in ,

கள்ளிக்காட்டு இதிகாசம் (புத்தக விமர்சனம்) – தி. வள்ளி, திருநெல்வேலி

கள்ளிக்காட்டு இதிகாசம்

ஆசிரியர் : கவிப்பேரரசு வைரமுத்து 

வெயிலின் கொடுமை அதிகமாக இருக்க வெளியே செல்ல முடியவில்லை வீட்டில் இருக்க அவகாசம் கிடைத்ததால் கள்ளிக்காட்டு இதிகாசம் மூன்றாம் முறையாக படித்து முடித்தேன்

 கள்ளிக்காட்டு இதிகாசம் … கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இணையற்ற காவியம் …கரிசல் மண்ணின் வலி கூறும் வாழ்க்கையின் பதிவு.. ..கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் வைகை அணை …அதன் பெருமையும் பயனும் பலப்பல ..காலத்தின் போக்கில்.. காலக் கட்டாயத்தில் அணை கட்டுவது  அவசியமான ஒன்று.

இருப்பினும் அந்த அணையின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் எத்தனை எத்தனை கிராமங்கள்.. எத்தனை எத்தனை  கதைகள் …எத்தனை புதையுண்ட பேயத் தேவர்கள்… புதையுண்டது அவர்களும்,  அவர்கள் பொருட்களும் மட்டுமல்ல.. அவர்கள் உணர்வுகளும் தான். இதனை இக்கதை அழகாக உணர்த்துகிறது .

இக்கதையை படித்தவர்கள் பேயத் தேவரையும், மொக்கராசுவையும் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டார்கள் அத்தனை இயல்பான கதாபாத்திரங்கள். கரிசல் மண்ணின் விதைகள்.

பசுவுக்கு பிரசவம் பார்க்கும் பேயத் தேவர் ..நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் வீட்டில் இருந்த லஷ்மி பசுவின் கன்றுகள் ஈன..ஈன.. இறந்ததைப் பற்றி  எனக்கு நினைவுக்கு வந்தது. பேயத்  தேவர் இருந்தால் அவற்றை  காப்பாற்றி இருப்பாரோ என்ற எண்ணமே மேலோங்கியது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக செதுக்கப்பட்டு  இருக்கிறது இக்கதையில்.செல்லத்தாயி ..பேயத் தேவரின் மகள் ..அவளை மறுமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை.. பாசமான முருகாயி ..இப்பவோ அப்பவோ என்று கிடைந்த பேயத் தேவரின் மனைவி..உருப்படாமல் சண்டைக்கு நிற்கும் மகன் சின்னு என்ற சின்னாத் தேவன்  என கதையின்  ஒவ்வொரு கதாபாத்திரமும் ஜீவனுடன் திகழ்கிறது. தாயின் இரண்டாவது திருமணத்தை ஏற்க மறுக்கும் மொக்கராசுவின்  மன உணர்வுகள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

பேயத் தேவரின் மனைவியின் மறைவு மிகவும் நெகிழ்வான ஒரு நிகழ்வு.

இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். விளைச்சல் இல்லாத, இயற்கையே வஞ்சித்து விட்ட, ஒரு கரிசல்காட்டு மண்ணின் மக்களுடைய அவல வாழ்க்கையை அழகாக காட்டுகிறது இக்கதை.

இறுதியில் அணைகட்ட சர்க்கார் கொடுக்கும் காசுக்கும் போட்டியிடும் உறவுகள் ..அணை கட்டப்பட்டு அணையில்  தண்ணி வரும்போது வீடு வாசல் என அனைத்தையும் இழந்து ..காடுகரை , கரிசல் மண் சொந்தம் பந்தம், அனைத்தையும் தொலைத்து, இறுதியில் உயிரையும் விடும் பேயத் தேவரின் முடிவு மனதை விட்டு பலகாலம் அகலாது என்றே தோன்றியது…

கதை  படித்து முடித்தபின் பல மணி நேரம் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தேன்.இனி வைகை அணையை பார்க்கும்போதெல்லாம் பேயத் தேவரின் வாழ்க்கையும் கரிசல் மண்ணின் மணமும் மனதை நெருடும் என்பதில் ஐயமில்லை…

கவிப்பேரரசு வைரமுத்துவின் மிகச்சிறந்த புத்தகம் இது என்பதில் ஐயமில்லை.. பலமுறை படித்த பின்னும் முதல் தடவை படிப்பது போன்ற உணர்ச்சி புயலில் மனம் சிக்கி தவிப்பது அவருடைய எழுத்தாளுமைக்கு கிடைத்த  வெற்றி. புத்தகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமும் அதுவே… எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய மிக அருமையான புத்தகம் இது.

தி. வள்ளி, திருநெல்வேலி.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வேரை வெறுக்கும் விழுதுகள் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    பிரிவு! (சிறுகதை) – இரஜகை நிலவன்