in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 13) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9    பகுதி 10   பகுதி 11    பகுதி 12

இதுவரை:

காதல் புறாக்களாய் சிறகடித்துப் பறந்த ஜோடிகள் சஞ்சீவ் ஆராதனா இருவர் வாழ்விலும் புயல் அடித்தால், ஜோடிப் புறாக்களின் நிலை என்னவாகும்? வானம் அளக்கும் ஆசையோடு கைகோர்த்துப் பறக்க விரும்பிய இரண்டு புறாக்களும் திசை திருப்பப்பட்டால், கோர்த்த கைகளை உதறிவிட்டு, தனியாகப் பறக்க விரும்புமா? தடைகளைக் கடந்து சேர்ந்தே பறக்க விரும்புமா?

தன் தந்தையின் அன்பே பெரிதென வாதிடும் ஆராதனா. தன் காதலுக்காகப் பெற்றோரை விட்டுப் பிரிந்து வந்தாலும் தன்மானத்தோடு வாழ விரும்பும் சஞ்சீவ். தன் அந்தஸ்த்தால் சஞ்சீவின் காதலை விலை பேசும் மதன கோபால். தன் மகனைப் பிரிந்துவிடுவோமோ என்ற தவிப்பில் பானுமதி. உணர்வுப் போராட்டம் உரிமைப் போராட்டம் சேதாரத்தைத் தந்ததா? சுகத்தைத் தந்ததா?

பார்க்கலாம் வாருங்கள்.

இனி:

காதல் அனைவருக்கும் வெற்றியில் முடிவதில்லை. சொல்லாத காதலோடு காலம் முழுவதும் வாழ்பவர்கள் ஒருசிலர். காதலுக்காகப் போராடி வெற்றி கண்டு, ஆயுள் முழுவதும் தீராத காதலோடு வாழ்பவர்கள் இன்னும் சிலர். காதல் கனிந்து கல்யாணம் முடிந்த ஒரு சிலருக்கு சந்தோஷமான வாழ்க்கை தொடர்வதில்லை.

ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்புகூட சில நேரங்களில் அவர்கள் வாழ்க்கையின் எதிரியாக மாறி விடுகிறது. ஆராதனா சஞ்சீவின் மேல் அதீத காதலோடுதான் இருக்கிறாள். அதே அளவுக்கு தன் தந்தையின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாள். தந்தையின் மீது அவள் வைத்திருக்கும் பாசமும், நம்பிக்கையும் அவளின் காதலை என்றும் சிறப்பாக வாழவைக்கும் என்று மிகத் தீவிரமாக நம்பினாள். ஆராதனாவின் இந்த அதீத நம்பிக்கைதான் மதன கோபாலுக்குப் பகடைக் காயாகப் பயன்பட்டது.

சஞ்சீவிடம் தனிப்பட்ட முறையில் மதன கோபால் பேசியது ஆராதனாவுக்குத் தெரியாது. தெரியாத மாதிரிப் பார்த்துக் கொண்டார் மதன கோபால். அதனால்தான் சஞ்சீவ் சொன்னதை ஆராதனவால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. சஞ்சீவ் தன் மீது வைத்திருக்கும் காதலைவிட, அவன் தாய் மீது வைத்திருக்கும் அன்பிற்குத்தான் முக்கியத்துவம் தருகிறான் என்று ஆராதனாவுக்கு வருத்தம். ஆராதனா தன் காதலைப் புரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக அவள் தந்தையின் பேச்சை நம்புவது சஞ்சீவிற்கு வருத்தமாக இருந்தது.

காதலில் திளைத்தபோது ஒவ்வொருவரின் குறைகள்கூட நிறைகளாகத் தெரிந்தன. காதலுக்காக சில குறைகளைத் திருத்திக் கொள்ள மனம் வந்தது. இதெல்லாம் பெரிய குறையா, உலகத்துல இல்லாததா என்று வியாக்கியானம் பேசியது. சொல்லிலும் செயலிலும் நல்லதை மட்டுமே பட்டியல் போட்டு வைத்துக் கொண்டது காதல் மனம். தனக்காகவே இறைவன் படைத்த இணையாக, ஆருயிர்த் துணையாக கற்பனையில் மிதந்தது.

பத்து மாதம் பல்வேறு உடல் உபாதைகளைத் தாங்கி, தாண்டி, வலிகள் கடந்து பெற்றெடுத்த அன்னையின் அன்பும், தோளில் தாங்கி, துயரம் களைந்து கைப் பிடித்து நடைபழக்கி, வாழ்க்கை பழக்கிய தந்தையின் பாசமும் காதலின் அணைப்பில் மறந்து போயின. கசந்து போயின.

தான் வளர்ந்து விட்டதாகவும், முடிவுகளை எடுக்கும் வயது வந்துவிட்டதாகவும் வாதிடுகிறது காதல் மனம். வாழ்வின் முக்கியமான கட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு பெற்றோரின் அறிவுரை எட்டிக் காயாகக் கசக்கிறது.

இவ்வளவு வருஷம் நீங்க சொன்னதெல்லாம் கேட்டேனே. அதுல எனக்குப் பிடிக்காதது நிறைய இருக்கு. இருந்தாலும் பெத்தவங்களை எதிர்த்துப் பேசக் கூடாதுன்னு சொல்லி பிடிக்காத விஷயத்தையும் திணிச்சீங்க. அப்பெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி நீங்க சொன்னதைக் கேட்டேன்னில்ல. இப்பவாவது என் ஆசைக்கு, என் மனசுக்குப் பிடிச்சதை செய்ய விடுங்க. யாரு என்னன்னே தெரியாத ஒருத்தரை நீங்க தேடிப் புடிச்சு கொண்டு வந்து நிறுத்தி, பிடிச்சிருக்கா சொல்லுன்னு சொல்வீங்க. வெறுமனே அஞ்சு நிமிஷம் பார்த்து புடிச்சிருக்குன்னு மௌனமா தலையாட்டி, நீங்க தேடின வரனைக் கட்டிக்க சம்மதிச்சா நாங்க நல்லவங்க. அதுவே எங்க விருப்பத்துக்கு நாங்க வரன் தேடிக்கிட்டா, நாங்க பொல்லாதவங்க. காதலிக்கறவங்க எல்லாருமே தப்பானவங்கன்னு சமூகத்துல ஒரு பொய்யான நம்பிக்கை இருக்கு. அது மறைஞ்சு காதல் தப்பில்லைன்னு வயசானவங்க உணர்ந்தாத்தான் காதல் வாழும்.

காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கையை வாழப்போறது நான்தானே. எனக்குப் புடிச்ச மாதிரி நான் செலக்ட் பண்ணறதுல என்ன தப்பிருக்கு. – இப்படித்தானே காதலில் விழுந்த எல்லா இளம் இதயங்களும் வாதிடுகின்றன.

ஆராதனாவும் சஞ்சீவும் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த, மணமேடை காண இதே போன்ற விவாதங்களைத்தானே தங்கள் பெற்றோர்களிடம் முன்வைத்தார்கள். அவர்கள் காதலும், அவர்கள் தேடிக் கொண்ட வாழ்க்கைத் துணையும் அவர்களுக்கு சரியான இணையாக இருக்கும் என்று நம்பிக்கையோடு பேசினார்கள். ஆனால் திருமண வாழ்வில் இணைந்த பிறகு, ஏன் கருத்து வேறுபாடு வருகிறது.

கருத்து வேறுபாடு எல்லாத் தம்பதிக்குள்ளும் வரத்தான் செய்யும். அதைக் கடந்து, மறந்து கணவன் மனைவியாகத் தொடர்ந்து வாழத்தான் செய்கிறார்கள். ஆனால் ஆராதனா சஞ்சீவ் இணைகளுக்கு இடையே கசிந்த கருத்து வேறுபாடு ஏன் வாழ்க்கையே மூழ்கடிக்கும் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது? உருகி உருகிக் காதலித்த சஞ்சீவை உதறிவிட்டு வருவதற்கு ஆராதனாவிற்கு எப்படி மனம் வந்தது? சிக்கலை சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுமை ஏன் இல்லை?

அவள் வளர்ந்தவிதம் அப்படி. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொறுமையை அவள் வளர்த்துக் கொள்ளவே இல்லை. அதற்கான வாய்ப்பை மதன கோபால் அவளுக்குத் தரவே இல்லை. மதனகோபால் போல் பெற்றோர்கள் தான் இப்போது நிறைய இருக்கிறார்கள். குழந்தைகளை எந்தக் கஷ்டமும் தெரியாமல், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லமாக வளர்க்கிறார்கள். அது ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ பெற்றோரின் செல்ல வளையத்தைத் தாண்டி வரும்போது, சிக்கல்களை எதிர்கொள்ளத் தெரியாமல் அவசர முடிவுகளில் நுழைகின்றனர்.

ஆராதனாவும் அதே தவறைத்தானே செய்தாள். காதலே துணை என்று மதன கோபாலை எதிர்த்தவள், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தந்தையின் பாசமே பெரிதென காதலை உதறித் தள்ளிவிட்டாளே.

சஞ்சீவை விட்டுப் பிரிந்து வந்த ஆராதனா, தன்னுடைய காதல் தோல்வியில் முடிந்த வருத்தத்தில் இருந்தாலும், அதிலிருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என்று நினைத்தாள். சஞ்சீவ் மேல் இருந்த காதல் மற்றும் தந்தை மேலிருந்த பாசம் என இரண்டிற்கும் நடுவில் சிக்கி, எது சரி, எது தவறு என்று முடிவு செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் அவளைப் பொறுத்தவரை சஞ்சீவ் தன் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே தோன்றியது.

ஆராதனா சஞ்சீவை விட்டுப் பிரிந்து வந்தது மதனகோபாலுக்கு நிம்மதியாக இருந்தது. உடனே சென்னையிலிருந்து பெங்களூர் கிளம்பி வந்தவர், மகளை சமாதானப்படுத்தும் சாக்கில் அவள் மனதில் மிச்சம் ஒட்டியிருக்கும் காதலையும் துடைத்தெறியும் வேலையை ஆரம்பித்தார்.

“ஆராதனா, இந்த ஒரு வருஷத்துல உன் வாழ்க்கைல நடந்ததை எல்லாம் ரப்பர் வச்சு அழிக்கற மாதிரி, உன் மனசுல இருந்து அழிச்சுடு. உனக்கு நான் நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தரேன். நடந்ததை ஒரு கனவா நினைச்சு மறந்துடு. இதுக்குத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன், உனக்கு ஒத்துவராத இடத்துல நீ வாழ நினைக்கறேன்னு நான் சொன்னேன். அப்போ இந்த மதனகோபால் உனக்கு எதிரியாத் தெரிஞ்சேன். காதல் கண்ணை மறைச்சதால என் பேச்சைக் கேக்கல. பரவாயில்ல, இப்பவாவது புரிஞ்சுகிட்டியே.”

இப்படி, அவள் செய்தது தவறு என்பது போலவும், இனிமேல் அவளுக்குப் பக்கபலமாக தான் எப்போதும் இருக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

மதன கோபால் ஒவ்வொரு முறை இப்படிப் பேசும்போதெல்லாம் ஆராதனாவிற்குக் குற்ற உணர்ச்சி மேலோங்கும். தன் தந்தையின் பேச்சைக் கேட்டிருக்கலாமோ, அவசரப்பட்டு சஞ்சீவை நம்பி ஏமாந்தது தவறோ என்ற குற்ற உணர்ச்சி அவளை ஆட்டுவிக்கும். தந்தையை எதிர்த்து வாதம் செய்ய இயலாமல் மௌனமாகத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வது போலிருப்பாள். ஆராதனாவின் இந்தக் குழப்பான மனநிலையை மதன கோபால் தனக்கு சாதகமாக்க நினைத்தார்.

ஆனால் சரோஜினிக்கு இது மிகவும் வருத்தம் தந்தது. தன் பங்குக்கு அவரும் ஆராதனா செய்தது தவறு எனச் சுட்டிக்காட்டிப் பேசினார். ஆனால் எப்போதுமே அம்மா சொல்வதைக் கேட்டுப் பழக்கமில்லாத ஆராதனா, இப்போது மட்டும் அம்மா சொல்லும் புத்திமதிகளை ஏற்றுக் கொள்வாளா என்ன?

“அம்மாடி ஆராதனா, அப்பா சொல்றதைக் கேக்கற மாதிரி அம்மா சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு டா. கண்ணாடியைப் போட்டு உடைக்கற மாதிரி இப்படி ஒரே வருஷத்துல வாழ்க்கையை உடைச்சுட்டு வந்திருக்கியே ஆராதனா. இதுக்காகவா காதலிச்சீங்க? இதுக்காகவா ஊரே மெச்சற மாதிரி கல்யாணம் செஞ்சுகிட்டீங்க? எதுனாலும் பேசித் தீர்த்துக்கலாம் ஆராதனா. அவசரப்படாதே.”

“அம்மா, நீங்க திருந்தவே மாட்டீங்களா? எப்பவும் என்னைக் குறை சொல்றதே உங்களுக்கு வேலையா? ஒரு நாளாவாது எனக்கு சாதகமா, ஆதரவா, ஆறுதலாப் பேசியிருக்கீங்களா? எப்பவும் நான் தப்பு பண்ற மாதிரியே பேச எப்படி மனசு வருது மா? சரி, என் மேல தப்பிருக்குன்னு வச்சுக்கோங்க. சஞ்சீவ் செஞ்சது மட்டும் சரியா? அவரை நம்பி அவங்க வீட்டுக்கு வாழப் போன என்னை நல்லா வச்சுக்கறது அவர் கடமைதானே? அதைத்தானே நான் கேட்டேன்.

தனிக்குடித்தனம் போலாம்னு நான் கேட்டதுல என்ன தப்பிருக்கு மா? என்னோட இந்த வீடு இந்த ஊர்லயே இருக்கு. அப்போ இங்க வந்து தங்கிக்கலாம்னு தானே நான் யோசிப்பேன். எதுக்கு தேவையில்லாம வாடகைக்கு வேற வீடு தேடி, வாடகை குடுத்து, அனாவசிய செலவு தானே? எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்க்கு வேற ஊர்ல வேலை கிடைச்சு, அந்த ஊருக்குப் போயிருந்தா, அப்போ வாடகைக்கு வீடு எடுத்து இருக்கலாம்.

சரி, உங்களுக்குப் புரியற மாதிரி சொல்றேன். இப்போ, பெங்களூர்ல சஞ்சீவோட அப்பாவுக்கு இன்னொரு வீடு இருக்குன்னு வச்சுக்கோங்க. அந்த வீடு இப்போ சும்மாதான் இருக்குன்னா அந்த வீட்டுல போய் நாங்க இருக்கறதை சஞ்சீவ் ஒத்துப்பாரில்லையா? அது தப்பில்லேன்னா இதுவும் தப்பில்லையே. என் மாமனார் சம்பாதிச்சு வாங்கின வீடு, அதுல நான் வந்திருந்தா எனக்கு கௌரவக் குறைச்சல்னு நான் சொன்னா சஞ்சீவ் ஒத்துப்பாரா? ஏன் நீங்க யாருமே அதை ஏத்துக்க மாட்டீங்களே.

அது என்னமா, ஒரு பொண்ணு அவ மாமனார் வாங்கின வீட்டுல போய்த் தங்கினா தப்பில்ல. ஆனா ஒரு ஆண் அவன் மாமனார் சம்பாதிச்சு வாங்கின வீட்டுல வந்து குடியிருந்தா கெளரவம் குறைஞ்சு போயிடுமா? இதை ஆணாதிக்கம்னு சொல்லாம வேற எப்படிச் சொல்றது மா? பெண்ணடிமைத்தனம்னு வேணா மாத்திச் சொல்லலாம்.

ஆனா இவ்வளவு தப்பு சஞ்சீவ்மேல இருக்கும் போதும் நீங்க எனக்கு அறிவுரை சொல்றீங்க பாருங்க, அதுதான் வருத்தமா இருக்கு மா. ஆனா அப்பா என் மனசை சரியாப் புரிஞ்சு வச்சிருக்காரு. இப்பகூட பாருங்க, மனசொடிஞ்சு போயிருக்கற ஒரு பொண்ணோட மனசுக்கு ஆறுதலா இன்னொரு பொண்ணால பேச முடியல. காலம்காலமா ஆணுக்கு அடிமையாகவே வாழ்ந்து பழகின பெண் மனசு இப்படித்தான் தப்பாவே யோசிக்கும். இதுல நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன.”

விதண்டாவாதம் செய்யும் தன் மகளுடன் வாதம் செய்ய விரும்பவில்லை சரோஜினி. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று அமைதியானார். காலம் அவளுக்கு நல்ல தெளிவைக் கொடுக்கும் என்று நம்பினார்.

ஆராதனாவிற்கு தன் அப்பா சொல்வதுதான் சரியெனத் தோன்றியது. ஆனால் அதற்காக உடனே விவாகரத்து போன்ற விஷயங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.

மதனகோபால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விவாகரத்து குறித்து சொல்லிப் பார்த்தார். அதற்கு மட்டும் அவள் சம்மதிக்கவில்லை. அவசரத்தில் போட்ட புள்ளி பிசகிய கோலம் போல் தன் வாழ்க்கை இப்படி நொறுங்கிப் போகும் என்று அவள் ஒரு நாளும் கனவில்கூட யோசித்ததில்லை.

சஞ்சீவ் நிலையும் மிக மோசமாகத்தான் இருந்தது. மனமொத்து இருவரும் விரும்பி, திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட ஒரு வருடத்திலேயே ஆராதனா பிரிந்து போய்விடுவாள் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் இதற்குப் பின்புலத்தில் மதனகோபாலின் தவறான வழிகாட்டுதல்கள்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதால், ஆராதனா மேல் அவனுக்குக் கோபம் வரவில்லை. பானுமதியும் தன் மகனுக்கு ஆறுதல் சொல்வது போல், அவன் மனதில் சுழலும் ஆராதனாவின் நினைவுகளை நீக்குவதற்கு முயன்றார். ஆனால் சஞ்சீவ் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவே இல்லை.

“என்னிக்கு இருந்தாலும் ஆராதனாதான் என்னோட வாழ்க்கை. வேற யாரும் வர முடியாது. அதனால இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க. அப்படி அவ திரும்பி வரலேன்னாலும் நான் இப்படியே இருந்துட்டுப் போறேன். நான் உங்க கூடவே இருக்கணும்னு தானே ஆசைப்பட்டீங்க. அதனால நான் இப்படியே இருந்துடறேன்.”

“என்ன பா இப்படிப் பேசறே? நீ இப்படித் தனியா தவிக்கணும்னா நான் ஆசைப்பட்டேன்? நீ குடும்பமா, சுபிட்சமா வாழறதை நான் கண் முன்னால பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். பேரக் குழந்தைகளைக் கைல தூக்கிக் கொஞ்சணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் நீ என்கூடவே இருக்கணும்னு நினைச்சேன். அது தப்பா? அதுக்குத்தான் சொல்றேன், கொஞ்ச நாள்ல இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. நான் நல்ல பொண்ணா பார்க்கறேன். நம்ம குடும்பத்துக்கு ஒத்துவர மாதிரி பொண்ணு கிடைக்க மாட்டாளா என்ன. நீ சீக்கிரம் டைவர்ஸ்க்கு ரெடி பண்ணு.”

“அம்மா, இந்தப் பேச்சை இதோட விட்டுருங்க. டைவர்ஸ் பத்தி யோசிக்கக்கூட மாட்டேன். இதுதான் என் முடிவு.”

பானுமதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மகனின் நிலையை நினைத்துக் கவலைப்படுவதா, அவன் மனம் மாறி வேறு வாழ்க்கைக்கு ஒத்துக் கொள்வான் என்று காத்திருப்பதா, அவன் வாழ்க்கை நிலைகுலைந்ததற்கு தன் குணம்தான் காரணம் என்று குற்றம் சாட்டும் கணவருக்கு சமாதானம் சொல்வதா என்று தடுமாறிப் போனார் பானுமதி.

மதனகோபால் சஞ்சீவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து விவாகரத்திற்கு ஒத்துக் கொள்ளும்படி கேட்டுப் பார்த்தார். ஆனால் சஞ்சீவ் அதற்கு சம்மதிக்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தான். இது மதனகோபாலின் கோபத்தை அதிகப்படுத்தியது.

மகள், வாழ வேண்டிய இடத்தில் வாழவும் இயலாமல், அதிலிருந்து விடுபடவும் இயலாமல் தவிக்கிறாள். கேள்விக்குறியாக நிற்கும் அவள் வாழ்க்கையை நினைத்து கோபமும், வருத்தமும் வந்தது. ஆனாலும் தான் தோற்றுவிடக் கூடாது என்பதில் மதனகோபால் மிகவும் தீவிரமாக இருந்தார்.

இரு காதல் உள்ளங்களுக்கு இடையே நிலவும் ஈகோ போராட்டம், தந்தை மகளுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டம், அம்மா மகனுக்கிடையே நடக்கும் உணர்வுப் போராட்டம்….. எது ஜெயிக்கும்?

தந்தையின் பாசப் பிணைப்பில் இருந்து மீண்டு, காதல் மனதின் உணர்வைப் புரிந்து கொள்ள இயலாமல் வாழ்வைத் தொலைத்த ஆராதனா, எப்போது , எப்படி தன் தவறை உணர்ந்தாள்?

சஞ்சீவ் நிலை என்ன? பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்களா????

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 19) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    அவளா? (சிறுகதை) – பிரேமா ரமணி