எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கண்ணாடியைக் காணவில்லை. பத்து நிமிடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறார் ராமன்.
மரகதம் சொல்லியிருக்கிறாள், ‘வர வர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாயிக்கிட்டே வருது. உங்களைச் சொல்லி என்ன செய்ய… உங்களுக்கும் வயசாகுதில்லையா… ’ என்று.
வயதைப் பற்றிச் சொன்னால் மட்டும் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். உடனே முகத்தை கர்ணகொடூரமாய் வைத்துக்கொள்வார். அப்படியே வாயை பொத்திக்கொண்டு பேசாமல் நகர்ந்தும் விடுவாள் மரகதம்.
வீட்டில் அவளும் இல்லை, மகன், மருமகளும் இல்லை, பேரனும் இல்லை. மரகதம் கோவிலுக்குப் போஇருக்கிறாள், இன்னும் வரக்காணோம். மகன், மருமகள் வேலைக்குப் போய்விட்டார்கள். பேரன் பிரபு பள்ளிக்கூடம் போய்விட்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் வேனும் வந்துவிடும்.
மறுபடியும் முதலிலிருந்தே தேட ஆரம்பித்தார். அலமாரி, டேபிள், டி.வி ஸ்டேன்ட், டீப்பாய், பாத்ரூம், பெட்ரூம்கள், புழக்கடைத் தோட்டம், துணி துவைக்கும் கல், வெளியே வண்டி நிறுத்தும் இடம், கடைசியாக சமையல் ரூம்.
களைப்பே வந்து விட்டது அவருக்கு. மரகதம் கோவிலுக்குக் கிளம்பும்போது சொல்லிவிட்டுப் போயிருந்தாள், ‘கொஞ்சம் டீ மீதம் இருக்கிறது, தேவைப்பட்டால் சூடேற்றி குடித்துக் கொள்ளுங்கள்… ‘ என்று.
உள்ளே போனார், அடுப்பை பற்றவைத்தார், டீ கிண்ணத்தை அடுப்பில் ஏற்றினார்.
யோசனை ஓடியது.
காலையில் கடைக்குப் போயிருந்தோமே, அங்கேதான் விட்டுவிட்டு வந்துவிட்டோமோ… காய் கடைக்குப் போனோம், மளிகைக் கடைக்குப் போனோம், பிரபுவுக்கு சார்ட் வாங்க ஸ்டேஷனரி கடைக்குப் போனோம். எந்தக் கடையில் கழற்றினோமோ தெரியவில்லையே.
அவருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது, கண்ணாடியில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்தால்தான் தெரியும். அதனால் எதயாவது உற்றுப் பார்க்க வேண்டுமானால் சிலசமயம் கண்ணாடியில் கழற்றிவைத்துவிட்டு பார்ப்பார்.
எந்த கடையில் என்று போய் தேடுவது.
ஒன்பதாயிரம் போட்டு வாங்கிக் கொடுத்தான் கார்த்திக். அவனுக்குத் தெரிந்தால், திட்டுவான், ‘ ஏன்பா இப்படி அசால்ட்டா இருக்கீங்க… ‘ என்று.
மருமகள் கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் டைப். அவர் மேல் மரியாதை உண்டு. ஒன்றும் சொல்ல மாட்டாள். புன்னகைத்துக்கொண்டு நகர்ந்து விடுவாள்.
பேரன் பிரபு பாட்டியைப் போல. கேலி செய்வான்.
’தாத்தா, நீங்க குழந்தை மாதிரி ஆகிட்டு வர்றீங்க… அடிக்கடி எதையாவது தொலைச்சுட்டு வந்து நிக்கறீங்க… ’
போன வாரம் கூட காய் வாங்க மொபெட்டில் போகும்போது காற்றில் ஆடியோ எப்படியோ கொக்கியில் மாட்டிக்கொண்டு போன பை எங்கோ எப்படியோ கீழே விழுந்துவிட்டது. திரும்பி வந்து போன வழியெல்லாம் தேடியதுதான் மிச்சம். வீட்டில் வந்து சொன்னால் செம டோஸ்.
சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுபடியும் தேடுவோம் என்று டீயை கப்பில் ஊற்றிக் கொண்டு உட்கார்ந்தால், உடனே காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்தால், பேரன் புன்னகையுடன் நின்றிருந்தான்.
‘ என்னய்யா வேன் சத்தமே வரலை… ‘
‘ தாத்தா… நம்ம தெருவுலத்தான் குழி தோண்டி போட்டிருக்காங்களே… தெரு முக்குலேயே இறக்கி விட்டுட்டான்… ‘
அவரது முகத்தைப் பார்த்து புரிந்து கொண்ட அவன், ‘ தாத்தா… ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க… உடம்பு கிடம்பு சரியில்லையா… ’
அவனுக்கு பாட்டியைப் போல கற்பூர புத்தி.
உண்மையைச் சொன்னார்.
‘இப்ப என்ன மூக்குக் கண்ணாடியைக் காணோம்… அவ்வளவுதானே… எங்கே இருக்குன்னு எனக்குத் தெரியும்… இங்கே வாங்க…’ என்று அவரை இழுத்தான்.
அது எப்படி பள்ளிக்கூடம் போனவன் தனக்குத் தெரியும் என்று எப்படி சொல்லுகிறான். அப்படியென்றால் காலையிலேயே நாம் கழற்றி வைத்த இடத்தை பார்த்திருந்தானா, இப்போதும் அது அங்கேயே இருகிறது என்பது பார்த்துவிட்டுத்தான் நம்மிடம் சொல்கிறானா…
யோசித்துக்கொண்டே அவனை பின்தொடர்ந்தார்.
‘ எங்கேய்யா கூட்டிட்டுப் போறே…’ என்றார்.
‘ பேசாம வாங்க… ‘
பெட்ரூம் பீரோவை நோக்கி இழுத்துப்போனவன், ‘ கண்ணாடில உங்க முகத்தைப் பாருங்க ‘ என்றான்.
திடுக்கிட்டார் அவர்.
‘ அடக் கன்றாவியே…’ வெட்கம் பிடுங்கித் தின்றது அவருக்கு.
‘ கண்ணாடியைப் போட்டுக்கிட்டத்தான் இதுவரை வீடெல்லாம் தேடினேனா… ‘
‘ டேயபா… பாட்டி வந்தா இதை சொல்லிடாதே, அப்புறம் கேலி செய்வா…’ கெஞ்சினார் அவர்.
‘ அப்போ ஒரு கண்டிஷன் ‘ என்றான் அவன்.
என்ன கண்டிஷன் போடுவானோ என்று அவனை ஏறிட்டார் அவர்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings