in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 10) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9

நித்யாவை வேதனையோடு பார்த்த காசினி, “இப்போ புள்ள விஷக்காய்ச்சல்ல சாகக் கிடக்குது. இப்பவும் முழிச்சிக்கலன்னா, நான் என்ன பண்ணுவேங்கோ?” என்று அழுது புலம்பினாள்.

“ஆமா, அந்த வாட்ச்மேன் கனகராஜனா உன் மாமனார்? “

“ஆமாங்கோ“

“டெய்லி 200 ரூபா சம்பளம் தரதா சொன்னாரே?“

“மொதலாளிய காட்டிக்கொடுக்கக் கூடாதுன்னு அப்டி சொல்லியிருப்பாருங்கோ.“

“நீ கவலைப் படாதம்மா. உன்ன இந்தச் சிறையிலருந்து நான் விடுவிக்கிறேன்” என்றவள், “இது க்ளியர் கேஸ் ஆஃப் பாண்டட் லேபர்” என்றவாறு மாவட்ட நடுவரான மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை விளக்கினாள். வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை, சமூக ஆர்வலர்கள், மருத்துவக்குழு உள்ளிட்ட  குழு வந்து சேர்ந்தது.

மருத்துவக் குழு குழந்தைக்கான சிகிச்சையை ஆரம்பித்தது. இன்னும் சற்றுத் தாமதித்திருந்தால் குழந்தை உயிருக்கே ஆபத்தாயிருக்கும் என்று சொல்லப்பட்டது.

கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் அவர்கள் பங்குக்கு  விசாரிக்கத் துவங்கினர். காசினியின் மாமனார் அவளைத் திட்டத் துவங்கினார்.

“இப்படி வாயாடி கெடுத்திட்டயே, முதலாளிக்குத் தெரிஞ்சா என்னாவறது?”

நித்யா காசினியின் மாமனாரைப் பார்த்து, “உங்க மருமகளைத் திட்டாதீங்க. அவ புத்திசாலிப் பொண்ணு. உங்க அன்புக்காகத்தான் அவ இத்தனை நாள் உள்ள இருந்து கஷ்டப்பட்டிருக்கா. குழந்தை எவ்வளவு சீரியஸ்னு கேட்டீங்கள்ல? இங்க நடந்த எத்தனையோ உயிர் பலிகள் மாதிரி இதுவும் நடந்திருந்தா அவளால தாங்க முடியுமா? ஏற்கெனவே தாய், தகப்பன இழந்து, பெத்த குழந்தைய்யும் இழந்துட்டு நிக்கற பொண்ணு”

“இல்ல, முதலாளி…”

“உங்கள இருபத்து நாலு மணி நேரமும் வேலை வாங்கிட்டு வாரம் ஐநூறு ரூபா கொடுத்திருக்காரு. இன்னும் என்ன முதலாளி, முதலாளிங்கறீங்க!”

“இல்ல. எனக்கு டெய்லி இருநூறு ரூபாய் கொடுப்பாரு. அதுமட்டுமில்ல நா…”

“நான் சும்மாதான வீட்ல கிடக்கறேன், இங்க கிடந்துட்டு போறேன்! அதான சொல்ல வர்றீங்க”

“ஆமா”

“எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுதுபோக்கு, எட்டு மணி நேரம் தூக்கம்… என்பது பதினாறாம் நூற்றாண்ட்லருந்து பல வருஷமா, பலர் போராடி வாங்கிக் கொடுத்த விஷயம். இண்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன்ல முதன்முதலா பேசப்பட்டதும், மே தினம் கொண்டாட காரணமா அமைஞ்சதும் கூட அதுதான். இந்தியால 1942லதான் அம்பேத்கார் ஆரம்பிச்சு, 1948ல தொழிற்சாலைகள் சட்டத்ல கொண்டுவந்துட்டாங்க. ஐநூறு வருஷம் கழிச்சும் இன்னும் சரியா செயல்படுத்தப்படாம இருக்றது வேதனதான். குடும்பத்தோட எட்டு மணி நேரம் செலவழிக்க வேண்டாமா?. அது மட்டுமல்ல மெஷின் கூட இருபத்து நாலு மணி நேரமும் ஓடினா சூடாயி பழுதாயிடும். மனுஷன்னா வாரத்தில முழுசா ஒரு நாள் ரெஸ்ட் வேணும்னு தான், முன்னெல்லாம் கடையோ, வணிக நிறுவனமோ, தொழிலாளி இல்லாத வெறும் முதலாளி மட்டும் இருக்ற கடையா இருந்தாக்கூட ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா மூடணும்னு வச்சிருந்தாங்க. ஏன்னா முதலாளிக்கும் ஒரு நாள் ரெஸ்ட் வேணும்னுதான். ‘ஞாயிறு விடுமுறை’ ன்னு போர்டெல்லாம் வேற போடச் சொல்லி, ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் இன்ஸ்பெக்ஷன்லாம் வேற பார்ப்போம்” என்றாள்.

            “ஆனா, ஞாயிற்றுக் கிழமைதான் எங்களுக்கு பிஸினெஸ் அள்ளிட்டு போகுது, கடை திறக்க அனுமதி கொடுங்கன்னு முதலாளி வர்க்கம் கேட்டுக்கிட்டதால முன்னூத்து அறுபத்தஞ்சு நாளும் கடை திறந்துக்கலாம். ஆனா பணியாளர்களுக்கு வாரத்தில ஒரு நாள் முழுசா இருபத்து நாலு மணி நேரம் ரொட்டேஷன்ல விடுமுறை விடணும்னு மாத்திட்டாங்க. அதுமட்டுமில்ல, இதெல்லாம் சட்டபூர்வமான உரிமைகள். சட்டத்துக்கு எதிரா  ‘நான் வேலை செய்றேன்’னு நீங்களே எழுதிக் கொடுத்தாலும், அது செல்லாது. முதலாளி வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது”

“எட்டு மணி நேரத்துக்கு மேல வேலை பார்க்கிற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரெண்டு மடங்கு சம்பளம் கொடுக்கணும். அப்படிப் பார்த்தா உங்களுக்கு ஒரு நாளைக்கு நானூறு ரூபா கூலின்னு வச்சிகிட்டாக் கூட ஒரு மணி நேரத்துக்கு ஐம்பது ரூபா. ரெண்டு மடங்குனா நூறு ரூபா. அதாவது எட்டு மணி நேரத்துக்கு மேல வேலை பார்க்கிற ஒவ்வொரு மணி நேரதுக்கும் நூறு ரூபா எக்ஸ்ட்ரா கொடுக்கணும்.  அதுவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரெண்டு மணி நேரம் தான் ஓவர் டைம் வாங்க முடியும்”

”மிக அதிக நேரம் வேலை வாங்கி முறைந்தபட்ச கூலி கூட கொடுக்காம உங்க உரிமை பறிக்கப்பட்டிருக்கு. உங்க விருப்பப்படி வெளியே செல்லும் சுதந்திரமும் பறிக்கப்பட்டிருக்கு. வெறும் ஐயாயிரம் கடனுக்காக வருஷக்கணக்குல உங்க உழைப்பு சுரண்டப்பட்டிருக்கு. கொத்தடிமையா இருக்கோம்னு தெரியாமலே, உங்க வாழ்க்கைய தொலைச்சிருக்கீங்க. இப்போ, உங்க சந்ததிகளோட வாழ்க்கையையும் தொலைச்சிராதீங்க.  முதலாளி என்ன பண்ணிடுவாரோன்னு பயப்படாதீங்க. இனி அவருக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. ஆர்.டி.ஓ. விடுவிப்பு சான்று கொடுத்தவுடனே உங்க கடனும் இல்லாததாயிடும்”.

“இந்தக் குவார்ட்டர்ஸெல்லாம் விட்டுட்டு திடீர்னு எங்க போவோங்க? என்ன பண்றதுங்க?”

“அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வோம்னு கவலைப்படாதீங்க. அரசாங்கம், விடுவிக்கப்பட்ட ஆண் கொத்தடிமைத் தொழிலாளிக்கு ஒரு லட்சமும், பெண் மற்றும் குழந்தைகளுக்கு ரெண்டு லட்சமும், மூன்றாம் பாலினத்தாரகவோ அல்லது அதிகளவு பாதிப்புக்குள்ளானவராகவோ இருந்தால் மூன்று லட்சமும் கொடுக்கும். அதில உடனடி நிவாரணமா ரூபாய் முப்பதாயிரம் உங்க பேங்க் அக்கவுண்ட்ல போட்டுடுவோம். இலவச வீட்டு மனைப் பட்டா, ஆடு, மாடு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, குழந்தைகளுக்கு கல்வி, சுய உதவிக் குழு சேர்க்கை எல்லாமே கிடைக்கும்” என்றாள்.

காசினி குடும்பத்தாரை வருவாய்த் துறையினரோடு வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு இவர்களது ஜீப் புறப்பட்டது.

வழக்கமாக பிரயாணத்தின்போது ஜீப்பில் சினிமா பாடல்களை ஓட விடுவது ஆனந்தின் பழக்கம்.  இன்றும் ஓடவிட்டார்.  ஆனால், சினிமா பாடல்களைக் கேட்பதில் நித்யாவுக்கு அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லை.  நடந்து முடிந்தவை, செய்ய வேண்டிய வேலைகள் என ஏதாவது அவளுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், இன்று ஏனோ பாடல்களை இரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்

இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்”

            …

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே 

இன்பத்தில் ஆடுது என் மனமே”

“க்ரீ…ச்“

காட்டைக் கடந்து ஊருக்குள் நுழைவதற்காக கொண்டை ஊசி வளைவில் திரும்பிய தருணம், எதிர்பார்த்த வில்லங்கம் எதிர்ல வந்திருச்சேன்னு ஆனந்த் நினைப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் காத்திருந்து வேகமெடுத்தது போல் சடாரென ஜீப்பின் நேரெதிரே பெரிய லா…ரி!

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. இனிமையான பயணத்தை தொடர்கிறேன் தினம் தினம் தங்களின் எழுத்துக்களின் பின்னால்…..

    • மிக்க நன்றி! பின்னால் ஒருவர் வருகிறார் என்ற பாதுகாப்பின் நம்பிக்கையோடே பயணத்தை தொடர்வேன்!

பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 11) – வைஷ்ணவி

கண்கண்ட தெய்வம் (சிறுகதை) – சுஶ்ரீ