து விட்டாற் போலிருந்தன. ஆங்காங்கே பிளீச்சிங் பவுடரும் போடப்பட்டிருந்தது.
குழந்தைகள் காப்பகத்தில் விளையாட்டு பொம்மைகள், எண்ணெய், சோப்பு, வெந்நீர், பால், உணவு, பயிற்சிபெற்ற ஆயா, செவிலியர், ஆசிரியர், சறுக்கு, ஊஞ்சல் என அனைத்தும் இருந்தது.
மருந்தகம், வருகை மருத்துவர், விளையாட்டு திடல் போன்ற வசதிகளும் இருந்தன.
அரசுப்பள்ளி அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால் தனியாகப் பள்ளி மட்டும் நிறுவப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் பிள்ளைகளின் மேல் படிப்புக்கும், பெற்றோரின் மருத்துவச் செலவிற்கும் கூட முதலாளி உதவுவதாகச் சொன்னதைக் கேட்க நித்யாவின் மகிழ்சி கரை கடந்தது. இப்படியும் கூட மனிதர்கள் இருக்கிறார்கள்!
ஆனாலும், அந்தப் பகுதியில் தேயிலை ஏற்றுமதியில் அவர்கள் தான் முதலிடத்தில் இருந்தனர். இதிலிருந்து தொழிலாளிக்கு நல்ல சம்பளம் கொடுப்பதால் முதலாளி கெட்டுப் போவதில்லையெனத் தெரிந்தது.
தொழிலாளர்களைக் கேட்டபோது அனைத்தும் உண்மையெனவும் உணர முடிந்தது. சட்டப்படி வழங்க வேண்டிய கம்பளிப் போர்வையுடன் முதலாளி குடையும், ஸ்வெட்டரும் கூட வழங்குவதாக தெரிவித்தனர்.
“எங்க புள்ளைங்க வெளியூர்ல டாக்டர், எஞ்ஜினியராகக்கூட இருக்காங்க ஆனா, எங்களுக்கு இந்தூருதான் ஒத்துக்கும். வெளியூரு உப்புசம் ஒத்துக்காதுங்க. அதுனால நாங்க இங்கதாங்க, கடைசிவரை இருப்போங்க” என்றார் ஒருவர்.
”என்னதான் அவங்க படிச்சாலும், எங்கள அவங்க பள்ளிக்கூடத்திலயோ, காலேஜிலயோ உள்ள வுடமாட்டாங்க, எங்க புள்ளைங்களக்கூட ஒதுக்கீட்ல வந்துட்டாங்கன்னு சிலர் கேலி பேசறாங்கன்னும் சொல்றாங்க” என்றார் இன்னொருவர்.
”கவலப்படாதிங்க! முந்தி காலத்தவிட இப்போ எவ்வளவோ மாறிருக்கு பிள்ளைங்க படிச்சி பெரிய பெரிய அதிகாரிகளா ஆனாங்கன்னா, அப்போ கீழ வேலைப்பாக்குறவங்க மதிச்சிதான ஆகணும்? இந்த வேறுபாடுகள் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கிட்டுதான் இருக்கு. ஒரு நாள் முழுசா மாறிடும்னு நம்புவோம்” என்று சொன்னாள் நித்யா.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings