in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 17) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8  பகுதி 9    பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14    பகுதி 15   பகுதி 16

இதுவரை:

வாழ்வில் இணைந்திருக்கும் காதலோடு மணம்புரிந்த சஞ்சீவ் ஆராதனா இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால் மனக்கசப்பு வளர்ந்து பிரிவில் முற்றுப்புள்ளி வைக்கிறார்கள். முற்றுப்புள்ளி வைத்தது மீண்டும் தொடருமா? அதற்கான ஒரு சூழல் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அமைகிறது. ஆனால் அனைவருக்கும் அது புரியுமா? அதை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்களா?

என்ன நடக்கிறது பார்க்கலாம்.

இனி:

திருமண மண்டபத்தில் எதேச்சையாக சஞ்சீவை சந்தித்த ஆராதனா, மனம் குழம்பி, செய்வதறியாது தவிக்கிறாள். தன் குழப்பத்திற்கு ஒரு தீர்வு தன் அம்மாவிடம் கிடைக்கும் என்று சென்னை வந்து, தன் தாயிடம் தன் கலக்கத்தை, சஞ்சலத்தைச் சொல்கிறாள். மறைந்து நின்று இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் மதன கோபால் அதிர்ந்து போகிறார்.

ஆராதனா தன் மனத்தில் உள்ளதைக் கொட்டி, பாரத்தை இறக்கியது போல் சஞ்சீவ் என்ன செய்தான்? ஆராதனாவைப் பார்த்த அவன் நிலை என்ன?

சஞ்சீவ் அன்று ஆராதனைப் பார்த்த பிறகு தடுமாறித்தான் போனான். கோவையிலிருந்து பெங்களூரு திரும்பிய பிறகும் அவனால் ஆராதனாவைப் பார்த்த நொடிகளின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. தன் நிலையை வீட்டில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாத சூழ்நிலை வேறு அவனை இன்னும் அழுத்தியது.

நாலைந்து நாட்கள் அதே தடுமாற்றத்துடன் கழித்தான். தன் கண்களை நேருக்கு நேர் சந்தித்த நொடியில் படபடத்த ஆராதனாவின் கண்கள் அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை. ஆராதனாவைக் காதலித்த தருணங்களையும், திருமண வாழ்வில் கழித்த பொக்கிஷமான நினைவுகளையும் சுமந்து வாழும் அவனுக்கு, அவளின் கடைக்கண் பார்வைகூட உயிர்ப்பிச்சை தருமல்லவா.

ஆராதனாவிடம் அப்போதே பேசிவிடலாம் என்று உள்ளுக்குள் ஒரு ஆர்வம் படபடத்தாலும், அதை அணைபோட்டு தடுத்துக் கொண்டான். ஆராதனா தன்னிடம் பேசுவதை விரும்பவில்லை எனில், அவ்வளவு பேர் கூடியுள்ள இடத்தில் அது பெரும் சிக்கலாக முடியவும் வாய்ப்புண்டு என யோசித்தான். இவ்வளவு வருடங்களாக அவளைச் சந்திக்கும் எண்ணத்தைக்கூட எட்டிப் பார்க்க விடாமல் அமைதி காத்தவனுக்கு இந்த சந்தர்ப்பத்தில் பேசாமல் ஒதுங்குவது சிரமமாகத் தெரியவில்லை. ஆனால் அதன் தாக்கம் அவனை நிம்மதியாகத் தூங்க விடவில்லை.

அவனைப் பாதித்த இந்தச் சந்திப்பு, ஆராதனாவையும் தாக்கியதா என்ற குழப்பம் அவனுக்கு. காதல் நினைவுகளை ஆராதனா அடியோடு மறக்க விரும்புவதாகத்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆராதனாவின் அம்மாவிடம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பேசியது. ஆராதனா சஞ்சீவைப் பிரிந்து சென்றதுமே, ஆராதனாவுக்கு நிறைய முறை ஃபோன் செய்தான். அழைப்பைத் துண்டித்தாளே தவிர, ஒரு தடவைகூட பேசவில்லை.

ஆராதனாவின் அப்பாவுக்கும் நிறைய முறை ஃபோன் செய்தான் சஞ்சீவ். மதன கோபால் சஞ்சீவின் அழைப்பை எடுக்கவேயில்லை. அவரைப் பற்றி அறிந்து வைத்திருந்ததால் மதன கோபாலின் நிராகரிப்பு அவனுக்கு வலியைத் தரவில்லை. உயிராக நேசித்த ஆராதனாவே புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற பிறகு, மதன கோபால் புரிந்து கொண்டால் என்ன, நிராகரித்தால் என்ன. அதற்கெல்லாம் கவலைப்படும் நிலையில் இல்லை அவன்.

அதன் பிறகுதான் ஆராதனாவின் அம்மா சரோஜினிக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தான். அவரிடம் அவ்வப்போது ஆராதனாவின் மனநிலை பற்றிக் கேட்டுக் கொள்வான். அடிக்கடி நிகழ்ந்த இந்த உரையாடல், படிப்படியாகக் குறைந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை என்றானது. ஒவ்வொரு முறையும் ஆராதனா பற்றிப் பேசினாலே மனவருத்தத்தோடு பேசும் சரோஜினியை, அடிக்கடி ஃபோன் செய்து தொந்தரவு செய்யவும் சஞ்சீவிற்குத் தயக்கமாக இருந்தது. தன் மேல் ஏற்கனவே கோபமாக இருக்கும் மதன கோபாலுக்கு இந்த விஷயம் தெரிய வந்தால் அது சரோஜினிக்குத்தான் சிக்கலாக முடியும் என்ற கவலை வேறு அவனைத் தொற்றிக் கொண்டது.

இதன் காரணமாகவே ஆராதனாவின் அம்மாவிற்கு ஃபோன் செய்வதையும் குறைத்துக் கொண்டான். ஆனால் சரோஜினியிடம் அவன் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டது இதுதான். ஆராதனா தன் காதல், திருமண வாழ்க்கை பற்றி மறக்க விரும்புகிறாள் என்பதாகவே சரோஜினி ஒவ்வொரு முறையும் சொல்வார்.

இந்த நிலையில் திருமண நிகழ்வில் தன்னைச் சந்தித்த பாதிப்பு ஆராதனாவிற்கு இருக்கும் என்று எதிர்பார்த்தல் முட்டாள்தனமான ஒன்று என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் சஞ்சீவ். இப்படி ஒருதலைக் காதல் போல தான் மட்டும் காதலைச் சுமந்து தவிப்பது அவனுக்கே மிகவும் வேதனையாக இருந்தது.

தன் மனத்தில் அலையாடும் உணர்வுகளை யாரிடமாவது கொட்டிவிட்டால் கொஞ்சம் மனம் லேசாகும் என நினைத்தான். யாரிடம் சொல்வது? அப்பா வயதில் பெரியவர். என்னதான் தன்னிடம் அன்பாக, நண்பனைப் போல் பேசினாலும் இதெல்லாம் அப்பாவிடம் எப்படி விவாதிப்பது?

அம்மாவிடம் பேசவே முடியாது. தன் மனப்போராட்டத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அம்மாவுக்கு இல்லை. மீதமிருப்பது சங்கவிதான். ஆம், சங்கவியால் மட்டும்தான் தன் சஞ்சலத்திற்கு ஒரு தீர்வு சொல்ல முடியும்.

அந்த வார இறுதியில், வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு, சங்கவியைப் பார்க்க சேலம் சென்றான். திடீரென வந்த தன் தம்பியைப் பார்த்ததுமே அவன் மனஓட்டத்தை ஓரளவுக்குப் புரிந்து கொண்டாள் சங்கவி.

“என்ன சஞ்சீவ், உலகத்துல அதிசயமெல்லாம் நடக்குது போலயே. என்ன திடீர்னு கிளம்பி வந்திருக்கே?”

“என்ன கா, உன்னைப் பார்க்க வரக் கூடாதா?”

“அப்படிச் சொல்லல டா. நீ ஏதோ குழப்பத்துல இருக்கேன்னு உன் முகமே காட்டிக் கொடுக்குது. அந்தக் குழப்பத்துல என்னைப் பார்க்கணும், என்கிட்ட பேசணும்னு கிளம்பி வந்திருக்கியே, அதுதான் அதிசயம்னு சொன்னேன். இப்பெல்லாம் நீ மனசுவிட்டு என்கிட்ட பேசறதில்லையே”

“அக்கா, நான் உன்கிட்ட மனசுவிட்டுப் பேசலேன்னாலும் என் மனசு குழம்பிக் கிடக்கறதையும், நான் உன்கிட்ட பேசறதுக்காகத் தான் வந்திருக்கேன்னு நான் சொல்லாமலேயே கண்டுபுடிச்சுட்டியே. இதுக்குத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்.”

“சரி, கைகால் அலம்பிட்டு வா. முதல்ல சாப்பிடு. அப்புறம் பொறுமையாப் பேசலாம்.”

அதன்பிறகு அவர்களுக்கு இடையில் மௌனம் மட்டுமே நிரம்பியிருந்தது. அமைதியாக சாப்பிட்டு முடித்தான் சஞ்சீவ். அவனே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தாள் சங்கவி.

“அக்கா, என் வாழ்க்கையைப் பத்தி நீ என்ன நினைக்கறே?”

“என்ன சஞ்சீவ், இதென்ன இப்படியொரு கேள்வி? இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்?”

“அக்கா அதில்ல, நான் ஆராதனாவைப் பிரிஞ்சு அஞ்சு வருஷமாகுது. இப்படியே மீதி வாழ்க்கையைக் கழிக்க முடியுமா? இல்ல…???”

“முடியாதுதான். நீ வேற வாழ்க்கை வேண்டாம்னு தீர்மானமா சொல்லிட்டியே. அதனாலத்தானே நாங்களும் வேற வரன் எதுவும் தேடாம உன்னை  உன் இஷ்டத்துக்கே விட்டுட்டோம். இப்போ நீ சரின்னு சொல்லு, நான் வலைவீசித் தேடி உனக்காக ஒரு நல்ல பொண்ணாப் பார்க்கறேன். ஆனா நீ பேச வந்த விஷயம் வேற ஏதோன்னு என் மனசு சொல்லுது.”

“தெரியுதில்ல. அப்புறம் எதுக்குத் தேவையில்லாததைப் பேசறே?”

“நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லாம சுத்தி வளைச்சுப் பேசினா, நானும் இப்படித்தான் பேசணும்.”

“சரி, உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா. ஒரு வாரம் முன்னாடி என் ப்ரெண்ட் கல்யாணத்துக்கு கோயமுத்தூர் போயிருந்தப்போ ஆராதனாவைப் பார்த்தேன். அதுல இருந்து என் மனசுல ஏதோ ஒரு குழப்பம், சஞ்சலம். என்னால நார்மலா இருக்க முடியல கா. மறுபடியும் ஆராதனாவைப் பார்க்கணும் போல இருக்கு. அவகிட்ட பேசிப் பார்க்கலாமான்னு தோணுது. இந்த ஒரு வாரமா நான் தவிக்கற தவிப்பிருக்கே, அதை எப்படிச் சொல்றதுன்னே தெரியல.

அவளைப் பார்த்துட்டு நான் தவிக்கற மாதிரி, அவளும் என்னைப் பார்த்ததுக்கு அப்புறம் தவிச்சுட்டிருப்பாளா? இல்ல, சாதாரணமா கடந்து போயிருப்பாளா? வேண்டாம்னு முடிவு பண்ணி அவ ஒதுங்கிப் போயிட்டா. இனிமேல் இந்த வாழ்க்கை எனக்குத் திரும்பக் கிடைக்காதுன்னு வெறும் கனவுகளோட, கற்பனையிலேயே வாழ்நாளைக் கடத்திட்டு இருக்கேன். ஆனா அவளைப் பார்த்தபிறகு ஏனோ ஒரு அவஸ்தை. அதை வீட்டுல யார்கிட்டயும் சொல்ல முடியல. சொன்னா அதை எந்த விதத்துல எடுத்துப்பாங்கன்னு தயக்கமா இருந்துது.

ஆராதனாவோட அம்மாவுக்கு போன் பண்ணிப் பேசலாமான்னு ஒரு நிமிஷம் நினைச்சேன். ஆனா அவங்ககிட்ட சமீபத்துல பேசவேயில்ல. அதான் உன்கிட்ட இதைப்பத்திப் பேசலாம்னு தோணிச்சு. நான் ஆராதனாகிட்ட பேசணும். மறுபடி அவகூட சேர்ந்து வாழ இது ஒரு கடைசி முயற்சின்னு கூட சொல்லலாம். இவ்வளவு வருஷம் விட்டுட்டு இப்போ என்ன திடீர்னு விபரீத ஆசைன்னு எல்லாருக்கும் தோணும். ஆனா எனக்கு ஆராதனாவைத் தவிர வேற யாரையும் அந்த இடத்துல நினைச்சுக் கூடப் பார்க்க முடியல கா.”

“இவ்வளவு தானே, இதுக்கு ஏன் குழப்பிக்கறே? பேசணும்னு தோணிச்சுன்னா பேசிடணும். இது உன் வாழ்க்கை. மனசு சொல்றதை ஒழுங்கா கேட்டாலே வாழ்க்கை சீராப் போகும். மத்தவங்க நம்ம வாழ்க்கைல குறுக்கிட்டு அறிவுரைங்கற பேர்ல சொல்ற சில விஷயங்கள்தான் நம்மைக் குழப்பிவிடும்.”

“இப்போ என்ன, நான் உன்கிட்ட ஆலோசனை கேட்கறது தப்புன்னு சொல்ல வரியா?”

“டேய்ய்… ரொம்பத்தான் குழம்பியிருக்கே. என்கிட்ட நீ இப்போ பேசறதைச் சொல்லல. பொதுவா சொன்னேன். நம்ம மேல அன்பும் அக்கறையும் வச்சிருக்கறவங்க நம்மைக் குழப்ப மாட்டாங்க. அமைதியா இருக்கற குளத்துல கல் எறிஞ்சு, வட்டமாப் பரவி வர அலையை வேடிக்கை பார்க்கறது வேணும்னா எல்லாருக்கும் புடிச்சதா இருக்கலாம். ஆனா, சலனமில்லாம அமைதியா போயிட்டிருக்கற ஒருத்தங்க வாழ்க்கைல மூக்கை நுழைச்சு கலகம் செஞ்சு, வேடிக்கை பாக்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க சொல்ற அறிவுரையை எல்லா நேரமும் கேட்டுட்டு இருந்தா, நம்ம வாழ்க்கை நிம்மதியா இருக்காது.

ஆராதனாகிட்ட பேசணும்னு தோணிச்சுன்னா, பொறுமையா யோசிச்சு என்ன பேசணும்னு முடிவு பண்ணிட்டு பேசு. ஒரு ப்ரெண்ட்லி டாக் ஒண்ணும் தப்பான விஷயம் இல்லையே. இது எல்லாத்தையும்விட, நீங்க ரெண்டு பெரும் லீகலி கணவன் மனைவி தானே. சட்டப்படி பிரியலையே.”

“சரி, நீ சொல்றது புரியுது. சட்டப்படி நாங்க பிரியலதான். ஆனா இவ்வளவு வருஷங்கள்ல அவ என்கிட்டே பேசணும்னு நினைக்கவேயில்லையே. அவதான் போன் நம்பரை மாத்தினா. அந்த நம்பரை அவங்க அம்மாகிட்ட எவ்வளவு தடவை கேட்டேன் தெரியுமா? ரொம்ப யோசிச்சாங்க. அதனால ஏதாவது பிரச்சனை வரும்னு சொல்லிட்டாங்க. ஆனா நான் அதே நம்பர்தான் வச்சிருக்கேன். சரோ ஆன்டிக்கும் என் நம்பர் தெரியும். ஆனா ஆராதனா என்கிட்டே பேசணும்னுகூட நினைக்கலையே. அதான் இப்போ எனக்குப் பேசணும்னு தோணின உடனே போன் செய்யவும் ரொம்பத் தயக்கமா இருக்கு. என்னைப் பத்தி தப்பா ஏதாவது நினைச்சுட்டா என்ன செய்யறது கா?”

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு சஞ்சீவ்? உன்னோட தயக்கம் எதைப் பத்தின்னு நீ இன்னும் சொல்லல. ஆராதனாகிட்ட பேசறதுக்கே தயக்கமா இருக்கா, இல்ல அவகூட மறுபடியும் சேர்ந்து வாழறதைப் பத்திப் பேசத் தயக்கமா இருக்கா?”

“அக்கா, எப்படி எல்லாம் நான் சொல்லாமலேயே கண்டுபிடிக்கறே? மைன்ட் ரீடிங்க் படிச்சியா?”

“மைன்ட்ரீடிங்க்கும் இல்ல, ஒண்ணும் இல்ல. நான் உனக்கு முன்னாடி பொறந்தவ டா. உன்னைத் தூக்கி வளர்த்தவ. உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? கேட்டதுக்கு பதில் சொல்லு, பேச்சை மாத்தாதே.”

“அதான் நீயே கரெக்டா சொல்லிட்டியே. மறுபடியும் சேர்ந்து வாழறதைப் பத்திதான் நான் ஆராதனாகிட்ட பேசணும்னு நினைக்கறேன். பேசலாமா, வேண்டாமா?”

“பேசுடா, ரொம்ப யோசிக்காதே. நான் அப்பவே சொல்லிட்டேனே, தைரியமாப் பேசு. முடிஞ்சா நேர்லயே போய்ப் பார்த்துப் பேசு. அதான் நல்லது.”

“நேர்ல எப்படி கா? அவ எங்க இருக்கான்னே தெரியாதே.”

“நான் சரோ ஆன்டிகிட்ட பேசி, ஆராதனா எங்கே இருக்கா, அவ போன் நம்பர் என்னன்னு விசாரிச்சு சொல்றேன். அதுக்கப்புறம் நீ போன்ல சாதாரணமா பேசப்பாரு. அவ போன் எடுக்கலேன்னா நேரலயே போய்ப் பேசிடு. பெஸ்ட் விஷஸ்.”

குழப்பம் தெளிந்து, மனம் லேசான ஒரு உணர்வு வந்தாலும், அடுத்து எடுத்து வைக்கப் போகும் அடி சீரான பாதையில் செல்லுமா என்ற கலக்கம் தயாராகக் காத்திருந்தது போல் வந்து தொற்றிக் கொண்டது. அதன்பின் சங்கவியிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கிளம்பி பெங்களூரு வந்து சேர்ந்தான்.

அதன்பின் கடந்த பொழுதுகள் முள் மேல் நடப்பது போல் இருந்தது அவனுக்கு. சங்கவி எப்போது ஆராதனாவின் அம்மாவிடம் பேசுவாள், அவர்களின் பதில் என்னவாக இருக்கும், ஆராதனாவின் முகவரியும் ஃபோன் நம்பரும் கிடைக்குமா, கிடைத்தால் ஆராதனாவிடம் எப்படிப் பேசுவது, அவளின் பதில் என்னவாக இருக்கும் என வரிசைகட்டி வந்தன குழப்பங்களும் கேள்விகளும். கூடவே ஆராதனாவின் அம்மா இதற்கு மறுப்பு தெரிவித்து, ஃபோன் நம்பர் தரவில்லை எனில் தன் நிலை என்ன என்ற கேள்வியும் ஓரத்தில் எட்டிப் பார்த்து இம்சித்தது.

சஞ்சீவ் இங்கே இப்படித் தவிப்பில் இருக்க, அங்கே ஆராதனாவும் அவள் அம்மாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த மதன கோபாலுக்குக் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக எகிறி அவரின் ரத்த அழுத்தத்தை உச்சத்திற்குக் கொண்டு போனது.

‘அம்மாவும் பொண்ணும் சேர்ந்து எனக்கெதிரா சதி பண்றீங்களா? இவ்வளவு காலமா என்னை மட்டுமே நம்பி, எனக்காக எல்லாம் செஞ்சுட்டிருந்த என் செல்லப் பொண்ணு ஆராதனாவே இப்போ எனக்குப் பிடிக்காததை யோசிக்கற அளவுக்கு மாறிட்டா. இதுல சஞ்சீவ்கூட மறுபடியும் பேச ஆரம்பிச்சா, என் மானம் மரியாதை என்னத்துக்காகும். இவங்களுக்காக இவ்வளவு காலம் மாடா உழைச்சிருக்கேன். அந்த நன்றிகூட இல்லையே.’

மனதுக்குள் புலம்பிக் கொண்டார் மதன கோபால். அறைக்குள் நுழைந்து தன் கோபத்தை எல்லாம் கொட்டிவிடலாமா என்று நினைத்த போது, அவர்களின் உரையாடல் தொடர்ந்தது. அதையும் ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார் மதன கோபால். அது அவருள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று அவரே எதிர்பார்க்கவில்லை.

என்ன நடந்திருக்கும்?

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    யார் உயர்ந்தவர் (சிறுகதை) – அர்ஜுனன்.S

    கண்ணீர் மொக்கு… மலர்ந்தது (சிறுகதை) – முகில் தினகரன், கோவை