எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கேரளாவின் மலை கிராமம். இரவு முழுக்க பெய்த மழையில் வீடு குளிர்ந்திருந்தது. சிணுங்கிய குழந்தையை தொட்டிலிலிருந்து எடுத்து பசியாற்றிவிட்டு அதன் நெற்றியில் முத்தமிட்ட செல்லி, திரும்பத் தொட்டிலில் போடும்போது, அரைக்கண்ணை திறந்து அம்மாவைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு தூங்கிப் போனது.
வெளியே ஒரே சத்தம் ..ஏற்கனவே கதவைத் திறந்து அவள் மாமியார் ஒச்சாயி எட்டி பார்த்துக் கொண்டிருக்க ..
“என்னாச்சு அய்த..என்ன சத்தம்?”
ஊரின் இளவட்டங்கள் எல்லாரும் ஓட்டமும், நடையுமாக மலையின் சற்று கீழே பள்ளமாக இருந்த இடத்திலிருந்த கிராமங்களை நோக்கி போய்க் கொண்டிருந்தனர்.
அங்கே போய்விட்டு அவசரமாக திரும்பி வந்த மாச்சன், “ஐயோ ராவுல பெஞ்ச மழை அம்புட்டு கிராமத்தையும் அடிச்சுட்டு போயிடுச்சு ..சனங்க பூரா தத்தளிச்சுகிட்டு இருக்குதுக. நிறைய சனம் செத்துப் போச்சு .. ராத்திரி மண்ணு சரிஞ்சு விழுந்திருக்கு. நாம செத்த மேடான இடத்துல இருக்க போய் தப்பிச்சோம் பக்கத்து கிராமம் பூரா இருந்த இடமே தெரியல” என்று மூச்சு வாங்க விவரித்துக் கொண்டிருந்தான்
.”தப்பி பிழைச்சவகள காப்பாத்த நம்ம ஊரு இளவட்டங்க எல்லாம் போறாக”
மழை சற்று நின்றிருந்தாலும் இந்த செய்தி கிராமத்தை அதிர்ச்சி உள்ளாகியது. செல்லிக்கு மனம் பதைபதைப்பாக இருந்தது. சிறுவயதிலிருந்தே யாருக்காவது ஒரு உதவி தேவைன்னா முதல் ஆளாக போய் நிப்பாள் அப்படிப்பட்டவள் பக்கத்துல இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு ஏதாவது போய் உதவி செய்ய வேணாமா மனசு அடித்துக் கொண்டது.
பக்கத்து வீட்டிலிருந்து மாசாணி எட்டிப் பார்க்க. “மாசாணி வரியா பக்கத்துல அந்த கிராமத்துல யாருக்காவது உதவி தேவைப்படலாம் போய் செஞ்சிட்டு வருவோம்” என்று கூப்பிட்டாள்.
அவ்வளவுதான், ரெண்டு பேரும் போட்டது போட்டபடி கிளம்பி ஓடினார்கள் ..
“கைப்புள்ள தொட்டில்ல கிடக்கு. பெருசு அஞ்சு வயசு புள்ள தூங்குது.. இந்த பிள்ளைகளை போட்டுட்டு இவ எங்க ஓடுறா..” என்று கிழவி ஓங்கி முணுமுணுக்க, அத கேப்பதற்கு அவங்க அங்க இல்ல..
இரவு ரெண்டு தடவை வந்த மண் சரிவும், மழை வெள்ளமும், பல கிராமங்களை சுத்தமாக அடித்து கொண்டு போயிருந்தது. வீடுகள் இருந்த இடமெல்லாம் வெறும் கற்குவியல். கிராமத்து மக்களும், மீட்பு படையினரும் தென்பட்ட மக்களை காப்பாற்றி கரை சேர்த்துக் கொண்டிருந்தனர்.
அடிபட்டவங்களை எல்லாம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக இன்னும் வண்டிகள் எதுவும் வரவில்லை. அதற்கான பாதையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
செல்லியையும், மாசாணியையும் அருகிலே நெருங்க விடவில்லை மீட்பு குழுவினர். “ஆத்தா நாம இங்க இருந்து ஒன்னு செய்ய முடியாது” என்றாள் மாசாணி ..
“ஐயோ எம்புட்டு சனம் அடிச்சிட்டு போயிருக்குமோ.. பாத்துகிட்டு இருக்கமே உதவி செய்ய முடியலையே” என்று அரட்டிய செல்லியின் கண்களில் காப்பாற்றி ஒரு ஓரத்தில் படுக்க வைத்ததற்கு வைக்கப்பட்டிருந்த ரெண்டு மூணு கைக்குழந்தைகளின் அழுகை சத்தம் காதில் கேட்டது.
உடனே அருகே ஓடினாள். அங்கிருந்த பெண் காவலர் தடுக்க “அம்மா அதுகளுக்கு பசிக்குது”
“அதோ ஒரு வேன் நிறைய ரொட்டி கொடுத்துகிட்டு இருக்காங்க.. வாங்கி சாப்பிடுங்க” என்று சொல்ல..
“அதில்லம்மா பாவம் இந்த பச்சை மண்ணுங்க.. கைக்குழந்தைங்க.. இதுல பாலை தவிர எதுவும் குடிக்காத குழந்தைங்க.. இதுகளுக்கு பசிக்கு அழும் போது என்ன குடுப்பீங்க”
அந்தக் காவலர் ரொம்ப வருத்தத்துடன் “ஆமாமா குழந்தைங்க அழுதுங்க பால் இன்னும் வந்த பாடில்ல”
“அம்மா நீங்க அனுமதி கொடுத்தா இந்த குழந்தைகளோட பசிய நான் ஆத்துறேன். குழந்த பெத்து ஆறு மாசம்தான் ஆகுது. தாய்ப்பால் கொடுக்க தகுதியானவ. இந்த குழந்தைகளுக்கு பசியாத்துனா இத விட சந்தோசம் இருக்க முடியாது” கண்ணீருடன் கை கூப்பினாள்.
அந்தப் பெண் காவலர்.. அவரும் ஒரு தாய் தானே.. கண்ணீர் மல்க தலையசைக்க.. பசியில் துடித்துக் கொண்டிருந்த அந்த பச்சை குழந்தைகளை மடியிலிட்டு ஒவ்வொரு குழந்தையாக பசியாற்ற ஆரம்பித்தாள் செல்லி.
அவள் மார்பை முட்டி தாய்ப்பால் அருந்திய குழந்தைகள்.. பசியாறிய மகிழ்ச்சியில் மலர்ந்த முகத்தோடு சிரித்தன. செல்லியின் மனதில் இருந்த பாரம் மட்டுமல்ல (பால்)மடியில் இருந்த பாரமும் குறைய, அந்த குழந்தைகளை காவலரிடம் ஒப்படைத்து விட்டு “நான் வீட்டுக்குப் போயிட்டு திரும்ப வரேன் மா “
வீட்டுக்குள் நுழைய.. அவள் குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது.
“பச்ச புள்ள பாலுக்கு அழுவது.. அதை விட்டுட்டு எங்கடி போன” என்று கத்த..
“அய்த்த இவ அழுதாலும் பசியாத்த நான் வந்துட்டேன். ஆனால் அங்க அடுத்த வேளைக்கு பசிச்சா பால் கொடுக்க பெத்தவ இல்லாம எத்தனை குழந்தைங்க” தன் குழந்தைக்கு பசியாற்றியவாரே கண்ணீர் விட்டு அழுதாள் செல்லி.. அவள் கண்ணீரின் காரணம் புரியாமல் தான் பசியாறிய மகிழ்ச்சியில் அந்த மழலை அவளைப் பார்த்து சிரித்தது.
(தினமலரில் வயநாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பற்றிய செய்தியின் விளைவு இச்சிறுகதை)
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings