எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
துளசி மாடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டு நாராயண மந்திரத்தை ஓதிக்கொண்டே அடுப்பங்கரைக்குள் சென்றாள் ஆர்த்தி. இன்று ஞாயிறு. யாரும் அவ்வளவு சீக்கிரம் எழ மாட்டார்கள். வீட்டு வேலைகளை நினைத்தால் மலைப்பாக இருந்தது.
மடமடவென காலை உணவுக்காக பூரி கிழங்கு தயார் செய்யலானாள். ஃபிரிட்ஜில் மட்டன் இருந்தது. மதியத்துக்கு பிரியாணி செய்துவிடலாம் என்ற யோசனை வந்தது. அதற்கிடையே துணிகளை துவைப்பானில் போட்டுவிட்டு வந்தாள்.
அடுப்பங்கரை வேலைகள் முடித்துவிட்டு, துணிகளை பின்கட்டு கொடியில் காயப் போட்டு விட்டு முற்றத்திற்கு வந்தவள், கேட் அருகே யாரோ நின்றிருப்பது தெரிந்து அருகே சென்றாள். வயதான ஒரு மனிதர். நடக்கமுடியாமல் அந்த கேட்டைப் பிடித்தபடி நின்றிருந்தார். அவளுக்கு பாவமாக இருந்தது.
‘அய்யா! யாருங்க? என்ன வேணும்?’
மெதுவாக கழுத்தைத் திருப்பி அவளை பார்த்தார். ‘வழி மாத்தி வந்துட்டேன்மா.. கிறுகிறுப்பா வந்தது. அதான் நின்னுட்டேன்’
அவளுக்கு அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ‘அட்ரஸ் இருக்கா? ஃபோன் நம்பர் ஏதாவது?’
அவர் தன் சட்டைப்பையை துழாவி ஒரு சிறு துண்டு காகிதத்தை நீட்டினார். கை நடுங்கியது. ‘இதுல நம்பர் இருக்கா பாரும்மா’
அவள் வாங்கிப் பார்த்தாள். ஏதோ ஒரு கைபேசி எண் எழுதப்பட்டிருந்தது.
‘உங்ககிட்ட செல்ஃபோன் இருககாய்யா?’
‘இல்லை’ என்பது போல கையை அசைத்தார்.
‘யார் நம்பர் இதுன்னாவது தெரியமா?’
‘என் பையனோடதுதான்’ என்றார். அவளுக்கு முகம் தெரியாத அந்த மகன்மீது கோபம் வந்தது. வயதான ஒருவரை இப்படியா தனியாக அலைய விடுவது?’
‘ஒரு நிமிஷம் நில்லுங்க அய்யா’ சொல்லிவிட்டு உள்ளே சென்று ஃபோன் எடுத்து வந்தாள். பின்பு அந்த காகிதத்திலுள்ள நம்பரை அமர்த்தினாள். ஏதோ ஒரு ஆங்கிலப்பாடல் ஒலித்து பின் ஒரு குரல் ‘ஹலோ’ என்றது.
‘ஹலோ! நான் இங்க திருவள்ளுவர் நகர்லருந்து பேசறேங்க. இங்க ஒரு பெரியவர் இருக்காருங்க. இந்த நம்பரக் குடுத்தாருங்க. அவர் மகனா நீங்க? அவரப்பாத்தா முடியாதவர் மாதிரி இருக்காருங்க! அவர கூட்டிட்டுப் போக வர்றீங்களா? அட்ரஸ் தரவா? அவர்கிட்ட பேசறீங்களா?’ படபடவெனப் பேசினாள்.
‘ஹலோ ஹலோ! நீங்க பாட்டுக்கு பேசிகிட்டே போறீங்க, அந்தாளுக்கு என்னவாம்?’
அவள் திடுக்கிட்டாள். ‘அந்தாளா?’ ‘அவருக்கு அட்ரஸ் தெரியலைங்க. அதான்..’
‘அதெல்லாம் வேணாம். ஒண்ணு பண்ணுஙக! அந்தாள நீங்களே ஏதாவது ஹோம்ல கொண்டுபோய் விட்டுட்டுட்டு வாங்களேன்’
என்ன மனிதன் இவன்?! முன்பின் தெரியாத ஒருவரிடம் இப்படிச் சொல்கிறான்?’ சிந்தித்துவிட்டு ‘அவர எப்படிங்க உங்கவீட்டுக்கு கூட்டிட்டு வரது?
‘ஒங்களுக்கு சொன்னா புரியாதுங்களா? அந்தாள இங்கல்லாம் கொண்டுவர முடியாதுங்க. பெரிய தொல்லைங்க! நீங்களே எங்காவது சேத்துடுங்க. இல்லன்னா போலீஸ்கிட்ட சொல்லிக்குங்க’
வைத்துவிட்டான். அவளுக்கு குழப்பமாக இருந்தது. ‘போலீஸில் சொல்லலாமா? பாவம்! இவரை அலையவிடக்கூடாது. வேண்டாம்’ தனக்குள்ளேயே பேசினாள்.
‘என்ன செய்வது?’ யோசித்தாள். ‘அய்யா, உள்ள வாங்க!’ கேட்டைத்திறந்து விட்டாள்.
தயங்கி நின்றார். ‘என்னம்மா சொன்னான் எம்பையன்?’
சொல்வதா? வேண்டாமா? குழம்பினாள். பின்பு ‘அய்யா உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொன்னாருங்க’ என்றாள், ‘உள்ள வந்து உட்காருங்க, இந்தா வரேன்’ என்றுவிட்டு உள்ளே சென்றாள்.
பூரி இரண்டை கிழங்குடன் ஒரு தட்டில் வைத்து எடுத்துவந்தாள். ‘அய்யா, முதல்ல இத சாப்பிடுங்க. நான் பையனுக்கு ஃபோன் பண்ணி கூட்டிட்டு போகச்சொல்றேன்’ என்றாள்.
‘எதுக்கும்மா? அங்கதான போறேன்? அங்கபோய் சாப்பிட்டுக்கறேன்’.
அவளுக்கு சட்டென்று என்ன சொல்வது என்று தெரியவில்லை. ‘அவங்கள்ளாம் டவுனுக்கு போயிருக்காங்களாம். வரலேட்டாகுமாம். அதுவரைக்கும் என்னய பாத்துக்கிட சொன்னாரு’ என்றாள்.
‘அப்பிடியா’ உள்ளே வந்து தோட்டத்து மாமரத்தடியில் அமர்ந்தார். பூரியைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டார். அவருக்கு நல்லபசி என்று தெரிந்தது.
‘இருங்க’ என்றுவிட்டு உள்ளே சென்று கொஞ்சநேரத்தில் ஒரு சில்வர் தம்ளரில் டீ கொண்டு வந்து கொடுத்தாள். ‘சூடு அளவாத்தான் இருக்கு. குடிங்க’
அவர் அதையும் குடித்துவிட்டு, முற்றத்து இடதுபக்கம் அவள் காட்டிய இடத்தில் பைப்பைத் திறந்து கை கழுவி, வாய் துடைத்துவிட்டு வந்தார். அவள் பாத்திரங்களை கழுவிவைத்துவிட்டு, மேசைமீது ‘கோயிங் அவுட், கால் மீ இஃப் எமர்ஜன்ஸி’ என்று குறிப்பெழுதிவைத்து விட்டு, முன்கதவை அடைத்துவிட்டு ‘போலாமாய்யா’ என்றாள்.
எதற்கோ கட்டுப்பட்டவர் போல அவள் பின்னால் நடந்துவந்தார் அவர். ஆளின்றி போய்க் கோண்டிருந்த ஒரு ஆட்டோவை அழைத்து அவரை ஏற்றி உட்காரவைத்துவிட்டு, அவளும் அமர்ந்தாள்.
‘அன்பு இல்லம் போங்க’ என்றாள். ஆட்டோ புறப்பட்டது. அந்த நகரத்தில் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு அன்பு இல்லம் என்னும் முதியோர் இல்லம் தெரியாமல் இருக்காது. இல்லத்தில் அவரை உட்காரவைத்துவிட்டு காப்பாளரை பார்க்க சென்றாள்.
இல்லம் நடத்தும் ராஜசேகரனை அவளுக்கு ஏற்கனவே பழக்கமுண்டு. மாதாமாதம் இந்த இல்லத்திற்கு குறிப்பிட்ட தொகை நன்கொடையாக அளிப்பவர்களில் ஆர்த்தியும் ஒருவள்.
அந்த வயதானவர் எங்கு வந்திருக்கிறோம்’ என்பது போல குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தார். ராஜசேகரன் அவளுடன் வந்து அவரிடம் ‘அய்யா! இங்கயே இருந்துக்கறீங்களா? உங்க பையன் வந்து கூட்டிட்டுப் போறவரைக்கும் என்றார்.
‘ஏன் அவன் இப்ப வரலியா?’ அவர் கேட்டபோது ஆர்த்திக்கு கவலையானது.
‘தெரியலையே. ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்குறார். அப்புறமா ஃபோன் பேசிட்டு வந்து கூட்டிட்டு போகச் சொல்றேன். இப்ப உள்ள வாங்க’
‘அவன் வர மாட்டானா? என்னய இங்க விட்டுட்டுட்டுப் போகச் சொன்னானா?’
ஆர்த்தி ராஜசேகரனைப் பார்க்க அவர் பெரியவரிடம் ‘அதெல்லாம் இல்ல. ஏதோ வேலையா இருக்காராம், முடிச்சுட்டு வந்து கூட்டிட்டுப்போவாராம். சரீங்களா? வாங்க!’
ராஜசேகரன் அவர் கையைப்பிடித்து கொண்டு நடந்தார். அப்போது ஆர்த்தியின் ஃபோன் ஒலித்தது. ‘கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்’ எனப் பாடியது.
அவர் திரும்பி ஆர்த்தியைப் பார்த்தபடி நடந்தார். ஆர்த்திக்கு கண்ணோரம் ஈரமானது.
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings