2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘என் இதயமே, என் உயிர் மூச்சே… ‘ என்று ஆரம்பித்து அவளை வர்ணித்து வர்ணித்து அந்த லட்டரை எழுதியிருந்தான் ராஜா. இடையில், ‘ உன்னோடு நான் நிறைய பேசவேண்டும்… எப்போது… எங்கே… நீயே சொல் என் உயிரே… ‘ என்றும் எழுதி, முடிவில் இப்படிக்கு, ‘ உன்னை குடிகொண்ட இதயம் கொண்டவன்… ’ என்றும் எழுதியிருந்தான்.
படித்துப் பார்க்கும்போது அவனுக்கே மயக்கத்தை கொடுத்தது, அந்த வர்ணனை. இந்த லெட்டருக்கு கண்டிப்பாக அவள் மசியுவாள் என்ற நம்பிக்கையும் உண்டானது அவனுக்குள்.
xxxxxxxxx
அவனது அப்பாவுக்கு அந்த ஊருக்கு மாற்றலாகி, அந்த குடியிருப்பு பகுதிக்கு குடி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ராஜா, அவனது அப்பா, அம்மா, தங்கை தாரிணி. அளவான குடும்பம், அழகான குடும்பம்.
ராஜா பிளஸ் முடித்து டிகிரி சேரப் போகிறான். தாரிணி டென்த் முடித்துவிட்டாள். அடுத்து பிளஸ் ஒன் சேரப் போகிறாள்.
போன வாரம்தான் முதன் முதலில் பார்த்தான் அவளை. மூன்று வீடுகள் தள்ளி எதிர் வரிசையில் முதல் மாடி பால்கனியில் மொபைலில் பேசிக்கொண்டே இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தாள் அவள். கூர்ந்து பார்த்தான். சினிமா ஹீரோயின் கணக்காக இருந்தாள் அவள். அப்படி ஒரு அழகான பெண்ணை இதுவரை அவன் பார்த்ததே இல்லை. எப்படியாவது அவளுடன் பேசிவிட வேண்டும் என்று அப்போதே துடித்தான்.
ஒருநாள் எதேச்சையாய் பார்த்தபோது துணிகளை உதறி பால்கனி கொடியில் போட்டுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவள் கவனித்த மாதிரி தெரியவில்லை.
அடுத்த முறை பால்காரரிடம் பால் வாங்கி கொண்டிருந்தாள். வெளியே இவனது தங்கை தாரிணியும் அவரிடம் பால் வாங்க, கிண்ணத்துடன் போய் நின்றிருந்தாள். உடனே ஓடிப்போய் தாரிணியுடன் சேர்ந்து நின்று கொண்டு அவளை நோட்டம் விட ஆரம்பித்தான்.
அதைக் கவனித்துவிட்ட தாரிணி அவனைக் கண்டித்தாள். ‘நான்தான் பால் வாங்குகிறேன். நீ என்ன செய்கிறாய் இங்கே. போய் உன் வேலையை பார், அதிகப்பிரசங்கி…‘ என்றாள். அத்துடன் நின்றுவிடாமல், ‘அவங்கப்பா ஒரு போலீஸ்காரர் தெரியுமா… முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே உள்ளே வச்சிடுவார்… ஒழுங்கா இருந்துக்கோ… ‘ என்றும் செல்லமாய் எச்சரித்தாள்.
உள்ளே திரும்பி வந்தவன் உடனே ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினான். ‘ என் இதயமே, என் உயிர் மூச்சே… ‘என்று ஆரம்பித்து அவளை வர்ணித்து நிறைய எழுதினான். படித்துப் பார்த்தபோது இந்த லெட்டருக்கு கண்டிப்பாக அவள் விழுவாள் என்ற நம்பிக்கையும் உண்டானது.
எப்படி இந்த லெட்டரை அவளிடம் சேர்ப்பிப்பது. பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு அடிக்கடி அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் போகவேண்டும். எப்படியும் எதற்காகவாவது அவள் கீழே வருவாள். அப்போது சட்டென அவளது கையில் லெட்டரைத் திணித்துவிடவேண்டும். பிடித்திருந்தால் பேசட்டும். இல்லையென்றால் கிழித்துப் போட்டுவிடட்டும்… அதையும் அவளிடம் சொல்லிவிடலாம்.
xxxxxxxxx
எதிர்பார்த்தது போல அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவனது அம்மா அவனைக் கூப்பிட்டு கடைக்குப் போய் ஒரு தீப்பெட்டி பாக்ஸ் வாங்கி வரச் சொன்னார்கள். காசை எடுத்துக் கொண்டு நடந்தான். தெரு முனையில் பெட்டிக் கடை இருக்கிறது. போகும்போது பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டுப் பார்த்துக் கொண்டான்.
‘நான் இருக்கிறேன்…’ என்றது லெட்டர். ஒருவேளை அவள் வாசலில் நின்று கொண்டிருந்தால் கொடுத்துவிடலாம் என்ற எண்ணம் உண்டானது. ஆனால் அவளைக் காணவில்லை. பால்கனியில் தெரிய மாட்டாளா என்று எதிர்பார்த்தான். இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி தர மாட்டாளா என்றும் ஏங்கினான்.
யோசித்துக் கொண்டே நடந்தவனுக்கு நிஜத்திலேயே எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஆம், அதே பெட்டிக் கடையில் அவளும் நின்றிருந்தாள். நெஞ்சு அடித்துக்கொண்டது. மறுபடியும் பாக்கெட்டுக்குள் கைவிட்டு லெட்டர் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டான்.
அவளை நெருங்கி அவளுக்கு பின்புறமாய் போய் நின்றுகொண்டான். அவளிடமிருந்து தேங்காயெண்ணை வாசனையும் பவுடர் வாசனையும் அவனது நாசிக்குள் ஏறியது. அவனது நெஞ்சு முன்னை விட இப்போது ரொம்பவும் வேகமாய் அடித்துக் கொண்டது.
எதேச்சையாய் கடைக்காரர் அவனை பார்க்க, தீப்பெட்டி வேண்டும் என்று சொல்லிவிட்டு அவளை ஓரக்கண்ணால் கவனித்தான். எதேச்சையாய் அவளும் இவனை பார்த்தாள். புளகாங்கிதம் அடைந்துபோனான் இவன்.
அவள் மெல்லியதாய் புன்னகைத்தாள். அவனது வீட்டைச் சுட்டிக்காட்டி அவனையும் சுட்டிக் காட்டினாள். ‘ அந்த வீட்டுப் பையனா ‘ என்று கேட்கிறாள் என்று புரிந்தது. அவனும், ‘ ஆமாம் ‘ என்பது போல தலையை ஆட்டினான். கூடவே புன்னகையையும் உதிர்த்து வைத்தான்.
‘ ராஜா…? ‘ என்றாள். நமது பெயர் அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்று நினைத்தபோது இன்பம் பொங்கி வடிந்தது இவனுக்குள். ‘ என் பேர் உனக்கெப்படி தெரியும்… ‘ என்றான் நைஸாக. ‘ தாரிணி கூப்பிடும்போது கவனிச்சிருக்கேன்… ‘ என்றாள் புன்னகையுடன். தொடர்ந்து, ‘ என் பெரு புனிதா… ‘ என்றும் மெலிதான குரலில் சொல்லி புன்னகைத்தாள்.
சட்டென பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அந்த லெட்டரை எடுத்து யாரும் கவனித்துவிடாதபடி அவளது கையில் திணித்தான். கொஞ்சம் அதிர்ந்து போய் கலவரத்துடன் இவனைப் பார்த்தவள் அந்த லெட்டரை மறுக்காமல் பற்றிக் கொண்டு கடைச் சாமான்களுடன் கிள்ளம்பிவிட்டாள். அவசரமாய், ‘ பிடிக்கலைனா கிழிச்சுப் போட்டுடுங்க, ப்ளீஸ்… ‘ என்றான் தடுமாற்றத்துடன். புன்னகையையே பதிலாகக் கொடுத்துவிட்டு நடந்தாள் அவள்.
தீப்பெட்டியை வாங்கிக்கொண்டு காசை கொடுத்துவிட்டு இவனும் திரும்பி நடந்தான். யோசித்தான். மறுக்காமல் வாங்கிக் கொண்டாளே, அப்படியென்றால் அவள் நம்மை அடிக்கடி கவனித்திருப்பது மட்டுமின்றி, நம்மேல் அவளுக்கு ஒரு அபிப்பிராயமும் உண்டாகியிருக்கிறது என்றுதானே அர்த்தம். நெஞ்சு இன்ப அதிர்ச்சியில் அடித்துக்கொண்டது.
கொஞ்ச தூரத்தில் முன்னால் அவள் நடந்து கொண்டிருந்தாள். கொஞ்ச இடைவெளி விட்டு இவன் பின்தொடர்ந்தான். திரும்பி ஏதும் பார்ப்பாளா என்று எதிர்பார்த்தான். பார்க்கவில்லை. நெஞ்சு இன்னும் அடித்துக்கொண்டேதானிருந்தது. அவள் படிகளில் ஏறி போய்விட்டாள். அந்த வீட்டை கடக்கும்போது, ஏறிட்டுப் பார்க்க துணிவில்லாமல் வேக வேகமாய் நடந்து தனது வீடு வந்து சேர்ந்துவிட்டான்.
இப்போது பதட்டம் இன்னும் அதிகமாய் ஆனது. வீட்டுக்கு போனவுடன் லெட்டரை விரித்து படிப்பாளா. படித்து பார்த்துவிட்டு கசக்கி தூக்கி எரிந்துவிடுவாளா. இல்லை மடித்து பத்திரப்படுத்தி வைப்பாளா, திரும்பத் திரும்பப் படித்து பரவசமடைவாளா. பதில் சொல்வாளா… பரிதவித்தான்.
xxxxxxxxx
மறுநாள் விடியற்காலையிலேர்ந்தே அவனுக்கு லேசாய் பதட்டம். லெட்டரைப் படித்தாளா, இல்லையா… பதில் சொல்லுவாளா சொல்ல மாட்டாளா… அல்லது அந்த லெட்டர் வேறு யாராவது கைக்குப் போய் அவளுக்கு பிரச்சினை ஏதும் வந்துவிடுமா… அவளது அப்பாவின் கைக்கு கிடைத்துவிட்டால் தாரிணி சொன்னது போல முட்டிக்கு முட்டி தட்டிவிடுவாரா… பலவாறு யோசித்ததில் குழம்பிப் போனான்.
இப்போது உடனே அவளைப் பார்த்துவிடவேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை மொட்டைமாடிக்குப் போனால் அவளும் அவளது வீட்டு மொட்டைமாடிக்கு வந்திருந்தால் பார்த்துவிடலாமே என்று யோசித்துக் கொண்டே மொட்டை மாடிக்குப் போனான்.
அங்கே துணிதுவைக்கும் கல்லிற்கு பின்புறமாய் ஒரு தலை தெரிந்தது. அது தாரிணி மாதிரி இருக்கவே, மெல்லப் போய் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்தான். விளையாட்டுக்காக ‘ பே… ‘ என்று கத்தி பயமுறுத்தினான். திடுக்கிட்டு எழுந்தவளின் கையில் ஒரு பேப்பர்.
சட்டென அதைப் பிடுங்கினான். ‘ என்ன லெட்டர்டி இது….’ என்றபடி.
அதே நேரம் அவனது அம்மா ஈரத்துணி பக்கெட்டுடன் மாடிக்கு வந்தாள். மகளின் கையில் இருந்த பேப்பரைப் பார்த்ததும் திகைத்தபடி, ‘ என்னடி பேப்பர், அது… ‘ என்றபடி வெடுக்கென பிடுங்கினாள்.
‘ ஸாரிம்மா… புனிதாவோட அண்ணன் இல்லே… புகழ்… அவன்தான் எனக்குக் குடுத்தான்… ‘ என்றாள் தாரிணி நடுக்கத்துடன்.
லெட்டரை பிரித்தவள், ‘என் இதயமே, என் உயிர் மூச்சே… ‘ என்று படித்தாள். திடுக்கிட்ட அவன், மெல்ல எட்டிப் பார்த்தான். புரிந்துவிட்டது, அது புனிதாவுக்கு அவன் எழுதிய அதே லெட்டர்.
பளீர் என்று மகளை அறைந்தாள் அம்மா. டக்கென தனது கன்னத்தைப் பிடித்துக் கொண்டான் அவன். ‘ நமது கன்னத்தில் விழவேண்டிய அறை. ‘ என்று நினைத்துக்கொண்டான்.
புனிதா படித்துவிட்டு ஒளித்துவைத்திருந்த அந்த லட்டர் அவளது அண்ணன் கைக்குப் போய், அவன் விரும்பும் தான் தாரிணிக்கு கொடுத்திருக்கிறான் என்று பின்னால் தெரிந்து கொண்டான் ராஜா.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
ஐந்து நாட்களுக்கு முன்னால் பிரசுரமான இக்கதை ஐந்நூறு பார்வையாளர்களை தொட உள்ளது. எனது அனைத்து வாசக உள்ளங்களுக்கு எனது நன்றிகள். வெளியாகிக்கொண்டிருக்கும் எனது மற்ற கைதிகளையும் படியுங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி நன்றி.
கைதிகளையும் என்று தவறுதலாக பதிவாகிவிட்டது. கதைகளையும்…என்று திருத்தி வாசியுங்கள்… நன்றி…