in ,

கை கொட்டிச் சிரிப்பார்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

 2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஏனென்றே தெரியவில்லை, காலையிலிருந்தே உடம்பு ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. யாரைப் பார்த்தாலும், யார் பேசினாலும் கோபம் கோபமாய் வருகின்றது.  “ஒரு பெரிய நிறுவனத்தில் ஜென்ரல் மேனேஜராக இருக்கும் நான் இப்படியிருந்தால் அது நல்லதில்லையே?… அதுவும் ஒரு பெண் “கடு…கடு”வென்றிருந்தால் அது தப்பாயிடுமே?”

“எக்ஸ்க்யூஸ் மீ மேடம்”

யோசனையிலிருந்த நான் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்தேன்.  காயத்ரி அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.  என் ஸ்டெனோ.

“மேடம்… பேங்கிலிருந்து இன்னிக்கு ஸ்டாக் வெரிஃபிகேஷனுக்கு வர்றதா சொல்லியிருக்காங்க மேடம்!.. நீங்க ஓ.கே.சொன்னா நான் மறுபடியும் கூப்பிட்டுக் கன்ஃபர்ம பண்ணிடுவேன் மேடம்”

“நோ!.. ஐயாம் நான் வெல் டுடே!…இன்னொரு நாளைக்கு வெச்சுக்கலாம்னு சொல்லிடு” என்றேன்.

“ஓ.கே.மேடம்” என்றவள் தாழ்வான குரலில், “மேடம் உங்க உடம்புக்கு என்ன?… ஏன் உங்க முகம் இப்படியிருக்கு?” ஜி.எம் – ஸ்டெனோ என்கிற அலுவலக உறவு தாண்டி எங்களுக்குள் நட்பு உண்டு.

“ஆமாம் காயத்ரி… காலையிலிருந்தே ஒரு மாதிரி நெர்வஸா இருக்கு!”

             “அப்ப… லீவ் போட்டுட்டுப் போய் ரெஸ்ட் எடுக்கலாமே மேடம்?” உண்மையான அக்கறையோடு அவள் சொல்ல,

            “இட்ஸ் ஓ.கே. காயத்ரி!… அந்த அளவுக்கு ஒண்ணும் சீரியஸா இல்லை!… மேனேஜ் பண்ணிக்கலாம்”   என்றேன்.

             “அப்படின்னா சரி மேடம்” சொல்லி விட்டு அவள் வெளியேற, அடுத்த அரை மணி நேரம் எந்த ஃபைலையும் பார்க்காமல், எந்த போன் காலையும் அட்டெண்ட் செய்யாமல் வெறுமனே அமர்ந்திருந்தேன்.

            அறைக் கதவை யாரோ சுரண்டும் ஓசை கேட்க, “யெஸ் கம் இன்” என்றேன் சலிப்புடன்.

            தயக்கமாய் உள்ளே வந்தாள் வத்சலா.  அட்டெண்டர் பெண்.

             “என்ன?” கேட்டேன்.

             “மேடம்… அது… வந்து… ஒரு மூணு நாள் லீவு வேணும் மேடம்!” அச்சத்துடனேயே கேட்டாள்.

             “என்னது?… மூணு நாள் லீவா?… எதுக்கு?” சற்றுப் பெரிய குரலில் கேட்டேன்.

            நீண்ட நேரம் பதில் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தவளைப் பார்த்து, “சொல்லும்மா… எதுக்கு திடீர்னு மூணு நாள் லீவு?” மறுபடியும் கேட்டேன்.

            “மேடம்… வந்து… இந்தத் தடவையும் சிக்கலாயிடுச்சு மேடம்!… அதான் ஆஸ்பத்திரிக்குப் போய் வயித்தைக் கழுவிட்டு வரலாம்னு” நெரடியாக என் முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியாமல், கீழே தரையைப் பார்த்துக் கொண்டு அவள் சொல்ல,

             ஏற்கனவே நார்மல் மூடில் இல்லாத நான் வழக்கத்தை விட அதிகமாய் எரிச்சலானேன். “யூ மீன்?… அபார்ஷன்!… இஸிட்?”

            அவள் மேலும், கீழுமாய்த் தலையை ஆட்டினாள்.

            சில நிமிடங்கள் அவள் முகத்தையே கோபத்துடன் பார்த்த நான், “ஏய்…உன் மனசுல நீ என்ன நெனச்சிட்டிருக்கே?… மூணு மாசத்துக்கொரு தரம் இதே வேலையாய்ப் போச்சு உனக்கு!… போன தடவையே என்ன சொன்னேன்?… “வேண்டாம்டி… இப்படி அடிக்கடி அபார்ஷன் பண்ணினா உடம்பு தாங்காதுடி.. வீண் பிரச்சினைகள் வந்திடும்டி”ன்னு படிச்சுப் படிச்சு சொன்னேன் அல்ல?…” ஆட்காட்டி விரலைக் காட்டி மிரட்டலாய்க் கேட்ட்டேன்.

             “திட்டாதீங்க மேடம்!… நான் எவ்வளவோ கண்ட்ரோலாய்த்தான் இருந்தேன்!… என் புருஷந்தான்…” இழுத்தாள் வத்சலா.

             “ச்சீய்!… வாயை மூடு!… கூட சேர்ந்து நீயும் கூத்தடிச்சிட்டு… இப்ப பழியைபுருஷன் மேலே போடறியா?… வெட்கமாயில்லை உனக்கு?…”என்ற நான் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு, “ஆமாம்… உனக்கு வயசு… ஒரு முப்பத்தியஞ்சு இருக்குமா?” கேட்டேன்.

             “முப்பத்தியெட்டு மேடம்”

             “இந்த வயசுல இது தேவையா?… ஏற்கனவே மூணு கொழந்தைக இருக்கு!… உங்க ரெண்டு பேருக்கும் ஒரு நிதானம்… ஒரு ஜாக்கிரதை உணர்வு இருக்க வேண்டாமா?… கன்ஸீவ் ஆகாம இருக்க எத்தனையோ வழிக இருக்கல்ல?.. அதெல்லாம் உங்க ஞாபகத்துக்கே வராதா?… உங்களையெல்லாம்…” பற்களை “நற…நற”வென்று கடித்தேன்.

            அவள் கண்களில் கண்ணீர் தெரிய,

            நான் கொஞ்சம் மனம் இளகினேன்.  “சரி… சரி… மூணு நாள் என்ன?… நாலு நாள் வேணாலும் லீவு போட்டுக்கோ!… ஆனா… இதுதான் கடைசித் தடவை!… இன்னொரு தரம் இந்த மாதிரி… இந்தக் காரணத்துக்காக என் கிட்ட வந்து நிற்கக் கூடாது… என்ன?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு ஆர்டர் போடும் விதமாய்ச் சொன்னேன்.

             “சரிங்க மேடம்!… இனிமேல் சர்வ ஜாக்கிரதையா இருக்கேன்” சொன்னவள் இருந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நிற்க,

             “ஏய்… அதான் லீவு போட்டுக்கோ!ன்னு சொல்லிட்டேனல்ல?… அப்புறம் ஏன் இன்னும் நிற்கறே?” என் உடல் சுகவீனம் என்னை சத்தமில்லாமல் வதைக்க, அந்த வேதனையின் வெளிப்பாடாய் அவளைக் கத்தினேன்.

             “வந்து… மேடம்… அட்வான்ஸ்?”

            எனக்கிருந்த எரிச்சலுக்கு இதுவே வேறொரு நாளாயிருந்தால் அவளைக் கடித்துக் குதறியிருப்பேன்.  ஆனால், இன்று என்னுடைய உடல் நிலை அதற்கு ஒத்துழைக்காததால், “போ…போய் வாங்கித் தொலை” கத்தித் துரத்தினேன்.

     அவளும் “ஆளை விட்டால் போதும்டா சாமி” என்கிற பாணியில் அவசர அவசரமாய்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஆடினாள்.

     அவள் சென்றதும் இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு, குனிந்து அமர்ந்தேன்.  அன்று முழுவதும் அவளைப் பற்றிய சிந்தனையே எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. “என்ன பொம்பளை இவளெல்லாம்?… இத்தனை வயசுக்கப்புற்மும் “அது” இல்லாமல் இருக்க முடியாதா இவளால்?.. கேட்டா… ‘படக்’குன்னு புருஷன் மேல் பழியைப் போட்டுட்டு நழுவிக்கறா…”

                                                                                    —-

            மாலை வீடு திரும்பியதும், புடவையைக் கூட மாற்றாமல் அப்படியே ஹால் சோபாவில் சாய்ந்து படுத்தேன்.  எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தேனென்று தெரியவில்லை.

      “லலிதா… லலிதா”

      கண் விழித்துப் பார்த்தால் என் கணவர் நின்றிருந்தார்.  “அன்ன லலிதா?… என்னாச்சு உனக்கு?…ஏன் இப்படிப் படுத்துக் கிடக்கே?… உடம்பு சரியில்லையா?” கேட்டவாறே என் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவர், “அடடே… ஃபீவர் இருக்கும் போலிருக்கே?” என்றார்.

             “ஆமாங்க… காலையிலிருந்தே உடம்பு ஒரு மாதிரியாகத்தான் இருக்கு!.. எப்படியோ சமாளிச்சு ஆபீஸ்ல உட்கார்ந்திருதேன்” என்றேன் தளர்வாய்.

      “ஒரு போன் பண்ணியிருக்கலாம் அல்ல?”

      “ப்ச்… நாட் சீரியஸ்…ன்னு விட்டுட்டேன்”

     என்னைக் கோபமாய்ப் பார்த்தவர், “சரி.. எந்திரிச்சுக் கிளம்பு” என்றார் என் தோளைத் தொட்டுத் தூக்கியபடி.

      “எங்கே?” தலையைத் தூக்கிப் பாஅர்த்துக் கேட்டேன்.

      “இதென்ன கேள்வி?… டாக்டர்கிட்டே தான்”

      “இல்லைங்க… அதெல்லாம் வேண்டாம்ங்க!… ஒரு மாத்திரையைப் போட்டுக்கிட்டு தூங்கி எந்திரிச்சாப் போதும்ங்க…. சரியாயிடும்”

      “நோ… அந்த வேலையே வேண்டாம்… கிளம்பு மொதல்ல”

      அவர் ஒரு முடிவு செய்து விட்டாரென்றால் அதை மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தவளானதால் உடனே கிளம்பினேன்.

—-

     கிளினிக்.

     ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்டெல்லாம் முடித்த பிறகு, என்னையும் என் கணவரியும் அழைத்து தன் மேஜைக்கு எதிரே அமர வைத்த டாக்டர், “மிஸ்டர் நாராயணன்!… உங்களை கன்கிராஜுலேட் பண்றதா?… வேண்டாமா?”ன்னே எனக்குப் புரியலை!”

     சொல்லி விடு ஒரு குறுஞ்சிரிப்புடன் அவர் எங்கள் இருவரையும் பார்க்க, இருவருமே குழப்ப முகத்துடன் அவரைப் பார்த்தோம்.

      “எனி வே!… ஒரு டாக்டரா… நான் உங்களை கன்கிராஜுலேட் பண்ணிடறேன்!…”

      “டா….க்….ட….ர்” நான் திக்கித் திணறிச் சொல்ல,

      “யெஸ்.. மிசஸ் லலிதா நாராயணன்… நீங்க கன்ஸீவ் ஆகியிருக்கீங்க!”

      எனக்கு பூமியிலிருந்து நழுவி எங்கோ பாதாளத்தில் தலைக் குப்புற விழுவதைப் போலிருந்தது.

      “டாக்டர்… நீங்க சொல்றது நிஜமா?”

      “அவர் மீண்டும் அதையே உறுதிப்படுத்திச் சொல்ல,

     அமெரிக்காவிலிருக்கும் என் பெண்ணும், மாப்பிள்ளையும்….

     ஹைதராபாத்தில் ஸாப்ட்வேர் எஞ்சினீராகப் பணி புரியும் என் பேச்சிலர் மகனும்….

     எல்லோருக்கும் மேலாக,

     என் ஆபீஸ் அட்டெண்டர் வத்சலாவும்….

     என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கை கொட்டிச் சிரிப்பதைப் போலிருக்க, “நோ…..”அலறினேன்.

     என் உச்சஸ்தாய் கத்தலில் பயந்து போன என் கணவர், என்னை ஆசுவாசமாய்த் தழுவிக் கொண்டு, என் முதுகைத் தட்டி ஆறுதல் படுத்த,

     நான் என்ன செய்வதென்றே புரியாமல் அழுதேன்.

                                (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 11) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    செல்லக்குட்டி மணி – சத்யா பானு