2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நானும் அனுவும் சினிமாவுக்குப் போய்விட்டு அப்படியே ஒரு நல்ல ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாமென்று முடிவு செய்துகொண்டு கிளம்பினோம்.
அந்தப் படம் ரிலீஸாகி பத்துநாட்கள் ஓடியும் இன்னும் கும்பல் இருந்தது. டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே போனோம். நல்லவேளையாக நடுவில் இடம் கிடைத்தது. படம் போட்டார்கள். படம் சுவாரஸியமாக ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளைக்கு கொஞ்சம் முன்னதாக கூல்டிரிங்ஸ் வேண்டுமென்றாள் அனு.
நல்ல சீன் ஓடிக் கொண்டிருக்கும்போது வெளியே போகச் சொல்கிறாளே என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே வெளியே வந்து கவுண்ட்டருக்குப் போனால், அங்கே அதற்குள் ஏகக் கூட்டம். அத்துடன் அந்த அதிர்ச்சி.
xxxxxx
ஆம், அங்கே கோக் வாங்கிக்கொண்டு நின்றிருந்தாள் ராதிகா… ஒரு காலத்தில் நான் காதலித்தவள். என்னை ஒதுங்கச் சொன்னவள்.
நான் திகைத்துப்போய் வேகத்தைக் குறைத்து நடந்தேன். அவள் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்டன நாங்கள் கடைசியாய் பேசி….பிரிந்து….
முடிவாய் சொன்னாள் ராதிகா, ‘ ஸாரி அன்பு… எங்க அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு. உனக்குத் தெரியாததில்லை, ரெண்டு பெரிய பங்களா, காலி ப்ளாட்டுகள், கார், பேங்க் பேலன்ஸ்னு நிறைய இருக்கு. எல்லாம் அப்பா சுயமா சம்பாதிச்சது. அவரோ விடாப்பிடியாய், ‘ நான் சொல்ற மாப்பிள்ளைக்கு நீ கழுத்தை நீட்டலேனா, எல்லா சொத்துக்களையும் ஏதாவது ஒரு டிரஸ்ட்டுக்கு எழுதி வச்சிடுவேன்… அப்புறம் உன் இஷ்டம் ’னு பயமுறுத்தறார். உனக்குத் தெரியாது. அப்பா ஒரு பிடிவாதக்காரர். இத்தனை வருஷமா உழையா உழைச்சு சம்பாதிச்சிருக்கார். அவ்வளவையும் யாரோ அனுபவிக்கப் போறதை நான் விரும்பலை. அதேபோல கட்டின புடவையோட ஓடி வந்து கஷ்டப்படவும் விரும்பலை நான். நம்ம எதிர்காலமும் முக்கியம் நமக்கு… சந்தோஷசமா பிரிஞ்சிடலாமே…‘
அவளைப்பிரிந்து அணுவை நான் கல்யாணம் செய்துகொண்டதெல்லாம் பின்னால் நடந்த கதை.
ராதிகாவும் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அவளது கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது. சுதாரித்துக் கொண்டு, ‘ ஹாய் அன்பு…எப்படி இருக்கே… ஸாரி இருக்கீங்க…’ என்று தடுமாறினாள்.
நானும் சுதாரித்துக் கொண்டு, ‘ எப்படி இருக்கே ராதி… ஸாரி இருக்கீங்க… ‘ என்று தடுமாறி, ‘உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார்…’ என்றேன்.
‘ ரொம்ப நல்லா இருக்கோம். சரி நீங்க இங்கே எப்படி…’ என்றாள்.
‘ எனக்கு இந்த ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகிடுச்சு… வந்து மூணு மாசம் ஆச்சு. சரி… நீங்க எப்படி இங்கே…’ என்றேன்.
சிரித்துக் கொண்டே சொன்னாள், ‘ இதே ஊருக்குத்தான் அவருக்கும் டிரான்ஸ்பர் கிடைச்சு போன மாசம்தான் வந்தோம்… அவரும் வந்திருக்கார். கூடவே க்யூட்டா ஒரு பேபியும் இருக்கா. அவளை வச்சிக்கிட்டு உள்ளே இருக்கார்… ‘ என்றவள் கொஞ்சம் தடுமாறி, ‘ ஸாரி, நம்ம பழைய விஷயம் எதுவும் அவருக்குத் தெரியாது. மேற்கொண்டு எதுவும் பேசவேண்டாம்… திடீர்னு என்னைத் தேடிக்கிட்டு இங்கே வந்துட்டார்னு கதை கந்தலாகிடும்… ப்ளீஸ்… வர்றேன்… ’ என்றுவிட்டு மடமடவென நகர்ந்தாள்.
உறைந்து பொய் போகும் அவளையே திரும்பி நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பிறகு கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிக்கொண்டு உள்ளே போகும்போது சரியாக இன்டர்வெல் விட்டுவிட்டார்கள்.
கூல்ட்ரிங்க்சை அணுவிடம் கொடுத்துவிட்டு, ‘ வாஷ்ரூம் போயிட்டு வந்திடறேன்… ‘ என்றுவிட்டு நான் நகர்ந்தேன். எனக்கும் டீ குடிக்க வேண்டுபோல இருந்ததால், முதலில் வாஷ்ரூம் போய்விட்டு பிறகு கவுன்ட்டர் வரிசையில் நின்று டோக்கன் வாங்கி, டீ வாங்கி, குடித்துகொண்டிருக்கும்போது கல்யாணம் ஆன முதல்நாள் என் ஆசை மனைவி அணு சொன்னது நினைவுக்கு வந்தது.
xxxxxx
‘ ஸாரி அன்பு…நான் இன்னிக்கு சொல்லலைனாலும் என்னிக்காவது உங்களுக்கு தெரியவரும்போது, நான் மறைச்சிட்டேனோனு வருத்தப் படக்கூடாது. அதான் சொல்றேன், என்னை ஒருத்தர் விரும்பினார். ஆனா நான் விரும்பலை. அது ஒரு ஒன்சைடு லவ். உங்களுக்கும் அப்படி ஏதாவது… ?? ’
‘ ஐயய்யோ… எனக்கு அப்படி ஏதும் இல்லைம்மா… ‘ என்று தப்பித்து, சமாளிக்க வேண்டி, ‘ உன்னோடது ஒன்சைடுங்கறே வேறே… விட்டுத் தள்ளு…’ என்று சொல்லிக்கொண்டு அவளைக் கட்டிக்கொண்டேன்.
xxxxxxx
டீ குடித்து முடித்து உள்ளே போகும்போது விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.
அரை இருட்டில் சுதாரித்துக் கொண்டு நடந்தேன். அருகில் போனதும் அணு சொன்னாள். ‘ நான் சொல்றதை மட்டும் கேளுங்க… உடனே திரும்பி பார்த்துடாதீங்க… ‘ என்று சஷ்பென்ஸ் கொடுத்துவிட்டு, சொன்னாள், ‘ பின் வரிசைல நமக்கு நேர் பின்னாடி ரெட் ஷர்ட்ல ஒருத்தர் உட்கார்ந்திருக்கார்… ஜஸ்ட் பாருங்க… அப்புறமா சொல்றேன்… ’ என்று காதுக்குள் கிசுகிசுத்தாள்.
மெல்ல எதேச்சையாக பார்ப்பது போல திரும்பினேன்….
ரெட் ஷர்ட்டில் ஒருவர் உட்கார்ந்திருக்க, மடியில் ஒரு பெண் குழந்தை, அவருடைய தோளில் சாய்ந்தபடி யாரோ… ‘ ஓ… அது ராதிகா… ‘
அணு சொன்னாள், ‘ நான் சொல்லலை, ஒன்சைடு லவ்னு… அது அவர்தான்…’ என்று கிசுகிசுத்தாள் அணு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings