எழுத்தாளர் விடியல் மா.சக்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏண்டாப்பா, எங்க போயிட்டு வர்ற?”
“ஆத்தங்கரைக்குப் பாட்டி, ஏங் கேக்கறேள்?”
“கேசவா பொய் சொல்லாதேடா, அந்தப்பொண்ணு நந்தினிய பாத்துட்டுத்தான வர்ற”
“ஆமா, தெரிஞ்சுக்கிட்டே கேக்கறேளே”
“சுடுகாட்டுக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லு, இது சுவாமிநாதனுக்குத் தெரிஞ்சா என்ன ஆகுன்னு தெரியுமோன்னோ நோக்கு?”
” அது சுடுகாடு இல்ல பாட்டி நந்தினியோட வீடு”
” அது சுடுகாட்டுக்குள்ளதாண்டா இருக்கு”
” பாட்டி, இப்ப என்ன வேணும் நோக்கு? “
” நேக்கு என்ன வேணுன்றது நோக்கும் தெரியுமே கேசவா”
” அது நடக்காது பாட்டி” என்று வீட்டுக்குள் நுழையப் போனவனைத் தடுத்தாள் சாந்தா பாட்டி,
” சுடுகாட்டுக்கு போயிட்டு வந்துட்டு, அப்படியே ஆத்துக்குள்ள போறியா அபச்சாரம், தலை முழுகிட்டு ஆத்துக்குள்ள போடா ” என்றுக் கூறியவளை முறைத்தான்,
” பாட்டி, தலைமுழுகறதுக்கு நான் என்ன கருமாதிக்கா போயிட்டு வந்தேன். இது என் வாழ்க்கை அப்படியெல்லாம் தலை முழுக முடியாது” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றான்.
அந்த ஊரின் ருத்ரேசுவரர் சிவன் கோவிலில் சிவராத்திரி விழாவிற்கு மும்முரமாக ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் அந்தக் கோயிலின் அர்ச்சகர் சுவாமிநாமன்.
” ஏண்டா அம்பி பாத்துடா விக்ரகத்த தொட்டுற போற” என்று அவர் கூறியதற்கு அவரை முறைத்துவிட்டு,
“அப்ப நீங்களே ஏறிவந்து கட்டுங்க ஐயரே” என்றான் முருகன்.
“கோவிச்சுக்காதடா, நீ ஏறி நிண்னுண்டு இருக்கிற ஸ்டூல் ஆடுறது பாரு, அதான் சொன்னேன் இது ஒரு குத்தமாடாப்பா” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்க, அங்கே தர்மகர்த்தா இரத்தினவேல் வந்துகொண்டிருந்ததை பார்த்துவிட்டு,
” வாங்கோ, வாங்கோ நான் நெனச்சுன்டே இருந்தேன் நீங்களே வந்துட்டேள்”
” என்ன ஐயரே என்னை எதுக்கு நெனைச்சீங்க? “
” அது ஒன்னுமில்ல, இன்னிக்கு பூஜைக்கு உங்க ஆத்துலேர்ந்து வர்றாலோன்னோ”? “
” ஏன் ஐயரே அப்படி ஒரு சந்தேகம் எல்லாம் கரெக்டா வந்துறுவோம். நான் வந்தது அதுக்கு இல்ல இந்த சிவராத்திரிக்கு எல்லா ‘சனங்களும்’ வருவாங்க போலிருக்கு” என்று பொடி வைத்தாற் போல பேசினார் இரத்தினவேல்.
“என்ன சொல்றேள்!, நேக்கு ஒன்னும் புடிபடல? ”
“யோவ் ஐயரே!, செய்யறதையும் செஞ்சுட்டு ஒன்னுமே தெரியாதமாதிரி நடிக்கிறியே! “
” சிவசிவா, நேக்கு ஒன்னும் வெளங்கல கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்கோ”
” யோவ் ஐயரே, இன்னிக்கு சிவராத்திரிக்கு அந்த வெட்டியானோட பொண்ணு நந்தினி வீணை வாசிக்க ஏற்பாடும் பண்ணிட்டு இப்ப ஒன்னுமே தெரியாதமாதிரி பேசறியே”
” எந்த நந்தினி? “
” யோவ், அதான்ய்யா அந்த வெட்டியானோட பொண்ணு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேசவன் வந்தான்.
“ஏன் வெட்டியானோட பொண்ணுன்னு கேவலமா பேசறேள். வெட்டியானோட பொண்ணு வீணை வாசிக்கப்படாதா, கலைங்கிறது எல்லாத்துக்கும் பொதுதானே” என்று தர்மகர்த்தாவிடம் சீறினான்.
” டேய் கேசவா இதெல்லாம் ஒன் ஏற்பாடா, ஏண்டா அவாளுக்கெல்லாம் கலையப் பத்தி என்னடா தெரியும். ஏதோ வீணை வாசிக்க கத்துண்டா போறுமா, கலைவாணின்னு நெனப்போ”
” ஏப்பா நீங்களே இப்படிப் பேசறேளே ஞாயமா. நீங்கதான சொல்லியிருக்கேள் பகவானும், கலையும் ஒன்னு, பகவான் எப்படி தூண்லயும், துரும்புலயும் இருப்பாரோ அதுபோலத்தான் இந்தக் கலையும் எங்க வேணாலும் தன்னை வளர்த்துக்குன்னு அன்னிக்கு சொன்னேளே”
” அதுக்காக ஒரு வெட்டியானோட பொண்ண கோயிலுக்குள்ள ஏத்தறதா?”
” அப்பா அது அவங்கப்பாவோட தொழில், அதுக்கு நந்தினி என்னப்பா பண்ணுவா” என்றவனிடம் தர்மகர்த்தா குறுக்கிட்டு பேசினார்.
” யோவ் ஐயரே அப்பனும், புள்ளையுமா சேர்ந்து நாடகம் ஆடுறீங்களா. உங்க புள்ளையாண்டான் அந்த வெட்டியானோட வீட்டுக்கு போறதும், அந்தப் பொண்ணை உருகி உருகி காதலிக்கிறதும் ஒனக்கு தெரியாமத்தான் நடக்குதா என்ன? “
” அய்யய்யோ, அபச்சாரம், அபச்சாரம் எம் புள்ள கேசவனயா சொல்றேள் அப்படியெல்லாம் இருக்காதே, டேய் கேசவா என்னடா இதெல்லாம்? “
” ஆமாம்ப்பா நான் அந்த நந்திணியைத்தான் கட்டிக்கப் போறேன் நானே எப்படிச் சொல்றதுன்னு தவிச்சுண்டிருந்தேன், தோ இப்ப இந்த தர்மகர்த்தாவே உங்ககிட்ட சொல்லியது நேக்கு ஈசியாடுத்து”
” அய்யோ பகவானே என்னடா இதெல்லாம் நாம எங்க? அவா எங்க? “
” அப்பா, உங்களுக்கு அவளோட சாதி மட்டுந்தான் கண்ணுக்குத் தெரியறது ஆனா நேக்கு அவாளோட கலை மட்டுந்தான் கண்ணுக்குத் தெரியறது. நேக்கும் புடிச்சுருக்கு அவளுக்கும் புடிச்சுருக்கு. அப்படி நீங்க தப்புன்னு நெனச்சேள்னா, உங்க பகவான் ஈசுவரனே சுடுகாட்டு வெட்டியான்தான அப்புறம் என்னப்பா தடை. அதுமட்டுமில்ல இன்னிக்கு சிவராத்திரிக்கு அந்த நந்தினியோட வீணை இசையைக் கேட்டுப் பாருங்கோ தெரியும், சாட்சாத் அந்த கலைவாணியே வந்து வாசிக்கிறதா நெனச்சுடுவேள்” என்று சொல்லிவிட்டு கேசவன் வீணை வாசிக்க இருக்கும் மேடையை தயார் செய்யப் போனான்.
அன்று இரவு முழுவதும் அந்த நந்தினியோட வீணை இசையில், இறைவனே மயங்கி வந்து நின்று கேட்டதைப் போல கோயிலுக்கு நேர்ந்துவிட்ட காளை ஒன்று வந்து நின்று நந்தினியின் வீணை இசையை இரசித்ததை அந்த மொத்த ஊர்மக்களும் பார்த்து வியந்துப் போனார்கள்.
கலை என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானது. கலை சாதி, மதம் பார்த்து வருவதில்லை என்பதை அனைவரும் இன்று அறிந்து கொண்டனர்.
எழுத்தாளர் விடியல் மா.சக்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings