in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 6) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5

இதுவரை:-

ஆராதனா சஞ்சீவ் இருவரின் எதிர்பாராத சந்திப்பு அவர்களின் பழைய வாழ்க்கை நினைவுகளைக் கிளறிவிட்டது. ஆராதனா சஞ்சீவ் இருவரின் குடும்பச்சூழல், அவர்கள் வளர்ந்தவிதம் எல்லாம் பார்த்தோம். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது எப்படி எனப் பார்க்கலாம் வாருங்கள்.

இனி:-

பெங்களூரு…. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத  ஊர். பல மாநிலங்களிலிருந்தும் அநேகம் பேர் வேலைக்காக அங்கே முகாமிட்டிருப்பதால், கூட்டத்திற்கும், நெரிசலுக்கும் பஞ்சமில்லை. இவ்வளவு இருந்தாலும் பெங்களூருவின் சீதோஷனநிலை தனி அழகுதான். அதற்காகவே பெங்களூருவை விட்டு நகராமல், அங்கேயே இருப்பவர்கள் நிறைய பேர்.

விடியற்காலையில்  தலைக்குக் குல்லா  போடும்  அளவுக்குக் குளிர்,  பத்து மணிக்கு மேல் வெயில், மாலையானால் மழை. இப்படிப் பலவித இயற்கை நிகழ்வை ஒரே நாளில் பார்த்துவிடலாம்.

இப்படிப்பட்ட பெங்களூரில், ஒரு அழகான  மாலை வேளை.  மழை எப்போது பெய்யலாம் என  யோசித்தபடியே  கருகருவென  மேகங்கள் திரண்டு,  ஒன்றுகூடி மாநாடு போட்டு விவாதித்துக்  கொண்டிருந்தன.

வேலை முடித்துக்  கிளம்புவோர் மழைக்கு முன்பாகக் கிளம்ப வேண்டும்  என்ற அவசரத்தில்  இருந்தனர். சாதாரணமாகவே  வாகன நெரிசல்  அதிகம் இருக்கும். இதில் மழையும்  சேர்ந்து கொண்டால்  கேட்கவே  வேண்டாம்.

தெருவோரங்களில் முளைத்திருந்த மாலை நேரக் கடைகளில் சுடச்சுட கச்சோரி, மிளகாய் பஜ்ஜி, வடை என வியாபாரம் சூடாகியிருந்தது.  

இன்னொருபுறம் பேல்பூரி, சன்னா சமோசா, பானி பூரி என வெங்காயமும் மசாலா வாடையும் காற்றில் நிறைத்திருந்தது. வரிசையில் காத்திருந்து இவற்றை வாங்கி,  கடையருகே நின்று பேசியபடியே  இவற்றின் ருசிகளில் தங்களை மறந்திருந்தனர் சிலர்.

தட்டு இட்லி சட்னியோடு கை குலுக்க, அதை ஆர்வத்தோடு தங்கள் நாவில் சறுக்கவிட்டு ஆனந்தித்தார்கள் சிலர்.

இப்படிப்பட்ட சூழலுக்கு நடுவில், பரந்து விரிந்த பெரிய அலுவலக வளாகத்திற்குள், ஓங்கி வளர்ந்து நின்றிருந்தன கண்ணாடிகள் பொருத்திய கட்டடங்கள்.  அந்தக் கட்டடங்களுக்குள் இருந்து வேலை நேரம் முடிந்து வெளியே வருவோர்களால் அந்த இடத்தின் பரபரப்பு இன்னும் அதிகமானது.

ஆராதனா, தான் வேலை செய்யும் அலுவலகம் இருந்த அந்தப் பெரிய வளாகத்திலிருந்து வேலை முடித்துக் கிளம்பினாள். மழை வருவதற்குள் கிளம்பிவிட வேண்டும் என்ற பரபரப்பு மற்றவர்களுக்கு இருந்தது போல ஆராதனாவுக்கும் இருந்தது. வேகவேகமாக  தன் இரு சக்கர வாகனம் நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்தாள்.

பன்னாட்டு நிறுவனங்கள் பல இயங்கும் அந்த வளாகத்திலிருந்து நிறைய பேர் வேலை முடித்து வெளியேறிக் கொண்டிருந்ததால், நெரிசல் அதிகமாகத்தான் இருந்தது. யாருக்கும் யாரையும் கவனிக்க நேரமில்லை. அவரவர்களுக்கு விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்ற பரபரப்பு மட்டும்தான் இருந்தது.

வீட்டில் கார் இருந்தாலும், வாகன நெரிசலில் விரைவில் செல்வதற்கு ஸ்கூட்டிதான் சௌகரியமாக இருந்தது. அதனால் ஆராதனா வேலைக்கு வரும்போது ஸ்கூட்டிதான் எடுத்து வருவாள். எங்காவது வெளியே போவதென்றால் காரை எடுத்துக் கொள்வாள்.

இருட்டிக்கொண்டு நிற்கும் கருமேகங்களை நின்று நிதானமாக ரசிக்க ஆசைதான் அவளுக்கு. ஆனால் மழை வந்துவிட்டால் ட்ரைவ் பண்ணுவது சிரமம். வீட்டிற்குப் போவதும் தாமதமாகிவிடும்.  அதனால் மழைக்கு முன்பே கிளம்ப வேண்டும் என்ற பரபரப்பில் ஸ்கூட்டியைக் கிளப்பினாள். ஆனால் ஸ்கூட்டி உறுமிக் கொண்டே கிளம்பாமல் அடம்பிடித்தது. ஆராதனா பலமுறை முயன்றாள்.

‘என்ன பிரச்சனை? காலைல வரும்போது நல்லாத்தானே இருந்துது. திடீர்னு தகராறு பண்ணுதே, நம்ம அவசரத்துக்குத்தான் எல்லாமே மக்கர் செய்யும்.’

மனத்துக்குள் புலம்பியபடியே மீண்டும் ஸ்கூட்டியைக் கிளப்பும் முயற்சியில் இறங்கினாள்.

ம்ம்ம்…. ஹூம்….. ஏனோ ஸ்கூட்டி கிளம்ப மறுத்தது. அனைவரும் அவரவர் அவசரத்தில் வண்டியை முறுக்கிக் கிளம்பினார்களே ஒழிய, ஆராதனாவை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. கோபம் வந்தது ஆராதனாவிற்கு.

காலால் உதைத்தும் பார்த்தாள். எதற்கும் மசிய மறுத்தது. அப்போது அவளைக் கடந்துபோன ஒரு பைக், சற்று தள்ளிப்போய் நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த இளைஞன், அமைதியாக ஸ்கூட்டியை கிக் ஸ்டார்ட் செய்து கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

“ரொம்ப தேங்க்ஸ்,” என்று ஆராதனா சொன்னதற்கு, வெறும் தலையசைப்பை மட்டுமே பதிலாகத் தந்தான். அந்த நேரத்தில் அவனது கண்களைப் பார்த்த ஆராதனாவிற்கு சட்டென்று உடலில் ஒரு மின்சாரம் பாய்ந்ததுபோல் ஒரு உணர்வு.

ஹெல்மெட்  போட்டிருந்ததால் அவன் கண்களும், நெற்றியும் மட்டும்தான் ஆராதனாவுக்குத் தெரிந்தன. அந்தக் கண்களில் இருந்த வசீகரம் ஒரு நிமிஷம் அவளை நிலைகுலைய வைத்தது. அவன் அதற்குமேல் எதுவும் பேசாமல், தன் பைக்கைக் கிளப்பிக்கொண்டு  அங்கிருந்து நகர்ந்தான்.

ஆராதனா சட்டென்று அந்த பைக் எண்ணை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொண்டாள். மெய்மறந்து நின்ற அவளை, அங்கே ஒலித்த ஹார்ன் சத்தம் சுயநினைவிற்கு வரவழைத்தது.

சட்டென்று ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தாள். வீடு வந்து சேரும்வரை அவன் கண்களும், நெற்றியும், அந்தத் தலையசைப்பும் மட்டுமே அவள் மனதில் உட்கார்ந்து கொண்டிருந்தன.

வீட்டிற்கு வந்த பின்பு, வேறு எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. இயந்திரத்தனமாக வேலைகளைச் செய்தாள். முகம் கழுவி உடை மாற்றும்போது கூட அந்தக் கண்களின் ஈர்ப்பு அவளை ஏதோ செய்தது.

கண்ணாடி முன்னால் நின்றவள் தன் முகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கவனித்தாள். தன்னைப் பற்றிய கர்வமும் வசதியான வாழ்க்கையின் பளபளப்பும் படர்ந்திருக்கும் முகத்தில், புதிதாக ஏதோ ஒன்று கைகோர்த்திருந்தது.

ஆழ்ந்து கவனித்தாள் ஆராதனா. சட்டென்று கண்ணாடியில் அவளெதிரில் ஆறடி உயரத்தில் ஒரு ஆண் மகன். ஹெல்மெட் அணிந்திருந்தான்.  ஹெல்மெட் மறைத்திருந்த முகத்தில் கண்களும் நெற்றியில் கொஞ்சமும் மட்டும் தெரிந்தன. கண்கள் ஆராதனாவையே பார்த்துக் கொண்டிருந்தன.

அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்தித்ததும் ஆராதனாவின் வாயிலிருந்து அவளையும் அறியாமல் ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்ற வார்த்தைகள் உதிர்ந்தன. கண்ணாடியில் தெரிந்த ஆண் உருவம் ஆராதனாவைப் பார்த்தபடியே தலையை மட்டும் அசைத்துவிட்டு அங்கிருந்து காணாமல் போனது.

சட்டென்று சுயஉணர்வு பெற்ற ஆராதனாவுக்கு தன் நிலையை நினைத்து வெட்கம் படர்ந்தது. வெட்கம் படர்ந்த அவள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபோது அவளுக்கே அது வித்தியாசமாக இருந்தது. இவ்வளவு வருடங்களில் இல்லாத ஒரு பொலிவு தன் முகத்தில் படர்ந்திருந்தது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

தன் மனத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம் அவளுக்கே நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. எதற்கும் சலசலக்காத தன் மனம், முன்பின் அறியாத ஒரு ஆடவனின் பார்வைக் கணைகளுக்குத் தடுமாறுவது அதிசயம்தான்.

‘எனக்கு என்னாச்சு? ஏன் இப்படி சில்லியா பிஹேவ் பண்றேன்? இதுவரைக்கும் எவ்வளவோ ஆண்களைக் கடந்து வந்திருக்கேன். வேலைக்குப் போற இடத்துல தினமும் எவ்வளவோ பேரோட பழகறேன். ஆனா இதுவரைக்கும் இந்த மாதிரி சலனம் என் மனசுல வந்ததேயில்ல.

யாரோ ஒருத்தன் இன்னிக்கு ஸ்கூட்டி ஸ்டார்ட் பண்ண எதேச்சையா ஹெல்ப் பண்ணான். அவன் என்கிட்ட பேசணும்னுகூடமுயற்சி செய்யல.  நான் சொன்ன தேங்க்ஸ்க்கு வெறுமனே தலையை அசைச்சான். அப்போ அவன் கண்ணை நேருக்கு நேரா பார்த்தேன்.

ஆனா சில விநாடிகள்கூட அவன் கண்ணைப் பார்க்கல. அது ஏன் என்னை இவ்வளவு பாதிக்குது. அவனையே நினைச்சுட்டிருக்கேனே, நான் ஏன் இப்படியிருக்கேன்? அவன் யாரு, பேரென்ன,  வயசானவனா, கல்யாணமானவனா எதுவுமே தெரியாது.  ஆனா இப்படி முட்டாள்தனமா அவனையே நினைச்சு தனியாப் பேசற அளவுக்கு அவன் என்னை பாதிச்சிருக்கான்.’

ஆராதனா அவனைப் பற்றிய நினைவுகளில் இருந்து விடுபட்டு, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினாலும், அவளால் அந்தக் கண்களின் ஈர்ப்பில் இருந்து விடுபடவே இயலவில்லை. கமலா செய்து வைத்த சாப்பாடுகூட அன்று தேவைப்படவில்லை.

இரவும், தனிமையும், இளமையும் இன்னும் அதிகமாக அவள் மனதை அலைக்கழித்தன.

‘யார் நீ? எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பார்த்துட்டு போயிட்டிருந்தாங்க. அப்படியே உதவிக்கு வந்திருந்தாலும் என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக என்கிட்ட பேச்சு கொடுப்பாங்க. இவ்வளவு வருஷமா அப்படிப்பட்டவங்களைத் தான் பார்த்திருக்கேன். ஆனா நீ…. எனக்கு என்ன உதவி பண்ணணுமோ அதை மட்டும் பண்ணிட்டு, பேசாம போறே….அப்….பா…. அந்தக் கண்ணுல அப்படி ஒரு வசீகரம். ஹெல்மெட் போட்டிருந்தால முகத்தைப் பார்க்க முடியல. எப்படி இருப்பே நீ?’

மனத்தில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவளைக் குடைந்தன. அவன் யார்….?

‘நல்ல ஹைட், ஹெல்மெட்டைத் தாண்டி நெத்தியில் விழுந்திருந்த அவன் கருகரு தலைமுடி நெத்தியின் அழகை அதிகமாக்கிக் காட்டிய ஒரு உணர்வு. அவன் நடையில் ஒரு மேன்லினஸ், செய்கையில் ஒரு ஜென்டில்னஸ்…. வாவ்…. நான் எப்படியாவது அவனை ஒருமுறை நேர்ல பார்க்கணும்.

ஆனா…. நான் ஏன் இப்படி யோசிக்கறேன்? படிக்கற காலத்தில் இருந்து, இப்போ என்கூட வேலை பார்க்கறவங்க வரை நிறைய பேர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணாங்க.  எதுக்கும் சலனப்படாத என் மனசு, யாரு என்னன்னு தெரியாம ஒரு சின்ன உதவி  பண்ண யாரோ ஒருத்தனை ஏன் நினைச்சுட்டே இருக்கேன்?

ஆனா, அவன் வந்து உதவி பண்ண நேரத்துல அப்பா ஞாபகம்தான் வந்தது. அப்பாதான் எனக்கு என்ன தேவைன்னு நான் சொல்லாமலேயே தெரிஞ்சு உதவி பண்ணுவார். அதே மாதிரிதான் இவனும்.’

தனிமையில் ஏதேதோ கற்பனைகளோடு தூங்கிப் போனாள் ஆராதனா. மறுநாள் வேலைக்குப் போன பிறகு, அவ்வப்போது நேற்று பார்த்த அந்தக் கண்களும்,  தலையசைப்பும் அவள் மனதில் எட்டிப்பார்த்து சலனப்படுத்தியது.

இருந்தாலும் அதெல்லாம் மிகவும் அல்பமாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்த நினைப்பை உதறித்தள்ள மிகவும் முயற்சித்தாள். ஆனாலும் காபி ஷாப்பில், ஃபுட் கோர்ட்டில்,  லிஃப்டில், படிக்கட்டில் என எதிர்ப்படும் ஒவ்வொரு ஆண்களின் மத்தியிலும் அவன் இருப்பானா என்கிற தேடல் அவள் கண்களில் தெரிந்தது.

வெறும் கண்களை மட்டும் வைத்து அவனை மறுபடியும் எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? எதிர்ப்படும்  ஒவ்வொரு ஆண்களின் கண்களையும் உற்றுப்பார்க்கவா முடியும்? அவளுக்கு அது அநாகரிகமானதாகவும், கூச்சமாகவும் இருந்தது.

‘அப்படின்னா…. அவனை மறுபடியும் கண்டுபிடிக்கவே முடியாதா? அவன் பெயர் என்ன? இங்கே நிறைய ஆஃபீஸ் இருக்கு. அவன் எதுல வேலை பார்க்கறான்? எதுவுமே தெரியலயே…..’

இப்படிப் பலவித குழப்பங்கள், கேள்விகள் அவளுக்குள் குடைந்து கொண்டே இருந்தன. காலையில் இருந்தே இவளின் செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் ஆராதனாவின் நெருங்கிய தோழி தீப்தி.

“என்ன ஆராதனா, என்னாச்சு உனக்கு? சம்திங்க் ராங்க்…”

“ஒண்ணுமில்ல தீப்தி, சின்ன குழப்பம். தட்ஸ் ஆல்.”

தானே என்னவென்று புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை தீப்தியிடம் எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்வது என்பதால் மழுப்பிவிட்டாள் ஆராதனா.

ஆராதனாதான் இப்படித் தவிப்பில் இருக்கிறாளே ஒழிய, சஞ்சீவ் இதை ஒரு சாதாரண உதவியாகத்தான் செய்தான். அதனால் அவனுக்கு ஆராதனா பற்றிய நினைப்பே இல்லை.

அப்படியானால் ஆராதனா எப்படித்தான் சஞ்சீவைக் கண்டுபிடிப்பாள்…..???

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பச்சோந்திகள் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

    போங்கடா… நீங்களும் உங்க உறவும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை