in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 2) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1

இதுவரை:-

கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆராதனா, தன்னுடன் வேலை செய்யும் பூஜாவின் திருமணத்திற்குக் கிளம்பிச் செல்கிறாள்.

இனி…

சேஷாத்ரி மஹால் களைகட்டியிருந்தது. காதல் திருமணம் என்றாலும் இருவீட்டார் சம்மதத்தோடு நடப்பதால், இருபக்க உறவுகளும் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள்.

ஆட்டோவிலிருந்து இறங்கிய ஆராதனா, மண்டபத்திலிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் கொஞ்சம் தயங்கினாள். தன்னுடன் வேலை பார்க்கும் வேறு யாராவது கண்ணில் படுகிறார்களா எனத் தேடியபடியே மண்டபத்திற்குள் நுழைந்தாள்.

மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் திருமணத்திற்கு அழைப்பு. மற்றபடி உடன் பணிபுரிபவர்கள், கல்லூரி நட்புகள், அக்கம்பக்க நட்புகளுக்கெல்லாம் நேற்று மாலை நடந்த வரவேற்புக்குத்தான் அழைப்பு. அதனால், இந்த உறவுகளின் கூட்டத்தில் தனியாக எவ்வளவு நேரம் சமாளிப்பது என்ற கவலை தொற்றிக் கொண்டது ஆராதனாவுக்கு.

கூட்டத்தில் கண்களைச் சுழலவிட்டபடியே வந்தவளை, மணமேடையில் அழகு தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்த பூஜா சிரித்தபடியே தலையசைத்து வரவேற்றாள்.

வரிசையாக நின்றிருந்த நாற்காலிகளில் காலியாக இருந்த ஒன்றில் உட்காரப் போனவளை, பின்னாலிருந்து யாரோ அழைக்கவே திரும்பிப் பார்த்தாள். அவளுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நாலைந்து பேர் குழுவாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் நிம்மதியானாள்.

அதற்குள் ஆராதனாவை நிறைய பேர் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். அவளின் எளிமையான அழகு அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. அவளின் தோழிகளும் அவள் அழகைப் பாராட்டினார்கள்.

“ஹேய் ஆராதனா, யு லுக் ப்யூட்டிஃபுல் இன் திஸ் சாரி. வயசே தெரியல. லுக்கிங் சோ யங்.”

“தேங்க் யூ.” வெட்கத்துடன் சொன்னாள் ஆராதனா.

தங்கள் ஒவ்வொருவரின் புடவையின் நிறத்தையும்,  அந்தப் புடவை எப்போது வாங்கியது, அதற்குப்பின் இருக்கும் சுவையான கதைகள் என அவர்களின் பேச்சு வளர்ந்தது.

ஆராதனா தன் வீட்டிலிருந்து கிளம்பிய அதே நேரத்தில், கோவையின் மையப்பகுதியில் இருக்கும் லக்ஷ்மி காம்ப்ளக்ஸில், தன் அறையிலிருந்து அம்மாவுடன் ஃபோனில் மல்லுகட்டிக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

“என்னமா பிரச்சனை உங்களுக்கு? காலைலேயே இப்படி ஃபோன் பண்றீங்க. நான் கல்யாணத்துக்குக் கிளம்ப வேண்டாமா?”

“………”

“இப்ப எதுக்கு என் கல்யாணத்தைப் பத்தி பேசறீங்க? அது நான் திரும்ப ஊருக்கு வந்தபிறகு பேசலாமே. காலைல ஆறு மணிக்கு ஃபோன் போட்டு இந்த விஷயத்தைப்  பேசணுமா?”

“…….”

“இது என்னம்மா அநியாயமா இருக்கு? ஊர்ல யாருக்குக் கல்யாணம் நடந்தாலும், என் கல்யாணத்தை நினைச்சு கவலைப்படுவீங்களா? நீங்க பேசறது நியாயமா? அதுவும் இப்படி ஃபோன்ல…. நேத்து வரைக்கும் நான் உங்ககூட தானே இருந்தேன். கல்யாணத்துக்காகக் கிளம்பி கோயம்புத்தூர் வந்திருக்கேன். இன்னைக்கு நைட் கிளம்பி திரும்ப நாளைக்கு பெங்களூர் வந்துடுவேன். அதுக்கப்புறம் பேசலாம்.”

“……”

“தேவையில்லாம கவலைப்படாதீங்க. கண்டதையும் போட்டு யோசிக்காம ரிலாக்ஸா இருங்க மா. எதெது எப்போ நடக்கணுமோ, அப்போதான் நடக்கும்.”

“………”

“நான்தான் ஏற்கனவே என் முடிவைச் சொல்லிட்டேனே. திரும்பத்திரும்ப கல்யாணம் பத்தி பேச வேண்டாம் மா. ஏற்கனவே நடந்தது தான்…. இனிமேல் நடக்காது. அவ்ளோதான். ஃபோனை வைங்க. முகூர்த்தத்துக்கு நேரமாச்சு, நான் கிளம்பணும்.”

ஃபோனை வைத்த சஞ்சீவ், வேகமாகத் தயாரானான். அறையைப் பூட்டிக்கொண்டு கீழே இறங்கி வரும்போது, அன்னபூர்ணாவின் மசால் தோசை மணமும், சாம்பாரின் மணமும் நாசியைத் துளைத்தது. அந்த நேரத்திலும் அன்னபூர்ணாவின் சாம்பார் சுவைக்காக சொற்பமான கூட்டம் ஆங்காங்கே இருந்த மேசைகளை ஆக்ரமித்திருந்தார்கள். சூடான இட்லி வடை மேல் சாம்பாரைத் தாராளமாக ஊற்றி, ஊறவிட்டு இட்லியை சாம்பாரோடு ருசித்துக் கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு முறை சாப்பிட்டாலும் திகட்டாத ருசி. ஆண்டுகள் பல மாறினாலும் மாறாத சுவை. சஞ்சீவும் எப்போது கோவை வந்தாலும் அன்னபூர்ணாவில் ஒரு வேளையாவது சாப்பிடாமல் போக மாட்டான்.

ஒரு ஓரமாகக் காலியாக இருந்த நாற்காலியில் இடம்பிடித்து காஃபி மட்டும் சொன்னான் சஞ்சீவ். பூரி மசாலும் வடையும் சுடச்சுட பிரமாதமாக இருக்கும் என மனத்துக்குள் நினைத்ததும் நாக்கில் எச்சில் ஊறியது அவனுக்கு. இருந்தாலும் கல்யாண வீட்டில் சாப்பிட வேண்டுமே என்பதற்காக, காஃபியை மட்டும் குடித்துவிட்டு வெளியே வந்து, சேஷாத்ரி மகாலுக்கு ஆட்டோ பிடித்தான்.

சஞ்சீவ் பற்றி ஒரு சிறிய அறிமுகம். சஞ்சீவ் – முப்பத்தி நான்கு வயது, நெடுநெடுவன்ற உயரம், அடர்ந்த கேசத்தை அழகாகத் தூக்கி வாரியிருந்த விதம் அவன் முகத்திற்கு மேலும் வசீகரத்தைத் தந்தது. கூர்மையான நாசி, நல்லநிறம்-அதுவும் பெங்களூருவின் சீதோஷணத்தில் நிறம்கூடி பளபளத்தது. அடர்த்தியான மீசை, அளவான தாடி என பார்ப்பவர்களைக் கவரும் வகையில் இருந்தான். சட்டென்று ஏதோ சினிமா பிரபலம் போலத் தோன்றுவதால், அநேகமாக அவனைப் பார்ப்பவர்கள் மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்க்கத் தவறுவதில்லை.

பெங்களூரில் தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. தற்சமயம் அம்மாவுடன்தான் இருக்கிறான். அவனுடன் வேலை செய்யும் நவீனுக்கு சேஷாத்ரி மஹாலில் திருமணம் என்பதால் கோவை கிளம்பி வந்திருக்கிறான்.

கல்யாண மண்டபம் வந்தடைந்த சஞ்சீவ் மண்டபத்தின் வாசலிலேயே தன் நண்பனைக் கண்டதும் குஷியானான்.

“என்ன சஞ்சீவ், ரூம் போட்டு நல்லாத் தூங்கிட்டியா?”

“இல்ல கௌரவ், டிராவல் பண்ண டயர்ட், இருந்தாலும் உடனே குளிச்சு ரெடியாயிட்டேன். இதுல எங்கே தூங்கறது. உனக்கென்னபா,  இங்கே அப்பா அம்மா இருக்காங்க. ரெண்டு நாள் முன்னாடியே வந்து நல்லா ரிலாக்ஸ் பண்ணிட்டே. எனக்கு அப்படியா?”

“சரி சரி… வா உள்ள போகலாம்.”

“கௌரவ்…  ரமணி, அஸ்வத் ரெண்டு பேரும் வரலையா?”

“வந்துட்டாங்க. பசிக்குதுன்னு நேரா டைனிங் ஹால்ல டேரா போட்டுட்டாங்க. எனக்கும் பசிதான். நீ வரட்டுமேன்னு காத்துட்டிருந்தேன்.”

“சரிபா… ரொம்ப நல்லவன்தான். காலைலயே உன்னோட பில்டப்பை ஆரம்பிக்காதே.”

நண்பர்கள் கூடினால் கலகலப்புக்குப் பஞ்சமா என்ன. இருவரும் டைனிங் ஹாலுக்குப் போக, அங்கிருந்த நண்பர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டார்கள். பேச்சும் சிரிப்புமாக அந்த இடமே கலகலப்பானது. காலை உணவை முடித்துவிட்டு, கல்யாண நிகழ்வுகளைக் கவனித்தபடியே கல்யாண மாப்பிள்ளை நவீனை கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

அதே நேரத்தில் ஆராதனா தன் தோழிகளுடன் அங்கே கும்பலாக உட்கார்ந்து அரட்டையில் ஆழ்ந்திருந்தாள். கல்யாண மண்டபம் நிரம்பியிருந்தது.

அரட்டைக் கச்சேரியின் நடுவிலும், கல்யாண கூட்டத்தில் ஒவ்வொருவரின் உடை, அலங்காரம் என ரசிக்கவும் விமர்சிக்கவும் தவறவில்லை ஆராதனாவின் தோழிகள்.

ஆனால் ஆராதனாவுக்கு அதிலெல்லாம் கவனம் செல்லவில்லை. கல்யாண கோலத்தில் நிற்கும் பூஜாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அழகான காதல் ஜோடிகளைப் பார்க்கும்போது ஆராதனாவுக்கு சட்டென்று தன்னுடைய நிலையை நினைத்து கண்ணீர் வந்தது. ஆனாலும் தோழிகள் கவனிக்காதவண்ணம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

ஆராதனாவின் கடந்தகால வாழ்க்கை பற்றிய விவரங்கள் கோவையில் அவளுடன் பணிபுரியும் தோழிகளுக்கு அதிகம் தெரியாது. யாரிடமும் அதைப்பற்றி விவாதிக்கவோ, அறிவுரை கேட்கவோ அவள் தயாராக இல்லை என்பதால், யாரிடமும் விரிவாகச் சொன்னதில்லை.

மேலும், மறக்க நினைக்கும் ஒரு சம்பவத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதால் மனஉளைச்சல் அதிகமாகத்தானே செய்யும். எனவே யாராவது கேட்டால்கூட இந்த காரணத்தைச் சொல்லி அவர்கள் ஆர்வத்தைத் தணித்து விடுவாள்.

ஆனால் சமீப காலமாக அவளிடம் ஏதோ ஒரு மாற்றம். இவ்வளவு வருடங்களில் இல்லாமல், சமீப நாட்களாக அவளின் காதல் நினைவுகளும், தோற்றுப் போன திருமண வாழ்க்கையும் அடிக்கடி வந்து அவளை இம்சை செய்கிறது. அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல் தன் வாழ்க்கை ஆகிவிட்டதே என்ற கவலை அவளை இம்சிக்காமல் இல்லை.

தன்னுடைய பிடிவாத குணம்தான் இதற்குக் காரணமோ என்று அவ்வப்போது அவளது மனசாட்சியே அவளைக் கேள்வி கேட்கிறது. இருந்தாலும் தன் மேல்தான் தவறு என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப் போகும்போதெல்லாம் இப்படி மனம் நிலைதடுமாறிப் போகும் ஆராதனாவுக்கு.

“என்ன ஆராதனா, கல்யாண ஆசை வந்துருச்சா? கனவுல மிதக்கற மாதிரி இருக்கு. வீட்டுல பேசலாமா? நாங்க வேணா உங்க அப்பா அம்மாகிட்ட பேசறோம். எவ்வளவு காலத்துக்கு இப்படிக் கற்பனைலயே மிதக்கறது? எங்கள மாதிரி நீயும் இந்த ஜோதில ஐக்கியமாக வேண்டாமா? உன்னைவிட வயசுல சின்னவ பூஜா. எப்படி பக்காவா வேலையை முடிச்சுட்டா பார்த்தியா?”

தோழிகளின் கேள்விகளால் நிகழ்காலத்திற்கு வந்த ஆராதனா, சிரிப்பை மட்டுமே அவர்களின் கேள்விகளுக்கு பதிலாகத் தந்தாள்.

“இவ புரியாத புதிர் டி. சிரிச்சே சமாளிக்கறா பாரு. நாமதான் லொடலொடன்னு உளறிட்டே இருக்கோம்.”

“விடு கல்யாணி, தனியா இருக்கற வரைக்கும்தான் இந்த சிரிக்கறது, மழுப்பறது எல்லாம். நம்மள மாதிரி குடும்பத் தலைவியா ஆயிட்டா அவளும் இப்படி உளற ஆரம்பிச்சுடுவா.”

கொல்லென்ற சிரிப்பும் கலகலப்பான உரையாடலுமாக நேரம் கரைந்தது. அரட்டைக்கு நடுவே எதேச்சையாக கூட்டத்தைப் பார்த்த போது அதிர்ந்து போனாள் ஆராதனா. சற்று தொலைவில் உட்கார்ந்திருந்த சஞ்சீவ், இவளையே பார்த்துக் கொண்டிருப்பதை ஆராதனா கவனித்து விட்டாள்.

மனதில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. படபடவென இதயம் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டது.  இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. சஞ்சீவின் கண்களை நேருக்குநேர் சந்தித்ததன் தாக்கம் அவள் முகத்திலும் பிரதிபலித்தது.  வசீகரமான அவள் முகத்தில் காதலும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் குழப்பமும் எனப் பலவித உணர்வுகள் அடுத்தடுத்து எட்டிப்பார்த்து அவளை இம்சித்தன.

ஆராதனா தன்னைப் பார்த்ததும் சஞ்சீவுக்கும் முகத்தில் கலவையான உணர்வுகள். எழுந்து சென்று அவளிடம் பேசலாமா என்ற ஒரு தயக்கம். பேசினால் அவள் என்ன சொல்வாள் என்ற ஒரு குழப்பம்…. இப்படிப் பலவிதக் கலவையான உணர்வுகளுடன் ஆராதனாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

அவனைப் பார்த்ததும் ஆராதனாவுக்கும் இவ்வளவு நேரம் இருந்த கலகலப்பு வடிந்து போனது. பலவிதமான எண்ண ஓட்டங்கள் மனதில் வந்துவந்து மோதின.

‘இவன் எப்படி இங்கே வந்தான்? அவன்னு சொல்றதா…. அவர்னு சொல்றதா? இங்கே சஞ்சீவைப் பார்ப்பேன்னு  நினைச்சுகூட பார்க்கல.’

ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று யோசிக்கவே இல்லையே. அதன்பிறகு ஆராதனாவுக்கு கல்யாணக் கலகலப்பில் முழுமனதுடன் ஈடுபட முடியவில்லை. அப்படியே சமாளித்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பினாள்.

ஆராதனா தன்னுடன் பேச மாட்டாள் என்பது தெரிந்திருந்தாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தன்னிடம் வந்து பேசும் வாய்ப்பு அமையாதா என்று எதிர்பார்த்திருந்த சஞ்சீவ், பெருத்த ஏமாற்றத்துடனும், கனத்து மனதுடனும் தன் அறைக்கு வந்து,  சற்று ஓய்வெடுத்து விட்டு, இரவு ரயிலைப் பிடிக்கக் கிளம்பினான்.

அன்னபூர்ணாவில் இரவு உணவு சாப்பிடக்கூடத் தோன்றவில்லை. ஏதோ சிந்தனையோடு இரயில் நிலையம் வந்து, இரயிலில் ஏறிப்படுத்தவன் தான். இரயிலில் விளக்குகள் அணைந்து மெல்லிய நீலநிற விளக்குகள் மட்டும் கண்ணுறங்காமல் சஞ்சீவுடன் விழித்துக் கொண்டிருந்தன.

அன்றைய இரவு இருவருக்குமே உறக்கம் இல்லாத இரவாகத்தான் அமைந்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அள்ளிச் செருகிய கொண்டையிலே (சிறுகதை) – தெய்வநாயகி அய்யாசாமி

    முதல் காதல் (சிறுகதை) – சுஶ்ரீ