ஒரு கையில் டீ கோப்பையும் மறுகையில் சுட்ட அப்பளமுமாக உட்கார்ந்த போது மின்சாரம் நின்று போனது. வெளியில் இருட்டு….உள்ளே வெளிச்சமாய் உன் நினைவுகள்… டீயும் அப்பளமும் உன் விநோதமான விருப்பங்கள்
சிறு வயது தோழிகளாக நாம் இதே சுவற்றில் அரையிருட்டில் நம் கைவிரல் அசைவுகளில் மான்களை ஆடச் செய்தது நினைவிருக்கிறதா?
இப்பொழுதெல்லாம் மின்சாரம் நின்று போன நேரங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். என் கடந்த காலம் முழுவதும் வியாபித்துக் கிடக்கின்ற உன் நினைவின் தடங்களில் மூழ்க ஏதுவாய்
இருவருக்கும் ஒரே ரசனை…ஒரே பள்ளி…ஒரே வகுப்பு…பக்கத்துப் பக்கத்தில் இருக்கைகள். நம் குடும்ப சொந்தங்கள் கூட நமக்கு அயலாகிப் போனார்கள்.
நாம் இருவரும் சேர்ந்து செய்த பல குறும்புகளுக்கு, ஒருவர் வீட்டில் மற்றொருவர் திட்டு பொருளானது நினைவிருக்கிறதா? (பாடுபொருள் என்று ஒன்று இருக்கும்போது திட்டுபொருள் இருக்காதா என்ன?)
நம்மைப் பார்க்கும் போது சேர்க்கை சரியில்லை என்ற முணுமுணுப்பை எத்தனை முறை புன்சிரிப்புடன் கடந்து சென்றிருப்போம்?
நம் குடும்ப வழக்கப்படி, வீட்டு விலக்கின் போது தனிமையில் அமர்ந்து நாம் பேசியவை பசுமையாய். காதல், கற்பு…உடலைக் காட்டிலும் மனதைத் தொடுவது ஆழமானது….இப்படி எத்தனை எத்தனையோ!
என்று, எங்கு சிதைந்தது என்று சிந்தித்துப் பார்க்கிறேன்…
ஒரே கல்வி நிறுவனத்தில் நீ பொறியியலும் நான் கலையும் படித்த போது ஏற்பட்ட மாற்றங்களா?
விரிந்து கொண்டே சென்ற நம் இருவரின் நட்பு வட்டமா?
நாம் தரிசித்த புது சாளரங்களா? ஏதோ ஒன்று.
ஆனால் என்னால் பழைய நண்பர் கூட்ட உரையாடல்களில் (வாட்ஸ் அப்பில் கூட) கலந்து கொள்ளவே முடியவில்லை. பத்தாம்பசலி என்றோ நடைமுறைக்கு ஒத்து வராதவள் என்றோ என்னை நீ சாடலாம்.
ஆனால் குழந்தைகளாக என் மனதில் நான் பதிந்து வைத்திருக்கும் நினைவுகளை அழிக்க விருப்பமில்லை.
வாழ்க்கை அட்டவணைப்படி நம் இருவருக்கும் அவரவர் வழியில் திருமணமானது.
நீ அமெரிக்காவிலும் நான் ஈரோட்டிலுமாக வாழ்க்கையைத் தொடங்கினோம்.
உன் குழந்தையின் முதல் வருடப் பிறந்த நாளின் போது ஊருக்கு வந்திருந்தாய், பேசிக் கொண்டோம்.
பிறகு சில முறை போனில் பேசினோம். குழந்தையை ப்ளே ஸ்கூலில் விட்டு விட்டுக் காத்திருந்த நேரங்களில் அழைத்தாய்.
நான் குழந்தைக்காக முயன்று முயன்று தோற்று, ஒவ்வொரு யூரின் டெஸ்டுக்கும் அழுது கொண்டிருந்தேன். நீ மறுபடி வேலைக்குச் சேர்ந்த பிறகு பேசுவது மிகவும் குறைந்து போயிற்று.
எப்படியோ எனக்கும் குழந்தை பிறந்தது. நான் நம் ஊரிலேயே தனியார்ப் பள்ளியில் ஆசிரியை ஆனேன்.
ஒருமுறை குழந்தைகளுடன் வெளியில் சென்றோம். சற்று நேரம் கழித்து இருவருக்குமே என்ன பேசுவது என்று புரியவில்லை.
நம் இருவரின் உலகங்களும் சிந்தனைகளும் வெகுவாக மாறி விட்டது மட்டும் புரிந்தது. ஏதோ ஒன்றை நான் சிலாகிக்க, இன்னுமா அந்தப் பைத்தியக்காரத்தனத்தை நீ விடவில்லை என்றாய்!
நானும் நிறைய மாறி இருக்கிறேன், விளக்கிச் சொல்வதற்கும் நிதானமாகக் கேட்பதற்கும் நம் இருவருக்குமே பொறுமையில்லை, நேரமில்லை….
அடுத்தத் தெருவில் உன் அம்மா வீடு இருந்தாலும், அதன் பிறகு, சில முறை நீ ஊருக்கு வந்து சென்றது கூடத் தெரியவில்லை.
உனக்கு டைவர்ஸ் ஆகிவிட்டதென்றும் மறுமணம் செய்து கொண்டு விட்டாய் என்றும் கேள்விப்பட்டேன்.
என்னிடம் இவற்றைப் பற்றி விளக்குவது உனக்கு கஷ்டமாகத் தோன்றியிருக்கலாம். பரவாயில்லை.
உன்னை ஒருபோதும் நான் தவறாக நினைக்கவே மாட்டேன்.இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் போது உன் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்று தான் மனம் பதைபதைக்கிறது.
உனக்கு ஆறுதல் சொல்ல நல்ல நண்பர்கள் பக்கத்தில் இருந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்
உனக்கு நினைவிருக்கிறதா? நமது கல்லூரிக்கு அருகில் ஒரு முதியோர் இல்லம் இருந்தது. சாப்பாடு மிக நன்றாக இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.
வயதான காலத்தில் நாம் இருவரும் அங்கு சேர முடிவு செய்தோம்! (நம் குணத்துக்கும் வாய்க்கும் யாரும் நம்மைக் கடைசி காலத்தில் வைத்துக் கொள்ளமாட்டார்கள் – உன் பொன்மொழி தான்!)
இதைப் படிக்கும் போது உன் இதழ் கோடியில் ஒரு புன்னகை அரும்பலாம்.
நீ வரும் வரை உனக்கான நல்லெண்ணங்களும் பிரார்த்தனைகளும் என் நெஞ்சில் ததும்பிக் கொண்டிருக்கும்
மின்சாரம் வந்துவிட்டது!
#ad
#ad
GIPHY App Key not set. Please check settings