2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அதிகாலை 3 மணி. நந்தினியின் அலைபேசியில் அலாரம் அடித்தது.
தூக்க கலக்கத்தில் எழுந்த நந்தினி அலாரத்தைப் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒலிக்கும் படி மாற்றிவிட்டு உறங்கினாள்.
மூன்று பத்திற்கு அலாரம் அடிக்க மீண்டும் அடுத்த பத்தாவது நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது அலாரம். அப்பொழுதும் அதே கதை.
நேரம் மூன்று முப்பது. இனியும் எழுந்திரிக்கவில்லை என்றால் இன்றைய தேர்வு அவ்வளவு தான். நேரமின்மையைப் புரிந்து கொண்டு எழுந்து அமர்ந்து படிக்கத் தொடங்கினாள் நந்தினி.
முகம் கழுவக் கூட எழுந்திரிக்க முடியவில்லை. எட்டும் தூரத்தில் இருந்த மின் விளக்கை போட்டுக்கொண்டு படுக்கையிலேயே படிக்கத் தொடங்கினாள் நந்தினி
நந்தினி பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். இன்று அவளுக்கு செமஸ்டர் தேர்வு. தேர்விற்குப் படிக்க வேண்டிய பாடங்கள் இன்னும் நிறைய இருந்ததால் இந்த அதிகாலை கண் விழிப்பு.
பாதித் தூக்கத்தில் படித்துக்கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் படித்தவள் மணி பார்த்தாள். நேரம் 3.50.
‘இன்னும் பத்து நிமிடங்கள் தூங்கிவிட்டு நான்கு மணியில் இருந்து தெளிவாகப் படிக்கலாம்’ என்றது நந்தினியின் மனம்.
அப்படியே செய்தாள். நான்கு மணிக்கு எழுந்தவள் மீண்டும் படிக்கத் தொடங்கினாள்.
அரைமணி நேரம் படித்தவள் தன் அறையைச் சுற்றிப் பார்த்தாள்.
மின்விளக்கின் பளீர் வெளிச்சத்திலும் இருளின் அழுத்தம் கருமையை தந்தது. தன் தங்கை ஆழ்ந்து உறங்குவதை பார்க்கும்பொழுது நந்தினிக்கு பொறாமையாக இருந்தது. தூக்கத்தின் அருமை புரிந்தது. எத்தனை நாள் நேரம் இருந்தும் தூங்காமல் அலட்சியப் படுத்தினோம். இப்பொழுது தூக்கம் வருகிறது ஆனால் நேரம் இல்லை. தானும் தங்கையைப் போல் தூங்க ஆசைப்பட்டாள். இன்னும் அவள் படிக்க வேண்டிய பாடங்கள் அவளை பயமுறுத்தப் படித்துக் கொண்டிருந்தாள்.
வாட்ஸாப் குழுவில் தோழி ஒருத்தி காலை வணக்கம் அனுப்ப பலரும் பதில் அளித்தனர்.
நான் மட்டும் விழித்திருக்கவில்லை துணைக்கு ஆள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டவள் தானும் குழுவில் காலை வணக்கம் அனுப்பினாள்.
எழுந்து சென்று முகத்தை கழுவினாள். தண்ணீர் குடித்தாள். பால்கனி கதவை திறந்தாள். வெளிகாற்றை சுவாசித்தாள்.
‘எத்தனை குழுமை. உஷ்ணமே சிறிதும் இல்லாத பரிசுத்த காற்று. அதன் ஈரத்தில் தேகமே நனைகிறதே’ மனதில் நெகிழ்ந்து கொண்டே குழுமையை உள்வாங்கினாள் நந்தினி.
தூக்கம் தெளிந்து கடகடவென பாடங்களைப் படித்தாள்.
‘அதிகாலையில் எழுந்து படிப்பது கூட எவ்வளவு தெளிவாய் நியாபகத்தில் நிற்கிறது. அதனால் தான் பாரதி காலை எழுந்தவுடன் படிப்பு என்றாரோ! பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது நாள்தோறும் அதிகாலையில் எழுந்து படித்தோமே. நிறைய கற்றுக்கொண்டோமே. ஏன் கல்லூரிக்குச் சென்றப் பின் அந்த பழக்கத்தை விட்டுவிட்டோம். அவசர அவசரமாய் எட்டு மணிக்கு எழுந்து தயாராகி செல்லவே நேரம் போதாது. இனி அப்படி இல்லாமல் சீக்கிரம் எழுந்து பழக வேண்டும்’ தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
ஒரு மணி நேரத்தில் பெரும்பாலான பாடங்களைப் படித்தாள். இனி வரும் தேர்விற்கும் காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.
நேரம் ஆறைக் கடந்தது.
நந்தினியின் அம்மா அவளுக்குப் பால் கொண்டு வந்தார்.
வெளியில் வந்து நின்று பருகினாள் நந்தினி.
சூரியன் மெல்ல உதிக்கத் தொடங்கியது.
வானத்தில் இருந்து மெல்ல கருமை நீங்கியது. பின் நீலம் பரவியது. மஞ்சள் நிறத்தில் உதித்தது சூரியன். சில நிமிடங்களிலேயே பளிச்சிட்டது வானம். மேகங்கள் சூரியனை கண்டதும் வெட்கத்தில் சிவந்தன.
கிட்டத்தட்ட நந்தினி பால் அருந்தி முடிப்பதற்குள் இத்தனை அதிசயங்களும் நடந்தன.
சூரியனையே வெறிக்கப் பார்த்தாள்.
‘நீ வருவதை பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எத்தனை ரம்மியாக இருக்கிறாய். அதை விட்டுவிட்டு இரவு முழுவதும் அலைபேசியில் நேரம் செலவழித்துவிட்டு விடிந்து நேரம் கழித்து எழுந்து வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோமே உன்னைப் பார்க்காமல் அப்படிச் சென்று என்ன சாதித்து விடப் போகிறோம்’ சூரியனைப் பார்த்து வியந்து தனக்குள் கூறிக்கொண்டாள்.
சில நிமிடங்கள் அப்படியே கழிந்தன.
“தண்ணி வெக்கட்டுமா நந்தினி” அம்மாவின் குரல் சமையல் அறையில் இருந்து கேட்டது.
“பத்து நிமிஷம் கழிச்சி வைமா.. ரிவிஷன் பண்ணிட்டு வந்து குளிக்கிறேன்”
மீண்டும் படிக்க அமர்ந்தாள் நந்தினி இன்னும் சற்று ஈடுபாட்டுடன்!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings