in , ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 1) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

 “நன்றி இறைவா!”

ரோஜா வண்ண ஸிந்தெடிக் சுடிதாரின் மேல் லெதர் ஜாக்கெட், தலையில் ஸ்கார்ஃப், கைக்கு க்ளவ்ஸ், காலுக்கு ஷு, ஸாக்ஸ் அணிந்து சாவியை எடுத்துக் கொண்டு கதவை திறந்தாள் நித்யா. எப்போது திறப்பாள் என காத்திருந்ததுபோல் சிலீரென்று முகத்தில் அறைந்தது குளிர் காற்று!.

வீட்டு வாசலில் கால்களில் வெள்ளை ஸாக்ஸ் போட்ட, கரிய திரண்ட தசைகளையுடைய ஆணழகனைப் போல புல் மேய்ந்து கொண்டிருந்தது காட்டெருமை!.

“லப்…!” ஒரு நொடி இதயம் நின்று துடித்தது! சுதாரித்துக்கொண்டு கதவை பூட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்ததும் கால் முட்டிக்குக் கீழே குளிர் கவ்விப் பிடித்தது!. சரிவில் சிறிது தூரம் ஓடினாள்.

எதிரில் சிலர் மெல்லிய, நீண்ட உருளைக் கட்டைகளை கைகளில் பிடித்தபடி நடை பயின்று கொண்டிருந்தனர். திடீரென காட்டு விலங்குகள் எதிரில் வருமாம்.

வலப்புறம் திரும்ப எத்தனித்தாள்.

“இந்த வழியா தனியாப் போகாதீங்க, காலை 5 மணிக்கு புலிய பார்த்ததா சொல்றாங்க” என்றார் ஒருவர்.

கறிக்கடைக்காரர் வீட்டு நாயை வேறு கடித்துப் போட்டு போனதாக சொன்னார்கள். அந்த நாய் மூன்று முறை புலியிடம் கடி வாங்கியும் பிழைத்துக் கொண்டதாமே!.

‘புலிய பார்த்தேன், கரடியப் பார்த்தேங்கறாங்க. நம்மலால மட்டும் இந்த காட்டெருமையைத் தவிர வேறெதையும் பார்க்க முடியலயே’ன்னு தோன்றினாலும் எதுக்கு வம்பென்று நேர் வழியிலேயே நடக்க ஆரம்பித்தாள்.

சாலையோரமெங்கிலும், வீட்டு வேலிகளிலும் கொத்துக் கொத்தாய் வண்ண வண்ண மலர்கள். ஒரே கொத்தில் இத்தனை ரோஜாக்கள், அதுவும் இத்தனை பெரிதாக, இந்த ஊரில் மட்டும்தான் பூக்குமோ!.

அதிகாலையிலேயே வான் காதலன் தன் பூமிக் காதலியை காதல் பொங்க பனித்துளிகளால் குளிப்பாட்டினான் போலும்!. அவள் நாணத்துடன் பூக்கள் சூடி தன்னை அலங்கரித்து நின்றாள் போலும்!. பளிச்சென்ற பச்சைப் புல்வெளிகளும் பூச்செடிகளும் புதிதாய் குளிப்பாட்டி அலங்கரித்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தன.

இது போதாதென்று ஆங்காங்கே பூங்காக்கள் வேறு!. கோடையில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் நறுமணப் பொருட்கள் கண்காட்சி, ஊட்டியில் ரோஜாக் கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி, குன்னூரில் பழக்காட்சி என அடுத்தடுத்த நாட்களில் நடக்குமாமே!.

மயிற்பீலி கொண்டு மனதை வருடுவது போன்ற சூழல்!. ‘மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்ற சூழல்!’ எனத் தோன்றியது. கடவுள் எதையும் காரணமின்றி செய்வதில்லை போலும்!. ‘இந்தப் பணி மாறுதலும் நன்மைக்கே!’ எனத் தோன்றியது. “நன்றி இறைவா!” என்று கூறிக் கொண்டாள்.

குரங்குகள் குடும்பம் குடும்பமாய் ஒன்றையொன்று கட்டிக்கொண்டு யூகலிபிட்டஸ் மரக்கிளைகளின் மேலே தூங்கிக் கொண்டிருந்தன. குளிருக்கு இதமாயிருக்கும் போல!. நித்யாவிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.

வலதுபுறம் திரும்பி சரிவில் மேலேறினாள். பேரிக்காய் மரங்கள், ஆப்பிள் மரங்கள் காணப்பட்டன. ‘பேரிக்காய் சாப்பிட கரடி வருமாமே!’, ‘திக்’கென்றது!. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடந்தாள்.

தனியான ஒரு மலையைச் சுற்றி பாதை சென்றது. தங்க மலையாம்!. வெட்டியெடுக்க முயன்று, ஏதோ காரணத்தினால் கைவிட்டிருந்தனர். வெட்டிய இடம் மின்னிக் கொண்டிருந்தது!.

குப்பென்று செண்பகப்பூவின் வாசனை நாசியைத்துளைக்க, சுற்றுமுற்றும் தேடினாள். பள்ளி வளாகத்தினுள்ளேயிருந்த மரத்தைக்கண்டு முகம் மலர்ந்தது. கிளையை வளைத்து மலர்களைப் பறித்து முகர்ந்தாள். கரங்களில் ஏந்தி அலைபேசியில் புகைப்படமெடுத்துக் கொண்டாள். இப்போதெல்லாம் வாட்ஸாப்பில் காலை வணக்கம் அனுப்ப படங்களைத் தேட வேண்டியதோ, வேறு யார் அனுப்பியதையும் பிறருக்கு அனுப்புவதோ, தேவையில்லை, சுடச்சுட இவள் எடுக்கும் பூக்களின் படங்களில்தான் காலை வணக்கங்கள்!

இவ்வாறான சின்னச்சின்ன சந்தோஷங்களில் சிறகடித்துக் கொண்டிருந்தாள் நித்யா.

சுற்றுச்சுவர்களின் மேலே படர்ந்திருந்த கொடியில் பளபளவென்ற இள மஞ்சள் நிறப் பழங்கள், பார்த்தவுடன் சுவைக்கத் தூண்டின!.  ஆனால் என்ன பழம் என்று தெரியாததால் பறித்து ஜாக்கெட் பைகளில் போட்டுக் கொண்டாள்.

பள்ளியைக் கடந்தவுடன் பள்ளத்தாக்கு! பச்சைத் தேயிலை தோட்டங்களின் முடிவில் இளம்பச்சைப் புல்வெளி, செம்மண் திட்டுக்கள், அடர் பச்சை மரங்கள், பனிப்புகை சூழ்ந்த நீலமலை, நீலம் மற்றும் வெண்மேகக் கூட்டங்கள்!…  ‘வானவில் அழகா? இந்த வர்ணக் கலவை அழகா?’ எனக் கிறங்கி நின்றாள்.

சிறிது தூரத்தில் ஒரு மரத்தின் மீதிருந்து நெட்டிலிங்க காய்கள் போன்ற பச்சைநிறப் பழங்கள் விழுந்து கிடந்தன. அவை விக்கோ பழங்களென்று முந்தின நாள் வீட்டு உரிமையாளர் சொல்லக் கேட்டிருந்தாள். அவைகளை வீட்டு உரிமையாளருக்கும் கொடுக்கலாமென்று சிறிது நிறையவே சேகரித்துக் கொண்டாள். அரசாங்க குடியிருப்பு  தொலைவிலும், சேதமடைந்த நிலையிலும் இருந்ததால், வாடகை வீட்டில் தங்க வேண்டியிருந்தது.

ஒரு வீட்டின் கைப்பிடி சுவறின் மீது தோகை மயில் நடை பயின்று கொண்டிருந்தது. வீட்டு வாசலிலிருந்த புத்தம் புதிய ஆவாரம் பூக்களைப் பறித்து வாயிலிட்டுக் கொண்டாள். நீலக்கதிர் கொண்ட பெருந்தும்பைப் பூக்களைப் பறித்து தேனை உறிஞ்சினாள்.

பின்னணியில்

“பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க

 பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க”

பாடல் வரிகள் ஒலித்துக் கொண்டிருந்தன.

“இயற்கையின் மொத்த அழகையையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறாளோ, இந்த நீலி?!”

இடது புறமிருந்த தெரு கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. அத்தெருவிலிருந்த வீடுகளின் கட்டமைப்பும், அவற்றைச் சுற்றி நேர்த்தியாய் வளர்க்கப்பட்டிருந்த வண்ண வண்ண மலர்ச் செடிகளும் பலரின் கனவு இல்லங்களாகத் தோன்றியது. சிலர் சிறு தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் மாளிகை கட்டியிருந்தனர்.

ஒரு வீட்டின் வாயிலில் ஒரு நடிகரின் முதல் மனைவியும், ஒரு நடிகையின் தாயுமான பெண்மணி நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

நடிகர்கள் மோகம் யாரை விட்டது?. நித்யா அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கொண்டு சிறிது தயங்கி நிற்பதைப் பார்த்த அந்நடிகர் வீட்டுப் பணியாள், “இங்கெல்லாம் நிற்கக் கூடாது, கிளம்புங்க, கிளம்புங்க” என்று துரத்தினார்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 7) – ஸ்ரீவித்யா பசுபதி

மூடுபனி (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி.