2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“முக்கியமான விஷயம் பேசணும்.. கொஞ்சம் வேலைலாம் முடிச்சிட்டு மேல வா” என் அண்ணன் புகழ் என்னை அழைத்தான்.
என்னவாக இருக்கும் என்ற சிந்தனையோடு வேலைகளை முடித்துவிட்டு மொட்டை மாடிக்குச் சென்றேன். அங்கே அவன் தனிமையில் அமர்ந்திருந்தான்.
“சொல்லுடா புகழ்.. என்ன விஷயம்”
“வேலை முடிஞ்சதா.. அம்மா என்ன பண்றாங்க பார்வதி?”
“அதெல்லாம் முடிஞ்சது.. அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க.. நீ என்ன விஷயம்னு சொல்லு”
“அதென்னனா…..” சொல்லத் தயங்கினான்
“நீ நம்ம தங்கச்சி இனியா பத்தி என்ன நினைக்கிற?”
“என்னடா நினைக்கணும்?”
“அவ நம்ல மீறி ஒன்னும் பண்ணிட மாட்டா தானா?”
“அவ என்ன பண்ணப்போற.. அவ உண்டு படிப்பு உண்டுன்னு இருக்கா”
“இந்த காதல் அப்படி எதாவது மாட்டிக்குவாளோ?”
“அவ ரொம்ப சின்ன பொண்ணுடா.. இப்போ ஏன் உனக்கு இந்த கவலை.. அதும் நம்ம இனியா அப்படி பண்ண மாட்டா”
அதுவரை நிதானமாக இருந்தவன் தன் பாக்கட்டில் இருந்த ஏதோ ஒரு கடித்தத்தை ஆத்திரத்தோடு தூக்கி எறிந்தான்.
“அதை எடுத்துப் படிச்சி பாரு.. நம்ம இனியா எழுதுன காதல் கடிதம்.. அவளோட ஸ்கூல் பேக்ல இருந்து எடுத்தேன்”
நானும் பதட்டத்தோடு வேக வேகமாக அதை எடுத்து படித்தேன்.
மனோஜ் என்ற பையனுக்கு அவள் காதல் கடிதம் எழுதியுள்ளாள். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சின்ன பெண் என நினைத்துக் கொண்டிருந்த எங்கள் தங்கை, உருகி உருகி காதல் கடிதம் எழுதி இருக்கிறாள்.
வார்த்தைக்கு வார்த்தை ‘கணவா’ என்று அவள் எழுதியிருந்தது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த கடிதத்தை முழுதாக படிக்கும் தைரியமும் இல்லை.
இத்தனை பெரிய மனுஷி ஆகிவிட்டாளா அவள். எனக்குள்ளும் கோவம் எழுந்தது. புகழின் முகத்தை பார்த்தேன். அவன் வெகுவாக துவண்டிருந்தான். என்னைத் தேற்றிக் கொண்டு அவனிடம் பேசினேன்.
“சின்ன பொண்ணுடா.. வாழ்க்கைய பத்தி புரிஞ்சிக்காம இருக்கா.. எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா.. நான் பேசுறேன் அவகிட்ட”
“நீ பேசு பார்வதி ஒரு அக்காவா.. என்னால அண்ணனா எப்படி பேச முடியும்னு தெரில.. உன்னை நம்பி விடுறேன்”
“கவலைப்படாத நான் பாத்துக்கிறேன்”
நூலகத்திற்கு புத்தகம் எடுக்கச் செல்ல வேண்டும் எனக் கூறி என்னுடன் மல்லிகாவையும் அழைத்துச் சென்றேன்.
மேலே புத்தங்கள் எடுத்துக் கொண்டு கீழ் தளத்திற்கு செய்தித்தாள் படிக்கலாம் எனக் கூறி கூட்டிச் சென்றேன்.
என்ன பேசுவது.. ஒரு போராட்டமே எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது. எனக்கும் இனியாவிற்கும் நான்கு ஆண்டுகள் வயது வித்தியாசம். புகழுக்கும் எனக்கும் இரண்டு ஆண்டுகள்.
இந்த நான்கு வருட வித்தியாசத்தில் எனக்குள்ள அனுபவத்தை பக்குவமாக நான் எப்படி இனியாவிடம் விளக்குவது? நான் சொன்னதும் வேண்டாம் என்று உடனே விடவும் முடியாது அவளால்.. அதட்டி கூறினால் நீ என்ன கூறுவது நான் என்ன கேட்பது என்று மாறிவிட்டால் அது இன்னும் பெரிய கஷ்டம்.
என்னை நானே பலவாறு தயாராக்கிக் கொண்டு பேசத் தொடங்கினேன்
“எப்படி போகுது படிப்பெல்லாம்.. எதாவது கஷ்டமா இருக்குன்னா என்கிட்ட சொல்லுடி”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாரு.. நல்லாத்தான் போய்ட்டு இருக்கு”
“வேற எதாவது.. பசங்க யாராவது தொந்தரவு பண்ணாலும் சொல்லு அக்காகிட்ட.. நானும் அண்ணாவும் பேசிக்றோம்”
“இல்ல அதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. அப்படி எதாவதுனா உங்ககிட்ட சொல்லாம இருப்பனா”
பொறுமையாக பேச வேண்டும் என நினைத்த என்னால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் எழுதிய கடிதத்தை மேஜை மேல் வைத்து விட்டு அவளை பார்த்தேன்.. கிட்டத்தட்ட முறைத்தேன்.
அவள் வாயடைத்து போய் விட்டாள். உருகி அழ ஆரம்பித்தாள். என்னிடம் பேச முடியாமல் நிலைகுலைந்தாள்.
இந்த இடத்தில் நான் என்ன கேட்பது என்பது எனக்கு சவலாக இருந்தது. நல்லவேளையாக கீழ்தளத்தில் ஒரிருவர் தவிர யாரும் இல்லை.
“புகழ் தான் எடுத்துக் கொடுத்தான்” என்றதும் அவள் இன்னும் தேம்ப ஆரம்பித்தாள்.
“என்ன இனியா இது… எதுக்கு இப்போ நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்க.. உனக்கென்ன அவசரம்.. என்னடி வயசு உனக்கு”
கோபம் கொதித்து எழுந்தது.. அவளிடம் கத்திப் பேச அவள் இன்னும் அதிகம் அழுதாள். இந்த அணுகுமுறை தவறு. நிதானமாக பேச வேண்டும் எனத் தோன்றியது. மனதை சாந்தப்படுத்தினேன்.
“இன்னும் நீ வாழ்க்கைய பத்தி புரிஞ்சிக்க ஆரம்பிக்கல இனியா.. இப்போதான் ஸ்கூல் போற.. காலேஜ் சேரனும்.. நல்ல டிகிரி எடுத்து நல்லா படிக்கணும்.. ப்ரண்ட்ஸ் ஓட என்ஜாய் பண்ண வேணாமா.. வாழ்க்கையை புரிஞ்சிகிட்டது இருக்கட்டும்.. மொதல்ல நீ உன்னை புரிஞ்சிக்கிட்டியா”
நான் பேசுவதை அவள் உள்வாங்க தொடங்குவதாய் தோன்றியது. நானும் தொடர்ந்தேன்.
“உனக்கு ஏன் நீ இப்படி ஒரு கமிட்மென்ட் குடுத்து இருக்க.. நாளைக்கே அவன் கேரக்டர் பிடிக்காம போனா. நீ மாறிட்டா… என்ன பண்ணுவ.. எவ்ளோ இதுல சந்தோசம் இருக்கோ அவ்ளோ சண்டை அவ்ளோ பிரச்சனை வரும்.. அதெல்லாம் எப்படி தாண்டி வருவ. நம்ம அப்பா அம்மாக்கு தெரிஞ்சா அவங்க எவ்ளோ உடைஞ்சி போவாங்க.. அதுக்கப்புறம் உனக்கு சுதந்திரம் கிடைக்குமா.. காலேஜ் மொதல்ல விடுவாங்களா”
“அம்மா அப்பாகிட்ட சொல்லிடாத.. ப்ளீஸ்” இதுவரை எதுவும் பேசாமல் இருந்தவள் இப்பொழுது கெஞ்ச ஆரம்பித்தாள்.
“நான் சொல்ல மாட்டேன். அவங்களுக்கா நீ பண்றது கண்ல பட்டா என்ன பண்ணுவ.. ஒரு தப்பான முடிவால பல மகிழ்ச்சியான தருணங்களை இழந்துடாத.. மோசமான பாதைல விழுந்துடாத”
“இல்ல.. நான் அப்படி பண்ண மாட்டேன்.. என்னை மன்னிச்சிரு பாரு. யார்கிட்டயும் எதும் சொல்லாத, நான் இனி ஒழுங்கா இருக்கேன்”
ஆழ்மனதில் இருந்து தான் கூறினாள். ஏதோ ஒரு சின்ன மாற்றமும் பெரிய தெளிவும் அவள் முகத்தில் எனக்குத் தெரிந்தது. அதற்கு மேல் பேசத் தேவையில்லை எனத் தோன்றியதால் அங்கிருந்து கிளம்பினோம். புகழிடம் நடந்ததைக் கூறினேன்.
“இனி நான் தப்பு பண்ண மாட்டேன். என்னை நம்புங்க.. உங்களை மீறி எதும் பண்ண மாட்டேன்” என்று புகழிடம் கூறிவிட்டு இனியா அழுது கொண்டே உள்ளே ஓடினாள். அவனும் அதற்கு மேல் பேசவில்லை. அப்படி ஒன்று நடந்ததையே மூவரும் மறந்து இயல்பானோம்.
ஏழு வருடங்களுக்குப் பிறகு….
புகழ் அவன் ஒரு வயது மகனுக்கு பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருந்தான். நானும் எனது கணவரும் எங்கள் நான்கு மாத குழந்தையுடன் சென்றிருந்தோம். விழா மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.
இனியாவுடன் அமர்ந்து உணவு உட்கொண்டிருக்கும் பொழுது அவள் அலைபேசி சிணுங்கியது. அதை பார்த்ததும் சற்று அவள் தடுமாறி அலைபேசியை அணைத்து விட்டு மீண்டும் சாப்பிட்டாள்.
அவளுடைய செய்கையில் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. மறுபடியும் அலைபேசி சிணுங்கியது. நான் எட்டி அவள் அலைபேசியை பார்க்க அதில் எம் என்ற இனிசியல் போட்டிருந்த நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. இந்த முறையும் அவள் பேசவில்லை. சாப்பிட்டு முடித்து விட்டு நகர்ந்தாள். நான் என்ன செய்வதென்று அறியாமல் புகழிடம் சென்றேன்.
“எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு டா.. எம் னு பாத்தேன்.. ஒரு வேலை அந்த மனோஜ் கூட இன்னும் பேசுறாளோ?”
அவன் நிதானமாக பதிலளிக்கத் தொடங்கினான்.
“ஏன் இவ்ளோ பதட்டப்பட்ற பாரு.. அவ அன்னிக்கு ஒரு வார்த்தை சொன்னாலே உன்னை மீறி ஒன்னும் பண்ண மாட்டேன்னு.. அதுக்கப்புறம் எதுக்கு பயப்படணும்.. ஒருவேளை இன்னும் அதே பையன அவ நேசிக்கிறா அப்படின்னா எனக்கு அது சந்தோசம் தான்”
“…..!!!…”
புரியாமல் விழித்தேன்.
“பார்வதி அப்போ நான் கோவப்பட்டேன். அப்போ அவளுக்கு பதினேழு வயசு.. விவரம் தெரியாம எதாவது தப்பான பாதைய தேர்ந்தெடுத்து படிப்பு கெட்ருமோன்னு.. ஆனா அவ நல்ல மார்க் எடுத்து காலேஜ் சேர்ந்து அங்க நல்லா படிச்சி இப்போ ஒரு நல்ல கம்பெனில வேலைல இருக்கா. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடிச்சி.. இப்போ அவ கல்யாணம் தான்.. ஏழு வருஷமா அவங்களுக்குள்ள சண்டை வராமயா இருக்கும்.. அதையும் தாண்டி இன்னும் அவ அவன நேசிக்கிறா அப்படின்னா அந்த காதல்ல என்னை தப்பு.. என்கிட்ட வந்து எப்போ சொல்லணும்னு தோணுதோ அவ சொல்லுவா.. அப்புறம் அந்த பையன பத்தி விசாரிச்சிட்டு பிடிச்சிருந்தா அவனுக்கே கல்யாணம் பண்ணி தருவேன்” கண்களில் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க புகழ் கூறினான்.
அவன் பேசி முடித்ததும் அன்று நான் இனியாவிற்கு கூறிய அறிவுரைகளெல்லாம் நினைவிற்கு வந்தது. அதையெல்லாம் கடந்து அவள் சரியாகத்தான் முடிவெடுத்திருப்பாள்.
தூரத்தில் நடந்து வரும் இனியாவை பார்த்தேன். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாய் வந்தாள். இனி அவள் கையை நான் பிடித்து நடக்கச் சொல்லித்தருவது தவறு என்பது மட்டும் புரிந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings