இயற்கை காற்று வீசிக் கொண்டிருந்த நேரம், கையை நீட்டியவாறு தீடீரென பருவமழை மெதுவாக வரத்தொடங்கி சில்லென்று மலைச்சாரல் என் மேனியைத் தீண்டியது
“கிருத்திகா” என்ற அழைப்பு கேட்க, திடுக்கென்று கண்விழித்துப் பார்த்தேன். பின் தான் உணர்ந்தேன், அனைத்தும் கனவென்று
கனவால் விழித்த கிருத்திகா, தன் படுக்கையில் இருந்து எழுந்து அன்றாட வேலையை நோக்கி நகர ஆரம்பித்தாள். சூடான காபியை குடித்து விட்டு கல்லூரிக்கு செல்லப் புறப்பட்டாள்.
நடுத்தரமாகப் படிப்பாள், ஆனாலும் மிகவும் திறமையானவள். முதல் வருடக் கல்லூரி வாழ்க்கையில் சிறகடித்தப் பட்டாம்பூச்சியைப் போல பறந்துக் கொண்டிருந்தவள், ஒரு நாள் சீனியர் ஒருவனைப் பார்த்ததும் மனதை பறிகொடுத்தாள்
அவன் பெயர் அருண். கல்லூரியில் மிகவும் பிரபலமான ஒருவனாக வலம் வந்தான் அருண். அவனை பல பெண்களுக்கு பிடித்திருந்தது. ஆனால் அவனுக்கு பிடித்தது என்னவோ கிருத்திகாவைத் தான்
ஆனால் அருண், கிருத்திகாவிடம் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கிருத்திகாவும் அதில் பெரிதும் கவனம் செலுத்தவில்லை
அருண் அவனது நண்பர்களிடம் கிருத்திகாவை பற்றி அடிக்கடி விசாரித்துக் கொள்வான். அவளது நடவடிக்கை ஒவ்வொன்றும் தனக்கு உடனடியாக வந்து சேரும் படி நண்பர்களை அமைத்துக் கொண்டான்.
கிருத்திகாவும் அவனுக்கே தெரியாமல் நண்பர்களிடம் அருணைப் பற்றி தெரிந்துக் கொண்டாள். இப்படியே பேசா காதல் அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.
நாட்கள் செல்ல செல்ல, அருண் மிகவும் கோபக்காரனாய் ஆனான். கல்லூரியின் மாஸ் ஹீரோவாக பார்க்கப்பட்டான். கல்லூரியில் அருணைத் தெரியாத பெண்களே இல்லை என்ற நிலை உருவானது. இப்படியாக ஒரு வருடக் காலம் உருண்டோடியது
மீண்டும் கல்லூரியில் அடுத்த வருடப் படிப்பு ஆரம்பமானது. இவ்வருடமாவது கிருத்திகாவிடம் தன் காதலை சொல்லி விட வேண்டும் என நினைத்தான் அருண்.
ஒரு நாள் அவளிடம் காதலை கூறினான். அவளும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு தன் மனதை தெரியப்படுத்தினாள். இருவரும் சந்தோச வானில் பறந்தனர்
நாட்கள் செல்ல செல்ல, எல்லா காதலர்கள் போல் இவர்களுக்குள்ளும், சிறுசிறு சண்டைகள் வரத் தொடங்கின. நாளடைவில் அன்பால் சரி அதை செய்துக் கொண்டனர்.
சில மாதங்களில் அருண் தன் கல்லூரி வாழ்க்கையை முடித்தான். ஆனால் தகுந்த வேலை கிடைக்கவில்லை. அருண் இல்லாத கல்லூரி வாழ்க்கை கிருத்திகாவிற்கு கசந்தது
அவளும் தன் கல்லூரி வாழ்க்கையை அடுத்து வந்த வருடத்தில் முடிக்க, அவளுக்கு உடனேயே தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை கிடைத்தது. அருணுக்கு சரியான வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தான்
இரண்டு வருடங்கள் இப்படியே கடக்க, கிருத்திகா வீட்டில் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தனர்
அதைக் கேட்டதும் அவள் மனம் படப்படத்தது. இவ்வளவு நாட்கள் படித்துக் கொண்டிருக்கிறேன், வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன் என சாக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்
“எந்த சாக்கும் சொல்லாத, கல்யாணம் வாழ்க்கைக்கு தயார் ஆகிக்கோ” என கிருத்திகாவின் வீட்டார் கண்டிப்பாய் கூற, என்ன செய்வதென தெரியாமல் தவித்தவள், அருணிடம் இந்த விஷயத்தை பகிர்ந்தாள்
“நடந்த எல்லாத்தையும் நான் சொல்லிட்டேன், இனி நல்ல முடிவு எடுக்க வேண்டியது நீங்க தான் அருண்” என்றாள் கிருத்திகா
“என்ன கிருத்திகா சொல்ற, உடனே முடுவெடுக்க இதென்ன விளையாட்டா, வாழ்க்கை டி” என்றான் அருண் கோபமாய். அதைக் கேட்ட கிருத்திகாவின் கண்கள் நிறைந்தது
“எனக்கு ஒரு மாசம் டைம் குடு” என அருண் கூற
“அய்யோ அருண் ஒரு மாசம்லாம் எங்க வீட்ல சமாளிக்க முடியாது புரிஞ்சுக்கோ” என பதறினாள் கிருத்திகா
அதன்பின் இரண்டு நாள் ஆகியும் அருணிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. கிருத்திகாவிற்கு மிகவும் கோபம் கொண்டாள்
‘நான் ஒரு நாள் டைம் கொடுத்தேன். ஆனால் இன்னையோட இரண்டு நாள் ஆச்சு. இன்னும் அருண்கிட்ட இருந்து எந்த பதிலும் வரலையே’ என வருந்தினாள்
கைப்பேசியை எடுத்து அருணுக்கு அழைத்தாள். ஆனால் அருண் அவளது அழைப்பை ஏற்கவில்லை. இந்த பாராமுகம் கிருத்திகாவை மிகவும் வருத்தியது
மறுநாள் கிருத்திகாவிற்கு அழைத்த அருண், “சாரி கிருத்திகா, நேத்து உன்னோட கால் எடுக்க முடியல. இன்னைக்கு ஒரு முடிவை சொல்லலாம்னு தான் கால் பண்றேன். என் வீட்டு சூழ்நிலை உனக்கே தெரியும். நான் என் குடும்பத்தை காப்பாற்றி ஆகணும். எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான், அது உனக்கும் தெரியும்.
என் தங்கச்சி ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரணும், அந்த கடமையும் எனக்கு இருக்கு. அவ இப்ப தான் 12th படிக்கிறா. அவ வாழ்க்கையை செட்டில் பண்ணாம என் வாழ்க்கையை பற்றி நான் யோசிக்க முடியாது
இவ்வளவு நாள் காத்திருந்த மாதிரி, இன்னும் சில வருஷம் நீ எனக்காக காத்துட்டு இருந்தா, நான் ஒரு நல்ல நிலைக்கு வந்து விடுவேன். அதுக்கப்புறம் நம்ம கல்யாணம் பேச்ச எங்க அம்மாகிட்ட எடுக்கலாம். இப்ப கண்டிப்பா என்னால கல்யாணத்தைப் பற்றி யோசிக்க முடியாது” என்றான் அருண்.
அதை கேட்டதும் கோபமான கிருத்திகா, “என்ன பேசற அருண்? அப்ப இவ்ளோ நாளா இதை சொல்ல தான் என் கூட பழகினயா? இப்ப தான் உன் வீட்டு சூழ்நிலை உனக்கு தெரியுதா? என்னை கழட்டி விட்றதுக்கு சாக்கு தேடறியா?” என தன் மன ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள் கிருத்திகா
“கிருத்திகா நீ என்ன திட்டினாலும் எனக்கு கவலை இல்லை, எனக்கு என் குடும்பம் தான் முக்கியம், அதுக்கு அப்புறம் தான் நீயும் நம் காதலும்” என்றான் அவனும் கோபமாய்
கோபம் தலைக்கேற அலைபேசியை தூக்கி எறிந்தாள் கிருத்திகா. அலைபேசி சில்லு சில்லாக நொறுங்கியது. நொறுங்கியது அலைபேசி மட்டுமல்ல, அவளின் மனமும் தான்
இத்தனை நாள் அருண் மீது அவன் கொண்டிருந்த காதல் எல்லாம் இன்று வெறுப்பாக மாறியது.
என்ன செய்வது என தெரியாமல் தன் தோழி சுபாவிடம் நடந்த அனைத்தையும் கூறி அழுதாள்
“நான் அருணை அளவுக்கதிகமா நம்பினேன். இப்படி செய்வான்னு, கனவுல கூட நினைக்கல” என தன் மன வலி அனைத்தையும் சுபாவிடம் கொட்டித் தீர்த்தாள் கிருத்திகா. என்ன சொல்வது என்று தெரியாமல் அவளை ஆறுதல்படுத்தினாள் சுபா
கிருத்திகாவின் மனம், ‘தன் அப்பா அம்மா பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு தன் வாழ்க்கையை ஆரம்பித்து மகிழ்ச்சியாக வாழலாம்’ என ஒருபுறம் நினைத்தாலும், மறுபுறம் அருணை மறக்க முடியாமல் தவித்தாள்
கிருத்திகாவிற்கு நன்றாக தெரியும், அருணை பற்றி தன் அப்பாவிடம் கூறினால் துளியும் விரும்பமாட்டார் என
அதனால் அதையும் செய்ய இயலாமல் தவித்தாள். என்ன செய்வது என புரியாமல், பைத்தியம் பிடிப்பது போல் உணர்ந்தாள்
அவனை இனி பார்க்கக் கூட கூடாது என முற்றும் வெறுத்தாள்
அந்த நினைவிலிருந்து மீண்டு வர, கிருத்திகாவிற்கு சில நாட்கள் அவகாசம் தேவைப்பட்டது. அதனால் தன் தந்தையிடம், “ஒரே ஒரு மாசம் டைம் குடுங்கப்பா, அதுக்கப்புறம் நீங்க சொல்ற மாப்பிள்ளைய நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள்
அவள் உதடு அதைக் கூறினாலும், மனம் அதை ஏற்க முடியாமல் துடித்தது. ஒரு மாதத்தில் நடந்த அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயன்றாள்
பிறகு சொன்னது போல் அவளை பெற்றவர் மாப்பிள்ளை பார்க்க, நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது
அவளது வாழ்க்கை துணையும் சிறந்தவனாகவே இருந்தான். ஆதலால், திருமண வாழ்வு அவள் எதிர்பார்த்ததை விட மகிழ்வுடனே சென்றது
நாட்கள் செல்ல செல்ல, அருண் செய்தது அவன் வகையில் நியாயம் தான் என்பதையும் உணர்ந்து கொண்டாள் கிருத்திகா. தன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல், தன் குடும்பத்தை பற்றியும் யோசித்து அவன் செயல்பட்டது நல்லது தான் என நினைத்தாள்
அருண் அப்படி அவசரப்பட்டு தன்னை திருமணம் செய்திருந்தால், இவர்கள் இருவரும் கஷ்டப்படுவதோடு, இரு குடும்பத்தாரும் கூட நிறைய பேரின் ஏளனப் பார்வையை சந்தித்து இருக்கக் கூடும் என்பதை உணர்ந்தாள்
அதோடு, ‘பிறந்தது முதல் நமக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோருக்கு, நமக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தர தெரியாதா?’ என்ற புரிதல் அவள் மனதில் வந்ததும், எல்லாம் நன்மைக்கே என, தன் கணவன் உடனான வாழ்வை முழுமனதுடன் ஏற்று வாழத் தொடங்கினாள் கிருத்திகா
#ad
#ad
GIPHY App Key not set. Please check settings