இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நேரமும், வாய்ப்பும் எல்லோருக்கும், எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. முயற்சி எடுப்பவர் மட்டுமே சிகரத்தைத் தொடுகின்றனர். அங்கொரு சிம்மாசனம் போட்டு அமர்கின்றனர். ஆனால், முயற்சியெடுக்கவே தயங்குபவன் முன்னேற்றத்தின் வாசலைக் கூட நெருங்க முடியாது. வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. ஆனால், வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு எங்காவது வரலாறு உண்டா?
செப்டம்பர் 2024.
ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான “ஒளியின் நகரம்” என்றழைக்கப்படும் பாரீஸ்.
160 நாடுகள் கலந்து கொள்ளும் “பாராலிம்பிக்ஸ்” போட்டியைக் காண உலகமே பாரீஸ் நகரில் குவிந்திருந்தது.
மாற்றுத் திறனாளிகளை வரவேற்பதற்கென்றே விசேஷமான ஏற்பாடுகளை அந்நாட்டின் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
சாதாரண நாட்களிலேயே விழாக் கோலம் பூண்டிருப்பது போல் காட்சியளிக்கும் பாரீஸ் நகரம் உண்மையிலேயே விழாக் கோலம் பூண்டிருந்தது.
கோகுல்தாஸ் வழி நடத்திச் செல்ல, போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களான முருகன், சுந்தரம், ஈஸ்வரன், ஆகியோரும், அவர்களுக்குப் பாதுகாப்பாளர்களாக வந்திருக்கும் சரஸ்வதியும், கோபியும் பாரிஸ் நகரின் அழகிலும், ஆடம்பரத்திலும் மிரண்டு போய் அவரைப் பின் தொடர்ந்தனர்.
போட்டிகள் முடியும் வரை வீரர்களுக்கு வெளியில் சுற்றவோ, சுற்றுலாத்தளங்களுக்குச் செல்லவோ அனுமதியில்லை, என்கிற காரணத்தால் அவர்கள் நேரே போட்டிகள் நடைபெறும் இடத்திற்கே சென்றனர்.
இந்திய அரசாங்கமே பாராலிம்பிக்ஸ் வீரர்கள் எத்தனை கோப்பைகளைத் தட்டி வரப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தில் விளையாட்டுத்துறை அதிகாரிகளை நேரடியாகவே பாரீஸிற்கு அனுப்பி வைத்திருந்தது. அவர்களும் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பாய்க் காட்டிக் கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை இல்லவாசிகள் மட்டுமன்றி பொது மக்களும் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் ஈஸ்வரன் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்தான்.
“நான் மட்டும் என்ன இளைத்தவனா?”… என்று கேட்பது போல் முருகன் தட்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்று காட்டினான்.
இறுதியாக நடைபெற்ற வில் வித்தைப் போட்டியில் சுந்தரம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு வெள்ளி மெடல் மட்டுமே வென்றான்.
மொத்தத்தில் தூத்துக்குடி மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தின் வீரர்கள் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி என மூன்று கோப்பைகளை வென்று தாய் நாட்டிற்கும், தாங்கள் பிறந்து வளர்ந்த ஊருக்கும், இல்லத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
தொலைக்காட்சியில் கண்டு களித்த இல்லவாசிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜனாதிபதி, பிரதம மந்திரி, முதலமைச்சர் உட்பட பலர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
பிரதமர் தங்கம் வென்ற வீரர்களுக்கு தலா இருபது லட்சமும், வெள்ளி வென்ற வீரருக்கு பதினைந்து லட்சமும் பரிசாய் அறிவிக்க, மாநில முதலமைச்சர் எல்லோருக்கும் தலா பத்து லட்சம் அறிவித்தார்.
2024 அக்டோபர் முதல் வாரத்தில் டெல்லி வந்திறங்கிய இந்திய பாராலிம்பிக்ஸ் வீரர்களை பாராலிம்பிக்ஸ் கமிட்டி வரவேற்று விருந்தளித்து மகிழ்ந்தது.
தத்தம் மாநிலங்களுக்குத் திரும்பிய வீரர்களை மாநில அரசின் விளையாட்டுத்துறை வரவேற்று சிறப்பு செய்தது.
பதக்கம் வென்று வந்த வீரர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் பாராட்டு விழா ஏற்பாடாகியிருந்தது. விழாவினை கோகுல்தாஸ் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.
தொழிலதிபர் வித்யாசாகர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இல்லத்தின் பின்புறமிருந்த மைதானத்தில் பெரிய பந்தல் போடப்பட்டிருக்க, உள்ளூர் மக்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கூட்டம் அதிகமாகிக் கொண்டே போக, மைக்கில் அறிவிப்பு ஒலித்தது.
“இன்னும் சில மணித்துளிகளில் தொழிலதிபரும், வாழும் பாரி வள்ளலுமான திரு.வித்யாசாகர் அய்யா அவர்கள் வந்து விடுவார். அவர் தன் பொற்கரங்களால் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பொன்னாடை அணிவித்து, அவரது குழுமம் சார்பாக ரொக்கப் பரிசினையும் வழங்குவார்”
அடுத்த பத்தாவது நிமிடம் வந்து நின்ற காரிலிருந்து இறங்கப் போகும் தொழிலதிபர் வித்யாசாகரைக் காண அனைவரும் ஆவலோடு காத்திருக்க, முதலில் ஒரு வீல் சேர் இறங்கியது.
எல்லோரும் முகம் சுளிக்க, அதில் அமர்ந்தபடியே இறங்கிய வித்யாசாகருக்கும் தொடைக்குக் கீழே இரண்டு கால்களுமே சூம்பிப் போயிருந்தன. மொத்தக் கூட்டமும் விக்கித்துப் போனது.
“உள்ளூர்… வெளியூர்… உள்நாடு… வெளிநாடு… என எல்லா இடங்களிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் வித்யாசாகர் மாற்றுத் திறனாளியா?”
மேடையேறிய வித்யாசாகர் அந்த வீல் சேரில் அமர்ந்தபடியே மாற்றுத் திறனாளி வீரகளுக்கு சால்வை அணித்து ரொக்கப் பரிசினை வழங்கினார்.
இறுதியாய் அவர் பேசும் போது, “மாற்றுத் திறனாளிகள் மனத்தில் எந்த நேரத்திலும் தாழ்வு மனப்பான்மை வந்து விடக் கூடாதென்றும், அப்படி வந்து விட்டால் அந்த நிமிடத்திலிருந்தே அவர்களின் செயல்பாடுகள் முடங்கிப் போய் விடும்!”, என்றும், “நேற்று செய்ய வேண்டியதை இன்று செய்தால் அவன் சோம்பேறி, இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால் அவன் சுறுசுறுப்பானவன், நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்து முடித்தால் அவன் வெற்றியாளன்!… எந்த விமானமும் ஓடு பாதை முடிந்து விட்டதென்று நின்று விடுவதில்லை, அங்கிருந்துதான் மேலெழும்புகின்றது. அதே போல் “பதக்கம் வென்று விட்டோம்…. இதுவே போதும்” என்று இருந்து விடாமல் தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு மேலும் பல பதக்கங்களை வென்று குவிக்க வேண்டும் என்ற என் அறிவுரையை பதக்கம் வென்ற சிறார்களுக்கு சிறப்பு அறிவுரையாக வழங்குகிறேன்” என்றார்.
முருகனும், சுந்தரமும், ஈஸ்வரனும் தங்கள் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தனர்.
தொடர்ந்து அந்த இல்லத்திலிருந்து மேலும் பல வீரர்கள் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கான பயிற்சி மற்றும் இதர செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்ளப் போவதாகவும் தொழிலதிபர் வித்யாசாகர் அறிவிக்க, கூட்டத்தினர் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
தங்கள் வாழ்க்கைப் பாதை முழுவதும் இருட்டுத்தான் என்றெண்ணிக் கொண்டிருந்த அந்த இல்லவாசிகள் அனைவரும் புத்துணர்வு பெற்று, சாதிக்கத் துணிந்தனர்.
ஊர்ப் பொதுமக்களும் மாற்றுத் திறனாளிகளை மதிப்போடும், மரியாதையோடும் பார்க்கத் துவங்கினர். பலர் வலியச் சென்று அந்த வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தை பத்திரிக்கைக்காரர்கள் விசேஷ பேட்டி எடுத்தனர்.
பேட்டியின் இறுதியில் ஒரு ரிப்போர்ட்டர் அந்தக் கேள்வியைக் கேட்டார்.
“சார்… ஒரு பர்ஸனல் கேள்வி… நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது”
“ம்… கேளுங்க” என்றார் ஆறுமுகம் சிரித்துக் கொண்டே,
“வந்து… உங்களுக்கு.,… முப்பத்திமூணு வயசாச்சு”ன்னு சொன்னீங்க… ஓ.கே… ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பேச்சிலராகவே இருக்கிறீர்கள்?… அதற்கு ஏதாவது காரணம் உண்டா?”
ஆறுமுகத்தின் சிரித்த முகம் மாறியது. சோக ரேகைகள் உடனே படர்ந்தன. அவர் உடல் மொத்தமும் லேசாய் நடுங்குவது போலத் தெரிந்தது.
சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த கோபியும், சரஸ்வதியும் அதைக் கூர்ந்து கவனித்தனர்.
“நாம இதுவரைக்கும் இப்படியொரு கேள்வியை இவர் கிட்டே கேட்க மறந்தது ஏன்?… அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஆறுமுகம் சாரின் முகத்தில் ஏன் அப்படியொரு சோகம்?… அப்படியென்றால்… இதற்குப் பின்னால் ஏதோவொரு கதை இருக்கின்றது!… ஆறுமுகம் சாருக்கு ஒரு பெரிய ஃப்ளாஷ் பேக் இருக்கு… கண்டுபிடிப்போம்” தனக்குள் சொல்லிக் கொண்டாள் சரஸ்வதி.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings