in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நிறைவுப் பகுதி) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8  பகுதி 9    பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15    பகுதி 16    பகுதி 17

இதுவரை:

ஆராதனா சஞ்சீவ் வாழ்வில் புயல் வீசி ஓய்ந்து, இப்போது தென்றல் வீசத் துவங்குகிறது. தென்றல் தவழ்ந்து மலரில் மோதி வாசம் பரப்பியதா? சுழல் காற்று மீண்டும் எழும்பி தென்றலை வாரிக் கொண்டதா?

பார்க்கலாம்.

இனி:

சென்னையில் மதன கோபாலின் பரந்து விரிந்த வீட்டின் ஒரு அறையில் ஆராதனாவும் அவள் அம்மா சரோஜினியும் உணர்வுப்பூர்வமான உரையாடலில் தங்களை மறந்திருந்தார்கள். மனத்துக்குள் அடங்கிக் கிடந்த உணர்வுகள் பொங்கிப் பிரவாகமாகப் பெருக்கெடுத்து வார்த்தைகளாக வெளியேறிக் கொண்டிருந்தன.

சஞ்சீவின் போன் நம்பர் தன்னிடம் இருப்பதாகவும், சஞ்சீவிடம் அவ்வப்போது பேசிக் கொண்டிருப்பதாகவும் சரோஜினி சொன்னதும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தாள் ஆராதனா. அறைக்கு வெளியே மனத்துக்குள் சூறாவளியே சுழன்று அடிக்கும் அளவுக்கு உள்ளக் கொதிப்போடு இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மதன கோபாலும் அதிர்ந்து போனார்.

ஏற்கனவே தன் மனைவி தனக்கெதிராகப் பேசுவதற்குக் கோபத்தில் இருப்பவர் மதன கோபால். இப்போது தன் செல்ல மகளும் தன் விருப்பத்திற்கு மாறாக சிந்திக்கத் தொடங்கியதை அறிந்ததும் உள்ளம் கொதித்தது அவருக்கு. மேலும் இவ்வளவு வருஷங்கள் தன்னையே நம்பி, தன்னிடம் எல்லா எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆராதனா, இப்போது தன்னைத் தவிர்த்து சரோஜினியிடம் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் மனதுக்குள் புழுங்கினார்.

சஞ்சீவ் பற்றிய பேச்சு வந்ததும், பொங்கிய அவர் உள்ளம், வேகமாக அறைக்குள் சென்று தன் கோவத்தை எல்லாம் கொட்டிவிடத் துடித்தது. ஆனால் அறைக்குள் மீண்டும் தொடர்ந்த உரையாடல் அவரைக் கட்டிப் போட்டது.

“அம்மா, சஞ்சீவ்கிட்ட பேசினீங்களா? எப்போ பேசினீங்க? என்ன பேசினீங்க? சஞ்சீவ் இப்போ வேற கல்யாணம் செஞ்சுட்டாரா?”

“பொறுமை பொறுமை ஆராதனா. சஞ்சீவ்கிட்ட நான் சமீபத்துல பேசல. நீ சஞ்சீவைப் பிரிஞ்சு வந்த பிறகு சஞ்சீவ் உனக்கு நிறைய முறை போன் செஞ்சான் போல. நீ அவன் போனை அட்டென்ட் பண்ணவேயில்ல. அப்புறம் நம்பரையே மாத்திட்டே. உங்க அப்பாவுக்கு போன் பண்ணா அவரும் எடுக்கல. அப்புறம்தான் எனக்கு போன் பண்ணிப் பேச ஆரம்பிச்சான். அதுவும் உங்க அப்பாவுக்குத் தெரியாமல் நான் பேசணும். சஞ்சீவ் எப்போ கூப்பிட்டாலும் நான் அவன்கிட்ட கோவப்படாம பேசினேன். அவனும் ஒவ்வொரு முறையும் உன்னைப்பத்தி மட்டும் ரொம்ப நேரம் பேசுவான்.

நீ என்ன மனநிலைல இருக்கேன்னு கேட்பான். உன்கிட்ட போனைக் குடுக்க முடியுமான்னு ஒவ்வொரு தடவையும் கேட்டான். நான்தான் மறுத்துட்டேன். நீ அப்போ அவன் மேல ரொம்ப வெறுப்புல இருந்தே. உங்க அப்பாவைப்பத்தி சொல்லவே வேண்டாம். உங்க ரெண்டு பேருக்கும் விருப்பமில்லாத ஒரு வேலையை உங்களுக்குத் தெரியாம செஞ்சுட்டு இந்த வீட்டுல நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு.

ஆரம்பத்துல மாசத்துக்கு ஒரு முறை வந்துட்டிருந்த சஞ்சீவோட போன், கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, இப்போ சஞ்சீவ் போன் செஞ்சு கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது. ஆனா ஒரு விஷயத்துல சஞ்சீவ் தெளிவா இருக்கான். உன்னைத் தவிர அவன் வாழ்க்கைல வேற ஒரு பொண்ணுக்கு இடமில்லைன்னு சொல்லிட்டான். நீ எப்பவாவது மனசு மாறி அவனைத் தேடி வருவேன்னு காத்திருக்கறதா சொன்னான். இவ்வளவு தீவிரமா உன்னைக் காதலிக்கற ஒரு பையன்கிட்ட, நீ அவனை மறக்க நினைக்கறேன்னு ஒவ்வொரு முறை சொல்லும் போதும் எனக்கு அடக்க முடியாம அழுகை வரும்.

என்ன செய்ய முடியும் சொல்லு. என் பேச்சைக் கேட்கக் கூடிய நிலைல நீ இல்லை. சஞ்சீவ் மனசுல என்ன இருக்குன்னு நான் உன்கிட்டயும் சொல்ல முடியாது, உங்க அப்பாகிட்டையும் சொல்ல முடியாது. என் பொண்ணை மறந்து வேற புது வாழ்க்கையைத் தேடிக்கோன்னு சஞ்சீவ்கிட்டயும் சொல்ல முடியாது. நெருப்புல போட்ட புழு மாதிரி நான் தவிச்ச தவிப்பு யார்கிட்டயும் சொல்லிப் புரிய வைக்க முடியாது.”

“என்ன மா சொல்றீங்க? இவ்வளவு நடந்திருக்கு, எதுவுமே தெரியாம நான் இருந்திருக்கேனா? என்கிட்டே ஒரு வார்த்தை ஏன் சொல்லா?”

“என்னன்னு சொல்லச் சொல்றே ஆராதனா? ஒண்ணுமே புரியாத குழந்தையா நீ? உன் போன் நம்பரை மாத்தும் போது எவ்வளவோ சொன்னேன். என் பேச்சை உங்க அப்பாவும் கேட்கல, நீயும் கேட்கல. சஞ்சீவ் குடும்பத்துல இருந்து யாராவது உன்கிட்ட பேசணும்னா நம்பர் தெரியாம திணறுவாங்களேன்னு அழுதுட்டே கெஞ்சினேன், கேட்டீங்களா ரெண்டு பேரும்? அவங்க உறவே வேண்டாம்னு வெட்டி விட்டாச்சு, இனிமே அவங்க குடும்பத்துல யார் கூடவும் பேச விரும்பலன்னு நீதானே அன்னிக்கு என்கிட்டே சண்டை போட்டே. இப்போ எதுவுமே தெரியாத மாதிரி ஏன் சொல்லலன்னு கேட்கறயே ஆராதனா?

உங்க அப்பாவோட பிசினசைப் பொறுப்பா பார்த்துக்கற நம்பிக்கையான ஒருத்தர் உன் வாழ்க்கைத் துணையா வரணும்னு உங்க அப்பாவுக்கு ஒரு  எண்ணம் இருக்குன்னு உனக்குத் தெரியுமில்ல? அந்தப் பொறுப்பை நீயே எடுத்துக்கறேன்னு உங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கலாமே. பிரச்சனை சுலபமா முடிஞ்சிருக்கும் இல்லையா? உன் மேல இவ்வளவு செல்லமா இருக்கற உங்க அப்பாவுக்கும் அந்த ஐடியா வரவே இல்லையா? ஆச்சரியமா இருக்கு ஆராதனா. உங்க ரெண்டு பேருக்குள்ள ரொம்ப நல்ல புரிதல் இருக்குன்னு என்னை எப்பவும் ஒதுக்கி வைப்பீங்களே. அந்தப் புரிதல் ஏன் திடீர்னு காணாம போச்சு.

எங்கே தப்பு நடந்துச்சுன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கியா நீ? இல்ல, உங்க அப்பாத்தான் யோசிச்சிருக்காரா? நான் உங்களைப் புரிஞ்சுக்கலேன்னு என்னை எப்பவும் கிண்டல் பண்ண மட்டும்தான் உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சுது. ஆனா என்னை நீங்க ரெண்டு பேரும் புரிஞ்சுக்கவே இல்லையே. இப்போ வரைக்கும் அப்படித்தான் இருக்கீங்க. நீதான் உலகம்னு இருந்த உங்க அப்பாவும், எது கேட்டாலும் அப்பா மறுக்க மாட்டார்னு நினைச்சுட்டிருந்த நீயும் எப்போ விலக ஆரம்பிச்சீங்க? காதல்ங்கற பேர்ல வேற ஒரு நபர் உங்களுக்கு நடுல வந்ததும் தானே.

காதல்னு ஒண்ணு உன் மனசுல நுழைஞ்சதும் அப்பாவோட அன்பும் அக்கறையும் உனக்கு பாரமாத் தெரிஞ்சுது. தன்னை மட்டுமே நம்பியிருந்த செல்லப் பொண்ணு, தன் பேச்சை மீற மாட்டான்னு நம்பிட்டிருந்த உங்க அப்பாவுக்கு காதல்னு ஒரு மூணாம் நபர் நடுல வந்ததும் கோபம் வந்துருச்சு. ஏமாற்றமாயிருச்சு. அதை அவரால ஜீரணிக்க முடியல. மொத்ததுல ரெண்டு பேருமே ஒரு மாயையான கற்பனைலயே வாழ்க்கையைக் கடத்திட்டீங்க. நிதர்சனம் புரியணும் ஆராதனா.

உங்க அப்பாகிட்ட இது விஷயமா பொறுமையா உட்கார்ந்து பேசியிருக்கியா? ஏன் நம்ம கம்பெனி நிர்வாகத்துல நீ அப்பாவுக்கு உறுதுணையா பக்கபலமா இருக்கக் கூடாதா? அப்பாவுக்காக நீ இதைக்கூட செய்யக் கூடாதா? அவர் கவலையே அதானே. தனக்குப் பிறகு யாரு பொறுப்பா கவனிப்பாங்கன்னு தானே கவலைப்படறாரு. அதுக்கு ஆறுதல் சொல்லியிருக்கியா? அந்தப் பக்குவமும் வயசும் உனக்கு வந்தாச்சில்லையா?”

“அம்மா… அது வந்து… எனக்கு இப்படி ஒரு யோசனை தோணவே இல்ல மா. நான் என்னைப்பத்தி மட்டும்தான் யோசிச்சேன். சரி, நான்தான் சின்னப் பொண்ணு, அப்பா ஏன் இப்படி ஒரு யோசனையை என்கிட்டே கேட்கல? அப்போ அவருக்கு விருப்பம் இல்லேன்னு தானே அர்த்தம். அவருக்கு என்னை நம்பி அவர் எழுப்பின கோட்டையைக் கொடுக்கறதுல விருப்பம் இருக்கான்னு தெரியலையே மா. என் மேல அக்கறையா அன்பா, நான் கேட்டதெல்லாம் வங்கிக் கொடுத்து என்னை வளர்த்ததுக்குக் காரணமே நான் எப்பவும் அவர் பேச்சைக் கேட்கணும்னு நினைச்சு தானோன்னு அப்பா மேல கோபம் வந்தது. என் காதலை அப்பா எதிர்த்தப்போ அப்படித்தான் என்னால நினைக்க முடிஞ்சுது.

ஆனா இப்போதான் எல்லாரையும் சரியாப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன். அப்பாவோட இடத்துல இருந்து அவரோட கோணத்துல நான் யோசிக்கல மா. நான்தான் சுயநலமா யோசிச்சுட்டேன். ஆனா பழியை எல்லார் மேலயும் போட்டுட்டேன். நான் காதலிச்ச சஞ்சீவை வெறுத்து ஒதுக்கினேன். ஆனா இப்போ சஞ்சீவ் கூட மறுபடியும் சேர்ந்து வாழணும்னு ஆசை வருது. உலகமே அப்பாதான்னு இருந்த நான், என் காதலை அப்பா ஏத்துக்காம மறுத்ததும், அப்பா மேல கோபம் வந்துது. இவ்வளவு வருஷம் அப்பா அன்பால எனக்கு செஞ்ச எல்லாமே அவர் சுயநலமா செஞ்சதா நினைச்சேன். ஆனா இப்போ அதெல்லாமே தப்புன்னு புரியுது.

நான் அப்பாகிட்ட பேசறேன் மா. அப்பாவோட கவலையை நான்தானே சரி செய்யணும். இவ்வளவு வருஷம் எனக்காக எல்லாம் செஞ்ச அப்பாவுக்கு நான் ஆதரவா, ஆறுதலா, பக்கபலமா இருக்கணும்னு இப்போதான் எனக்குப் புரியுது. அப்பா என்கிட்டே கேட்கலேன்னா என்ன, நான்தானே உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கணும். அதே மாதிரிதானே சஞ்சீவுக்கும் பொறுப்பிருக்கு. அவரோட பேரண்ட்சை அவர் கூடவே இருந்து பார்த்துக்கணும்னு சொன்னதை நான் அப்போ புரிஞ்சுக்கல. இப்போ புரியுது. ஆனா என்னை எல்லாரும் இப்போ சரியாப் புரிஞ்சுட்டு ஏத்துப்பாங்களான்னு தெரியல.”

“முதல்ல உங்க அப்பாகிட்ட நிதானமா மனசுவிட்டுப் பேசு. அப்புறம் எல்லாம் தானா நல்லபடியா நடக்கும்.”

நிம்மதியாக உணர்ந்தாள் ஆராதனா. அறைக்கு வெளியே நின்று உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மதன கோபாலும் கோபம் தணிந்து சாந்தமானார்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்யைத் தேடி அலைந்தது போல, தான் தூக்கி வளர்த்த மகள் இருக்கும் போது, வெளியே இருந்து வரும் யாரோ ஒருவரை நம்பி, எல்லாரையும் பகைத்துக் கொண்டு நிம்மதியைத் தொலைத்த தன் மேலேயே அவருக்குக் கோபம் வந்தது.

தன் மகளின் தெளிவான மனநிலை சரோஜினிக்கு மகிழ்வைத் தந்தது. தன் கணவர் மனத்தையும் மாற்ற வேண்டும் என்று கடவுளை மானசீகமாக வேண்டினார். அவருக்குத் தெரியாதே… மதன கோபாலின் மன மாற்றத்திற்குக் கடவுள் கருணை காட்டிவிட்டார் என்பது.

“சரி மா, நான் முதல்ல அப்பாகிட்டப் பேசறேன். அப்புறம் சஞ்சீவ்கிட்ட பேசறேன். எனக்கு சஞ்சீவ் நம்பரை ஷேர் பண்றீங்களா?”

“சரி ஆராதனா. இதோ இப்பவே அனுப்பறேன். நீ அப்பாகிட்ட பொறுமையா பேசு.”

சரோஜினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் போனுக்கு அழைப்பு வந்தது. உணர்வுக் குவியலாய் இருந்தவர் தன்னைக் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அழைப்பை எடுத்தார். எதிர்முனையில் யாராக இருக்கும் என்று குழப்பத்துடன் போனை எடுத்தவர் முகத்தில் உடனேயே ஆச்சரிய ரேகைகள் படர்ந்தன.

அதற்குள் மதன கோபால் அறைக்குள் வர, ஆராதனா ஆச்சரியத்துடன் தன் அப்பாவைப் பார்த்தாள். கோபமற்ற அவர் முகத்தில் ஏதோ ஒரு நிறைவும் தெளிவும் தெரிந்தது. தைரியமாக அப்பாவிடம் பேச்சைத் துவக்கினாள்.

ஆனால் அதற்குள் சரோஜினியின் போன் உரையாடல் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. எதிர்முனையில் யாராக இருக்கும் என இருவரும் பார்வையாலேயே கேட்டுக் கொண்டு, சரோஜினியின் போன் உரையாடலைக் கவனித்தார்கள். இவர்களின் குழப்பத்தை கவனித்த சரோஜினி, தன் உரையாடல் மூலமாகவே அவர்களுக்குத் தெரியப்படுத்தினாள்.

“சங்கவி, என்ன ஆச்சரியம் பார்த்தியா. நீங்க அங்கே யோசிச்ச மாதிரியே நாங்களும் இங்கே யோசிச்சிருக்கோம். இப்போதான் ஆராதனாவும் இதைப்பத்திப் பேசிட்டிருந்தா. ஆராதனாகிட்ட பேசணும்னு சஞ்சீவ் சொன்ன மாதிரியே ஆராதனாவும் சொல்லிட்டிருந்தா. சஞ்சீவ் நம்பர் வேணும்னு என்கிட்டே கேட்டுட்டிருந்தா. நாங்க இப்போதான் பேசி முடிக்கறோம், நீயும் கரெக்டா கூப்பிடறே. என்னவோ எல்லாம் நல்லவிதமா கூடி வர மாதிரி இருக்கு. எல்லாரும் சந்தோஷமா நல்லா இருந்தா சரி. நீ சஞ்சீவ்கிட்ட சொல்லு. நானும் ஆராதனாவைப் பேசச் சொல்றேன்.”

அம்மாவுடன் எதிர்முனையில் பேசிக் கொண்டிருப்பது சங்கவி அக்கா என்று தெரிந்தவுடன் ஆராதனாவுக்கு இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது.

‘சஞ்சீவ் என்கிட்டே பேசணும்னு சொன்னாரா? எப்படி ரெண்டு பெரும் ஒரே நேரத்துல ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம்! காலங்கள் கடந்தாலும் காதல் அழியாது. அது என் விஷயத்துல ரொம்ப சரியா இருக்கு. சஞ்சீவ்கிட்ட என்ன பேசறது, எப்படி ஆரம்பிக்கறது, சஞ்சீவ் என்ன பேசுவார்’ என கேள்விகள் அடுக்கடுக்காய் வந்தன. பரபரப்பு தொற்றிக் கொண்டது. மதன கோபாலுக்கும் நடப்பது ஓரளவிற்குப் புரிந்தது.

போனை வைத்த சரோஜினியின் முகம் முழுவதும் மகிழ்ச்சி பரவியிருந்தது. தன் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆராதனாவையும் தன் கணவரையும் மகிழ்ச்சியோடு பார்த்தார். தான் உதிர்க்கப் போகும் வார்த்தைகளை அள்ளியெடுத்து மனதோடு பொத்தி வைத்துக் கொள்ளும் ஆவலோடு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மகள் ஆராதனாவை இறுக அணைத்துக் கொண்டார் சரோஜினி.

தாயின் மகிழ்ச்சியில் கரைந்து போனாள் ஆராதனா. நீண்ட காலங்களுக்குப் பிறகு குடும்பத்தில் நிலவும் நிறைவான சூழ்நிலை மதன கோபாலுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

“ஆராதனா, உன் மனசு போல எல்லாம் கூடி வருது. இனிமேல் வாழ்க்கையை உடைக்காம சிதறாம அழகாக் கொண்டுபோக வேண்டிய பொறுப்பு உன் கைலதான் இருக்கு. சங்கவிதான் போன் பண்ணா. என்ன ஆச்சரியம் பார்த்தியா. நீ சஞ்சீவ் பத்தி யோசிச்ச மாதிரியே சஞ்சீவும் உன்கிட்ட பேசணும்னு சங்கவிகிட்ட சொல்லியிருக்கான். கல்யாண மண்டபத்துல உன்னைப் பார்த்ததுல இருந்து நிலைகொள்ளாம தவிச்சிருக்கான். ம்ம்ம்…. ரெண்டு பேரும் மனசு நிறைய ஆசையை வச்சுட்டு சாதாரண பிரச்சனைக்கு மனசை வருத்தி, காலத்தை வீணாக்கிட்டீங்க. சரி, நடந்தது நடந்து போச்சு. இனிமேல் எல்லாம் நல்லதாவே நடக்கட்டும். என்னங்க, ஆராதனா சஞ்சீவ்கூட பேசணும்னு சொல்றா. சஞ்சீவுக்கும் அதே எண்ணம் இருக்காம். அதான் சங்கவி போன் பண்ணி சொன்னா. ஆராதனாவும் உங்ககிட்ட பேசணும்னு சொல்லிட்டிருந்தா. கொஞ்சம் கோபப்படாம பொறுமையாக் கேளுங்க.”

“எதுவும் சொல்ல வேண்டாம் சரோ. நீங்க ரெண்டு பேரும் பேசினதை எல்லாம் நான் கேட்டுட்டுதான் இருந்தேன். நானும் நிறைய தப்பு பண்ணிட்டேன். இப்போதான் தெளிவு வந்திருக்கு. ஆராதனாவை என் பொண்ணுங்கற அளவுல மட்டும்தான் யோசிச்சேனே தவிர, அவளோட திறமை நம்ம கம்பெனிக்கு உதவும்னுகூட யோசிக்கல பார்த்தியா. அவளைத் தவிர வேற யாரு என்னோட விருப்பங்களை நல்லாப் புரிஞ்சுக்க முடியும். ஆனா முதல்ல அவ குடும்ப வாழ்க்கையை ஒழுங்கா ஆரம்பிக்கட்டும். அப்புறம் இதெல்லாம் பேசலாம். சஞ்சீவ் நம்ம அந்தஸ்துக்கு சரிசமமா இல்லாததாலத்தான் உங்க காதலைச் சேர்த்து வைக்கறதுல எனக்கு விருப்பமில்லாம போச்சு. ஆனா அந்தஸ்தைவிட வாழ்க்கைக்கு அன்புதான் முக்கியம்னு இப்போ புரியுது.”

முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பொறுமையாகப் பேசும் மதன கோபாலை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் ஆராதனாவும், சரோஜினியும். புரிதல் வந்த பிறகு குடும்பத்தில் நிம்மதிக்குப் பஞ்சமிருக்குமா என்ன? சந்தோஷம் துள்ளி விளையாடியது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூன்று பேரும் மனம்விட்டுப் பேசினார்கள். அன்றைய பொழுது வாழ்வின் பல திருப்பங்களை அவர்களுக்குக் கொடுத்து விடைபெற்று, மறுநாள் புதிய விடியலோடு வந்தது.

சங்கவி சரோஜினியிடம் பேசி, கிடைக்கப் பெற்ற நல்ல தகவல்களை சஞ்சீவிடம் பகிர்ந்து கொண்டாள். சஞ்சீவின் காதல் மனது வானம்வரை துள்ளிக் குதித்தது. மறுநாள் ஆராதனாவிடம் என்ன பேசுவது என்று அன்று இரவு முழுவதும் ஒத்திகை பார்த்துக் கொண்டான். ஒவ்வொரு முறையும் மனம் புதிதாகப் பயிற்சி எடுக்கும் மாணவனாகப் படபடத்தது.

சங்கவி தன் தாய், தந்தையிடமும் இது விஷயமாகப் பேசி அவர்கள் மனதையும் தயார்ப்படுத்தினாள். தனிமையில் தவிக்கும் தன் செல்ல மகன் எங்காவது நன்றாக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தார் பானுமதி.

மறுநாள் சஞ்சீவ் ஆராதனாவுக்கு போன் செய்தான். சஞ்சீவ் நம்பரை அம்மாவிடம் வாங்கி சேமித்து வைத்திருந்த ஆராதனா, ஆனந்தக் கண்ணீரோடு போனை எடுத்தாள். காலத்தின் கோலத்தால் பிரிந்திருந்த காதல் மனது மீண்டும் இணைந்தால் பேசவும் வார்த்தைகள் உண்டா. மௌனம் காதலைக் கண்ணீரோடு பகிர்ந்து கொண்டது. நிமிடங்கள் கரைய, மன இறுக்கமும் கரைந்து காதல் மட்டுமே நிறைந்து நின்றது.

வீசும் காற்றை வேலி போட்டு யாராலும் தடுக்க முடியாது. அதுபோல் தான் காதலும். புரிந்தலின்றிப் பிரிந்த காதல், புரிதலோடு இணைந்தால் மகிழ்ச்சிக்குக் குறைவேது. ஆராதனா சஞ்சீவ் தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்க்கையைத் துவங்கினார்கள். ஆராதனாவின் பக்குவப்பட்ட மனதும் சஞ்சீவின் காதல் மனதும் அனைத்து சிக்கல்களையும் தகர்த்து புதிய பாதையில் அவர்களின் வாழ்க்கையை வழிநடத்திச் சென்றது.

ஆராதனாவுக்கு பானுமதியோடு மனத்தாங்கல் வரவில்லை. வந்தாலும் இருவரும் அனுசரித்துப் போகப் பழகிக் கொண்டார்கள். பானுமதி மாமியார் என்ற முகமூடியைக் கழற்றி எறிந்தார். மதன கோபாலின் செல்ல மகள் என்ற மமதையைத் தூர எறிந்த ஆராதனாவுக்கும், பானுமதியைத் தன் தாயின் ஸ்தானத்தில் நினைப்பதில் சிக்கல் இருக்கவில்லை.

சஞ்சீவுக்கும் மதன கோபாலுக்கும் இப்போது ஒத்துப் போயிற்று. மதன கோபால் அந்தஸ்த்தைத் தூக்கி எறிந்துவிட்டு, தன் மகன் போல் சஞ்சீவிடம் பழக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். மதன கோபாலின் மாமனார் என்ற பிம்பம் விலகியதால் சஞ்சீவுக்கும் அவரோடு அனுசரித்துப் போவதில் சிரமம் இருக்கவில்லை.

ஆராதனா நேரம் கிடைக்கும் போது சென்னை வந்து தன் தந்தையின் அலுவலக நிர்வாகத்தைக் கற்றுக் கொண்டாள். களத்திற்கு வந்து தந்தையின் வேலையில் பங்கெடுத்த போதுதான் அவரின் இவ்வளவு வருட உழைப்பின் வலி புரிய ஆரம்பித்தது. செல்ல அப்பா என்ற பிம்பம் தாண்டி தன் தந்தையின் மீது மரியாதை கூடியது. தந்தையின் உழைப்பிற்குப் பின்னால் பக்கபலமாக இருக்கும் தன் தாயின் மேன்மை வியப்பைத் தந்தது.

குடும்ப உறவுகளுக்குள் சரிவரப் புரிதல் இல்லாததால், நேரம் ஒதுக்கி பேசிக் கொள்ளாததால் சிதறிக் கிடக்கும் குடும்பங்கள் இன்று பெருகி விட்டன. உறவுகளைப் பேணுவோம். மனம்விட்டுப் பேசுவோம். பேசித் தீர்க்க இயலாத பிரச்சனைகள் எதுவும் இல்லை.

காற்றுக்கு என்ன வேலி, கடலுக்கு என்ன மூடி, அன்புக்கு ஏது தாழ்ப்பாழ். அன்பே கடவுள்.

நிறைவடைந்தது.

   –  ஶ்ரீவித்யா பசுபதி 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மாவின் கடைசி ஆசை (சிறுகதை) – நாமக்கல் வேலு

    குச்சிக்கை நிறைய பாச ரேகைகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை