in , ,

கமலி பாட்டியும் விமலி பேத்தியும் (அலட்டல் 4) – ராஜேஸ்வரி

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

“ஹாய், பாட்”   கையில் காய்கறிப் பையுடன் உள்ளே நுழைந்த பாட்டியை வரவேற்றாள் விமலி.

“நான் கொஞ்சம் குண்டுதான். அதுக்காக ‘பானை’னு கூப்பிடக்கூடாது செல்லம்” என சிரித்தபடி கூறிய கமலி பாட்டி “சண்டே ஆச்சே, குழந்தைக்கு ஸ்பெஷல் டிபன் செஞ்சு போடலாம்னு காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்தேன்”.என்றாள்.

“ஓ..தேங்க்யூ மை கிராண்ட்மா, என்ன பண்ண போற? என்று மிகுந்த ஆவலுடன் விழியை அகலமாக்கிக் கேட்டாள் விமலி.

“அடையும் அவியலும். அடைக்கு மாவு அரைத்து வைத்துவிட்டேன். அவியலுக்காக தான் காய்கறிகள் வாங்க போனேன். வெயில் என்னமா கொளுத்தறது.” என்று புடவை தலைப்பால் கழுத்தையும் நெற்றியையும் துடைத்துக் கொண்டாள்.

“ஏதோ கேட்க கூடாததை கேட்ட மாதிரி முகத்தை சுருக்கிக் கொண்ட விமலி, ஏன் பாட்டி இன்னும் அந்த பழங்காலத்து டிபன விட மாட்டியா? புதுசா ஏதாவது ட்ரை பண்ணு. என்றாள்.

“விமலி குட்டி, நீ இதுவரைக்கும் இந்த மாதிரி அடையை நீ சாப்பிட்டிருக்க மாட்ட.  சாப்பிட்டு பாரு. சரண்டர் ஆயிடுவ” என்றாள் பாட்டி 

“யார்கிட்ட? உன்கிட்டயா?  அடைக்கிட்டயா?. நோ நோ பாட்டி நான் பீட்ஸா ஆர்டர் பண்ண போறேன். உன்னோட அடையை  அடுத்த வாரம் சாப்பிட்டுகிறேன்”

“இன்னைக்கு அரைச்சது, இன்னைக்கு சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். நாளைக்கு ஓரளவுக்கு புளிச்சு போயிடும். அடுத்த வாரம் சுத்தமா சாப்பிட முடியாது கீழே தான் கொட்டணும்” என்றாள் சிறிது கோபமாக பாட்டி.

“அதுக்குத்தான் குளிர்சாதன ஸ்டோர் பீரோ  ஒன்னு இருக்கே அதுக்குள்ள தூக்கி வை” என்றாள் விமலி ஃபிரிட்ஜ்ஜைப் பார்த்து கை நீட்டியபடி. 

“வளர்ற குழந்தைகள் நல்லா சத்தானதா சாப்பிடணும் அந்த பீட்சா..ல என்ன இருக்கு? பிசாசு மாதிரி எல்லாரையும் பிடிச்சிண்டு இருக்கு”.என்று பல்லால் நறநறத்தாள் பாட்டி.

“நீயும் பீட்ஸா சாப்பிடு. அப்புறம் நீயும் சரண்டர் ஆயிடுவ. என்று மடக்கினாள் விமலி. 

“ஹூம், என்னோட புரோட்டீன் ரிச் அடைக்கு உன் பீட்ஸா கால் தூசு பெறுமா? என்று அதகலத்துடன் தொண்டையை கனைத்துக்கொண்டு கொண்டையை இழுத்து கட்டிக்கொண்டு பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைத்தாள் பாட்டி.

“ஏன் பீட்ஸா…லயும் தான் சீஸ், பனீர், வெஜிடபிள்ஸ், ஹெர்பல்ஸ் எல்லாம் இருக்கு. என்று வாதாட ஆரம்பித்தாள் விமலி.

“சரி, வா…ரெண்டிலும் இருக்கற நியூட்ரிஷனல் வேல்யூ போட்டி வெச்சு பார்க்கலாம். அப்போது தெரியும். எது பெஸ்ட்…னு உன்னோட பீட்ஸா அடிச்சு பிரண்டு அதல பாதாளத்திற்கு போயிடும்” என்று கைக் கொட்டி சிரித்து விமலியின் கோபத்தை உசுப்பேத்தி விட்டாள் பாட்டி. 

“இரு இரு கூகுள்.. ல சர்ச் பண்ணிட்டு அப்புறம் உன்கிட்ட பேசறேன்” என்று போனை பார்க்க ஆரம்பித்தாள் விமலி.

சிறிது நேரத்திற்குப் பின்பு தான் தோற்றுவிட்டோம் என்று விமலி முகத்தில் அப்பட்டமாக தெரிந்ததை கமலி பாட்டி கண்டு கொண்டு விட்டாள்.

“சொன்னேனா, சொன்னேனா? பாத்தியா, பாத்தியா? நான் தானே ஜெயிச்சேன். என் வழிக்குத்தான் நீ வந்தாகணும்.  குதூகலித்து கும்மாளமிட்டாள் பாட்டி.

“சே…இப்படி ஆகிவிட்டதே. என மனம் வருத்தப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்   “பாட்டி ஒன்னு பண்ணலாம். உனக்கும் வேண்டாம் எனக்கு வேண்டாம். பிஃப்ட்டி,பிஃப்டி அதாவது அடை பாதி பீட்சா பாதி சேர்த்து வைத்து சாப்பிடலாமா?” ஆர்வத்துடன் தலையை ஆட்டியபடி கேட்டாள் விமலி.

“அய்யய்யோ இது அதைவிட மோசமால்ல இருக்கும்”

என்றாள் பாட்டி முகத்தை அஷ்ட கோணலாக்கி.

“இரு இரு எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு. அடை மாவு கொண்டா மொதல்ல” என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள் விமலி.

தோசைக்கல் மேல் அடை மாவை ஊற்றினாள். பின் அதன் மேல்  பீசா சாஸை ஊற்றினாள்.  அதன் மேல் சீஸ், பனீர், குடமிளகாய், தக்காளி  என அலங்காரம் செய்தாள். கமலி பாட்டிக்கு பகீர் என்றது.  

“வெங்காய அடை, வெள்ளரிக்கா அடை, சுரக்காய் அடை  பாத்திருக்கேன். பண்ணி இருக்கேன். இது என்னடி புதுசா இருக்கு?  ஆனா பாக்க அழகாத்தான் இருக்கு. என்று கொஞ்சினாள் விமலியை.

“இதுதான் ஃப்யூஷன் அதாவது பழமையும் புதுமையும் கலந்த டிபன். எப்படி என் ஐடியா? என்று பெருமிதமாக காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் விமலி.

“பாக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா சாப்பிட்டா எப்படி இருக்குமோ தெரியல? வயித்தை கியித்தை கலக்குமோ என்னமோ” என்று பயந்து நடுங்கினாள் பாட்டி.

“ரொம்ப சீன் போடாத எல்லாம் நல்லாத்தான் இருக்கும்”. என்று சொல்லிவிட்டு “ஆமா, இதுக்கு ஒரு பேர் வைக்கணுமே. என்ன வைக்கலாம்?” என்று யோசிக்க தொடங்கினாள் விமலி.

 அடை பிளஸ் பீட்சா அதனால ‘அடை’ லேர்ந்து ‘அ’-வை எடுத்துக்கலாம். பீட்ஸா-விலிருந்து ‘ட்ஸா’-வை எடுத்துக்கலாம். ‘அட்ஸா’ எப்படியிருக்கு?”என்றாள்.

பாட்டி என்ன பதில் சொல்வது என்று புருவத்தை உயர்த்தினாள்.

அதை கண்டுகொள்ளாத விமலி “வாவ் சூப்பர். ‘அட்ஸா’ .இப்பவே இதை பேஸ்புக்லயும் இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போடறேன்” என்று ‘அட்ஸா’-வை விதவிதமாக புகைப்படம் எடுத்தாள்.

புகைப்படத்தையும் ரெசிபியின் செய்முறை விளக்கத்தையும் போட்டாள். அரை மணி நேரத்தில் ஆயிரம் லைக்கும், ஏழுநூறு கமெண்ட்ஸூம் அள்ளியது கண்டு குதித்து ஆனந்தித்தாள். 

“பாட்டி பாரு என்னோட ஐடியா எப்படி பிரபலமா ஆயிடுச்சு பாரு” என்று அதை காண்பித்து பெருமை கொண்டாள்.

“சரி சரி போதும் ரொம்ப துள்ளாத அந்த அச்சாவ  நீயே சாப்பிடு எனக்கு வேண்டாம். என்று கையெடுத்து கும்பிட்டு விலகினாள் பாட்டி.

“இரு, உட்காரு இப்படி என்று பாட்டியை உட்கார வைத்து இனிமேல் எல்லா டிபனும் ஃபியூஷன் தான். நீ என்ன பண்ற, வரிசையா டிபன் பேரெல்லாம் சொல்லு. அதை எப்படி மாத்தலாம்னு நான் சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து எழுத ஆயத்தமானாள் விமலி.

 அடடா என்ன இது? டிபனுக்கு வந்த சோதனை என மனதில்  எண்ணிக்கொண்டு 

 “உலகத்திலே பெஸ்ட் டிபன் இட்லி தான்-னு  எல்லாரும் ஒத்துண்டு இருக்கா நீ ஒத்துக்க மாட்டியா? அதை அப்படியே சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். அதை எப்படி மாத்தப் போற?  என்று சிறிது பயம் கலந்த முகத்துடன் கேட்டாள் கமலி பாட்டி.

“பேனாவை நெத்தியில் குத்திக்கொண்டு இரண்டு நிமிடம் யோசித்தவள் கண்டுபிடிச்சிட்டேன் இட்லியை நூடுல்ஸ் பண்ணிடலாம்” என்றாள் அகலமாக சிரித்தபடி.

 “இட்லி மாவுல நூடுல்ஸ் எல்லாம் பண்ண வராது. அது கொஞ்சம் லிக்விடா இருக்கும் என பாட்டி எச்சரித்தாள்.  

“இல்ல நான் இட்லி மாவை சொல்லல. இட்லி தான் சொன்னேன். இட்லி செஞ்சிட்டு அதை நல்லா பெசஞ்சு அப்புறம் முறுக்கு புழியறதுல போட்டு நல்லா நூடுல்ஸ் மாதிரி புழிஞ்சிடணும்.  அப்புறமா அதுல மசாலா பொடி வெஜிடபிள்ஸ் எல்லாம் போட்டு கிளற வேண்டியதுதான் இட்லி நூடுல்ஸ் ரெடி. ஆமா அதுக்கு ஒரு பெயர் வைக்கணுமே. ஆ..ங்..கண்டுபிடிச்சிட்டேன் இடூல்ஸ்…னு வைக்கலாம் எப்படி பாட்டி? சூப்பர்ல. என்று தானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டு சந்தோஷித்தாள் விமலி. 

பூவாக இருக்கவேண்டிய இட்லியை புழுவாக மாத்திட்டாளே என மனம் நொந்தாள் பாட்டி  

“அடுத்தது தோசை தான் அந்த தோசைய நல்லா முருகலா வார்த்து, பாட்டி நீ என்ன பண்ற. தோசை மாவுல உப்பு போடாத. அதுக்கு பதிலா லைட்டா சீனியை போடு அந்த தோசை மாவை முருகலா வாத்து  கோன் பண்ணிட்டு அதுல ஐஸ்கிரீம் வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் சூப்பர்ல. தோசை ப்ளஸ் ஐஸ்கிரீம். அதுக்கு பேரு…தோஸ்கிரீம்”

ஹவ் இஸ் இட்?” எக்ஸலென்ட் என தன்னைத் தானே பாராட்டிக்கொண்டாள்.

“அப்புறம் பூரியும் பர்கரையும் சேர்த்து பூரார்க்கர்.  சப்பாத்தியில மில்க் ஷேக், கொழுக்கட்டை  பாஸ்தா, உப்புமா சாண்ட்விட்ச். சேமியா குலாப்ஜாமூன். வாவ் எவ்வளவு வெரைட்டியா நான் யோசிக்கறேன். இல்ல பாட்டி?” என்று தலையை குனிந்தபடி எழுதிக்கொண்டிருந்தவள் பாட்டியின் விமர்சனக்குரல் கேட்காது போகவே நிமிர்ந்தாள்.

கமலி பாட்டி கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

அட எப்போ தூங்கினா? என்னோட ஆர்வத்துக்கு இப்படி தடை போட்டுட்டாளே. சரி பரவாயில்ல. நாளைக்கு மிச்சத்த பாத்துக்கலாம். என்று கூறிக்கொண்டே தன் அறைக்குச் சென்றாள்.

ஹப்பாடி ஒருவழியா ஃபியூஷன் போர்…லேர்ந்து தப்பிச்சோம். அம்மாடி இந்த காலத்து குழந்தைகள்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. ஐயயோ…நாளையிலிருந்து சமையலறை என்ன பாடுபடபோறது தெரியல. என்று மனதில் புலம்பிக்கொண்டே தூங்கிப்போனாள் கமலி பாட்டி.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(லூட்டி தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன்னைக் காணாத கண்கள் (சிறுகதை) – இரஜகை நிலவன்

    நட்பு உடைந்தது (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்